சாதியும் கதைகளும்

ஜெ

நலமா?

மயில்கழுத்து கதையைப் படித்துக் கொண்டிருந்தேன்.
எனக்கு ஒரு நீண்ட நாள் ஆசை. கனவு என்று சொல்லவேண்டும். ஜாதிகள் அற்ற சமுதாயத்தைப் பார்க்கவேண்டும். அது தான் அறம் அல்லவா?

இதை ஒரு கற்பனை வாதமாகவும் மட்டும் எடுத்துக் கொண்டு ஆரயலாம். மனிதர்கள் ஜாதியை புறக்கணித்தாலொழிய ஜாதியம் ஒழியாது. ஜாதியம் சம்பந்தப்பட்ட ஏற்ற தாழ்வுகள் உண்மையாக நீங்க வேண்டுமென்றால், ஜாதியைப் பற்றி பேசாமலிருப்பதுதான் அதற்குச் சிறந்த வழி. (சற்றே நாம், ஜாதியத்தை ஆதாயத்திற்குக் கருவியாக பயன்படுத்தும் கும்பலை ஒதுக்கி, ஒரு ஐடியலிஸத்தை இந்த தர்கத்திற்கு உள்ளீடாக எடுத்துக் கொள்வோம்)

அரசாங்கம், ஜாதியம் மூலமாக உருவாக்கப்பட்ட பொருளாதார ஏற்ற தாழ்வுகளைச் சமன் படுத்துகிறதென்று என்று கிளம்பி, அதில் வெற்றி பெற்றதோ இல்லையோ, உணர்வு சம்பந்தப்பட்ட தளங்களில் அதற்கு எதிர்மறை விளைவுகளை எற்படுத்தியுள்ளது. அவர்கள் ஏன் படிவங்களில் தேவையில்லாத இடங்களிலும் ”ஜாதி” என்று கேட்கிறார்கள் என்று தெரியவில்லை.

சரி. சமுதாயத்தை முன்னகர்த்த வேண்டிய இலக்கியவாதிகளாவது இந்தப் பணியை செய்வார்களா என்று சிந்தித்துப் பார்க்கிறேன். செய்யமுடியுமா? ஒரு கதாபாத்திரம் உருவாகும் பொழுது ஜாதியம் சார்ந்து தான் உருவாக்கவேண்டுமா? ஜாதி அடையாளங்கள் இல்லாமல் அமைத்தல் இயாலாத காரியமா?

மயில கழுத்தில் ராமனும், பாலசுப்ரமணியனும் (தி.ஜாவும், சுராவும்) நிஜ பாத்திரங்களாதலால் அவர்கள் பேச்சு வழக்கு ஏற்று கொள்ள முடிகிறது. ஆனால் இந்த வரிக்ளைப் பாருங்கள்:
”அக்ரஹாரம் முழுக்க தெரு நிறைத்து கோலம்போட்டிருந்தார்கள். நிறைய பிராமணப் பையன்கள் சட்டை போடாத உடம்பில் பட்டைபட்டையாக விபூதி குழைத்து பூசி பெரிய பலாச்சுளைக் காதுகளுடனும் எண்ணை ஒட்டிய தலைமயிருடனும் உரக்க சிரித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். ”
இந்த வரியில் ”நிறைய பையன்கள்” என்று சொல்லியிருந்தால் எந்த வகையில் கதையின் தன்மையை குறைத்துக் காட்டியிருக்கும்? இது தவிர்க்க முடியாததா? இப்படி எழுதுவதால் நாம் ஜாதியத்தை அழிக்காமல் (பிரஞ்கையில்லாமலே) பாதுகாத்து அல்லவா வருகிறோம்?

இல்லை நான் “naive” ஆக சிந்திக்கிறேனா?

(உங்கள் கதையை உதாரணத்திற்காக இங்கே குறிப்பிடுகிறேனே தவிர இது பிற எழுத்தாளர்களின் கதைக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.)

Bags [பகவதிப்பெருமாள்]

அன்புள்ள பகவதிப்பெருமாள்,

பொதுத்தன்மை கொண்ட கேள்வி என்பதனால் நேரடியாக கறாராக இதற்கு பதிலளிப்பதைத் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். நம் சூழலில் ஜாதி பற்றிச்சொல்லப்படும் பொதுக்கருத்துக்களின் அடிப்படையில் ஓர் உறுதியான முன்முடிவை உருவாக்கிக்கொண்டு இந்த வினா எழுப்பப்பட்டிருக்கிற்து. ஜாதியை ஒழிக்க ஒரே வழி அதைப்பற்றி எவரும் எதுவும் பேசாமலிருப்பதுதான் என்பதில் உங்களுக்கு ஐயமே இல்லை. இருந்தாலும் இது ஓர் விவாதம் என்பதனால், விவாதங்களில் எனக்கு நம்பிக்கை இருப்பதனால் இந்த நீண்டபதில்.

