கடிதங்களின் உலகம்

அன்புள்ள ஜெ.

இன்று வாசகர் கடிதங்கள் பற்றி எழுதியிருந்தீர்கள். அதனை இரண்டு வகையாக்கி இருந்தீர்கள். ஒன்று எழுத்தாளனே வாசகனாகி படைப்பாளிக்கு எழுதுவது. மற்றையது வாசகனே படைப்பாளிக்கு எழுதுவது. ராஜமார்த்தாண்டன் தொகுத்த ஜி.நாகராஜன் ஆக்கங்களில் இறுதியாக சுந்தரராமசாமிக்கு ஜி.நா எழுதிய அய்ந்து கடிதங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ஒன்று கையெழுத்துப் பிரதி. இது எனக்கு முதல் வகையை ஞாபகமூட்டியது.

அந்தக் கடிதங்களை வாசிக்கும்போது அவரது கதைகளில் இருந்து மாறுபட்டதான Intellectual Scope ஜி.நாகராஜனுக்கு இருந்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஜி.நாகராஜன் சு.ரா போல உரைநடைகளை அதிகம் எழுதியிருந்தால் அவரது கதைகள் போலவே அதுவும் பேசு பொருளாகியிருக்கும் என்று கருதுகிறேன்.

பொதுவாகக் காதல் கடிதங்கள் எழுதுவது என்பது நமக்கு விருப்பமான ஒன்றாக மிகச் சிறுவயதில் இருந்தது. பின்பு வளர வளர ஒவ்வொன்றின் மீதும் விருப்பங்கள். இந்த வாசகர் படைப்பாளி கடிதங்கள் என்பது நீங்கள் கூறியது போல  இடையறாத பெருநிகழ்வினை வளர்த்துவிடுபவையே.

 

சுயாந்தன்.

 

அன்புள்ள சுயாந்தன்

அக்காலகட்டத்தில் எழுத்தாளர்கள் ஒருவருக்கொருவர் கடிதங்கள் எழுதிக்கொள்வது மிகுதி. பிரசுரமாகும் வாய்ப்பு மிகக்குறைவு என்பதனால் இக்கடிதங்களே இலக்கிய உரையாடலை நிலைநிறுத்தும் விசையென திகழ்ந்தன. நானும் நாளெல்லாம் கடிதங்கள்தான் எழுதிக்கொண்டிருந்தேன்

கி.ராஜநாராயணன், கு. அழகிரிசாமி கடிதங்கள் நுணுக்கமான சித்திரங்களால் ஆனவை. அவ்வகை கடிதங்கள் பின்னர் வண்ணதாசன் நிறைய எழுதினார். சு.ரா, ஜி.நாகராஜன் கடிதங்கள் அறிவார்ந்த விவாதம் கொண்டவை. ஜி.நாகராஜன் அன்று எழுத்தாளர்கள் நடுவே ஓர் அறிவுஜீவி. மார்க்ஸியக் கொள்கைகளை விரிவாக படித்தவர், சிறப்பாக மேடையிலும் பேசுபவர் அவர் என்று சு.ரா சொன்னதுண்டு

அவருக்கு கட்டுரைகள், விமர்சனங்களில் நம்பிக்கை இல்லாமலாகியது. ஒருகட்டத்திற்குப்பின் எழுதுவதிலேயே நம்பிக்கையை இழந்தார்.

 

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு மூத்த வாசகியின் கடிதம்
அடுத்த கட்டுரைவிக்கிப்பீடியாவின் முறைகேடுகள்- கடிதங்கள்