குரு நித்யா எழுதிய கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

இரண்டு கடிதங்களுக்கும் சேர்த்து இந்த பதில். முதல் கடிதம் வந்து ஒரு மாதமாகியிருக்கும் என்று தோன்றுகிறது. அதில் தேதியில்லை. நான் அனுப்பி வைத்தவற்றை எல்லாம் தமிழில் மொழிபெயர்த்து விவாதம் செய்தீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி.

முதலில் எழுதிய கடிதத்திற்கு முதலில் பதில். அடுத்து வந்த கடிதத்திற்கும் இதிலேயே பதிலளிக்கிறேன்.

புலன்கள் வழியாக நமக்குள் பாயும் புறவிஷயங்களுக்கான அறிகுறிகள் சில உண்டு. ஆன்மாவின் ஆழத்திலிருந்து பரவும் ஒளியும் உண்டு. புறத்திலிருந்து வரும் எல்லா அறிகுறிகளும் ஆங்கிலத்தில் encounter என்பதைப் போன்றவை. அதனை யோகிகள் ‘விதர்க்கம்’ என்பர். புற ஒளிக்கும் ஆத்மஒளிக்கும் இடையே தத்துவார்த்தமான ஒரு ஒப்புமை உண்டு. உப்புப் பரலை தண்ணீரில் கரைத்து அது நீர் வடிவம் பெற்றால் மட்டும் நாவில் நிகழும் வேதிவினை கொண்டு உப்புச்சுவையை அறிய முடியும். அதேபோல் கண்ணின் வழியாகவும் காதின் வழியாகவும் வரும் ஒளியையும் ஒலியையும் உள்ளொளியாய் இருக்கும் நனவில் கரைக்கும்போதுதான் உணர்தல் நிகழ்கிறது.

புறப் பொருள் ஒன்றை கண்ணாடியில் பிரதிபலித்துப் பார்க்கும்போது அப்பிரதிபலிப்பில் பொருளின் முப்பரிமாணமும் இயக்கமும் நமக்குத் தெரிவது நம் மூளைச்செயல்பாட்டில் ஒரு அற்புத நிகழ்வின் காரணமாகவே. அதாவது புறத்தில் இருக்கும் பொருளை அதன் பொருண்மையை நீக்கி சூட்சுமமானதாக்கி உணர்திறன் கொண்டதாக ஆக்க முடியாது. ஆனால் கண்ணாடியில் உருவாகியிருப்பதுபோல ஒத்திருக்கும் ஒன்றை காண்பிக்க முடியும்.

புறம் என்பதில் உள்ளடங்கிய காலம் இடம் (Time-Space) எனும் இவற்றையும் சேர்த்து நகல்வடிவம் கொடுத்து அனுபவம் நிகழ்கிறது. இந்த representation மூளையில் நிகழ்வதற்குக் காரணம் மூளைச் செல்களின் அணு அமைப்பில் உள்ள வேறுபாடுகள். ஆனால் நாம் காண்பது representation அல்ல. உயிராற்றல் அதனை புறத்தே கற்பனையாக நீட்டித்து (projection) அனுபவமாக்குகிறது. ஆகவே, விண்மீனை நாம் காணும்போது மூளையில் காணப்படுவது விண்மீன் இருக்கும் இடம் மட்டுமே. அறிவுக்கு தெரிவதாக நாம் காணும் விஷயம் நாம் நம்பும்படித்தான் அங்கே இருக்கிறதா என்று சொல்லிவிடமுடியாது.  அது மட்டுமல்ல, எல்லா உயிரினங்களும் உணரும் உலகமும் உலகத்துப் பொருட்களும் அந்தந்த  உயிரினம் அப்போதைக்கப்போது வளர்த்தெடுப்பதாகும். எனவேதான் உபநிடதம் அதை “யதா திருஷ்டி: ததா சிருஷ்டி:” என்கிறது.

இதற்கு ஒரு உதாரணம் கூறலாம்: அழகைப் போற்றும் ஒருவன் LSD, brown sugar போன்ற மயக்க மருந்துகளில் ஒன்றை நாவிலிட்டு, ஒரு மரத்தையோ, பூச்செடியையோ காண்பானேயானால், அவன் காண்பது இயற்கையில் இல்லாத அழகும் , ஒளியும் கொண்ட ஒரு அழகிய வடிவமாக இருக்கும். மரணபயத்தில் உள்ள ஒருவன் அதே மயக்கமருந்தை நாவில் தொட்டுக்கொண்டு ஒரு வண்டினையோ பூச்சியையோ பார்த்தால் அது அவனை தாக்க வரும் ஒரு பயங்கரமான உயிர் என்று நினைப்பான். இவற்றையெல்லாம் யோகிகள் ‘ஐயங்கொண்ட பார்வை’ என்பார்கள். வேதாந்திகள் ‘மனநோய் அனுபவங்கள்’ என்றும் உளவியலாளர் மருட்சி (hallucinations) என்றும் கூறுவர்.

