மாஸ்டர்- கடிதங்கள்

‘மாஸ்டர்’

மாஸ்டர்,

‘மாஸ்டர்ன்னு போட்டு மேல ரெண்டு கொம்பு போட்டா பெரிய ………நீ ?’ என்று இதற்கும் வசைக் கடிதங்கள் வந்தால் ஆச்சரியமில்லை. கொம்பு வைத்த மாஸ்டர். கொம்பன் யானையேதான். எழுத்தாளர்களில் கொம்பன். மோதி மிதித்து முகத்தில் உமிழுங்கள். என்ன, நேரம் மற்றும் உமிழ்நீர் விரயம். உமிழப்படக்கூடத் தகுதியில்லாத இந்தப் புழுக்களை மதித்து உங்கள் போதாமைகளைப் பட்டியலும் இட்டு நீங்கள் இவ்வளவு பெரிய கட்டுரையை எழுதியிருக்கிறீர்கள். கணிதமேதை ராமானுஜத்திற்கு கணக்கைத் தவிர எதுவும் தெரியாது. உங்களுக்கு கணக்கைத் தவிர எல்லாம் தெரிகிறது. தெரியாத இசையைப் பற்றியே நூறு கட்டுரைகளை எழுதித் தள்ளியிருக்கிறீர்கள். கணக்கு சரியாகத்தான் இருக்கிறது.

நான் கூட நினைத்துக் கொள்வேன், ‘தேவிடியா மகனே!’ என்று திட்டுபவனிடம் கூற ரெண்டே பதில்கள்கள் தான் உண்டு. ‘ஆம்’,’இல்லை’. அதைச் சொன்னால் அவன் மறுமொழி என்னவாக இருக்கும் என்று. கி.ரா தொகுத்த கெட்ட வார்த்தைகள் அகராதி ஒன்று ”அன்னத்’தில் பார்த்தேன். அநேகமாக தமிழில் புழக்கத்தில் இருக்கும் எல்லா கெட்டவார்த்தைகளாலும் அர்ச்சிக்கப்பட்டு, ஒரு எல்லாம் கடந்த யோகியின் நிலையில் ‘இந்தா பாருங்க தம்பிகளா…’ என்று அவர்களுக்கு ஒரு பதிலுரையும் கொடுத்திருக்கிறீர்கள். நேர்மறை மனநிலையின் உச்சக்கட்டம் இச்செயல். ஆனால், இதையெல்லாம் அவர்கள் படித்துப் புரிந்து கொள்ளும் அளவிற்கு இருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் உங்கள் தளத்தைப் படிக்கும் எவரும் இந்தக் கீழான காரியங்களில் ஈடுபட மாட்டார்கள். ஒருவேளை இப்பிடி இருக்கலாமா? உங்கள் மீது ‘காண்டாக’ இருக்கும் ஒரு அமைப்பு தன் உறுப்பினர்களை ஏவிச் செய்த வேலையாக இருக்கலாமா?   ‘இன்பாக்ஸ்’ சிலேயே இது போன்ற மின்னஞ்சல்களை அடையாளம் கண்டு அழிக்கும் மென்பொருள் வரும்வரை காத்திருக்க வேண்டியதுதான்.

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

அன்புள்ள கிருஷ்ணன் சங்கரன்

நாம் சொல்லிக்கொள்ளும் சொற்கள் நமக்கே மிகுதியும் கேட்கின்றன. நாம் நம் சொற்கள் வழியாக நம்மை சொடுக்கிச் செலுத்திக்கொள்கிறோம்

ஜெ

அன்பின் ஜெ,

மாஸ்டர் ‘வாசித்துவிட்டு உடனே உங்களுக்கு எழுதுகிறேன்.

என்ன ஒரு அற்புதமான புரிதல்.ஒரு மனக்குழப்பம்,வருத்தத்தில் ஆழ்ந்திருந்த நேரத்தில் தான் இவ்வெழுத்தை வாசிக்கிறேன்.அத்தனை குழ்ப்பங்களையும் வீழ்த்தி தெளிவை அளிக்கிறது உங்கள் எழுத்து.இதை நான் என் பேறாகவே எண்ணேகிறேன்.

