சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற பிரதிகளுக்குள் நுழைய செய்யுள் மொழியின் மீதான பெரும் வாசிப்பு பயிற்சி இருக்க வேண்டும். இல்லையெனில் கொஞ்சமாவது அசட்டு துணிச்சல் வேண்டும். வாசிப்பில் செய்யுள் மொழியின் புலமையும், உள்ளடக்கத்தை தேட விரும்பும் துணிச்சலும் இருவேறு எதிர் துருவங்கள். பிரதியை பாராயணம் செய்யும் தமிழ் துறையினர் ஒரு பக்கம். அவர்கள் அடர்த்தியான செய்யுள் மொழியை கடந்து பிரதியின் உள்ளடக்கத்தை பாராட்டி ரசிப்பார்களா என்பது சந்தேகம்.
செய்யுள் மொழியில் எந்த பயிற்சியும் இல்லாமல் உள்ளடக்கத்தை வாசித்து பாராட்ட விரும்பும் வாசகன் இன்னொரு பக்கம். அவனுக்கு செய்யுள் மொழியைக் கண்டு பெரும் மிரட்சி. இதில் தமிழ் புலவர் ஒருவரை வைத்து காப்பியங்களை வாசிக்கக் கேட்கலாம் என்றால் குருவுக்கான அனைத்து கைங்கரியங்களையும் அவருக்கு செய்தாக வேண்டும். அதிகாரத்தின் நிலையை அவர் எடுத்துக் கொள்வார். காலம் கிடக்கிற கதியில் குரு சேவை செய்து பிரதியை கற்பதற்கு காலமும் இல்லை, அகங்காரத்தை இழந்து குருவிடம் சரணடைய மனமும் இல்லை. எனினும் ஒருவர் இந்த செவ்வியல் பிரதியின் கவிதை மொழியை வாசிக்க சொல்லி அதனை கேட்டு ரசிக்க வெண்டும் என்ற ஆவல் மட்டும் இருக்கிறது. அதற்கு கல்வி புலங்களில் உள்ள தமிழ் துறையினர் ஒத்துவர மாட்டார்கள்.
மிரட்சியடைய செய்யும் சிலப்பதிகாரத்தின் மொழி கட்டுமானத்திற்குள் ஒருவரை கொண்டு செல்ல அதற்கு இணையாக நவீனத்தில் இருந்து மற்றொரு மொழி கட்டுமானம் கொண்ட பிரதி அவசியப்படுகிறது. உள்ளடக்கம் என்ற வகையில் அப்படிப்பட்ட பிரம்மாண்டம் விஷ்ணுபுரம் நாவலுக்கு உரியது. மொழியின் பிரம்மாண்டம் கொற்றவைக்கு உரியது. சென்ற ஆண்டு விஷ்ணுபுரம் வாசிக்கும் போது வாசிப்பில் மொழியை குறித்த பிரங்ஞை எதுவும் இல்லை. ஒரு கட்டத்தில் மொழியைக் கடந்து ஒரு பிரம்மாண்ட உலகம் கண் முன் விரிவதை உணர முடிந்தது. இந்த ஆண்டு கொற்றவை அப்படி இருக்கவில்லை. ஐந்து வருடங்களுக்கு முன்பே கொற்றவை நாவலை வாசித்து பாதியில் வைத்து விட்டேன். நாவலின் தனித்தமிழ் மொழி வாசிப்பை முழுமை பெற செய்யாமல் நிறுத்தி விட்டது.
இந்த முறை நாவலை திரும்பவும் முதல் பக்கத்தில் இருந்து படிக்க வேண்டியிருந்தது. இந்த தொற்று நோய் காலத்தில் செய்வதற்கு வேலைகள் எதுவும் இல்லாததாலும், பணி நிமித்தம் சுமக்க வேண்டிய பொறுப்புகள் எதும் இல்லாததாலும் மனதில் பெரும் வெற்றிடம் வாசிப்புக்கு தயாராக இருந்தது. இந்த முறை கொற்றவை நாவலை கண்டிப்பாக வாசித்து முடித்துவிட வேண்டும் என்ற தீர்மானத்தோடு பிரதியின் மீதான சிறிது காதலும் சேர்ந்து கொண்டது. நாவலை மன ரம்யமாக வாசிக்க முடிந்தது. அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக. கொஞ்சம் வேகமாக வாசித்தால் பனிக்கட்டி மீது சறுக்கி செல்வது போன்று ஆழம் தென்படாமல் போய்விடுகிறது. இதுவரை வாசித்த புத்தங்களில் அதிக நேரத்தையும், பொறுமையையும், வாசிப்பின் பெருங்காதலையும் கோரிய புத்தகம் என்றால் அது கொற்றவை என்று சொல்லலாம்.
