வெண்முரசு வடிவம்

அன்புள்ள ஜெ

பன்னிரு படைக்கலத்தில் “யாதவா எழுக உன் அறம்” என்று திரெளபதி கூவுகையில் முதலில்  ஓடி வந்த கிருஷ்ணை இன்று அவன் அறத்தை செயல்படுத்த கிளம்பிவிட்டாள் என்று எண்ணிக்கொண்டேன் இன்று படித்ததும்.

அவறை சத்ரியர்களை அழித்து யாதவர்களை உயர்த்த வந்தவன் என்று ஒரு குலத்துக்குள் அடக்கிவிட முடியாது.  மொத்தமாக தன் குருதியினரையும் பலிகொடுத்து அவன் நிறுவிய அவனது அறம்.. அது ஒட்டு மொத்த மாந்தர்க்கானது

அது என்ன என்பதை பத்தாவது நாவலான பன்னிரு படைக்கலம் சொல்ல ஆரம்பித்து இன்று இருபத்தைந்தாம் நாவலில் நிலைகொண்டிருக்கிறது. அதன்  உச்சம் இதுதானா அல்லது  இனியும் வருமா என்று காத்திருக்கிறேன்…

பதினொன்றாம் நாவல்   குருகுல மரபுகள்  எல்லாம் என்ன என சொல்லத்  துவங்கி அதன்அடுத்த கட்டம் இமைக்கணத்தில் அவரவர்க்கான தன்னறம் யாது என்பதில் வந்து நின்றது..

அங்கிருந்து கிளம்பி களிற்று யானை நிரையில் உரு கொண்டது. களிற்றுயானை நிரையில் ஆதன் சொல்லுவான், யாதவன் இரு பாலருக்குமான பொதுவான அறத்தை நிறுத்திவிட்டான். இனி நாங்கள் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்  என்று கொண்டு செல்வோம் என்று..

கடையக் கடைய வெண்ணெய் திரள்வதுபோல் அனைத்தும் திரண்டு எழுகின்றன.ஒட்டுமொத்த வெண்முரசும் நேர்த்தியான வரைபடம் போல திரண்டு நிற்பது போன்ற பிரமை..

பிள்ளைவாள் ஞானமுத்தனின் தலையில் தட்டி அங்க பாரு என்று சொன்ன அந்த கணம்  ( ஈராறு கால்கொண்டெழும் புரவி ) எனக்குள் என்று ஏற்பட்டது என்று வியந்து பார்க்கிறேன்

நன்றியுடன்

R.காளிப்ரஸாத்

அன்புள்ள காளி

வெண்முரசை ஒன்றாகக்கோக்கும் அம்சம் புனைவுத்திறன் அல்ல. அது எளிதானது, பயின்று அடையத்தக்கது. புனைவுவழியாக ஓடும் மெய்நாடல், கண்டடைதல்தான் அதை ஒன்றாக ஆக்குகிறது. ஒருமையை உருவாக்குகிறது.

ஒருநாவல் ஒருவினாவாக உருவாகிறது, எதையோ கண்டடைந்து நிற்கிறது. அதிலிருந்து அடுத்த வினா, அடுத்த பயணம், அடுத்த நிறைவு

எழுதத்தொடங்கும்போது இந்த தேடலுக்கே முன்னுரிமைகொடுக்கவேண்டும், புனைவு எப்படிச் சிதறினாலும் சரி என எனக்கே சொல்லிக்கொண்டேன். கதைமாந்தரின் குணச்சித்திர ஒருமை, தர்க்கபூர்வமான நிகழ்வு ஒருமை ஆகியவற்றைப்பற்றி எண்ணவே கூடாது என விதித்துக்கொண்டேன். ஏனென்றால் என் நோக்கம் அது மட்டுமே

ஆனால் எழுதி முடித்தபோதெல்லாம் என்னை மீறி அவற்றில் முழுமையான ஒருமை நிகழ்ந்திருப்பதையே கண்டேன். அந்த தேடலே எல்லாவற்றையும் உருவாக்கிவிடுமென கண்டேன்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,

நான்  மிகவும் குறைவாக கடிதம் எழுதுபவன் , ஒன்றிரண்டு முறை முன்பு எழுதி இருக்கிறேன்.

வெண்முரசு அத்தியாயங்களை ஓரளவு தொடராக படித்து வருகிறேன். உங்களது கற்பனைகள் அபாரம்.

வியாச பாரதத்திற்கு ஒரு விளக்கவுரை போன்று உள்ளது. பாரதத்தை ஒரு ஆன்மிக உரையாக படிக்காமல், ஒரு சரித்திர நோக்கிலே படித்தால் பல உண்மைகள் நமக்கு புரியும். அதில் உள்ள அரசியல் மற்றும் சரித்திரம் இன்றைய தலைமுறைக்கு மிகவும் தேவை. இன்றைய தலைமுறை தமிழ் வாசிப்பது அரிதாகி விட்டது.

கல்பொருசிருநுரை அதன் முடிவை நோக்கி செல்கிறது என்று அறிகிறேன். சிறு சந்தேகம். துவாரகை முடிவு போர் முடிந்து முப்பத்து ஆறு ஆண்டுகள் கழித்து நடை பெறுகிறது. இதன் நடுவில், யுதிஷ்டிரன்  ஆட்சி நடைபெற்று வருகிறது. வியாசர் இதை சில ஸ்லோகங்களில் முடித்து  அவன் நல்லாட்சி புரிந்தான் என்று முடித்து விடுகிறார்.வியாச ஜெயமோகன் இதை மேலும் விரிவு படுத்தி அவனுடைய நல்லாட்சியை விளக்கலாம் அல்லவா?