இத்தகைய ஒரு கேள்வியை எழுப்புவதற்கு முன்னர் சாதி என்ற சமூக அமைப்பைப்பற்றி, அதன் உருவாக்கத்தையும் சமூகப் பங்களிப்பையும் பற்றி, ஒரு வரலாற்றுரீதியான புரிதலை உருவாக்கிக்கொள்ள முயல்வதே நாம் செய்யவேண்டியது. அந்த விரிவான அடிப்படையில் நின்றபடியே இதைப்பற்றிப் பேசுவது பொருள் உள்ளதாகும். ஆனால் நம் அறிவுஜீவிகளின் விவாதங்களில்கூட ஒருபோதும் ஒரு பின்புல வாசிப்பின் வலு இருப்பதில்லை. என் இணையதளத்தில் இது சார்ந்து நான் எழுதிய பல கட்டுரைகள் உள்ளன.

*

சாதி இந்தியச் சமூகத்தில் ’சிலரா’ல் உருவாக்கப்பட்ட ஒரு ’தீய’ அமைப்பு அல்ல. அல்லது தீய நோக்குடன் உருவாகி வந்த அமைப்பும் அல்ல. பள்ளிக்கூடங்களின் பேச்சுப்போட்டிகளுக்காக நமக்கு அளிக்கப்பட்ட எளிமையான கருத்துக்களின் அடிப்படையில் உயிர்வாழும் ஒரு பிரம்மாண்டமான சமூகத்தின் பலநூற்றாண்டுக்கால வரலாற்றை ஆராய்வதை நாம் பொதுவிவாதங்களில் செய்துவருகிறோம். இந்தத் தளத்தில் சிந்திப்பதற்கு விரிவான சமூகவியலாய்வுமுறைமைகள் உள்ளன. அந்த முறைமைகளைச் சார்ந்து நிகழ்த்தப்பட்ட விரிவான நூல்கள் உள்ளன. சாதியைப்பற்றி பேசாமலிருப்பதல்ல, நேர்மாறாகச் சாதியை விரிவான வரலாற்றுபின்புலத்தில் வைத்துப் புறவயமாக ஆராய்ச்சிசெய்வதென்பதுதான் நம்முடைய பண்பாட்டாய்வில் இன்று முக்கியமான நிகழ்வாக உள்ளது. உதாரணமாக டாக்டர் எஸ். ராமச்சந்திரன் அவர்களின் ஆய்வுகளைச் சுட்டிக்காட்டலாம்.

சாதி நம்முடைய வரலாற்றின் தொடக்கத்தில் பழங்குடிகளின் குல, இனக்குழு அடையாளமாக இருந்தது. இன்றும் உலகமெங்கும் உள்ள எல்லா பழங்குடிகளும் குலக்குழுக்களாகவும் இனக்குழுக்களாகவும் பிரிந்துதான் உள்ளன. குடும்பங்கள் குலங்களாகி குலங்கள் இனக்குழுக்களாவது என்பது பழங்குடிச்சமூகத்தின் ஒரு வளர்ச்சிப்போக்கு. அதன் தங்கிவாழ்தலுக்கும் வெற்றிக்கும் அது தேவையாகிறது என்பதனாலேயே அது நீடித்தது, நீடிக்கிறது

