அன்பின் ஜெ,
நலம்தானே?
1995-ல் ஓசூரின் தொரப்பள்ளியில் மஞ்சுஸ்ரீ கொய்மலர்ப் பண்ணையில் வேலைக்குச் சேர்ந்த புதிது. ஓசூரில் ராயக்கோட்டா ரோட்டில் சாய்பாபா கோவிலுக்கருகில் இடது புறம் திரும்பினால் எம்.ஜி ரோடு (பெயர் சரிதான் என்று நினைக்கிறேன்). அந்த ரோட்டில்தான் இந்தியன் புக் செண்டர் இருந்தது. அங்குதான் வழக்கமாக புத்தகங்கள் வாங்குவது வழக்கம். நண்பர் முகிலனின் கேசட் மற்றும் சி.டி.க்கள் விற்பனைக் கடையும் அதே ரோட்டில்தான் இருந்தது.
ஒருமுறை இந்தியன் புக் செண்டரில் பாலாவின் புத்தகங்களையும், ஜானகிராமனையும் தேடிக்கொண்டிருந்தபோது, பக்கத்து புத்தக வரிசையில் ”கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும் ஓஷோ பாகம் 1” என்ற புத்தகம் கண்ணில் பட்டது. மனதில் மெல்லிய எரிச்சல் சுவை. கோவை கல்லூரியில் படித்த நான்கு வருடங்களும், அதன் பின்னும் இஸ்கான் அமைப்புடன் மிகவும் நெருங்கிய தொடர்பிலிருந்தேன். கல்லூரிக் காலத்தில் சீனியர் அண்ணா பாலா ஓஷோவைப் படி படி என்று நச்சரித்தும் கடைசி வருடம் கல்லூரி விட்டு வெளியில் வரும்வரை ஓஷோவைத் தொடவேயில்லை. அப்போது ஜிட்டு பிடித்திருந்தார். கிருஷ்ணாவை மனிதன் என்று விளித்திருந்தது ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் ஊறிப் போயிருந்த என் மனதை சீண்டியது. அன்று அந்தப் புத்தகத்தை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தேன்.
அது ஒரு நற்கணம் என்றுதான் நம்புகிறேன். என் ஆன்மீகத் தேடலின் கேள்விகளை குழப்பங்களை தெளிவாக்கி தேடல் தொடர வேண்டிய ஒரு ஒளிப்பாதையை காட்டிய, ஓஷோவை இன்னாரென்று எனக்கு அடையாளம் காட்டிய, மனதுக்கு மிக நெருக்கமாய் ஓஷோவை கட்டிக்கொண்டு இருத்திய ஒரு புத்தகம் அது. ”Krishna: The Man and His Philosophy” என்ற அந்த நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் கவிஞர் புவியரசு ஐயா அவர்கள். அற்புதமான மொழிபெயர்ப்பு அது. அதன்பின் ”கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும்” நூல் வரிசையின் எல்லாப் பாகங்களையும் வாங்கினேன். தமிழில் வேறு பலரால் மொழிபெயர்க்கப்பட்ட எல்லா ஓஷோ நூல்களையும் வாங்கிப் படித்தபோதுதான், புவியரசின் மொழியாக்கத்தின் சிறப்பும் அதன் விகசிப்பும் தேன் சுவையும் தனித்துவமாக தெளிவாகப் புரிந்தது. தமிழில் புவியரசால் மொழிபெயர்க்கப்பட்ட எல்லா ஓஷோ புத்தகங்களையும் வாங்கினேன் (”அன்பின் அதிர்வுகள்”, ”இப்போதே பரவசம் ஏன் காத்திருக்கிறீர்கள்”, ”உன் அற்புத ரோஜா மலரட்டும்”, ”புல் தானாகவே வளர்கிறது” போன்று).
”மறைந்திருக்கும் உண்மைகள்” (Hidden Mysteries) அம்முவிற்கும் மிகவும் பிடித்த புத்தகம். அதன்பின், தமிழில் ஒஷோ மெழிபெயர்ப்புகள் குறைவான எண்ணிக்கையிலிலேயே வெளியானதால், ஓஷோவின் ஆங்கிலப் புத்தகங்களுக்கு நகர்ந்தாலும் புவியரசு உண்டாக்கிய ஓஷோவின் சுவை அடிநாக்கில் இனித்தவாறுதான் இருந்தது.
கலீல் கிப்ரானும், உமர் கய்யாமும், தாகூரும்,ஷேக்ஸ்பியரும் புவியரசு வழியாகவே மிக நெருக்கமானார்கள். “கரமசோவ் சகோதரர்கள்” முதலில் என்னை வந்தடைந்தது புவியரசு மூலமாகத்தான். பாம்பே சென்றபின் என் பிறந்தநாள் ஒன்றுக்காக தம்பி சத்யன் சில புத்தகங்களை வாங்கி எனக்கு ”சர்ப்ரைஸ் கிஃப்”ட்டாக கூரியரில் அனுப்பியிருந்தான். அவன் அனுப்பிய புத்தகங்களில் ஒன்று நைமியின் “மிர்தாதின் புத்தகம்”, மொழிபெயர்ப்பில் புவியரசின் பெயரைக் கண்டதும் நான் அடைந்த மகிழ்ச்சி…சத்யன் நேரில் இருந்திருந்தால் அவனைக் கட்டிக் கொண்டிருந்திருப்பேன்.
