அன்புள்ள ஜெ.
நலமாக உள்ளீர்களா?
தமிழின் செவ்வியல் இலக்கியம் தொட்டு நவீன இலக்கியங்கள் வரை வாசித்து வருகிறேன். குறிப்பாகக் குறுந்தொகை, பரிபாடல், அகநானூறு நித்திலக் கோவை, சிலப்பதிகாரம், கம்பராமாயணம், குற்றாலக் குறவஞ்சி என்று பல செவ்வியல் இலக்கியங்களைக் கற்று வருகிறேன். அதற்குப் பிரதான காரணம் என்று உங்களுடைய சங்கச் சித்திரங்கள், சொல்முகம் முதலான அபுனைவு நூல்களையும், காடு புனைவில் நீங்கள் கபிலர் மீது காட்டும் பிம்பமும் ஒரு காரணம் என்றுதான் கூறுவேன். அதுபோலத்தான் கொற்றவையும்.
அண்மையில் உ.வே.சா எழுதிய என் சரித்திரம் படிக்கும்போதுதான் தெரிந்தது மரபை மீட்க அவர் பட்ட பாடு.
எனது கேள்வி என்னவென்றால் நமது மரபினை அறிய இவற்றை நேரடியாகக் கற்பது ஒருமுறை. அதைவிட நமது சமகால ஆய்வாளர்களின் நூல்கள் துணைகொண்டு கற்பது இன்னொரு முறை. இதில் இரண்டு முறையிலும் நான் கற்கத் தொடங்கியுள்ளேன். குறிப்பாக நாட்டார் மரபுடன் வைத்து இவற்றை நோக்க என்று சில நூல்களை வாசிக்கத் தொடங்கினேன்.
எனினும் சில ஆய்வாளர்களின் நூல்களின் நம்பகத்தன்மை மீது குழப்பத்தை உண்டாக்கி விடுகிறது. குறிப்பாக தொ. பரமசிவன் எழுதிய நூல்கள். அவரது ‘பண்பாட்டு அசைவுகள்’, ‘தெய்வம் என்பதோர்’ மற்றும் ‘சமயங்களின் அரசியல்’, சுந்தர் காளியுடனான நீண்ட நேர்காணல் போன்றவற்றில் இந்த குழப்பத்தை உண்டாக்குகிறார். தமிழின் நவீனமும் புரட்சியும் ஈ.வே.ராமசாமி மற்றும் திராவிட இயக்கங்களுடன்தான் தொடங்குகிறது என்பது போன்ற சித்தரிப்புக்கள்.
அத்துடன் அவரது கட்டுரை ஒன்றில் சங்ககாலத்தில் தென்னையே இல்லை என்று அழுத்தமாகக் கூறுகிறார். இதைவிட கறுப்பு என்ற நிறம் சாதியின் நிறம் ஆக்கப்படக் காரணம் பிராமணர்களும், இந்துமத நிறுவனமயமாக்கமும் என்று ஆதாரம் இன்றி எழுதுகிறார். சங்ககாலத்தில் தெங்கு, தாழை போன்றன உள்ளது என்பதை இலக்கியம் பயிலும் யாரும் அறியலாம். அத்துடன் சிவப்பு என்பதுதான் அரசர்களின் நிறம் என்று சிலம்பும் கூறுகிறது. பின்வந்த செவ்வியல் நூலும் கூறுகிறநு. அதுபோல கறுப்பினைக் கடவுளின் நிறமாகக் கம்பரும் கண்டார் நம்மாழ்வாரும் கண்டார். இநு குறித்து இலக்கியங்களை வைத்து நான் சிறு குறிப்பும் எழுதியுள்ளேன்.
கறுப்பு
ஆனால் இந்து மதம் மீது வசை பொழிய என்றே இவர்கள் ஆய்வு எழுதுகின்றனர். இந்த இட்டுக்கட்டும் மரபில் இருந்து தப்பிக்கொள்ளவும், சரியான புரிதலை ஆய்வு நோக்கில் எட்டவும் நாம் என்ன மாதிரியான ஆய்வு நூல்களைக் கற்பது?. தங்களால் இது தொடர்பில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் என்ன?