அதன்பின்னர் உருவாகி வந்த நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் அன்றைய உற்பத்திமுறைக்கேற்ப அது மாற்றி அமைக்கப்பட்டது. அதில் மேல் கீழ் என்ற அடுக்குகள் உருவாக்கப்பட்டன. அடுக்கதிகாரம் [ Hierarchy ] உருவாகி நிலைநிறுத்தப்பட்டது. இதன் விளைவாகக் கீழே உள்ளவர்களின் உழைப்பை மேலே உள்ளவர்கள் சுரண்டித் தங்களிடம் தொகுக்க முடிந்தது. அவ்வாறாக செல்வம் சேர்ந்து மையத்தில் குவிந்தது. அதன் விளைவாக நம்முடைய நிலப்பிரபுத்துவ அரசுகள் உருவாகி வந்தன. அதாவது மன்னராட்சியும் பேரரசுகளும்.
அந்த பேரரசுகளின் பொருளாதார அடித்தளத்தை நிலைநாட்டும் கருத்தாக சாதி இருந்தமையால் அதற்கு விரிவான கருத்தியல் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. அது மதத்தாலும் ஆசார நம்பிக்கைகளாலும் நிலைநாட்டப்பட்டது. பல ஆயிரம் வருடம் இது நீடித்தமையால் அது ஒரு வாழ்க்கைமுறையாக ஆகியது. நம்பிக்கைகளாகவும் உணர்வுகளாகவும் மனதில் வேரூன்றியது. ஆழ்மனதில் ஊறியது. இந்த நீண்ட நிலப்பிரபுத்துவகாலகட்டம் உருவாக்கிய பண்பாட்டு அடையாளங்கள் அனைத்துமே சாதியுடன் பின்னிப்பிணைந்துள்ளவையாக ஆயின. நம் கடந்தகால வாழ்க்கையின் எந்த ஒரு விஷயத்தையும் சாதியில் இருந்து நம்மால் பிரித்துப்பார்க்க முடியாத நிலை உள்ளது.

சாதி இன்றும் இந்தியாவில் ஒரு யதார்த்தம். இன்றும் கோடிக்கணக்கான இந்திய மக்கள் தங்களைத் தங்கள் சாதி சார்ந்தே அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். சாதியாகவே திரள்கிறார்கள். இன்றும் இந்திய ஜனநாயகம் சாதியாகத் திரளும் மக்களின் அரசுமுறையாகவே உள்ளது. அந்தச் சாதியடையாளம் அவர்களை வேறு எங்கோ எவரோ முத்திரை குத்தியதனால் உருவானது அல்ல. அவர்கள் தங்களுக்கென தாங்களே உணரும் சுயம் அதுதான். அதற்கு பழங்குடிப்பின்புலத்தில் வேர் உள்ளது என்பதனால்தான் அதை அவர்களால் எளிமையாக விட்டுவிட முடியவில்லை. இந்தியாவில் சாதி ஏன் இருக்கிறதென்றால் இங்குள்ள கோடானுகோடி மனிதர்கள் அதை இழக்க விரும்பவில்லை, தங்கள் முழு இருப்பாலும் அதைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடுகிறார்கள் என்பதனால்தான்,

ஒரு சாதி எந்த அளவுக்குச் சாதிப்படிநிலைகளில் கீழே இருக்கிறதோ அந்த அளவுக்கு அது தன் சாதியடையாளத்தைப் பேணிக்கொள்ள விரும்பும். சாதிப்படிநிலைகளில் மேலே சென்றுவிட்ட சாதிகளே தங்கள் சாதியடையாளத்தை கொஞ்சம் நெகிழ்வாக வைத்திருக்கின்றன. அச்சாதிகள் பெற்ற ஐரோப்பிய கல்வியும் , செல்வ நிலையை மட்டுமே அடையாளமாகக் கொண்ட முதலாளித்துவ மதிப்பீடுகளும் அதற்குக் காரணம். இதெல்லாம் நம் கண்முன் உள்ள யதார்த்தங்கள். ஆம், இந்தியாவின் எளிய குடிமகனின் சுய அடையாளம் சாதியே. அவனிடம் சென்று அவனது சாதியை துறந்துவிடு என்று என்று சொல்லும் எந்த அரசியல் கட்சியும் இன்றில்லை. காரணம் அது ஒரு ஆழமான சமூக யதார்த்தம் என அவர்கள் அறிவார்கள்.

ஏன் சாதாரண இந்தியன் சாதியுடன் தன்னைப் பிணைத்துக்கொள்கிறான்? அவனை அடிமைப்படுத்திப் பழமையில் கட்டிப்போட்டிருக்கும் ஒரு தீய விஷயத்தைப்பற்றி அவனுக்கு ஒன்றுமே தெரியாது, ஏனென்றால் அவன் ஒரு அடிமுட்டாள், நமக்கு தெரியும் – ஏனென்றால் நாம் ‘ஆங்கில’ கல்வி பெற்ற புத்திசாலிகள், அவனுக்கு உண்மையை எடுத்துச் சொல்லி வெளிச்சம்காட்டும் ’புனிதக்கடமை’ நமக்குள்ளது என்றெல்லாம் எண்ணிக்கொள்ளும் அகந்தை நமக்கிருந்தால் நாம் இந்தியாவைப்பற்றி பேசாமலிருப்பதே இந்தியாவுக்குச் செய்யும் நல்ல விஷயமாகும். இந்தவகையான எளிய அகந்தைகளால் இந்தியச் சமூகம் ஏற்கனவே போதிய அளவு சீரழிக்கப்பட்டாயிற்று.