நாம் ஒவ்வொருவரும் வேதியியல் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் உயிரியக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு இயந்திரத்தன்மையில் சிக்கியிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்க! எனவே, நீங்கள் சொல்வதுபோல ஒன்றை அதன் முழுமையிலிருந்து (wholeness) தனித்துப் பிரித்தெடுத்து அறியமுடியாது. ஏனென்றால், பெயர்-உருத் தொடர்புகள் உண்டாகி முழுமையென்பது சார்புடையதாக மாறிய பின்னரே அதை நம் நனவால் உணரமுடியும். இது விஷயத்தை (பொருளை) மட்டும் பாதிப்பதில்லை. அறிபவன் கூட சூழலின் சார்புநிலைகளால் தான் அறிபடுபொருளாகவும் ஆகிவிடுகிறான். ’ இதனால்தான் பெர்ட்ராண்ட் ரஸ்ஸலைப் போன்றவர்கள் we can make only piece meal annexation of relative empiricist information என்று சொல்கிறார்கள்.

அறிவை அறிவியல் உண்மையோடு (objective) பொருத்தவேண்டுமென்றால், காலம்-இடம் இவற்றில் இயல்பாக இருக்கக்கூடிய தகவமைப்பை உடைத்து, இப்போது இங்கே இந்தச் சூழலில் இன்னின்ன காரண காரியங்களோடு பொருந்தும் வகையில் நம் நோக்கு அமையவேண்டும். இவ்வளவும் செய்யும்போது fragmentation நிச்சயம் நிகழும். மேலை அறிவியலாளர் இதைத்தானே de-limitation என்றும் selective structuralism என்றும் சொல்கிறார்கள்?

Fragmented knowledge என்பது அறிவுக்கு முரணானது அல்ல. அறிவின் ஒரு சிறப்புக் கூறு (special aspect) அது. இப்படியொரு முரண்பாட்டை உருவாக்காமல் இருக்க முடியாது என்பதால்தான் வேதாந்திகள் சரீர ஞானம், சித்தேந்திரிய ஞானம், ஜீவஞானம், விசேஷாத்ம ஞானம், ஜகதாத்ம ஞானம், சர்வாத்ம ஞானம், பரமாத்ம ஞானம், ப்ரம்மம் என விஷயங்களை சார்புடைய பாகுபாடுகளிலிருந்து விலக்கி சார்பும் பாகுபாடுமற்ற நிலைமையில் வைத்து புரிந்துகொள்கிறார்கள்.

நீங்கள் கூறுவதை நான் எண்ணிப் பார்க்கிறேன். நாம் அறிவது அறிவை அல்ல; ஒவ்வொரு தருணத்தில் அதன் மேல் ஏற்றி வைக்கப்படும் அடையாளத்தையே. நான் ஜெயமோகன் மீது ஐயம் கொள்ளாமல் எண்ணிப்பார்க்கிறேன். நம் மூக்கின் மீது வந்தமரும் ஈயை ஓட்டும்போதும், புறங்கையில் கடித்து ரத்தம் குடிக்கும் கொசுவை அடித்துக்கொல்ல முயற்சிக்கும்போதும் நம்முடைய கவனம் ஆர்வம் எல்லாம், விஷயத்தையும் செயலையும் வினையையும் பயனுள்ளதாக்குவதில் மட்டுமே இருக்கின்றது. எங்கெல்லாம் தன்முனைப்புச் செயல்பாடு மேலோங்குகிறதோ அங்கெல்லாம் பயன்பாட்டுவாதம் உண்டு.

