குழந்தை இலக்கியத்தின் நெறிகள்

வாண்டுமாமா

அன்புள்ள ஜெ,

வணக்கங்கள்.

‘கவலைப்பட நேரமில்லை என்ற உணர்ச்சி எப்போதும் என்னுடன் இருக்கிறது. வீணடிக்க நாள்கள் இல்லை. இந்த 23 வருட காலத்தில் நான் சோர்ந்திருந்த கணங்களே இல்லை. என் உச்சக்கட்ட சோர்வுகளைக் கூட எழுத்தால் கொண்டாட்டமாக ஆக்கிக் கொண்டிருக்கிறேன்.

ஊக்கம் குன்றிய என்னை எவரும் பார்க்கப்போவதில்லை. கணமும் சோராத நிலையே நான். நான் அடைவதொன்றும் இல்லை,  இங்கே அடையப்படும் எதிலும் எனக்கு மதிப்பும்  இல்லை. ஆயினும், செயலாற்றலில் நான் பேரின்பம் கொள்கிறேன்.”

சில ஆண்டுகளுக்கு முன்பு, கட்டுரை ஒன்றில் இந்த வரிகளைச் சொல்லி இருந்தீர்கள்.  தங்களது செயல்கள் யாவும், மேற்சொன்ன வாக்கியங்களை எப்போதும் மெய்ப்பித்துக் கொண்டே இருக்கின்றன. இடைவிடாமல் ஆறு ஆண்டுகள்  ’வெண்முரசு’  எழுதி முடித்த  சாதனையின் பிரமிப்பு அடங்குவதற்குள், தொடர்ச்சியாக, தரமான  100 கதைகள்.!  திடமான மனமும், செய்யும் வேலையில் முழு அர்ப்பணிப்பும் கொண்ட, ‘தேர்வு செய்யப்பட்ட மனிதர்களால்’ மட்டுமே இது சாத்தியம்.

நன்றியும் வாழ்த்துக்களும் ஜெ.

சில நாள்களுக்கு முன்னதாக, ஹரன் பிரசன்னா எழுதிய ’மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்’ என்ற சிறுவர் கதைப் புத்தகத்தைப் படித்தேன். அதன் முன்னுரையில் ஹரன் பிரசன்னா சில வருத்தங்களைப் பகிர்ந்திருந்தார். மூடநம்பிக்கை என்ற பெயரில் புராணக்கதைகள் வளரும் தலைமுறைக்கு மறுக்கப்படுவதைை சுட்டிக்காட்டி நீண்ட முன்னுரை எழுதியிருந்தார்.

“கற்பனை விரிவை தரும் கதைகளுக்கான இடம் இன்று கிட்டத்தட்ட இல்லை என்றாகிவிட்டது. இதற்கான காரணங்களை நானாகத் தொகுத்தேன்.

முதல் காரணம்,  மூடநம்பிக்கை என்ற பெயரில் கதைகள் அனைத்தும் மேற்கத்திய சிந்தனைகளை ஒட்டி வலுக்கட்டாயமாக நவீனமயமாக்கப்பட்ட இந்திய மரபு போதித்ததாக இருந்தால் அவை எல்லாம் பிற்போக்குத்தனமான வை என்ற எண்ணம் புகுத்தப்பட்டது.

நம் கதைகளில் வலுவாக இருந்த கடவுள் நம்பிக்கை மிகத் தந்திரமாக நீக்கப்பட்டது.  தீவிர நாத்திகர்கள், கம்யூனிச சிந்தனை உள்ளவர்கள் அனைத்து இடங்களிலும் நிரம்பி அவர்களே சிறுவர்களுடன் உரையாட ஆரம்பித்தார்கள்.  அவர்கள் சொல்வதுதான் சிறுகதை என்றானது.

அறிவியல் சொல்லும் உண்மை களுக்கும் நிஜமான முற்போக்கான கருத்துக்களுக்கும் நான் நிச்சயம் எதிரி அல்ல. அவை தேவையானவை தான் ஆனால் இன்னொரு பக்கம் என்ற ஒன்று உண்டு என்ற மனப்பான்மையை மூட மறுக்கும் போக்கையே நான் கண்டிக்க முயல்கிறேன்.  அதேபோல் நாட்டுப்பற்று கடவுள் நம்பிக்கை என்பதெல்லாம் மூட நம்பிக்கை என்று ஆக்கப்படும் போக்கையும் எதிர்க்கிறேன்.”

– ஹரன் பிரசன்னா.

