அன்புள்ள ஜெ
என் வாழ்கையில் 2020ஆண்டில் நூறு கதைகளையும் இரண்டுமுறைக்குமேல் வாசித்ததுதான் மறக்கமுடியாத நிகழ்வு. அற்புதமான ஆண்டு என்று நான் எதிர்காலத்தில் நினைக்கப்போகிறேன் என்று தோன்றுகிறது. எல்லா கதைகளுமே பாஸிட்டிவான உணர்ச்சியை உருவாக்கின. வாழ்க்கையை பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தின. மிகப்பெரிய விஷயங்கள் நம்மைச்சூழ்ந்து உள்ளன, நாம் அதற்கு தகுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று எண்ணச் செய்தன.
ஒவ்வொரு கதையாக வாசித்துக்கொண்டே இருந்தேன். தீர்ந்தபோது மறுபடியும் வாசித்தேன். இன்னும் வாசிப்பேன் என நினைக்கிறேன். தொன்மங்களைப்பற்றிய கதைகள் எல்லாமே மிகச்சிறப்பானவை. ஆனால் நற்றுணை கதை சாதாரண கதை அல்ல. என்னைப்போல போராடும் ஒரு பெண்ணுக்கு அது ஒரு பெரிய வரம்போன்ற கதை
எஸ்.திவ்யா
அன்பின் ஜெ,
வணக்கம்!
அருமணிகளை போன்ற கதைகள். வெண்முரசுக்காக இரவு 12 வரை காத்திருக்கும் பொழுதுகளை தற்காலிகமாக எடுத்துகொண்ட நாட்கள். எந்த புள்ளியில் ஆரம்பித்த வட்டம் என்று உய்த்துணரவும் யோசிக்க அவகாசம் இல்லாமல் முழுமையடைந்துவிட்ட வட்டம்.
மூன்று பறவைகளின் வருகை உங்களுக்கு கொடுத்த சந்தோசத்தை போலவே , அன்றாடம் படித்த கதையை அசைபோட்டபடி, காலை நடையில் தினம் தினமும் பார்த்துசெல்லும் பருத்தி செடிகள். அறுவடை முடிந்த நிலத்தை திருத்தி, பண்படுத்தி, பருத்தி விதைகளை விதைத்தது முதல், பஞ்சு வெடித்து நின்றிருக்கும் இச்சமயம் வரை, அனுதினமும், விதையாய், செடியாய், காயாய், பூவாய் பல பருவங்களை கண்கூடாய் பார்க்கும் வாய்ப்பு கிடைத்த நாட்கள். “ஏமானே… மொதலாளி எப்பவுமே தெக்கு பக்கமே மட திறந்து தண்ணி வைக்கிறாரு… தெக்கேருந்து வடக்க வாறதுக்குள்ள வெய்யில் கேறிப்போயி ஈரப்பதம் சீக்கிரம் காஞ்சிபோவுது…. தெக்கு பக்க செடில்லாம் எப்படி செழிப்பா காச்சிருக்கு… . வடக்கு பக்கமிருக்குற நாங்க எப்படி சோம்பி போயி இருக்கம் பாருங்க…. எங்களுக்கும் பசிக்கும்ல… கொச்சேமான் மனசுவச்சி அந்தாக்குல நிக்குற மொதலாளிக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு அப்புறமா நடைய தொடரணும்னு” மனதால் பேசுகிற அளவுக்கு நெருக்கமாகி போன பருத்தி செடிகள்.
”அவங்கெட்டவன்னு அப்பவே சொன்னேன், கேட்டீங்களா தம்பி.. இப்ப பாருங்க சாத்யகிய வெட்டிபுட்டாங்க… நா போயி சாவுதேன்…” என்று அலைபேசியில் அழைத்து பிராது சொல்லும் லோகமாதேவிக்கு சமாதானம் சொல்லிவிட்டு ஆரம்பிக்கும் அன்றைய கதைக்கான உரையாடல்கள்.