சுயாந்தன்.
அன்புள்ள சுயாந்தன்,
இங்கே நீங்கள் சொல்லும் ’ஐயத்திற்கிடமான’ ஆய்வாளர்களில் இரண்டுவகையானவர்கள் இருக்கிறார்கள். ஒருவகையினர் நம் ’திராவிட மனு’ ராஜன் குறை போன்றவர்கள். இன்னொருவகையினர் தொ.பரமசிவம் போன்றவர்கள். முதல்வகையினர் நசிவுநோக்குகொண்ட மிகப்பெரிய அறிவியக்கம் ஒன்றின் கருவிகள். இரண்டாம்வகையினர் அந்தப்புயலில் பறக்கும் சருகுகள்
ராஜன் குறை போன்ற முதல்வகையினர் அடிப்படையில் வெறும் ‘கருத்தியல் தொழில்முனைவோர்’ மட்டுமே. இவர்களுக்குப் பணம்கொடுப்பவர்களுக்காக வேலைசெய்பவர்கள். நேர்மை என்பது தேவையில்லை என்று முடிவுசெய்து அப்படிப் பேசி நிறுவுவதற்கான தரவுகளையும் சேர்த்து வைத்திருப்பார்கள். கல்வித்துறை முழுக்க இவர்களே காணக்கிடைக்கிறார்கள். இவர்களுக்கு தேவையான கருத்தரங்க அழைப்புக்கள், ஆய்வுக்கொடைகள் ஆகியவற்றை அளிப்பவை மேலைநாட்டு பல்கலைகழகங்களும் பல்வேறு நிதிக்கொடை அமைப்புக்களும். இவர்கள் அவை கோரும் ஆய்வை கோரும் விதத்தில் செய்து அளிப்பார்கள்.
ஐரோப்பிய அமெரிக்கப் பல்கலைகழகங்கள் இத்தகைய ஆய்வாளர்களைக்கொண்டு கீழைநாடுகள் முழுக்க ஆய்வுகள் என்றபேரில் அங்குள்ள பழைமையான கலாச்சாரம், மதம் ஆகியவற்றின்மேல் தாக்குதலைத் தொடுக்கின்றன. அந்நாடுகளின்மேல் ஐரோப்பாவும் அமெரிக்காவும் செலுத்தும் வன்மையான பொருளியல் சுரண்டலை, அதற்குரிய அரசுகளை அங்கே உருவாக்கும்பொருட்டு அவை மேற்கொள்ளும் அரசியலாடலை எல்லாம் தவிர்த்துவிட்டு அந்நாட்டுமக்களின் வறுமை மற்றும் அறியாமைக்கு முழுக்கமுழுக்க அந்நாட்டின் பண்பாடும் மதமுமே காரணம் என நிறுவ முற்படுகின்றன. அப்பண்பாட்டை வெறுக்கும் ஓர் அறிவுவட்டம் உருவாக்கப்படுகிறது. இவர்கள் எதிர்ப்பாளர்கள், கலகக்காரர்கள், புரட்சியாளர்கள் என்றெல்லாம் வேடம்கொள்கிறார்கள். இளைஞர்களைக் கவர்ந்து அந்த பண்பாட்டு எதிர்ப்பை உட்செலுத்துகிறார்கள்.