நான் எப்போதும் பேசுவது ஒரு முழுமையான அறிவைப் பற்றி அல்ல. ஒருவரது கண்ணில் வழியும் ஒரு துளி கண்ணீரைக் காணும் எனக்குள் ஒரு மன உளைச்சல் ஏற்படுவதற்குக் காரணம் அக்கண்ணீர்த் துளியில் ஒரு முழுமையான பொருளை/அர்த்தத்தை காண்பதால்தான். அந்த முழுமை சார்பற்றது அல்ல; சார்புடையது என்றாலும் அதில் சார்பில்லாத நிலை உள்ளது. உதாரணமாக, காலையில் தாகமும் பசியும் ஏற்படும்போது தேநீர் அருந்துகிறோம். உடன் பலகாரமும் சாப்பிடுகிறோம். அது காலைப் பசியை போக்குவதற்கு. அந்தப் பசி சார்புடையது. நண்பகலில் நன்றாகப் பசிக்கிறது. அதைப் போக்க நல்ல விருந்து சாப்பிடுகிறோம். அப்போதும் பசி தற்காலிகமானது. அப்படியென்றால் பிறந்தது முதல் சிறுசிறு இடைவேளைகள் விட்டு இறப்பு வரை பசித்துக்கொண்டே இருக்கிறது. அந்தப் பசி சார்பற்றது. என்றாலும் அதை காலைப் பசி, மதியப் பசி, இரவுப் பசி என்று பிரித்து ஒவ்வொரு பசிக்கும் அதற்குரிய தீர்வையே தேடுகிறோம்.

பின்னர், நீங்கள் கூறும் Absolute முழுமை அல்ல. அது பரமம் என்ற கற்பனையின் அடையாளமாக மனிதன் பயன்படுத்தும் ஒரு சொல் மட்டுமே. Absolution என்றால் முழுமையாக நீக்குதல் என்பது பொருள். அந்தச் சூழலில் அறிபவன், ஆற்றுபவன், கொள்பவன், கூறுபவன் என எவர் செயல்பாட்டுக்கும் தொடர்பில்லை. தூய அத்வைதவாதி சொற்களையும் சொற்றொடர்களையும் போட்டு குழப்புவான். நான் தூய அத்வைதவாதி அல்ல.  நனவை இழைபிரித்துப் பார்த்து தொடர்புடைய வடிவத்திற்கு அளிக்கவேண்டிய பொருளைக் (அர்த்தத்தை) கொடுத்து எப்போதும் பொறுப்போடு பேசக்கூடிய ஒருவன். நான் சொல்வது உங்களுக்கும் தெரியும். அதனால்தான், knowing என்பது புறத்தே நிகழும் செயல் அல்ல, அது நம்மை நாம் அதில் இருத்திக்கொள்ளும் செயல் என்று நீங்கள் சொல்கிறீர்கள். அந்தப் பார்வை சரியானதுதான்.

Peggy Kamuf பதிப்பித்த A Derrida Reader என்ற நூலில் வெளிப்பாட்டு  வகைமைகள் குறித்து முதலில் சொல்லப்படுகிறது. ஒரு நிகழ்வை மேலோட்டமாகவோ ஆழமாகவோ அறிந்துகொண்டு அதைப்பற்றி விளக்கும்போது ஏற்படும் சரி-தவறுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. அதற்கென ஒலியியல், பொருளியல், தர்க்கம் போன்றவற்றையும் விளக்க வேண்டி வரும். ஒவ்வொரு நிகழ்விலும் அதை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சூழ்நிலையோடு இணைந்த நம்பகத்தன்மையை சுட்டிக்காட்டும் கையொப்பம் ஒன்று உண்டு.

இரண்டாவது பாகம் தத்துவத்தில் தவிர்க்கமுடியாமல் நிகழும் நிரூபணவாதத்தை விளக்குகிறது. மூன்றாவது பாகத்தில் மொழியில் எத்தனை வகையுண்டு என்பது பகுப்பாய்வு செய்யப்படுகிறது. நான்காவது பாகம் பேசுவது நாம், மனிதர்கள் என்றும் மானுடத்தின் அறியும்தன்மை என்றும் பேசும்போது நாமறியாமலேயே விட்டுவிடும் ஒரு முதன்மையான சிக்கலைப்பற்றி. எண்ணுவதும் சொல்வதும் எவர், ஆணா பெண்ணா என்பதில் நாம் காட்டும் அலட்சியம் பற்றி.ஐந்தாம் பாகத்தில் பல மாதிரிகள்/எடுத்துக்காட்டுகள் தருகையில் சாக்ரடீஸ் முதல் ஃப்ராய்ட் வரையும், ஃப்ராய்டுக்குப் பிறகும் என்ற ஒரு கட்டுரையும் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இம்மாதிரி நூல்களை நான் புரட்டிப்பார்த்தாலும் அவற்றின் நம்பகத்தன்மை குறித்தெல்லாம் யோசிப்பதில்லை.

