அன்புமிகு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.
வெண்முரசும் தமிழும் என்ற தலைப்பில் வெளியான மடலையும் தங்களின் விடையையும் படித்தேன்.
நல்ல தமிழில் எழுதிவரும் தங்களை இதுபோன்ற மடல்கள் திசை திருப்பிவிடுமோ என்ற எண்ணம் மடலைப் படித்த போது எழுந்தது. நல்லனவற்றில் இருந்து தங்களை யாரும் திசைமாற்றிவிட முடியாது என்பது தங்களின் விடையில் இருந்து தெரிந்தது.
நான் தொடக்கப்பள்ளி மாணவனாக இருந்தபோது, எங்கள் ஊரான கடலூர் முதுநகரில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் ஜெயகாந்தன் பேசினார். கூட்டம் முடிந்ததும் அருகில் இருந்த அவருடைய பழைய இல்லத்துக்கு நடந்தே சென்றார். அவருடன் ஏழெட்டுப் பேர் இருந்தார்கள். நானும் கூடவே சென்றேன். அவரின் வீட்டின் முன் நின்றபடியே பேசிக்கொண்டு இருந்தார்கள். ஓர் இளைஞர், “நீங்கள் எழுதுவது புரியவில்லை” என்று சொன்னார். “புரியவில்லை என்றால் வாத்யாரு வச்சுப் படிச்சுக்கோ” என்று பட்டென்று சொன்னார் ஜெயகாந்தன். ஆக அந்தக் காலத்திலும் எழுத்தாளர்களை நோக்கி இந்தக் கேள்வி எழுந்துள்ளது. இது குறித்துத் திண்ணை இணைய இதழிலும் எழுதி இருக்கிறேன்.
பழஞ்சொற்கள் என்பவை தலைமுறை தோறும் கொண்டுசெல்ல வேண்டிய சொத்துரிமை. அதேபோல் புதுச்சொற்களைக் கண்டறிந்து பயன்படுத்துவது நாம் உழைத்துப் பெறும் சொத்துரிமை. எனவே தங்களின் படைப்புகளில் பழஞ்சொற்களையும் புதுச்சொற்களையும் கையாளுகிறீர்கள். தமிழுக்கு நீங்கள் செய்துவரும் தொண்டாகவே இதனைக் கருதுகிறேன்.
மடலில் கார்த்திக் ராஜ் சொல்வதுபடி பார்த்தால் தற்காலத்தில் தமிங்கிலத்தில்தான் எழுத வேண்டும். நிறைய பேருக்குத் தமிழே தெரியவில்லை என்று சொல்கிறார். அப்படியானால் தமிங்கிலத்தில் இலக்கியம் எழுதினாலும் என்ன பயன்? ஒரு மொழி நிலைக்க வேண்டும் என்றால், அது ஆட்சி மொழியாக… கல்வி மொழியாக… வேலைவாய்ப்பு மொழியாக… வழிபாட்டு மொழியாக இருக்க வேண்டும். இவற்றை இழக்கும்போது மொழி அழிந்துதான் போகும். அப்போது எந்தத் தமிழ் இலக்கியமும் பயனற்றுத்தான் போகும். ஆனால் அந்த நிலை எய்தாது இருக்க வேண்டும். ஒவ்வொரு காலக் கட்டத்திலும் பேரிடர்களைக் கடந்துதான் வந்துள்ளது தமிழ்.
கதைக்காக வட்டார மொழியைக் கையாளும்போதும் பிற வட்டார மொழிபேசுவோர் புரியவில்லை என்றுதான் சொல்வார்கள். ஆர்வத்தோடு படிப்போருக்கு மட்டுமே அதன் ஓட்டத்தில் சொல்விளங்கும்.
விஷ்ணுபுரம் விழாவுக்குப் பல ஆண்டுகளாக வந்துகொண்டு இருக்கிறேன். அங்குவரும் இளைஞர்களைக் கவனித்து இருக்கிறேன். உங்கள் படைப்புகளைப் படிக்கும் பெரும்பான்மையர் ஆங்கில வழியில் படித்தவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களில் பலரும் நாள்தோறும் ஆங்கிலப் புழக்கத்தில் உள்ளவர்கள். சிலர் வெளிநாடுகளில் பணியாற்றுபவர்கள். அவர்கள் அனைவரும் உங்கள் மொழியில் தோய்ந்து திளைப்பவர்களாகவே காணுகிறேன். இளைஞர்களிடத்தில் நல்ல தமிழைக் கொண்டு சேர்த்து இருக்கிறீர்கள். அவரவருக்கு ஒரு மொழிநடை தானாகவே அமையும். தங்களுக்கு என்று தனிநடை தமிழ்நடை உருவாகிவிட்டது. சில படைப்புகளின் தன்மைக்கு ஏற்பவே நடையோட்டம் அமைகிறது. வெண்முரசின் நடை, ஒரு செவ்வியல் நடை.
