அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,
இந்த கொரோனா காலத்தில் நீங்கள் எழுதிய 69 கதைகளையும் வாசித்து உண்மையிலேயே பிரமித்துப் போனோம். ஒரு நாளைக்கு 12 மணி நேரங்கள் தட்டச்சிடுவதெல்லாம் நினைத்தே பார்க்க முடியாதது. சில நாட்களுக்கு முன் சி.மோகன் எழுதிய ‘சுந்தர ராமசாமி – சில நினைவுகள் ‘ என்ற நூலை வாசித்துக் கொண்டிருந்தேன் . அதில் சுந்தர ராமசாமிக்கு நீங்கள் எழுதிய ஒரு கடிதம் ஒரு bound book அளவு பெரிதாக இருந்ததாக எழுதியிருந்தார். இந்த உழைப்பும், எழுத்தின் அளவும் தமிழ் எழுத்துலகின் மிகப் பெரிய ஆச்சரியங்கள்.
இந்தக் கதைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தது ‘இறைவன்’ கதை தான். கடைசியில் ‘என் முத்தே” என்று அவன் அந்தக் கிழவியைக் கட்டிக் கொள்ளும் போது வாய் விட்டழுது விட்டேன். Very sublime moment. நிறைய அழகிய தருணங்கள் கொண்டவையாக இக்கதைகள் இருக்கின்றன-ஆகாயத்திற்கு செல்லும் முன் ஊழ்கத்தில் அமர்ந்துள்ள அந்தப் பறவையின் சித்திரம் உள்பட.
இரண்டாவதாக எனக்கு மிகவும் பிடித்தது ‘கரு” கதை . பொதுவாக பனி நிறைந்த சூழல்களைக் கொண்ட கதைகள் ஒரு கனவுத் தன்மையைக் கொள்கின்றன. இந்தக் கதையில் கூடுதலாக ‘ஷம்பலா’ என்ற கனவு. என்னைப் பித்துக் கொள்ள வைத்து விட்டது . அன்று இரவு முழுவதும் shambala , kalapa , கைலை ஒரு pyramid என்ற தியரி , Roerich, அவரின் ஒவியங்கள் என்று தேடித்தேடி வாசித்துக் கொண்டிருந்தேன். வெண்முரசிலேயே இதைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். ஆனால் அந்தச் சூழலில் ஷம்பலா என்ற பெயர் கொஞ்சம் modern ஆக இருந்தது போலிருந்தது. ஆனால் இந்தக் கதையில் அது மேலும் துலங்கி வந்துள்ளது .
‘சிவம்’ கதையும் அப்படித்தான். காசி, துவாபர யுகத்தின் ஒரு பகுதியாக இருப்பது போல் உள்ளது என்ற வரி நூறு சதவீதம் உண்மை . 2020 ஜனவரியில் அங்கு சென்றிருந்தோம். உண்மையிலேயே time warp -ல் உள்ளது போல் இருக்கிறது அந்த ஊர். சின்னச்சின்ன சந்துகளும், சட்டென்று எதிரில் வரும் பிணங்களும், பித்ரு கடன் செய்பவர்களும், எரி ஒழியா மயானங்களும் என்று முற்றிலும் வேறொரு சூழல். மிக மிகக் குளிர்ந்து கங்கை ஒழுகிக் கொண்டிருந்தாள். படகில் வந்து வந்து அமர்ந்து செல்லும் பறவைகள் எங்கும் நிறைந்திருந்தன. சீதையும், அம்பையும் பானுமதியும் இது போன்ற படகுகளில் தான் சென்று வந்திருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டேன்.
பித்ரு கடன்களைப் பற்றி எனக்கு எந்தப் புகாரும் இல்லை . ஆனால் அவற்றை ஆண்மக்கள் தான் செய்ய வேண்டும் என்ற முடிவு காலாகாலத்துக்கும் social balance-ஐ tip off செய்து விட்டது. அதனால் எத்தனை foeticides , எத்தனை infanticides. Why were they so mean to women என்னும் கேள்வி எப்போதும் எனக்கு இருக்கக் கூடியது. அதைப் பற்றியே அங்கும் நினைத்துக் கொண்டிருந்தேன். இக்கதை மீண்டும் இவ்வெண்ணங்களைக் கிளர்த்தி விட்டது. நித்யா இக்கேள்விக்கு என்ன பதில் சொல்லியிருப்பார் என்றும் நினைத்துக் கொண்டேன்.
‘நற்றுணை’ கதையும் மிக முக்கியமானது. ‘இணை வாசிப்பு’ குழுமத்தில் சில மாதங்களுக்கு முன்பு தரம் பாலின் ‘அழகிய மரம் ‘ வாசித்தோம். அதில் உள்ள தரவுகளின் படி முன்பு பெண்கல்வியின் நிலை மிகவும் மோசமான அளவிலேயே இருந்ததாகத் தெரிகிறது . நான் ‘பெண்களையும் பஞ்சமர்களையும் நாம் அத்தனை சரியாக வைத்துக் கொள்ளவில்லை’ என்று எழுதியிருந்தேன். அப்போது ஒரு குழும நண்பர் “உங்கள் பாட்டியும் முப்பாட்டியும் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு அத்தனை திராணியற்றவர்களா” என்று கேட்டிருந்தார். அந்த நண்பருக்கு ‘நற்றுணை’ கதை சரியான பதிலாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
உங்கள் ஊரை backdrop -ஆக வைத்து வந்த கதைகள் ஒரே set of characters-ஐக் கொண்டு வெவ்வேறு கதைகளைச் சொல்வதால் ஒரு ‘Malgudi Days” effect வருகிறது. Malgudi Days-ன் literary value-வோடு ஒப்பிடவில்லை. அதன் வடிவத்தோடு ஒப்பிடுகிறேன். மேலும் ஒவ்வொரு கதையும் முக்கியமான கேள்விகளை எழுப்புவதாக இருக்கிறது.
உங்கள் கதையுலகு யானையும், நாயும், குரங்கும் காகமும் நாகமும் என விலங்குகளிடம் அவ்வளவு inclusive-ஆக உள்ளது. நாகம் எங்கனம் வேண்டும் அளவு மட்டும் விஷம் உபயோகிக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். நாஞ்சில் நாடன் அவர்களின் உரையில் நாகக் குழவிக்குத் தான் எவ்வளவு நஞ்சு உமிழ வேண்டும் என்று தெரியாதாம், நாகத்திற்கு அந்தக் கணக்கு நன்றாகத் தெரியும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
உங்கள் கதையுலகில் பெண்கள்- அன்னை, மனைவி, மகள், யக்ஷி , தேவி ஆகிய சட்டகங்களில் வரும் போது, ஆராதிக்கப்படுகிறார்கள். ஆனால் இந்த சட்டகங்களில் வராத பெண்கள், arrogant ஆண்களால் கடுமையாக judge செய்யப்படுகிறார்கள் ( நஞ்சு) அருவருக்கப் படுகிறார்கள் (ஆட்டக் கதை) உபயோகித்துக் கொள்ளப் படுகிறார்கள் (சீட்டு) . இதை ஆண்களின் குணக் கேடு என்றும் வாசிக்கலாம், இல்லை value system-மில் இருந்து வெளியே இருப்பதால் அப்பெண்கள் தண்டிக்கப் படுகிறார்கள் என்றும் வாசிக்கலாம். இரண்டாவது வகையான வாசிப்பு கொஞ்சம் பிற்போக்குத்தனமானது என்று தோன்றுகிறது.
நன்றி
கல்பனா ஜெயகாந்த்