இப்பார்வைக்கு தேவையான தரவுகள் மட்டும் சேகரிக்கப்படுகின்றன. அதன் பொருட்டே நிதிக்கொடைகள் அளிக்கப்படுகின்றன. அதன் வழியாக கிடைக்கும் தரவுகளைக்கொண்டு அதற்குத் தேவையான கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன. அவை நூல்களாகவும் ஆய்வேடுகளாகவும் தொடர்ச்சியாக வெளியிடப்படுகின்றன. மாபெரும் ஆய்வுக்களஞ்சியமாக, அறிவுப்புலமாக தொகுக்கப்படுகின்றன. உண்மையில் பேரறிஞர்கள் பலர் வழிநடத்த பல்லாயிரம் ஆய்வாளர்கள் சேந்து உருவாக்கும் இந்த மாபெரும் அறிவுப்பரப்பை எதிர்கொள்ளும் ஆற்றல் கீழைநாட்டுப் பண்பாடுகளுக்கு இருப்பதில்லை. அவர்களால் பதறவும் வசைபாடவும் மட்டுமே முடியும். காலப்போக்கில் அவை முறிவடைய ஆரம்பிக்கின்றன. எந்தப்புள்ளியில் அவை குற்றவுணர்ச்சியுடன், ஒப்புக்கொள்ளும் தொனியின் பேச ஆரம்பிக்கின்றனவோ அப்போது அவை வீழ்ச்சியடைய ஆரம்பிக்கின்றன. அந்த இடங்களில் முதலில் தாராளவாதம் அறிமுகமாகிறது, அது ஜனநாயகம் சுதந்திரம் என்றெல்லாம் பேசுகிறது. ஆனால் மூடநம்பிக்கை நிறைந்த மதவெறி கொண்ட ஒருவகை கிறிஸ்தவம் அங்கே வந்தமைகிறது
தொண்ணூறு சதவீதம் கீழைநாடுகளின் பண்பாட்டு அரசியலின் வரைவுப்படம் இதுதான். இலங்கையும் அதே திசைதான் கொண்டிருக்கிறது. இந்தியாவின் பிரம்மாண்டமே அதற்கு தடையாக உள்ளது. இந்தியாவின் அறிவுலகுக்கும் இந்தியாவின் மாபெரும் மக்கள்தொகைக்கும் இடையே தொடர்பே இல்லை. எவர் என்ன ஆய்வைச் சொன்னாலும் அது இந்தியக்கல்விச்சூழல் என்னும் கோழிமுட்டைக்குள் அடங்கிவிடுகிறது. அங்கிருந்து ஊடகங்களை, இலக்கியத்தை பாதிக்கிறது. ஆனால் இந்திய ஊடகங்களும் இலக்கியமும் எல்லாம் கூட மிகச்சிறிய அறிவுவட்டத்துக்குள் செயபடுபவை மட்டுமே. ஆகவே இம்முயற்சிகள் இந்தியாவின் பொதுப்பண்பாட்டில் இதுவரைக்கும் சில சிராய்ப்புகளை மட்டுமே உருவாக்கியிருக்கின்றன.
ஆனால் இந்தியா வளர்ந்துகொண்டிருக்கிறது.இங்கே கல்வி பரவலாகிக் கொண்டே இருக்கிறது. நடுத்தரவர்க்கம் பெருகுகிறது. இளைஞர்கள் எண்ணிக்கை பெருகுகிறது. அவர்கள் இந்தக்கல்வித்துறை, ஊடகம், அறிவுப்புலம் வழியாக பயிற்றுவிக்கப்படுகிறார்கள். அவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் இன்று இந்த அறிவுப்புலத்தால் ஊட்டப்படும் மரபு எதிர்ப்பு, தற்கசப்பு கொள்கைகளையே சென்றடைகிறார்கள். அதுவே ‘நவீனமானது’ என்றும் ‘மேலைநாட்டு ஆய்வாளர்களால் நிரூபிக்கப்பட்டது’ என்றும் இவர்கள் நம்புகிறார்கள். இவர்களே இன்று நம் சமூக ஊடகங்கள் முழுக்க நிறைந்திருக்கிறார்கள். மெல்லமெல்ல இந்தியாவும் அறிவார்ந்த உடைவை நோக்கிச் செல்கிறது
இந்த மாபெரும் தாக்குதலுக்கு எதிர்வினையாக எழுவது இந்துத்துவ மதவாத அரசியல், அதன் மூர்க்கமான ஒற்றைப்படையாக்கம். அதன் இயல்புகள் மூன்று.
ஒன்று, ஆன்மிகம் பண்பாடு அனைத்தையுமே சமகாலக் களஅரசியலுக்கான கச்சாப்பொருட்களாக ஆக்கிக்கொள்வது. அவற்றை அரசியலுக்கான அடையாளங்களாக மட்டுமே பார்ப்பது. அதற்கு அப்பால் அதைப் பயில, பேண ஏதும் செய்யாமலிருக்கும் பாமரத்தனமும் உதாசீனமும்.