வீரமாமுனிவர் காலத்திலேயே தனித்தமிழுக்கான விதை ஊன்றப்பட்டது. கடந்த நூற்றாண்டுகளில் இருந்த தமிழைவிட இருபதாம் மற்றும் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் தமிழ் மேலோங்கி வந்து உள்ளது. அரசு, பல்கலைக் கழகங்கள் செய்யத் தவறிய நிலையில் தனிமாந்தர்களே துறைதோறும் தூயதமிழ்ச் சொற்களைக் கண்டறிந்து வருகின்றனர். துறைசார் அகராதிகள் வந்தவண்ணம் உள்ளன. தினமணி நாளேடு புதுச்சொற்களைப் புழக்கத்தில் கொண்டு வருகிறது. தொலைக்காட்சியின் செய்தி அறிக்கையில் புதுச்சொற்கள் வருகின்றன. இது வளர்போக்குதான்.
புகழ்மிகு எழுத்தாளர்களில் தங்களைப்போல் புதுச்சொற்கள் கொண்டு எழுதுவோர் யாரும் இல்லை. அதேபோல் உரிய இடங்களில் பழஞ்சொற்களைப் பயன்படுத்துவதில் உங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. சொற்களுக்குள் பேராற்றல் உண்டு. அதை நீங்கள் கண்டுள்ளீர்கள். அண்மையில் நீங்கள் எழுதிய 69 சிறுகதைகளில் ஒருகதை போழ்வு என்ற தலைப்பில் வெளியானது. வழக்கம்போல் கதையைப் படித்து வியந்து மகிழ்ந்தேன். அதன்பிறகே போழ்வு என்பதற்கு என்ன பொருள் என்று தேடத் தொடங்கினேன். பிளப்பு என்று பொருள் அறிந்தேன். அச்சொல்லின் பொருள் அறிந்த பிறகு, அக்கதையின் வலிமை கூடியது. இந்தச் சொற்பொருள் தேடலில் ஒரு மகிழ்ச்சியையும் உணர்ந்தேன். தங்களைப் போல் நாஞ்சில் நாடன் அவர்களும் பழஞ்சொற்களைப் பயன்படுத்துகிறார்.
“சொற்கள் புகழோடு தோன்றுகின்றன” என்ற தலைப்பில் உங்களின் புதுச்சொல் ஆக்கங்கள் குறித்து ஒரு கட்டுரையை ஏற்கனவே எழுதி இருக்கிறேன். அது வெண்முரசு விவாதங்கள் என்ற வலைப்பூவில் உள்ளது.
உங்களுக்கு இருக்கும் மொழியாளுமையை யாரும் வியக்காமல் இருக்க முடியாது. வேறு யாரும் போட்டிக்கும் வர முடியாது.
தனித்தமிழைக் கொள்கையாகக் கொண்டு எழுதும் சிலரின் நடையில் இயல்பு இல்லை. ஆனால் உங்கள் எழுத்துகளில் சொற்றொடர்களில் அழகும் ஒழுங்கும் ஒருவகை ஈர்ப்பும் உள்ளன. சிலர் புதுச்சொற்களை எழுதும்போதோ புரியாத சொற்களைப் பயன்படுத்தும் போதோ அடைப்புக்குறிக்குள் அச்சொல்லின் பிறமொழிச் சொற்களை எழுதுவார்கள். ஆனால் நீங்கள் எந்தச் சொற்களுக்கும் அடைப்புக் குறிக்குள் பொருளையோ பிறமொழிச் சொல்லையோ குறிப்பது இல்லை. நீங்கள் எழுதும் புதுச்சொற்களே தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கின்றன. அதற்கான சூழலை உங்கள் சொற்றொடர்கள் உருவாக்கித் தருகின்றன. பிறமொழிச் சொற்களுக்குத்தான் நீங்கள் புதுச்சொல் உருவாக்குகிறீர்கள் என்பது அல்ல. சூழலின் போக்குக்கு ஏற்ப, சொல்லும் கருத்துகளின் நுண்மைக்கு ஏற்ப எந்த மொழியிலும் இல்லாத புதுச்சொற்களையும் தமிழுக்குத் தந்து வருகிறீர்கள்.
தமிழில் உலாவரும் புதுச்சொற்களை ஆக்கியவர்கள் யார் யார் என்று யாருக்கும் தெரிவதில்லை. புதுச்சொற்கள் உருவாக்குவோர்க்கு அந்தப் பெருமை சென்று அடைய வேண்டும். சில இடங்களில் யாரோ உருவாக்கிய சொல்லுக்கு வலிமை உள்ளவர்கள் தமக்குச் சொந்தம் போல் கொண்டாடும் நிலையும் உண்டு. உங்கள் சொல்லையும் தனதென்று சொல்வோரும் வரலாம். நீங்கள் அதைப் பொருட்படுத்த மாட்டீர்கள். எந்த வகையிலேனும் தங்கள் சொல், புழக்கத்தில் வருவதையே மகிழ்வாகக் கொள்வீர்கள்.
உங்கள் படைப்புகளில் உள்ள புதுச்சொற்கள் அனைத்தையும் தொகுக்க வேண்டும். அந்தப் பணியை நான் செய்ய வேண்டும் என்ற ஓர் எண்ணம் எனக்கு நீண்ட காலமாகவே உள்ளது.
அன்புடன்
கோ. மன்றவாணன்