சாதி இந்தியாவின் சமூகப்பரிணாம வளர்சிதைப்போக்கில் மெதுவாக பற்பல நூற்றாண்டுக்காலகட்டத்தில் உருவாகி வந்த ஒன்று. அதற்கு ஒரு பொருளியல் பங்களிப்பும், சமூகப்பங்களிப்பும் இல்லாமல் அது இத்தனை நாள் நீடிக்காது என்று புரிந்துகொள்வதே சமூகவியல் சார்ந்த சிந்தனையின் ஆரம்பபப்டியாகும். அதை மார்க்ஸியத்தின் பாலபாடம் எனலாம்- நம் மார்க்ஸியர்கள் இன்றுகூட கற்றுக்கொள்ளாத ஒன்று.

சாதியின் பொருளியல் பங்களிப்பு மிக விரிவானது என்றாலும் சுருக்கமாக மூன்று விஷயங்களைச் சொல்லலாம்.

ஒன்று அது அன்றைய சூழலுக்கு உகந்த ஒரு உழைப்புப்பங்கீட்டை உருவாக்கியது. ஒவ்வொரு தொழிலுக்கும் அதற்கான தொழிலாளர்கள் பிறப்பிலேயே உருவாகி வந்தார்கள்.

இரண்டு, அது உழைப்பாளர் குழுக்களை [ Guilds] உருவாக்கி பிறந்ததுமே ஒருவர் அவருக்கான தொழிற்கல்வியை இயல்பாகப்பெற வழிசெய்தது. விளைவாக திறமையான தொழிலாளர்கள் உருவானார்கள்.

மூன்று, அது உழைப்பின் மேல்- கீழ் அடுக்கை நிலைநாட்டில் மேலே உள்ளவர்கள் கீழே உள்ளவர்களின் உழைப்பில் பெரும்பகுதியை தாங்கள் எடுத்துக்கொள்வதற்குரிய சுரண்டல் கட்டமைப்பை உருவாக்கியது [எந்த பொருளியல்சமூகத்திலும் இப்படி செல்வம் கீழிருந்து மேலெ சென்று குவிய ஏற்ற ஒரு அமைப்பு கண்டிப்பாக இருக்கும்]

சாதியின் சமூகவியல் பங்களிப்பு இன்னும் நுட்பமானது. சாதியமைப்பு ஒவ்வொரு சாதிக்கும் உரிய சமூக இடத்தை வரையறைசெய்தமையால் சமூக இடத்துக்காக சாதிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வது இல்லாமலாயிற்று. எந்த ஒரு உறுதியான சமூக அமைப்பும் முதலில் உருவாக்குவது உள்சமூக அமைதியைத்தான். ஏதேனும் வகையில் சாதிய அமைப்பு , அதாவது மேல் கீழ் என்ற பொதுப்புரிதல், உருவாகாத பழங்குடிச்சமூகங்கள் இடைவெளியில்லாத மோதல்களால் ஆனவை. இதை வடகிழக்கு மாகாணங்களை அல்லது பல ஆப்ரிக்க நாடுகளைக் கண்டால் அறியலாம். அப்படித்தான் இங்கும் இருந்தது. சாதியமைப்பே அந்த அமைதியின்மையை இல்லாமலாக்கி நிலப்பிரபுத்துவ அமைப்பின் ஒழுங்கை உருவாக்கியது. ஒரு சாதி பொது சாதிய அமைப்பில் தன் இடத்தை புரிந்துகொண்டு ஏற்கும்போதே நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு உருவாகிறது. ஆகவே சாதி என்ற அமைப்பு பழங்குடி சமூக திரளில் இருந்து உருவான மிகப்பெரிய முன்னகர்வாகும்.