உண்மையில் சிறுவர் நூல்களுக்கான அடிப்படைத் தன்மைகள் என்னவாக இருக்க வேண்டும்.? புராணக்கதைகள் மூடநம்பிக்கையை வளர்கின்றன என்ற தட்டையான வாதம் இங்கு (இப்போது) இருக்கின்றதா?

கற்பனை விரிவையும் மொழி வளமையையும் உருவாக்கும் கதைகளே, நல்ல சிறுவர் கதைகள் என்ற அடிப்படை சரியானது தானா?

தங்களின் பார்வையில், சிறுவர் இலக்கியத்திற்கான செவ்வியல் தன்மைகளைக் எப்படி வரையறை செய்வீர்கள்?

நன்றி..ஜெ.!

மிக்க அன்புடன்,

வளநாடு சேசு.

ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன்

அன்புள்ள சேசு

குழந்தைகளுக்கான கதைகள் நிறைய வரவேண்டியிருக்கிறது. பலவகையான கதைகள். ஏனென்றால் குழந்தைகள் பலவகையானவை. தெரிவுகளுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கவேண்டும்.

குழந்தைக்கதைகளில் அவற்றின் அழகியல் சார்ந்து பல வகைமைகள் உள்ளன. மிகைக்கற்பனைக் கதைகள், சாகசக்கதைகள், அறிவியல் கதைகள், நீதிக்கதைகள், புதிர்க்கதைகள், வேடிக்கைக்கதைகள் என. ஒவ்வொன்றிலும் கிளாஸிக்குகள் உள்ளன. அவற்றைக் கொண்டே நாம் ஒரு குழந்தைக்கதையில் என்ன எதிர்பார்க்கலாம் என்று வகுக்கிறோம். அதையே இலக்கணம் என்றுகொள்கிறோம்

குழந்தைக்கதைகளிலும் வயதுசார்ந்த பிரிவினை உண்டு. பொதுவாக சிறு குழந்தைகளுக்கான கதைகள், வளரும் குழந்தைகளுக்கான கதைகள், முதிர்சிறுவர்களுக்கான கதைகள் என பிரிப்பார்கள். இந்த ஒவ்வொரு வகையிலும் கதைகளின் மொழிநடை, அமைப்பு ஆகியவற்றில் சில வரையறைகள் உண்டு.

பிரசுரகர்த்தர்கள் மேலைநாடுகளில் சிலவரையறைகளை உருவாக்கியிருக்கிறார்கள். அவை விற்பனையாளர் அளிக்கும் தகவல்களைக்கொண்டு உருவாக்கப்பட்டவை. எழுத்தாளராக நான் அவதானித்த சிலவற்றைச் சொல்லலாம் என்று படுகிறது

டேனியல் டூஃபோ

ஒவ்வொரு வகை கதைகளிலும் அவற்றின் இலக்கணங்களை உருவாக்கிய முன்னோடி வடிவங்கள், செவ்வியல் படைப்புக்கள் உள்ளன. மிகைக்கற்பனை கதைகளில் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சனின் தேவதைக்கதைகள் முன்னுதாரணமான செவ்வியல் படைப்புகள். சாகசக்கதைகளில் ராபின்சன் குரூஸோ ஒரு தொடக்கம்.

விளையாட்டுத்தனமான கதைகளுக்கு சந்த் எக்ஸூபரியின் குட்டி இளவரசன், புதிர்விளையாட்டுக்கதைகளுக்கு லூயிஸ் கரோலின் ஆலிசின் அற்புத உலகம் போன்றவை உதாரணங்கள்.

இந்த நூல்களே ஆங்கிலத்தில் பின்னர் வந்த பல்லாயிரம் நூல்களுக்கு முன்னுதாரணங்கள். இவற்றிலிருந்து சில இயல்புகளை ஊகிக்கலாம். ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சனின் கதைகள் மரபான நாடோடிக்கதைகளின் மறுவடிவங்கள், அல்லது அந்த பாணியில் எழுதப்பட்டவை. ஆனால் அவை வெறும் கதைகள் அல்ல. குழந்தைகள் வளர்ந்த பின்னரும் அவற்றின் அர்த்தம் வளரும். அவை நவீனக்கவிதை அளவுக்கு குறியீட்டுத்தன்மை கொண்டவை.