இரண்டு, இந்துப்பண்பாட்டின் பன்மைத்தன்மை மற்றும் உள்விவாதம் ஆகியவற்றை மறுத்து அதை ஒற்றை அமைப்பாக உருவகிப்பது.
மூன்று, இந்து சமூகம் தொடர்ச்சியான சமூக, பண்பாட்டு மாற்றங்களுக்கு ஆளாகிக்கொண்டேதான் இருக்கிறது என்பதை மறுத்து அது மாசுமருவற்ற, என்றும் மாறாதப் பாரம்பரியப் பொக்கிஷம் என்று நிறுவுவது
இதன்விளைவாகத்தான் இன்று சூழலில் வேறெப்போதையும்விட இந்துப் பழமைவாதிகளின்- அடிப்படைவாதிகளின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. ராஜா ராம்மோகன் ராயின் காலத்தில் ஒலித்த எதிர்ப்புக் குரல்கள் மீண்டு வந்துள்ளன. குழந்தைமணம், தீண்டாமை, சாதிமேட்டிமைவாதம், உடன்கட்டை ஏறுதல் ஆகியவற்றை ஆதரித்து மேடைகளில் தைரியமாகப் பேசுகிறார்கள். ஊடகங்களில் பரப்புகிறார்கள். வெளிப்படையாகவே சாதிமேட்டிமை பேசுகிறார்கள். உடனே அந்தப்பேச்சு சாதிகளின் பூசல்களுக்குத்தான் கொண்டுசெல்லும். இன்று இணையவெளியில் சாதிகளின் உட்க்குழுக்களுக்குள் நிகழும் பூசல்களும் வெறுப்புகளும் கொண்டுவந்து கொட்டப்படுகின்றன. அவற்றைச் செய்பவர்கள் படித்த, உயர்நடுத்தரக்குடிகள். இந்தக்குரல்கள் இன்றைய படித்த இளைஞர்களுக்கு என்னவகையான எண்ணங்களை அளிக்கும்? அவர்களுக்கு மேலைநாட்டு ஆய்வுப்புலம் இந்தியாவைப்பற்றி அளிக்கும் இருண்ட, கசப்புநிறைந்த சித்திரத்துக்கான தெளிவான சான்றுகளாக இவர்களின் பேச்சுக்கள் உள்ளன.
இந்த இருநிலைக்கு நடுவே நின்று பேசிக்கொண்டிருக்கிறோம். இது விவேகானந்தர் காலம் முதலே இப்படித்தான் இருந்துள்ளது. இந்துச் சமூகச்சூழலில், பண்பாட்டில் இருந்த தேக்கங்களையும் சீர்கேடுகளையும் மிகக்கடுமையாக கண்டித்தவர் விவேகானந்தர். ஆனால் கூடவே இந்துப்பண்பாட்டின்மேல் மேலைநாட்டு அறிவியக்கம் முன்வைத்த தாக்குதலையும் அவர் எதிர்த்தார். மேலைநாட்டு அறிவியக்கச்சார்பை கண்மூடித்தனமாக சூடிக்கொண்ட பிற்காலத்தைய பிரம்மசமாஜத்தவரை எதிர்த்தார். இருபக்கமும் தாக்கப்பட்டார்.
பிரம்மசமாஜிகளின் பார்வையில் அவர் சாதிவெறியர், பழமைவாதி ,ஆசாரவாதி. இந்துப்பழமைவாதிகளின் பார்வையில் அவர் அனாசாரம் கொண்டவர், ஆன்மிகத்தைப் பேசுவதற்கான பிறவித்தகுதி அற்றவர். விவேகானந்தர் அமெரிக்கா சென்றபோது அவரை அங்கே அழைக்கக்கூடாது என அமெரிக்காவெங்கும் பேசியவர் மஜும்தார் என்னும் பிரம்மசமாஜி. தனக்கு இந்துமதத்தின் நிறுவனங்களில் இருந்து ஒரு பரிந்துரைக்கடிதம் தேவை என விவேகானந்தர் கடிதங்களில் மன்றாடுகிறார். அதை அளிக்க இங்குள்ள மரபான அமைப்புகளுக்கு மனமில்லை.
