கொற்றவை, மானுட அழிவின் கதை

கொற்றவை- கடிதம்

கொற்றவை தொன்மமும் கவிதையும்

அன்புள்ள ஜெ. வணக்கம்.

அனைவரும் நலம் என்று நம்புகிறேன்.

கொற்றவை நாவல் படித்து முடித்தேன். முடித்தவுடன் ஒரு பெரும்பயணம் சென்றுவந்த களைப்பு. உண்மையில் கொற்றவை ஒரு தாத்தா தன் பேரனை இட்டுச்சென்ற ஒரு பயணம் என்றே தோன்றுகிறது. கடல் நெருங்கி வர தொல்மக்கள் மேல்நிலங்களுக்கு செல்கிற பயணம்.கான்வரியின் பெரும் பயணம்  .கடலின் கருமையில் திரிந்தலையும் பரதவர்களின் பயணம் புகார் தெருக்களில் காற்றின் ஓயாத பயணம் ஐம்பெரும் நிலங்களில் நீலியுடன் கண்ணகி சென்ற பயணம் .எரித்தளித்துவிட்டு  மலை எரிய கன்னியின் பயணம் செங்குட்டுவனின் விழவுப்பயணம். இளங்கோவின் தேடல் பயணம் மேகலையின் கடல் கடந்த பயணம்….. நான் வேடிக்கை பார்த்துக்கொண்டே சென்ற அறுநூறு பக்கங்கள்.

இரண்டாவதாக கதையில் வரும் ஓயாத மனித பலிகளும் அதன் குருதி வாடையும். புகாரில் துவங்கி ஒவ்வொரு நிலத்திலும் மனித பலிகள் நிகழ்ந்துகொண்டே செல்கின்றது. (மருத நிலத்தை தவிர : அங்கே அடிமைச்சந்தை) மதுரை எரிந்தது எந்த சலனத்தையும் ஏட்படுத்தவில்லை. ஆனால் கதையெங்கும் வெட்டிச்செல்லும் வாட்களும் குருதியும், ஒவ்வொருமுறையும் உளம்அதிர வைத்தது. அந்த காட்சிகள் எஞ்சி கனவுகளில் தொடர்ந்தது. எவ்வளவு முயன்றும் பலிகளை புரிந்துகொள்ள முடியவில்லை. ரத்தமும் சதையுமான இந்த நாவலுக்காக பணிந்து வணங்குகிறேன்,

ஜெ. ஒரு கேள்வி : வரலாற்றில் மனித பலிகளை பற்றி விரிவாக பேசும் நூல்கள் அல்லது ஆய்வுகள் உள்ளனவா? இந்த கேள்விக்கு ஏற்கனவே பதிலளித்திருந்தால் மன்னிக்கவும்.

அன்புடன்

அசோக்

அன்புள்ள அசோக்,

நாம் புறநாநூறை பார்க்கையில் அங்கே மனிதபலிகளைத்தானே காண்கிறோம்? எரிபரந்தெடுத்தல் என்ற பெயரில் படையெடுப்புகளில் மக்களை கொன்று குவிக்கிறார்கள். ஊர்களை எரிக்கிறார்கள். நீர்நிலைகளை அழிக்கிறார்கள். அறுத்து எறியப்பட்ட தாலிகள் மலையாக குவிந்தன என்று புறநாநூறு சொல்கிறது. அன்று அது வெற்றி என்றும் வீரம் என்றும் கருதப்பட்டது. இன்றைய பார்வையில் அது அழிவு என்று மட்டுமே தோன்றுகிறது

வீரயுகம் என்று சொல்லப்படுவது இனக்குழுக்கள், சிறிய அரசுகள் நடுவே கொடும்போர் நிகழ்ந்ததன் வரலாற்றையே காட்டுகிறது. டிராய் போரானாலும் சரி, மகாபாரதப்போரானாலும் சரி, சீனாவின் முப்பெரும் அரசுகளின் போரானாலும் சரி மானுடப்பேரழிவுகள் தான். அதன்பின் பேரரசுகளின் காலம், அவை பெரும்படையெடுப்புகளின் கதைகளால் ஆனவை.சந்திரகுப்த மௌரியர், சமுத்திரகுப்தர், ஜெங்கிஸ்கான்,தைமூர், அகமதுஷா அப்தாலி, மாலிக் காபூர் என படையெடுப்புகளையே வரலாறாக படித்து வருகிறோம். அதன் பின் காலனியாதிக்க காலம். திட்டமிட்ட பஞ்சங்கள், நோய்பரப்பல்கள் ஆகியவையும் போர் உத்திகளாயின. நவீன ஆயுதங்கள் வந்தன. இரண்டாம் உலகப்போர் வரை மானுட வரலாறென்பதே அழிவுகளின் நிரை மட்டும்தான்.

ஒரு நூல் என்று சொல்லமுடியாது. இந்த காலகட்டங்கள் எதைப்பற்றியானாலும் அழிவைப்பற்றிச் சொல்லும் நூல்களே மிகுதி

ஜெ

முந்தைய கட்டுரைஅந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) : கடிதங்கள் – 7
அடுத்த கட்டுரைகனடா – கடிதம்