ராபின்சன் குரூசோ ஒரு சாகசக்கதை மட்டுமல்ல, அது குழந்தைகளுக்கு இயற்கையைக் கற்பிக்கும் கதையும்கூட. உதாரணம் ராபின்சன் குரூசோ  பனிக்கட்டியை லென்ஸ் ஆக ஆக்கி நெருப்பை உருவாக்குவது. சாசசக்கதைகளில் அறிவியல்செய்திகள், சமூகவியல்செய்திகள் நிறைந்து , அவை கற்கும் அனுபவமாகவும் இருக்கவேண்டும்.

குட்டி இளவரசன், ஆலீஸின் அற்புத உலகம் போன்றவை கற்பனைவீச்சு கொண்டவை. அவை பெரியவர்களின் உலகை, மொழியை பேசவில்லை. குட்டி உலகை, குட்டிகளின் மொழியை பேசுகின்றன. ஆனால் குட்டிகள் வளர வளர அவைபேசும் மர்மங்களும் புதிர்களும் புதிய அர்த்தம் கொள்கின்றன. குட்டி இளவரசன் தான் வாழும் குட்டிக்கிரகத்தை ‘செப்பனிட்டுக்கொண்டே’ இருக்கிறான். அதை வாசிக்கையில் எல்லாம் நம் சூழியல்பேச்சுக்கள் நினைவுக்கு வந்து புன்னகையை உருவாக்குகின்றன.

லூயிஸ் கரோல்

நமக்கு தொன்றுதொட்டே குழந்தைக்கதைகள் இருந்துள்ளன. மகாபாரதத்தின் பல உட்கதைகள் குழந்தைகளுக்கானவை. உதாரணம், யுதிஷ்டிரரின் ராஜசூயப் பந்தலுக்கும் பாதி உடலை தங்கமாக்கிக்கொண்டு எஞ்சிய உடலை தங்கமாக ஆக்கும்பொருட்டு வந்த கீரியின் கதை. பஞ்சதந்திரக்கதைகள் பொதுவாகக் குழந்தைகளுக்கானவை

நவீனக் கல்விமுறை உருவாகி, நவீன இலக்கியம் தோன்றியபின் குழந்தைக்கதைகளுக்கான தேவை உருவானது. ஆகவே இங்கே குழந்தைக்கதைகள் எழுதப்பட்டன. தமிழில் கல்வி கோபாலகிருஷ்ணன், வாண்டுமாமா இருவரும் ஏராளமான குழந்தைக்கதைகளை எழுதியிருக்கிறார்கள்.

ஆனால் எண்பதுகளுக்குப்பின் நம் கல்வி முழுக்கமுழுக்க ஆங்கிலத்திற்கு மாறியது.நம் பெற்றோர்கள் ஆங்கிலத்திலேயே குழந்தைநூல்களை வாங்கலாயினர். குழந்தைநூல்களுக்கான தமிழ்ப்புத்தகச்சந்தை அனேகமாக இல்லாமலாயிற்று. அதை நம்பி எழுத்தாளர்கள் இயங்கமுடியாத நிலை உள்ளது. இன்று குழந்தைநூல்கள் அரசுப்பள்ளிகளின் நூலகங்களை நம்பியே வெளியிடப்படுகின்றன.

இன்றைய குழந்தைகளுக்கு குறைவாகவே நூல்கள் வாசிக்கக் கிடைக்கின்றன. அவை வாசிப்பதும் மிகக்குறைவு. ஒன்று, பெற்றோர்கள் வேறு நூல்களை வாசிப்பதை ஊக்கப்படுத்துவதில்லை. பள்ளிகளில் அதற்கான வாய்ப்புகளே இல்லை. பெரும்பாலான பள்ளிகளில் நூல்கள் வாசிக்க தடையே உள்ளது.

உண்மையில் பாடநூல்களை கடுமையாக படித்து வரிவரியாக எழுதினால் மட்டுமே மதிப்பெண்ணும் வாழ்க்கையில் வெற்றியும் கிடைக்கும் என்ற சூழலே இன்று இந்தியக் கல்வித்தளத்தில் உள்ளது.ஆகவே குழந்தைகளை நூல்களை படிக்கவைக்கும்படிச் சொல்லலாமா, அது உகந்ததாகுமா என்ற ஐயம் எனக்கே உள்ளது.

உண்மையில் நம் கல்விமுறை ஒட்டுமொத்தமாக வாசிப்புக்கு எதிரானது. பாடத்திட்டமும் சரி, ஆசிரியர்களும் சரி வாசிப்பின் எதிரிகள். கல்விமுறையை நம்பியே இங்கே வாழ்க்கை உள்ளது. புத்தகம் வாசிக்கும் குழந்தை இந்தியாவிலுள்ள மிகக்கடுமையான பலவகை மனப்பாடத் தேர்வுகளில் தோற்றுவிடக்கூடும், வாய்ப்புகளை இழக்கவும்கூடும். ஆகவே வேறுவழியில்லை.வாசிக்காவிட்டால் பரவாயில்லை என்று இன்று நினைக்கிறேன்.

அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ வாழும் குழந்தைகளுக்கு வாசிப்பை இளமையிலேயே ஊட்டி அவற்றை முதன்மைநிலைக்கு கொண்டுசெல்ல முடியும். அங்குள்ள பாடத்திட்டமும் ஆசிரியர்களும் வாசிப்புக்கு ஊக்கமூட்டுவன. வாசிப்பை கட்டாயமாக்குவன. வாசிக்கும் குழந்தை அங்கே மேலே செல்கிறது.

இந்தியக் குழந்தைகள் காட்சியூடகத்தில் சிக்கிக் கிடக்கின்றன. கட்டற்ற காட்சியூடகப் பெருக்கம் உள்ளது. அமெரிக்கா சென்றபோது பெரும்பாலான வீடுகளில் குழந்தைகள் டிவி பார்க்கும் நேரம் வரையறை செய்யப்பட்டிருப்பதை கண்டேன். டிவி அருகிலேயே எழுதி ஒட்டிவைத்திருந்தார்கள். இந்தியாவில் அப்படி கட்டுப்பாடே இல்லை.

சிங்கப்பூரில் இன்னும் மோசம், அங்குள்ள குழந்தைகள் விலை உயர்ந்த கணிப்பொறி விளையாட்டுக்களில் மூழ்கிக்கிடக்கின்றன. அங்கிருந்த நாட்களில் இலக்கியப் பயிற்சிக்காக தெரிவுசெய்து அனுப்பப்பட்ட 500 மாணவர்களை சந்தித்திருப்பேன். அவர்களில் ஒரு மாணவர்கூட எதையும் வாசிப்பவராக நான் காணவில்லை. எனக்கு திகைப்பளித்த ஓர் உண்மை அது.

இச்சூழலில் நாம் குழந்தை இலக்கியம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். அதை எவர் வாசிப்பார்கள் ? இலக்கியவாசகர்கள் சூழலின் அழுத்தத்தை கடந்து, இலக்கியத்துக்காக வாழ்க்கையில் சிலவற்றை இழந்து வருகிறார்கள். அதேபோல  தவிர்க்கமுடியாத தேடலால் வாசிக்கவரும் சில குழந்தைகளுக்காக நாம் குழந்தை இலக்கியங்களை உருவாக்கலாம், அவ்வளவுதான்.

மேலே சொன்ன எல்லா வகைமைகளிலும் குழந்தை இலக்கியங்கள் எழுதப்படலாம் என நினைக்கிறேன். நமக்கு இன்று மிகுதியாகத் தேவைப்படுவன சாகசக்கதைகள். அறிவியல் சமூகவியல் செய்திகளை கலந்து அளிக்கும் சாகசக்கதைகள் கற்றலின்பத்தையும் பயண இன்பத்தையும் புனைவின்பத்தையும் ஒன்றாக அளிக்கக்கூடும். நான் எழுதிய பனிமனிதன், வெள்ளிநிலம் இருநாவல்களும் அத்தகையவை.

மிகைபுனைவுக்கதைகள் குழந்தைகளை அறியா உலகுக்குக் கொண்டுசெல்பவை. அவற்றின் கற்பனைகள் சிறகடித்தெழச் செய்பவை.

எவை எழுதப்படவேண்டும் என்பதைவிட எவை தவிர்க்கப்படவேண்டும் என்பது குறித்த சில புரிதல்கள் எனக்கு உள்ளன

அ.எதிர்மறைத்தன்மைகொண்டவை தவிர்க்கப்படவேண்டும். உதாரணம் பேய்க்கதைகள். பேய்க்கதைகளை குழந்தைகள் விரும்புகின்றன. ஆனால் மிகச்சோர்வான ஒரு மனநிலையை குழந்தைகளிடம் அவை உருவாக்குகின்றன. அது டிராக்குலா கதையாக இருந்தாலும் சரி பழையன்னூர் நீல் கதையாக இருந்தாலும் சரி.

ஆ.நேரடி நல்லுபதேசம் கதைகளை சலிப்பூட்டுவது ஆக்குகிறது. குழந்தைகள் அவற்றை விரும்புவதில்லை. மிக இளம்வயதிலேயே நல்லுபதேசக்கதைகள் மேல் குழந்தைகளுக்கு ஏளனம் உருவாகிவிடுகிறது.

