விஷ்ணுபுரம் வாங்க
https://vishnupuram.com/ நாவல் பற்றிய பார்வைகளுக்காக
நலமா?
இந்த ஊரடங்கில் விஷ்ணுபுரம் நாவல் படிக்க வாய்ப்பு கிடைத்தது.
வாசிப்பில் பிரம்மிப்பும், பல மனத்திரப்புகளும் கிடைத்தது. அந்த அனுபவத்தை சொற்களில் விளக்க கடினம்தான். இருந்தாலும் முயற்சிக்கிறேன்.
இந்த கடிதத்தை எழுத நினைத்த போது, இன்னொரு மனம் சில கேள்விகள் எழுப்பியது. “புத்தகம் படித்த கர்வத்தால் இந்த கடிதமா? நாவல் கூறும் அனைத்து பொருளையும் விளங்கிக்கொண்டது போல் கடிதம் எழுத எனக்கு தகுதி இருக்கிறதா?”. இப்படி ஒரு மனப்பழக்கத்தை இந்த நாவல் கற்றுத்தந்தது. முக்கியமாக கௌஸ்தூப பகுதி. மனம் கேள்விகள் எழுப்பியபடியே இருக்கிறது.
இந்த நாவலில் நான் அடைந்த பிரமிப்புகளை பட்டியலிட ஒரு முயற்சி. சில மட்டும் தொகுத்துள்ளேன்.
- விஷ்ணுபுரத்தின் பிரம்மாண்டம். கற்பனை நகரம் எனினும், வர்ணனைகளால் நேரில் சென்று பார்த்தது போல சோனா நதியும், விண்ணை முட்டும் கோபுரங்களும், புத்த பிட்சுவின் வரைபடங்களும் மனதிற்குள் பதிந்து விட்டது.
- சங்க கால வழக்குகள். உப்பு வணிகர்கள் மூலம் செய்தி கேட்பது, யுவன மது, பாணர்கள், மலைவாழ் மக்களின் குழுக்கள் (குலங்கள்). இந்த வழக்குகளை வேல்பாரி நாவலின் மூலம் நான் தெரிந்து கொண்டவை. இதை நுண்ணிய விவரணைகளாக நாவலில் அங்கங்கு கூறும்போது தங்களின் அறிவின் ஆழம் பிரமிக்க வைக்கிறது.
- நாவலின் கட்டமைப்பு. பகுதிகளை காலகட்டங்களில் முன்னும் பின்னும் அமைத்தது. கௌஸ்துபமும் மணிமுடியும் வாசிக்கும் போது ஸ்ரீபாதத்தில் பல பகுதிகளை மறுவாசிப்பு செய்தேன். புள்ளிகளை இணைக்கும் போது கிடைத்த தெளிவு. ஏற்கனவே அறிமுகமானவர் பற்றிய செய்திகள் தந்த மன எக்களிப்பு.
- தருக்கம். பவதத்தரின் அஜிதரின் சம்பாஷணைகள். நூறு சதம் புரிந்தது என்று சொல்ல முடியாது. அனால் அவ்விவாதங்களின் சாரத்தை அனுமானிக்க முடிந்தது. இந்த தருக்கத்தை தங்கள் மனதில் பல வருடங்கள் நிகழ்த்தி அதற்கு மொழி வடிவம் கொடுத்துள்ளீர்கள் என்று நம்புகிறேன். அதை எளிமையாக்க எடுத்துக்கொண்ட உதாரணங்கள் (விறகு/நெருப்பு, நீரின் பிரதிபலிப்பு, etc.). அந்த பேருழைப்பிற்கு எனது நன்றிகள்.
- போகமண்டபத்தில் பிராமணர்கள் உண்ணும் காட்சி. அனுபவத்திற்கு அப்பாற்பட்டவையாக இருந்தாலும், அந்த கற்பனைக்கு பல தகவல்கள் சேகரிக்கப்பட்டதாக தோன்றுகிறது.
இந்த நாவல் பல முறை வாசிக்கப்பட வேண்டிய ஒரு நூல். ஒவ்வொரு வாசிப்பிலும் புதிய அனுபவங்களும், புதிய தகவல்களும் கிடைப்பது உறுதி.
நாவலில் வரும் ஒரு வாக்கியம் மனதை நிறைத்தது. “வாழ்கிறவர்கள் வாழ்க்கையை அறிந்ததில்லை. வாழ்க்கையை அறிந்தவர்கள் வாழ்ந்ததில்லை“.
உங்களின் உழைப்பு நிகரற்றது. தமிழுக்கு நீங்கள் அளித்த கொடை எண்ணிலடங்காது. என்போன்ற வாசகர்கள் வாழ்நாள் முழுதும் படித்து நெகிழ பல படைப்புகள் படைத்தமைக்கு மிக்க நன்றிகள்.
நன்றி,
பாலா