இச்சூழல் என்றும் இங்கே இருக்கும். இந்த கத்திமுனை பயணமே உண்மையான அறச்சார்பும் ஆன்மிகத்தேடலும் கொண்ட ஒருவரின் வழியாக இருக்கும்
ஐரோப்பாவும் அமெரிக்காவும் உருவாக்கும் அந்த மாபெரும் அறிவியக்கத்தை எதிர்கொள்ளும் அளவுக்கு இந்திய அறிவியக்கத்துக்கு நிதியோ கல்வியமைப்புகளோ பயிற்சியோ இல்லை.ஆகவே அவர்களால் இன்று ஐரோப்பிய அமெரிக்க அறிவுவட்டத்தைச் சேர்ந்த எந்த ஓர் அறிஞரையும் விரிவாக முழுமையாக ஆராய்ந்து மதிப்பிட முடியாது. அவர்களின் நிதிப்புலங்கள் என்ன, கருத்துப்பின்புலம் என்ன என்றெல்லாம் எளிதில் அறியவே முடியாது. எவர் நேரடியாக செலுத்தப்படுபவர் , எவர் செல்வாக்குக்கு ஆட்பட்ட எளியவர் என கூறுவது மிகக்கடினம்.
ஆகவே ஒட்டுமொத்தமாகவே அந்த மேலைநாட்டு அறிவுப்புலத்தை ஐயத்துடன் பார்க்கம ட்டுமே நம்மால் இன்று முடியும். இன்றைய சூழலில் புறவயமாக சேர்க்கப்பட்ட தரவுகள் மேலைஅறிவுப்புலத்திடமே உள்ளன, மறுபக்கம் இருப்பது வெற்று மூடநம்பிக்கைகளும் காழ்ப்புகளும் குறுங்குழுவாதப்பூசலும். ஆகவே அவர்களை தவிர்ப்பதும் உகந்தது அல்ல.நாம் நம்மைப்பற்றிய ஆய்வுகளை நடுநிலையாக முடித்து, நம்மைப்பற்றிய குறைந்தபட்சத் தெளிவுகளை அடைந்தபின் அவர்களை கடந்துசெல்லக்கூடும். நான் மேலை அறிவுப்புலத்தில் கருத்தில்கொள்பவர்கள் அங்குள்ள பொதுச்சூழலால் எதிர்க்கப்படும், இகழப்படும், புறக்கணிக்கப்படும் அறிவுஜீவிகளை மட்டுமே
மறுபக்கம் அடிப்படைவாதம், ஆசாரவாதம் அளிக்கும் எதிர்ப்பை நாம் வென்றாகவேண்டும். ஆனால் அது என்றும் இங்கே இருந்தது. அதற்கு தவிர்க்கவே முடியாத கருத்துப்பங்களிப்பு உண்டு. அவர்கள்தான் இங்கே மரபை நிலைநிறுத்தும் சக்தி. தூய்மைவாதிகள் இல்லையேல் எந்த மரபும் மாற்றங்களின் அலைகளில் சிக்கி அழியும். எல்லா காலத்திலும் எல்லா மாற்றங்களும் அவர்களை எதிர்த்து, அவர்களுடன் உரையாடியே வளர்ந்துள்ளன. நாராயணகுருவாக இருந்தாலும் வள்ளலாராக இருந்தாலும் விவேகானந்தராக இருந்தாலும். அவர்களை முழுமையாக விலக்க முடியாது, அவர்களுடன் விவாதிக்கவும் முடியாது, அவர்களை கவனித்து உரியவற்றை கொண்டு மற்றவற்றை விலக்கி முன்செல்லவேண்டும்.