சாதி மனிதர்களைத் தங்கள் குடும்பம்,குலம் என்ற சிறிய சுய அடையாளங்க்களில் இருந்து விடுவித்து இன்னும் விரிவான ஒட்டுமொத்தமான ஒரு சுய அடையாளத்தை அவர்களுக்கு அளித்தது. அந்த சுயம் உற்பத்தி சார்ந்ததாகவும் இருந்தது. ஆகவே அது ஒரு வெற்றிகரமான சமூக அமைப்பாக நீடித்தது

நிலப்பிரபுத்துவ சமூகம் பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அமைப்புகளால் ஆனதாகவே என்றும் எங்கும் இருந்துள்ளது. இதற்கு விதிவிலக்கான சமூகமே உலகில் கிடையாது. சாதி என்பது இந்தியாவுக்கு மட்டும் உரிய சொல் என்பதனால் உலகளாவிய கலைச்சொல்லான இனக்குழு என்பதை சோவியத் நூல்கள் குறிப்பிட்டன. அதுவே இப்பிரச்சினையை உலகளாவிய தளத்தில் பேசுவதற்கு உதவியானதாகும். இனக்குழுப் பிரிவினைகள் இல்லாத சமூகங்களே இல்லை.

பின்னர் முதலாளித்துவம் வந்தது. முதலாளித்துவம் இயந்திரங்களை நம்பியிருக்கும் உற்பத்திமுறையின் அடிப்படையில் ஆனது. ஆகவே நேரடியான மானுட அடிமைகள் தேவையில்லாதவர்களாக ஆனார்கள். நிலப்பிரபுத்துவத்தின் உற்பத்திமுறை,  தொழிற்சாலைகள் என்ற நவீன உற்பத்தி முறையால் இல்லாமலாயிற்று. நிலப்பிரபுத்துவம் உருவாக்கிய சமூக அடுக்குமுறை காலாவதியாகி, உழைப்பின் சந்தைமதிப்புக்கு ஏற்ப ஒரு சமூக அடுக்குமுறை உருவாகி வந்தது. விவசாயியை விட மெக்கானிக் மேலானவனாக ஆனதை உதாரணமாகச் சுட்டிக்காட்டலாம். விளைவாக, சாதி போன்ற அமைப்பு தேவையற்றதாக ஆகியது. முதலாளித்துவம் வலுப்பெறும்தோறும் சாதியமைப்பு அழியும். அந்த இடத்தில் வேறுவகையான உழைப்புச்சுரண்டல் அல்லது உபரி சேமிப்பு முறை வந்து சேரும்.

இதுதான் இந்தியாவில் பல படிகளாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது. எங்கே நவீன உற்பத்திமுறை வருகிறதோ அங்கே சாதியமைப்பின் பிடி தளர்கிறது. தொழில்நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையேயான வேறுபாடு இதுவே. இந்த வளர்ச்சிப்போக்கில், இன்னும் சில வருடங்களில், சாதியமைப்பின் அடிப்படைகள் அழியும் என நினைக்கிறேன். சாதி உருவாக்கிய அடுக்கதிகாரம் மறையும். மேல் கீழ் என்ற நிலை இல்லாமலாகும். உழைப்பின் சந்தைமதிப்பை மட்டுமே மனிதர்களை மேலே கீழே என அடுக்கும் அளவுகோலாகக் கொள்ளும் சமூகம் வரும். ஆனால் அப்போதும் சாதி இருக்கும். பண்பாட்டு அடையாளமாக. சுய அடையாளமாக.

சாதி எதற்காக உருவானதோ அந்த நோக்கம் இல்லாமலாகும்போது அது அழியும். அதை அழிக்கவேண்டுமென்றால் அந்த நோக்கம் காலாவதியாகும்படிச் செய்வது மட்டுமே வழி. எங்கே நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை அழிகிறதோ அங்கே சாதிமுறை அழியும். ஆனால் அங்கே புதிய ஏற்றத்தாழ்வு முறை உருவாகி வரும். கூவம் கரையில் குடிசைவாசிகளுக்கும் நட்சத்திர விடுதிவாசிகளுக்கும் இடையேயான தூரம் பிராமணனுக்கும் தலித்துக்கும் இடையே உள்ள தூரத்தை விட பலமடங்கு அதிகம். மற்றபடி கொள்கையளவில் சாதியை ஒழிப்பதெல்லாம் வெறும் பள்ளிக்கூட முழக்கம் மட்டுமே.