உங்களுக்கு இணையாக கூறுவதாக எண்ணவேண்டாம்.  உலகியல் ரீதியாக நானும் பல திறன்கள் அற்றவள் தான்.அவையெல்லம் சுற்றி இருப்பவர்களால் ஏளனம் செய்யப்பட்டு கீழிறக்கப்படுவது என்பது எப்போதும் எனக்கு நடந்து கொண்டே தான் இருக்கிறது.அப்படியாகவே சூழ உள்ளோரால் சில நாட்களாக மிகுந்த மனவியல் தாக்கத்திற்கு ஆட்படுத்தப்பட்டு இருந்தேன்.இந்நிலையில் தான் மாஸ்டர்’ பதிவினை வாசிக்கிறேன்.எனக்காகவே இது எழுதப்பட்டதாகவே எண்ணுகிறேன்.என்னை இந்தளவிற்கு தூற்றும் இவர்களால் நான் வாசித்திருக்கும் புத்தகத்தின் ஒரு சிறுபகுதியைக் கூட வாசிக்க முடியாது .அதன் சாரம் என்னவென்று கூட புரிந்து கொள்ள முடியாது.

நான் என் திறனாக எண்ணுவதே என் வாசிப்பைத்தான்.பள்ளிக்காலங்களிலிருந்தே எப்பொழுதும் தேடித்தேடி வாசிப்பதே  என் இலக்காக இருந்திருக்கிறது. இன்று வரை வாசிப்பு மட்டுமே எனக்கான வெளி.என் பேச்சில் செயல்களில் எப்படியாவது அந்த தாக்கம் வெளிப்பட்டுவிடும் என்றே நான் கருதுகிறேன்.அதுவே மற்றவர்களுக்கு தாழ்வெண்ணத்தை உண்டாக்கலாம்.நாமறியாத  ஏதோ ஒன்றினை அறிந்து இத்தனை உற்சாகத்துடன்,ஆற்றலுடன் இருக்கிறாளே என வன்மம் கொள்கிறார்கள்.அதனாலேயே உனக்கு இத்தனை போதவில்லை என்று பட்டியலிட்டு உலகியல் ரீதியான திறன்களை இவர்கள் வகுக்கும் வாழ்வியல் திட்டங்களை என்னிடம் இல்லை என்று மட்டந்தட்டி என்னை வசைபாடுகிறார்கள்.ஒரு சின்ன சம்பளக் கணக்கு கூட நினைவில் இல்லை.நீயெல்லாம் எதற்கு லாயக்கு என்று கேட்ககையில் , முஷ்டியை மடக்கி மூக்கில் ஒரு குத்து விடலாமா என்னுமளவிற்கு யோசிக்கிறேன்.என் இருந்து வயதுகளில் அப்படி அடித்தும் இருக்கிறேன்.இப்பொழுது நினைத்தால் சிரிப்பு வருகிறது.இன்று இவர்களையெல்லாம் கடந்து செல்ல முடிகிறது.ஆனாலும் மனதளவில் காயப்படுகிறேன்.

இந்தச் சூழலில் தான் இன்றைய உங்கள் எழுத்து என்னை உயிரப்பிக்கிறது.ஆம் முழு ஊக்கத்துடன் செயல்பட என்னை உருவாக்குகிறது.உங்களைப் போன்ற மாஸ்டருடன் ,உங்கள் எழுத்துக்களுடன் எண்ணங்களுடன் சேர்ந்து பயணிக்க இழுத்துக் கொள்கிறது.அற்பத்தனங்களை பொருட்படுத்தாமல் உயரிய இலக்கியத்துடன் சிந்தனைகளுடன் வாழ என்னை தெளிவு படுத்துகிறது.

தினமும் உங்களுக்கு எழுதாவிட்டாலும் மனதில் உங்களுடன் உரையாடிக்கொண்டு தான் இருக்கிறேன். தனிமைக்கால சிறுகதைகளை மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன்.

அவையெல்லாம் என்னை முழுமையாக்குகின்றன.

இன்றைய மாஸ்டர் பதிவு அதற்கெல்லாம் உச்சம்.என்னை தெளிவாக்கியற்கு மிக்க நன்றி ஜெ.

அன்புடன்

மோனிகா.

அன்புள்ள மோனிகா,

அறிவியக்கத்தில் செயல்படும் எவருக்கும் நம்பிக்கை இருக்கவேண்டும், ஏனென்றால் அதன் விளைவுகள் கண்கூடானவை அல்ல, இழப்புகள் தெள்ளத்தெளிவானவை. அந்நம்பிக்கையில் முதல் நம்பிக்கை தன்மேல், தன் பணிமேல், தன் வரலாற்று இடத்தின்மேல் உள்ள நம்பிக்கை. பெண்களுக்கு கொஞ்சம் கூடுதலாகவே அந்நம்பிக்கை தேவை.

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு வடிவம்
அடுத்த கட்டுரைஒரு கடிதம்