நான் சொன்ன அந்த மாபெரும் ஐரோப்பிய, அமெரிக்க அறிவியக்கத்தின் பலியாடுகள் என்று சொல்லத்தக்க ஓர் ஆய்வாளர் கூட்டம் இங்குண்டு. அவர்களில் ஒருவரே தொ.பரமசிவன். இத்தகையவர்கள் விரிவான ஆங்கிலக்கல்வி அற்றவர்கள். உண்மையான சில ஆய்வுகளைச் செய்வார்கள். இவர்களை மேலேசொன்ன கருத்தியல் தொழில்முனைவோர் தொட்டு எடுத்துக்கொள்கிறார்கள். இவர்களுக்கு அந்த ‘மெத்தப்படித்த’ ‘ஆங்கிலம் அறிந்த’ ‘உலகின் பார்வைக்குச் சென்றுவிட்ட’ ‘கல்வித்துறை அதிகாரம் கொண்ட’ தரப்புகள் ஆழ்ந்த ஈர்ப்பை அளிக்கின்றன. அவர்களின் அங்கீகாரம் பரவசமடையச் செய்கிறது. தன் கட்டுரை ஒன்று ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படுமென்றால் பிறவிப்பயன் என நினைக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு பிடித்ததை இவர்கள் எழுதுகிறார்கள். அதற்காக அந்த மேலைஅறிவியக்க முகவர்கள் எழுதும் தமிழ்க்கட்டுரைகளில் இருந்து இவர்கள் ஒரு சில கருத்துக்களை எடுத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு தேவையான கருத்துநிலைபாட்டை உருவாக்கிக்கொள்கிறார்கள். இவர்களுக்கு ‘இதுதான் இன்றைய நவீன கருத்து, நவீன ஆய்வுமுறை, இவை அந்த ஆய்வுமுறையால் கண்டெடுக்கப்பட்ட தரவுகள்’ என தொழில்முனைவோர் தரப்பு உறுதி அளிக்கிறது. அவற்றை ஆராய்ந்து மதிப்பிடும் இடத்தில் இவர்கள் இல்லை.அப்படியே விழுங்கி , செரிக்காமல் உமிழ்கிறார்கள்.
தொ.பரமசிவம் அடிப்படையில் ஓர் ஆய்வாளர். அவருடைய அழகர்கோயில் ஒரு நல்ல ஆய்வுநூல். அது அவருடைய சொந்த சாதி- சமூகப்புலம் சார்ந்த ஓர் ஆய்வு அது. ஆனால் அவருடைய பிற்கால ஆய்வுகள் எல்லாமே இரண்டு கூறுகளாலானவை. ஒன்று அவருடைய விரிவான களஆய்வு மற்றும் உள்ளூர் சார்ந்த அறிதல்களின் தொகுப்பு. அவற்றை ஆராய அவர் கடைப்பிடிப்பது மேலைஅறிவியக்கத்திலிருந்து கல்வித்துறை வழியாக வந்த சில கருத்துச் சொட்டுக்களை. அவற்றை அவர் மதநம்பிக்கை போல ஏற்றுக்கொள்கிறார். கூடவே இங்கிருக்கும் பிற்படுத்தப்பட்டோர் சார்ந்த சாதியரசியல் இணைந்துகொள்கிறது. அது ஒரு விசித்திரக்கலவை. அதன் விளைவே கறுப்பு போன்ற அசட்டுத்தனமான எண்ணங்கள்.