இந்த நவீன உரைநடையின் செய்யுள் மொழி இப்போது சிலப்பதிகாரத்திற்கும், மணிமேகலைக்கும் வாசகனை தயார் செய்துவிட்டது. இதே துணிச்சலோடு இரு காப்பியங்களுக்குள் இனி பயணிக்கலாம் என்று நினைக்கிறேன். ஏற்கனவே சுஜாதாவின் சிலப்பதிகாரம் எளிய அறிமுகம் துணைக்கொண்டு மூலப்பிரதியை வாசிக்கலாம் என்று இருந்தேன். பாதியில் நிறுத்தி விட்டேன். அப்படியே வாசித்து இருந்தாலும் அது வெறும் செய்யுள் மொழிக்கு ஒரு எளிய அறிமுகமாக இருந்திருக்கும். பிரதி எனக்கு சொந்தமாக மாறியிருக்காது. சிலப்பதிகாரமும் சரி, மணிமேகலையும் சரி கொற்றவை வாசித்து முடித்தவுடன் வெற்றி கொண்ட பிரதிகளாக கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இனி ”தாழ் திறவாய் மணிக்கதவே தாழ் திறவாய்” என்று கெஞ்ச வேண்டியதில்லை.
மாபெரும் கோட்டை ஒன்றின் பிரமாண்ட கதவுகள் திறக்கப்பட்டது போன்று இருக்கிறது இப்போதைய உளநிலை. சுஜாதா ஒருவேளை கோட்டைக்கு வேளியே நின்று கொண்டு கோட்டையைப் பற்றி வருணனை செய்பவராக இருந்திருப்பார். கொற்றவையின் மொழி மாபெரும் உத்திரத்தைக் தோளில் சுமத்து பலம் கொண்டு கோட்டையின் கதவுகளை மோதி உடைத்து சிதறடித்தது போன்று இருக்கிறது. அல்லது பிரம்மாண்டமான கரிய யானை ஒன்று ஓடி சென்று முட்டி மோதியது போன்று. இனி பொறுமையாக கோட்டைக்குள் சென்று வேண்டியதை எடுத்துக் கொள்ளலாம்.
முதன் முதலின் வெள்ளை யானை வாசித்திருந்தாலும் விஷ்ணுபுரம், கொற்றவை ஆகிய இரு செவ்வியல் பிரதிகளை வாசிக்காமல் மேற்கொண்டு பின் தொடரும் நிழலின் குரல், காடு போன்ற மற்ற நாவல்களை வாசிக்கக் கூடாது என்றிருந்தேன். இனி சாவதானமாக அவைகளை ஒன்றன் பின் ஒன்றாக வாசிக்கலாம். கொற்றவை வாசித்து முடித்த இந்த தருணத்தில் காலம் சென்ற நண்பர் அலெக்ஸ் அவர்களை நினைவுபடுத்திக் கொள்கிறேன். அவர்தான் முதலில் வெள்ளை யானை நாவலை வாசிக்க கொடுத்து உங்களுடைய புனைவு உலகத்திற்குள் நுழைய வழிவகுத்தவர். அப்போது சென்னை பல்கலைக் கழகம், ஆங்கிலத்துறையில் ஆய்வு மாணவனாக இருந்தேன். நாவலை வாசிக்கக் கொடுத்து அதைப் பற்றி எழுதவும் சொன்னார். நான் முதலில் எழுதிய ஆங்கிலக் கட்டுரை வெள்ளை யானை பற்றியது என்று தான் சொல்லவேண்டும். அலெக்ஸ் அன்று வராமல் இருந்திருந்தால் நான் உங்களுடைய புனைவுலகத்திற்குள் பிரவேசித்து இருக்க மாட்டேன். ஒரு வேளை காடு, ரப்பர் போன்ற நாவல்களோடு என் வாசிப்பை நிறுத்தியிருப்பேன். இப்போது தமிழ் நவீன இலக்கியத்தில் ஒரு புனைவெழுத்தாளனாக நீங்கள் எனக்கு மிகவும் முக்கியமானவராகிவிட்டீர்கள், முதன்மையானவரும் கூட.
ஆர்.அருள்