அலுவலக சகாக்கள் முதல், ஆல் இண்டியா ரேடியோ அறிவிப்பாளர்கள் வரை , கொரோனா கால சிறுகதைகளின் வாசகர்கள் ஆகிவிட்டார்கள். காரைக்கால் பண்பலை நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளரிடம் கதைகளை பற்றி சொல்லியிருந்தேன். கதைகளின் லிங்கை, அறிப்பாளர்களுக்கான குழுமத்தில் அனுப்பிவைத்து படிக்கச்சொல்கிறார். லூப் கதை அவர்கள் மத்தியில் மிகவும் விரும்பப்பட்ட ஒன்று.
”ஆட்டோ கண்ணாடிய திருப்புனா எப்படிங்க இந்த பிரச்சினை சரியாகும்…?” அலுவல நண்பர்கள் மத்தியில் அடிக்கடி புழங்கும் ஒரு திரைப்பட வசனம் .
’ஆனையில்லா’கதையின் சுருக்கத்தை , அலுவலக நண்பர்கள் சிலரிடம் சொல்லி, கதையின் லிங்கை அனுப்பி, படிக்க சொல்லியிருந்தேன். “ஆனைக்கி கிரீஸ் பூசுனா எப்டி இந்த ப்ராப்ளம் சால்வ் ஆகும்…?” என்ற வாசகம் இப்போது அந்த இடத்தை பிடித்துக்கொண்டது.
இன்று காலை வழக்கம்போல புலரியில் உதயத்தை பார்க்க நின்றிருக்கையில், மேக மூட்டங்கள் இல்லாமல், வெகுவாய் துலங்கி நின்றிருந்த கீழ்வானில், மெதுவாய் எட்டிபார்த்து,
கீற்றாய் ஆரம்பித்து, சடுதியில் முழுமைபெற்றது உதயம். கண்கூசா கதிரவனை, முழுமையாய் உள்வாங்கிய திருப்தி. இன்றைய நடையில் அசைபோட கதை இல்லை, ஆனால் முழுமையின் தித்திப்பு நிறைந்திருக்றது.
நிறைவின் தித்திப்பை, மீள்வாசிப்பாக மாற்றிக்கொண்டிருக்கும் அறுபத்தி ஒன்பது கதைகள்.
நட்புடன்,
யோகேஸ்வரன் ராமநாதன்.
அன்புள்ள ஜெ எம்
நலமா?
மிகச்சிறியவர்கள்… ஆம், தனிப்பட்ட பண்புகளில் அவர்கள் நம்மைவிட மேலானவர்கள். நான் மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் தாங்களே வெட்டிக்கொண்ட குழிகளுக்குள் நிற்கிறார்கள். நாம் குன்றின்மேல் நிற்கிறோம். நம்முடைய கல்வியால், பிரிட்டிஷ் அரசு நமக்கு அளிக்கும் உலகப்பார்வையால். நாம் இவர்களை எறும்புகளைப் பார்ப்பதுபோல குனிந்து பார்க்கிறோம். சிலசமயம் பரிதாபப்படுகிறோம். நம் காலைக் கடிக்கும்போதும் பூட்ஸால் ஒரே நசுக்காக நசுக்கிவிடுகிறோம்.”
மிகச் சரியான துல்லிய வரைவு. இன்று அமெரிக்கா ஏகாதிபத்தியம் செய்து கொண்டு இருக்கிறது. மெல்ல சீனா ஆரம்பிக்கிறது.
“இவர்களின் தன்முனைப்பு. தாங்கள் சரித்திர புருஷர்கள் என்னும் மிதப்பு. அப்படி நினைக்க ஆரம்பிக்கும் எவரும் அதன்பின் மனிதர்களாக இருப்பதில்லை. தெய்வங்களாக தங்களை நினைக்கிறார்கள். மனிதர்கள் கூட்டத்தோடு அழிக்க தெய்வங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை”
உண்மைதான். சரித்திரத்தில் செங்கிஸ்க்கான் , அலெக்சாண்டர், நெப்போலியன் ஆகிய புருஷர்கள்.ஆயினும் தெய்வத்தின் பெயரால் உலகில் நடந்த மனித குல அழிவுகள் இன்னும் மிக அதிகம்.
அன்புடன்
சிவா சக்திவேல்