தொ.பரமசிவம் போன்ற இரண்டாம்வகை ஆய்வாளர்களை நாம் முதலில் சொன்ன தொழில்முனைவோர் போல நிராகரிக்கமுடியாது, கூடாது. ராஜன் குறை போன்றவர்களிடமிருந்து ஒருவரிகூட பயனுற எடுக்கமுடியாது. எதை எடுத்தாலும் விரிவான ஒரு சதிப்பின்னல் அதற்குப்பின்னால் இருக்கும். அடிப்படையில் உழைப்பாளிகளான அசடுகள் அவர்கள். தொ.பரமசிவம் போன்றவர்கள் கூர்மையானவர்கள், அசலான களஆய்வுகளைச் செய்தவர்கள், அவர்களின் நூல்களில் நாம் கண்டடையவேண்டிய அரிய செய்திகள், உண்மைகள் எப்போதும் உண்டு. கருத்தியல் முகவர்களால் திசைதிருப்பப்படாமல் தங்கள் போக்கில் சென்றிருந்தால் அவர்கள் மிகப்பெரிய உண்மைகளை எழுதிக்காட்டியிருக்கக்கூடும். இப்போதுகூட அதற்கான திசைவழிகள் அவர்களின் நூல்களில் இருக்கக்கூடும். அவற்றை அவர்களின் நூல்களில் இருந்து நாம் எடுத்துக்கொள்ளவேண்டும். அவர்கள் முன்வைக்கும் பார்வை கருத்தியல் தொழில்முனைவோர் அளித்த நிலைபாடுகளின் வேகாவடிவமாக இருக்கும். தொழில்முனைவோரே ஒருவகை அரைவேக்காடுகள் என்னும் நிலையில் இவை கால்வேக்காடுகள். அவற்றை கடந்துசெல்லவேண்டும்
எண்ணிப்பாருங்கள், இன்று தொ.பரமசிவம் அடைந்துள்ள முக்கியத்துவம், அவரைச்சொல்லி நிகழும் கொண்டாட்டம் அவரைவிட பலமடங்கு மேலான அறிவியக்கச் செயல்பாட்டாளர்களுக்கு ஏன் கிடைக்கவில்லை? மிக ஆழமான ஆய்வுகளை, முறைமைசார்ந்து எழுதியவர்கள் இங்குண்டு. தொ.பரமசிவம் அந்த ஆய்வாளர்களின் அருகே கூட நிற்கமுடியாது. ஆனால் தொ.பரமசிமம் அமர்ந்த சிம்மாசனத்தின் காலடியில் அவர்கள் அமரச்செய்யப்பட்டிருக்கிறார்கள். தொ.பரமசிவம் ஆய்வுநேர்மையை பலியாக அளித்து அடைந்தது அந்த இருக்கை.
மறுபக்கத்தரப்பில், இங்குள்ள ஆசாரவாதத்தையும், சாதிமேட்டிமைவாதத்தையும், பழமைவாதத்தையும் விமர்சனமில்லாமல் ஏற்று அதை ஆய்வுகளென முன்வைக்கும் தேங்கிப்போன உள்ளங்கள் கொண்டாடப்படுவார்கள். அவர்கள் கல்வித்துறையில் ஓங்குவார்கள். அவர்களுக்கு அரியணைகள் உருவாக்கப்படும். அது தொடங்கிவிட்டது, இனி பெருகும். ஆச்சரியமென்னவென்றால் முதல்தரப்பில் இருந்தே இரண்டாம்தரப்புக்கு ஓடிச்சென்றுகொண்டிருக்கிறார்கள்.
இவ்விரு திசைகளுமே மெய்யான ஆய்வாளனுக்கு, கருத்துச் செயல்பாட்டாளனுக்கு புதைகுழிகளின் பாதையையே திறந்து வைக்கின்றன. அவனுக்கு கிடைப்பது சவரக்கத்திமுனைப் பயணம்.அதில் நடப்பவனே உண்மையான சிந்தனையாளன்.
ஜெ
ஆய்வுலகின் அன்னியக்கரங்கள்
அன்னியநிதியும் போலிச்சிந்தனைச்சூழலும்
அந்நிய நிதி- தொகுப்புரை
ஃபோர்டு ஃபவுண்டேஷன் முதலிய அன்னிய நிதியமைப்புகள்: தகவல்கள்
நிதிவலையின் செயல்முறை- தகவல்கள்
ஃபோர்டு ஃபவுண்டேஷனைப்பற்றி
‘நிதிப்பிள்ளை’களைப் பற்றி…
தொ.ப ஒரு வினா
தொ.பரமசிவம் குறித்து…
தொ.ப,ஒரு விவாதம்
மரபை அறிதல், இரு பிழையான முன்மாதிரிகள் 2
நாடகக்காதல்,திராவிட மனு- ஒரு பெண்ணின் கடிதம்
திராவிட மனு- அறிஞர்களின் எதிர்ப்புகள்