சாதியைப் பற்றி பேசாமலிருக்கவேண்டுமென்றால் சாதியை உருவாக்கிய நிலப்பிரபுத்துவக் கட்டத்தைப்பற்றியே பேசாமலிருக்க வேண்டும். இன்றுவரையிலான வரலாற்றைப் பாரம்பரியத்தை முற்றாகத் தவிர்க்கவேண்டும். சாதியை உருவாக்கிய அதே சமூக அமைப்புதான் நம் இசையை, இலக்கியத்தை, கலைகளை, மதத்தை எல்லாம் உருவாக்கியிருக்கிறது. அவை ஒன்றுடன் ஒன்று நுட்பமாகப்பின்னிப்பிணைந்தவை. சாதியைப்பற்றி பேசாமல் நம் வரலாற்றை புரிந்துகொள்ள முடியாது. நாம் வாழும் சமூகச்சூழலை அறிய முடியாது

இலக்கியம் என்பது இன்னும் அணுகி வாழ்க்கையை பார்க்கும் கலை.  ”மயில் கழுத்து” கதையையே எடுத்துக்கொள்வோம். எதற்காக அக்ரஹாரம் என்று சொல்லவேண்டும்? குடியிருப்பு என்று சொன்னால் போதும். எதற்காக சுப்பு அய்யர் என்று சொல்லவேண்டும், சுப்பு என்றால் போதும். அதாவது ஆண்கள் பெண்கள் என்று மட்டும் சொன்னால் போதும், இல்லையா?

மன்னிக்கவும், அப்படி இலக்கியம் எழுதப்படமுடியாது. இலக்கியம் பொதுமைகளால் அல்ல நுண்மைகளாலேயே உருவாக்கப்படுகிறது. ஏன் பெரிய காதுகள் கொண்ட பிராமணப்பிள்ளைகள் என்று சொல்ல வேண்டும். அங்கே காதுக்கு என்ன வேலை? அந்த காட்சியின் நுட்பம் ஒருவாசகன் மனதில் உருவாகவேண்டியிருக்கிறது. எந்த காட்சித்தகவல், எந்த ஒலித்தகவல், எந்த படிமம் அதை உருவாக்கும் என்று சொல்லமுடியாது. அந்த இடத்தில் கற்பனையில் தன்னை நிறுத்திக்கொண்டு அப்போது தன்னிச்சையாக மனதில் எழுவதை சொல்லிக்கொண்டே போவதுதான் எழுத்தாளன் செய்யக்கூடியது. அப்படி மனதில் எழும் கட்சி-ஒலி-படிமங்களுக்கு ஆழ்மனம் சார்ந்த ஒரு காரணம் இருக்கும். அந்தக் காரணமே வாசகன் மனதிலும் அந்தச்சித்திரத்தைக் கொண்டு சென்று சேர்க்கிறது.

சாதியைப் பேசாமலிருப்பது என்பது அதைப் பொத்தி வைப்பதற்குச் சமம். ஒன்றைப் பேசாமலிருப்பது என்பதே நிலப்பிரபுத்துவ கால மனநிலை என்பதை நாம் உணரவேண்டும். காமத்தை, உறவின் விசித்திரங்களை எல்லாம் பேசாமலிருப்பதை ஒரு வழக்கமாக முன்வைத்த காலம் போய்விட்டது. எல்லாவற்றையும் புறவயமாக அறிவுபூர்வமாக விவாதிப்பதன் மூலம் அதைக் கடந்துசெல்வதையே இந்த நூற்றாண்டு தன் பொது வழிமுறையாகக் கொண்டுள்ளது. பள்ளியில் பாலியல்கல்வி கொடுக்கவேண்டும் என்கிறோம். ஆனால் சாதியை அப்படியே மூடி வைக்கவேண்டும் என்று நினைக்கிறோம். மூடிவைக்கப்படும் எந்த விஷயமும் வளரும். அறிந்து கொள்ளப்படும் விஷயமே கடந்துசெல்லப்படும்

என் படைப்புகளில் நான் எதை அறியவிரும்புகிறேனோ அவற்றை எல்லாம் பட்டவர்த்தனமாக பேச விரும்புபவன். சாதிகளை, மதங்களை, ஆழத்து மன இயக்கங்களை, அடித்தள வாழ்க்கையை. ஏழாம் உலகம் படித்துவிட்டு இதையெல்லாம் ஏன் எழுதவேண்டும் என்று கேட்டவர்களே அதிகம். ஜி.நாகராஜன் சொன்னதுபோல இருக்கிறது, ஆகவேதான் என்று பதில் சொன்னேன். அதையே இங்கும் சொல்கிறேன்

ஜெ

சாதியுடன் புழங்குதல்

சாதி பேசலாமா?

சாதி பற்றி மீண்டும்

காந்தியும் சாதியும்

முந்தைய கட்டுரைவணங்கான்,நேசமணி – கடிதம்
அடுத்த கட்டுரைசாதி, இருகேள்விகள்