எப்படி பீமன் இளவரசனாக இருந்தான் . அர்ஜுனன் என்ன செய்தான், நகுல சகதேவர்கள் என்ன செய்தார்கள், மற்ற அரசர்களுக்கும் அவர்கள்ளுக்கும் எப்படி உறவு இருந்தது. அவர்கள் வேறு பெண்டிரை மணந்தனரா ?  அணைத்து அரசர்களும் மடிந்து விட்ட நிலையிலே எப்படி ஆட்சி நடைபெற்றது? பரிட்சித் எப்படி வளர்கிறான்?யாதவர்கள், கிருஷ்ணன் மற்றும் பாண்டவர்கள் உறவு எப்படி இருந்தது, போன்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

தங்களால் மட்டுமே இதை எழுத இயலும். செய்வீரா?

வாழ்க

அன்புள்ள

ஸ்ரீராம் வனமாலி

பி.கு. – (நீர்சுடர் -57 ) குந்தி கர்ணன் தன்னுடைய மகன், உங்களது மூத்தவன். அவனுக்கும் நீர்க்கடன் செய்க என்று கூறுகிறாள். ஆனால் பாண்டவர்கள் சற்று எளிதாக எடுத்துக்கொண்ட மாதிரி இருந்தது. அவர்களது மனநிலை மிகவும் கொந்தளித்து இருக்க வேண்டும் அல்லவா ? இதற்க்கு கிருஷ்ணன் மற்றும் பீஷ்மர் மற்றும் குந்தி விளக்கம் அளித்து இருக்க வேண்டும் அல்லவா ? நீர்ச்சுடர் முடியும் வரை இதை பாண்டவர்கள் எளிதாக கடந்து விட்டதாக தோற்றியது.

அன்புள்ள ஸ்ரீராம்

உண்மையில் அந்த பகுதி களிற்றியானைநிரை நாவலாக உள்ளது. ஆனால் வெண்முரசின் ஒட்டுமொத்தமான கட்டமைப்பு முப்பத்தாறாண்டுகள் நல்லாட்சி என்பதை ஏற்கக்கூடியதாக இல்லை. மகாபாரதத்தை கூர்ந்து வாசித்தால்கூட யுதிஷ்டிரரின் நல்லாட்சி என்பது ஒரு மரபுச்சொல் என்றே தோன்றுகிறது. போரில் நிகழ்ந்த அழிவுகள், மைந்தரின் சாவுகளிலிருந்து பாண்டவர்களால் மீளமுடியவில்லை என்பதையும் ஐவரும் ஐந்து வகைகளில் அல்லலுற்று அலைந்ததையுமே நாம் மகாபாரதத்தில் காண்கிறோம். அந்த அல்லல்கள் வழியாக அவர்கள் மெய்மையைச் சென்றடைந்தனர்

மகாபாரதத்தில் ஐந்து பாண்டவர்களையும் ஐந்து விரல்கள் என்று சொல்லும் ஒரு வழக்கம் உண்டு. யுதிஷ்டிரர் கட்டைவிரல். ஐந்து விரலாலும் எடுக்கப்பட்ட மெய்மை ஒன்று மகாபாரதத்தில் உண்டு என்று சொல்லப்படும். அதை நோக்கி வெண்முரசைக்கொண்டுசெல்லவே நான் முயன்றேன்.

மேலும் போருக்குப்பின் நாவல் அமையத்தொடங்குகிறது. மகாபாரதத்திலேயே போருக்குப்பின் காவியம் முடிந்துவிடுகிறது. பிறகு இருப்பவை வெவ்வேறு நெறிநூல்கள், செய்திநூல்களின் தொகை. அவை எப்படி உருவாயின எப்படி இணைக்கப்பட்டன என்பது களிற்றியானைநிரை நாவலில் உள்ளது.

நீர்ச்சுடரில் கர்ணன் தங்கள் மூத்தவன் என்பது பாண்டவர்களுக்கு புதியசெய்தி என்று காட்டப்படவில்லை. அது அவர்களுக்கு முன்னரே தெரியும், கொஞ்சம் ஐயம் மட்டும் எஞ்சியிருந்தது என்றே வெண்முரசு காட்டுகிறது. மகாபாரதத்திலேயே அதற்குச் சான்றுகள் உள்ளன. குந்தி கர்ணனை அஸ்தினபுரிக்கு கொண்டுவந்து கல்விபயிலச்செய்தாள், அது அர்ஜுனன் முதலியோருக்கு தெரிந்துமிருந்தது. ஆகவே அதிர்ச்சி இல்லை. ஆனால் துயர் உள்ளது

வெண்முரசு அதற்குரிய உணர்வுகளின் ஓர் உலகை உருவாக்குகிறது. அந்த உணர்வுகள் ஏன் அவ்வாறு அமைகின்றன என்பதை ஆசிரியனாகிய நான் முழுக்க விளக்கிவிட முடியாது.

ஜெ

 

முந்தைய கட்டுரைஎலிகள்
அடுத்த கட்டுரைமாஸ்டர்- கடிதங்கள்