கடவுள் தொடங்கிய இடம்

அன்பு ஜெமோ,

நலந்தானே?

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் ‘கடவுள் தொடங்கிய இடம்’ நாவலை கிண்டிலில் வாங்கி, சென்ற வாரம் படித்து முடித்தேன். என் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.

எத்தனை எத்தனை கதைகள். அவலம், சாகசம், காதல், விரக்தி,  துரோகம், கொண்டாட்டம் என்று வாழ்வை நேரடியாக கண்ணோடு கண் நோக்கி திகைக்கும் தருணங்கள். அவை அனைத்தையும் கோர்க்கும் பட்டு நூலாக மாறாத புன்னகையுடன் கதைசொல்லியாக அ.முத்துலிங்கம். அந்த எல்லாம் கடந்த புன்னகையே இந்த நாவலை சாத்தியமாக்கி இருக்கிறது என்று நினைக்கிறேன்.

இசையில், ஆதார சுருதியை எட்டாத ஆனால் மிக அருகில் வந்துவிட்ட சுவரத்தை நிஷாதம் என்பார்கள். பகலை நோக்கும் இரவின் அந்தம். புதிய வாழ்க்கைக்காக கிளம்பியவன், தன் நாட்டை கண்டுகொள்ளும் வரை மேற்கொள்ளும் பயணம் என்பதால் நிஷாந்த் என்று நாயகனுக்கு பொருத்தமாக பெயரிட்டுள்ளார். சொந்தநாடு தேடி அலையும் பயணத்தில் கோடைமழை என காதலிகள் வாய்க்கிறார்கள். அகல்யா அவர்களுள் முக்கியமானவள். செகாவ் எழுதிய  அகஃவ்யா என்னும் சிறுகதையை பற்றிய குறிப்பு நாவலில் வருகிறது.  செகாவ்வின் அச்சிறுகதை ராமாயண அகல்யாவின் கதையேதான். இருப்பதைவிட சிறந்தது வரும்போது பற்றிக்கொள்ளும் அழகுமட்டுமேயான (பெயரின் பொருளே அதுதான்) பெண்ணின் கதை. உயிரின் விசை. அதனாலேயே பொருத்தமாக அகல்யா என்று அ.முவும்  பெயரிட்டிருக்கிறார்.

வேரல் வேலி கவிதையின் ‘காமமே பெரிது’ என்ற அற்புதமான வரி, செகாவ்வின் கதை,  மான் கூட்டத்தை வேட்டையாடும் மனிதனின் சித்திரம் வரும் ஓரியன் விண்மீன் அமைப்பு, ஆற்று வெள்ளம் வற்றி அடிமணலான குறிப்பு, வில்லக விரலின் பொருந்தி என்றாலும்  அம்பெய்திய பிறகு பிரியும் விரல்கள் என்ற உட்குறிப்பு என்று அகல்யாவின் ஒவ்வொரு சொல்லும் அவளையே குறியீடாக சுட்டி விரிந்துகொண்டே செல்கின்றன. ஒருவகையில் பார்த்தால், புலம் பெயர்ந்து வாழ்வோர் அனைவருக்குமே அகல்யாதான் குறியீடு எனலாம்.

வந்துகொண்டே இருக்கும் புதிய தகவல்கள், ஒவ்வொரு நாட்டிலும் குடிவரவில் இருக்கும் பாதுகாப்பு ஓட்டைகள்,  விமான நிலைய பாதுகாப்பில் இருக்கும் ஓட்டைகள், விசா வழங்கும் முறைகள், முறைகேடுகள், கப்பல் காப்பீட்டு பணத்தைப் பெற பழைய கப்பலை ரகசியமாக கடலுக்கு எடுத்துச்சென்று பாறையில் மோதவிட்டு உடைப்பது, எந்தப்பெண் எந்த கோப்பையில் குடித்திருப்பாள் என்று எண்ணிக்கொண்டே கோப்பையை கழுவுவது, முறைகேடாக கடன் அட்டைகளைப் பெற்று அதில் துணிகளை வாங்கி வியாபாரம் செய்வது என்று தமிழில் சர்வதேச வாழ்வையும், நிழலுலகையும் பேசும் நாவலாக விரிகிறது கடவுள் தொடங்கிய இடம்.

வாழ நினைக்கும் மனிதர்கள், அவ்வாழ்வையே பணயம் வைத்து வேறு ஒரு வாழ்வுக்காக ஏங்கி அலைகிறார்கள். பல சம்பவங்கள் கைக்கெட்டும் தூரத்தில் சாவை/ சிறையை வைத்துக்கொண்டு ஆடும் பந்தயமே. கண் எதிரில் சமையலறையில் ஒரு கொலையைப் பார்க்கிறார்கள். மொழிதெரியாத காவல்துறையால் இழுத்துச் செல்லப்பட்டு ரத்தம் வரும்வரை அடிக்கப் படுகிறார்கள்.  பின் வீடு திரும்பி காயங்களுக்கு மருந்திட்டுக்கொண்டே பாதி பார்த்த தமிழ் திரைப்படத்தின் மீதியை பார்க்கிறார்கள்.  கலைந்து கிடக்கும் அகதிவாழ்வை சில நிமிடங்களில் சித்தரிக்கும் அற்புதமான காட்சி.

இதில் ஒன்றி, ஒவ்வொரு ஊரைப்பற்றிய விவரணை வரும்போதும் அந்த ஊரை தேடிப்  படித்து, படங்களைப் பார்த்து, வரைபடத்தில் நோக்கி, யாழில் இருந்து ஒட்டாவா வரை நானும் நிஷாந்துடன் பயணித்தேன். உக்ரைனின் நட்சத்திரம் செறிந்த இரவு வானின் கீழ் பெண்ணுடன் கைகோர்த்து காதலில் கரைந்தேன். நீலக்கண் அழகியுடன் சாகசப் பயணம் மேற்கொண்டேன். அடுத்து என்ன என்பது தெரியாமல் எந்த ஆவணமும் இல்லாமல் ஐரோப்பிய ரயிலில் பயணம் செய்தேன். இத்தனை கதைகளை, வாழ்வுக்கும் சாவுக்குமான அடர்ந்த ஊசலாட்டத்தை, எப்படி இந்த சிறிய நாவலில் ஆர்வம் குன்றாமல் சொல்ல முடிந்தது என்று வியந்து கொண்டிருக்கிறேன்! மறக்க முடியாத நாவல்.

அன்புடன்,

ராஜன் சோமசுந்தரம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 76
அடுத்த கட்டுரைபின்தொடரும் நிழலின் குரலின் பாதிப்பு