**

பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் ஒருமுறை ‘There is no Absolute Truth’ என்று சொன்னார். அவரால் உலகில் உள்ள எல்லா உண்மைகளையும் தனித்தனியாகப் பிரித்தெடுத்து ஆராய முடிந்திருக்கும் என்றால் அவரது அந்த அறிவிப்பே Absolute Truth-உடன் தொடர்புடையதாக இருக்கும். அப்படி ஒரு பொது உண்மை நிரூபணத்துக்குக் கொண்டுவரப்பட்டால் அதன்மூலமே ரஸ்ஸலுடைய கூற்றின் பொருத்தப்பாடு மறுக்கப்பட்டிருக்கும்.

எந்தக் கூற்றும் ஒரு நிலைபாட்டில் நின்றுகொண்டே சொல்லப்படக்கூடியது. There is only one God என்றொருவர் கூறுவாரேயெனில் அதனை எந்தப் பொருளும் பயனுமற்ற ஒரு கூற்றாகவே கொள்ளமுடியும். ஏனென்றால் God என்ற சொல்லின் வரையறை, அங்ஙனம் ஒன்று உண்டு என்று ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு மனதிலும், வெவ்வேறாக இருக்கும். இங்கே நாம் சொற்களின் அடுக்குகளை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றில் பொருள்பொதிந்துள்ளதாக எண்ணிக்கொண்டு உரையாடிக்கொண்டிருக்கிறோம். அது தத்துவத்திற்கு ஒவ்வாத அணுகுமுறை.

புத்தகங்களில் சில வரிகளில் மட்டுமே என்னுடைய மனஓட்டத்தை பார்க்கிறீர்கள். அது குறுகியதாகவும் மேலோட்டமானதாகவும் உள்ளது. நானொரு சாரம்சவாதியோ சாராம்சமறுப்புவாதியோ அல்ல. ஒரு செறிவு வட்டம் (concentric circle) அல்லது செறிவு முறையை (concentric methodology) அடைய முயல்பவனுமல்ல. அதனாலேயே ஒரு கட்டுடைப்பாளன் (deconstructionist) அல்ல. அறிவியலாளன் அல்ல. நற்கூறுகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் தத்துவத்தை (eclectic philosophy) கண்டடைய முயல்பவன் அல்ல. ஒரு கட்டமைப்புவாதியோ (structuralist) தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டமைப்புவாதியோ (selective structuralist) அல்ல. புலனறிவுவாதி அல்ல. வேறு விதமாக கூறவேண்டுமென்றால் மூன்று இயல்புநிலைகளிலும் [அவஸ்தாத்ரயம்] அவற்றைக் கடந்த அதீதநிலையிலும் என் அனுபவத்திற்கு வரும் நிமிடங்களையெல்லாம் ஒருங்கிணைவுடன் பொருத்திப்பார்க்க தொடர்ந்து முயலும் ஒருவன் மட்டுமே இன்று வந்த உங்கள் கடிதத்தில் மனோரமாவில் அதன் செய்தியாளர் எழுதிய ஏதோ ஊகங்களைப் பற்றி படித்தேன். அது ஒருவரின் மனப்பதிவு மட்டுமே என்று கருதவேண்டும்.

இன்னும் நீங்கள் முதலில் எழுதிய கேள்விபதில்களுக்குள் போக வேண்டியுள்ளது. நான் இப்போது உலகியல் வினைகளில் இருந்து மிகவும் விலகி வாழ்கிறேன். அதனால் எதையும் கட்டாயம் செய்தாக வேண்டும் என்று மனம் முயல்வதில்லை. இப்போதைக்கு இவ்வளவே.

அன்புடன்,

குரு நித்யா

[பிகு]

சிலசொற்களை நாம் தேவைக்கு மிகுதியாக பயன்படுத்துகிறோம். அதிலொன்று  ‘தன்னே’ [தமிழில் ஏகாரம்] காண்பவனே காட்சியாக நிலைகொள்கிறான் என்ற சொற்றொடரின் ஏகரம் மிகக்கவனமாக பயன்படுத்தப்பட வேண்டிய ஒன்று

[குரு நித்யாவின் கடிதங்களின் தொகுதியாகிய ‘ஸ்னேகபூர்வம் நித்யா’ என்ற நூலில் உள்ளது இக்கடிதம். 1996ல் எழுதப்பட்டது. இதை ஸ்ரீனிவாசன் தமிழாக்கம் செய்திருக்கிறார்]

முந்தைய கட்டுரைஒரு வாழ்த்து
அடுத்த கட்டுரைமுதற்கனலும் நீலமும் – முனைவர் ப. சரவணன்