விசுவ பாரதி நடுவண் பலகலைக்கழகத்தின் தமிழ்த்துறையும், பனாரஸ் இந்து பல்கலைக்கழக இந்திய மொழிகள் துறையும் இணைந்து நடத்திய புவியரசு 90 இணைய உரையரங்கத்தில் சென்ற ஞாயிறு (29.11.2020) கலந்துகொள்ளும் பேறு கிடைத்தது (நண்பர் கோவை தியாகு நூலகம் தியாகராஜன் அவர்களுக்கு நன்றி; அவர் மூலமாகத்தான் நிகழ்வு பற்றிய விபரம் அறிந்தேன்). சிறப்பான நிகழ்வு. அருமையான உரைகள். புவியரசு ஐயாவைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள உதவியாக இருந்தது. நிறைவானது மனது.
விசுவ பாரதி நடுவண் பல்கலையின் தமிழ்த்துறை முனைவர் செந்தில் பிரகாஷ் வரவேற்புரை ஆற்றி நிகழ்வைத் துவங்கினார். அவரே நிகழ்வு முழுவதையும் சிறப்பாக ஒருங்கிணைத்தார். புதுவைப் பல்கலையின் பேராசிரியர் ரவிக்குமார் தலைமையுரையும் நிறைவுரையும் வழங்கினார். ரவி, என் முகநூல் நண்பர் ராம்கியின் பள்ளிப்பருவத்திலிருந்தே நெருங்கிய நண்பர் என்பது எனக்கு இன்றுதான் தெரிந்தது. ரவி ஜப்பானியக் கவிதைகள் சிலவற்றை மொழிபெயர்த்துக் கொண்டிருப்பதாக ராம்கி மூலம் அறிந்தேன்.
மூன்று சிறப்புரைகள் இருந்தன. புவியரசு ஐயாவுடன் நெருங்கிப் பழகிய, புதுதில்லி அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் துணைத் தலைவர் கே.எஸ். எனும் கே. சுப்ரமணியன் ஐயா, கோவை இதழாளர் பா. மீனாட்சி சுந்தரம், வானம்பாடி ஆய்வாளர் முனைவர். மஞ்சுளா தேவி மேம் மூவரின் உரைகள் வழியாகவும், ரவியின் உரை வழியாகவும் புவியரசு எனும் ஆளுமையின் பல பக்கங்கள் எனக்குத் தெரியவந்தன. மஞ்சுளா மேமின் உரை அன்பில் தோய்ந்திருந்தது. நான் நெகிழ்ச்சியாய் உணர்ந்தேன்.
புவியரசு ஐயாவின் கவிதைகள்பல, நிகழ்வின் உரைகளில் பகிரப்பட்டன (ஒப்பம், அடக்கடவுளே, தோன்றாத் துணை, அஜீரணம், மகன் தந்தைக்காற்றும் உதவி, தாளிப்பு, குழப்பம்). வானம்பாடிகளில் கிட்டத்தட்ட அனைவரும் நினைவுகூறப்பட்டனர் (ஞானி, சிற்பி, மீரா, அப்துல் ரஹ்மான், மேத்தா, தமிழன்பன், கங்கை கொண்டான், தமிழ்நாடன், அக்னிபுத்திரன், சிதம்பர நாதன், சக்திக்கனல், பா.செயப்பிரகாசம், கங்கை கொண்டான்). வானம்பாடி இதழ், கவிதைகள், மொழிபெயர்ப்பு, நாடகங்கள், புவியரசு வாங்கிய இரு சாகிதய அகாடமி விருதுகள் (வங்காளக் கவிஞன் காஜி நஜ்ருல் இஸ்லாமின் “The Revolutionary”-ன் மொழிபெயர்ப்பான “புரட்சிக்கார”னுக்காகவும், “கையொப்ப”த்திற்காகவும்) என புவியரசின் பன்முக ஆளுமைகளின் சித்திரத்தை உரைகள் அளித்தன. மீனாட்சி, தாகூர் கீதாஞ்சலியின் ஆங்கிலப் பாடலையும், புவியரசின் அதன் தமிழாக்கத்தையும் சொல்லி மிகச் சிறப்பாக விளக்கினார்.
பனாரஸ் இந்து பல்கலையின் இந்திய மொழிகள் துறையின் முனைவர் ஜெகதீசன் நன்றியுரை வழங்கினார்.
கிட்டத்தட்ட இரண்டரை மணி நேர நிகழ்வென்று நினைக்கிறேன். புவியரசு ஐயாவைக் கொண்டாட இன்னும் பல நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பதே என் விருப்பம். விசுவ பாரதி நடுவண் பல்கலையின் தமிழ்த்துறையும், பனாரஸ் இந்து பல்கலையின் தமிழ்த்துறையும் மிகச் சரியான முன்னெடுப்பை செய்திருக்கின்றன. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நான் ஓஷோவின் உலகில் நுழைவதற்கும், ஓஷோ எனும் ”வெளி”யில் வானத்தில் பறப்பதற்கும், அந்த கடலின் கரையில் கால் நனைப்பதற்கும் எனக்கு முழுக் காரணமாயிருந்தவர் கவிஞர் புவியரசு ஐயா அவர்கள். அவருக்கு நான் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். தொண்ணூறு வயதை எட்டியிருக்கும் அந்த அன்பின் தந்தை ஆளுமையை, வானம்பாடியை இந்நேரத்தில் தாழ் பணிந்து வணங்கிக் கொள்கிறேன்.
வெங்கடேஷ் சீனிவாசகம்