இ. கற்பனையின் அம்சம் இல்லாமல் எல்லாவற்றையும் சொல்லிவிடும் கதைகள் குழந்தைகளுக்கு எந்தப்பயனையும் அளிப்பதில்லை.

ஈ. மதம் சார்ந்த கதைகளை அப்படியே சொல்லிக்கொடுப்பது சிக்கலானது. அதில் பலசமயம் பழைய விழுமியங்களும் இருக்கும். குழந்தைகளை அது நவீன உலகுக்கு எதிரானவர்களாக ஆக்கும்.

மதம் சார்ந்தவற்றில் எந்தக்கதை நவீன அற-விழுமியங்களுக்கு உகந்ததோ அதை மட்டும் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கலாம். உதாரணமாக பிள்ளைக்கறி சமைக்கும் சைவக்கதையை, கண்ணப்பநாயனாரின் கதையை, திருமங்கை மன்னனின் கதையை குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கலாகாது. அவை என்னபொருள்கொண்டவை என குழந்தைகள் புரிந்துகொள்ளும் வயது ஆனபின் அவை பயிலப்படலாம்

ஈ. தொன்மக்கதைகள், நாட்டார்கதைகள் சொல்லிக்கொடுக்கலாம். ஆனால் அவற்றில் குறியீட்டு அம்சம் ஓங்கிய கதைகளையே சொல்லிக்கொடுக்கவேண்டும். அக்கதை குழந்தை மனதில் நவீனப் பொருளுடன் வளரவேண்டும். தொன்மங்களிலேயே இன்றையவாழ்வுக்கு ஒவ்வாத கதைகள் பல உள்ளன.

நல்லதங்காள் குழந்தைகளை கிணற்றில் தள்ளும் கதையை, அரிச்சந்திரன் குழந்தையையும் மனைவியையும் விற்ற கதையை எல்லாம் இன்று குழந்தைகளுக்கு சொல்லவேண்டியதில்லை.ஆனால் பிடிவாதமாக உழுத ஒரே ஒரு உழவனின்பொருட்டு மழை பெய்தகதையை, மணிமேகலை அமுதசுரபி பெற்ற கதையை, தர்மனை கடைசிவரை நாய் தொடர்ந்துசென்ற கதையைச் சொல்லலாம்.

உ. குழந்தைகளுக்கு அரசியல்கதைகளைச் சொல்வதுபோல அபத்தம் வேறில்லை. அவை குழந்தைகளின் கற்பனையைச் சிதைக்கின்றன. அவர்களை அவர்கள் புரிந்துகொள்ளமுடியாத உலகுக்கு இழுக்கின்றன. அவர்களால் கையாளமுடியாத உணர்வுக்கொந்தளிப்புகளை அளிக்கின்றன. அவர்கள் புறவுலகை புரிந்துகொள்ளவே முடியாதபடிச் செய்கின்றன.

குழந்தைகள் பதின்பருவத்திற்குப் பின் அரசியல் கற்றுக்கொள்வதே நல்லது. அதற்கு முன்னரே அரசியல் திணிக்கப்படும் குழந்தைகள் கற்பனையை இழந்துவிடுகின்றன. சில எளிய அரசியல் நிலைபாடுகளையும் அதுசார்ந்த மூர்க்கமான உணர்வுகளையும் மட்டுமே அடைகின்றன. இயற்கை அறிவியல் வாழ்க்கையுண்மைகள் எவற்றையும் அறியமுடியாதவை ஆகிவிடுகின்றன.

ஊ.படக்கதைகள் குழந்தைக்கதைகள் அல்ல. படங்கள் இருக்கலாம். ஆனால் கதை என்பது மொழியிலிருந்து கற்பனை விரியவேண்டிய அனுபவம். மொழியை கற்பதே வாசிப்பின் அடிப்படைப்பயிற்சி. அதை அளிக்காதவை குழந்தைக்கதைகள் அல்ல. வாசிப்பின் ஆரம்பகட்டத்தில் மட்டுமே குழந்தைக்கதைகளில் படங்கள் இருக்கலம.

*

தொன்மக்கதைகள் சொல்லப்படவேண்டுமா என்ற கேள்வி அவற்றின் உள்ளடக்கம் சமகாலத்தன்மை கொண்டதா என்ற ஐயத்திலிருந்து எழுகிறது. அது மெய்யான ஐயமே. பல பிற்காலத் தொன்மங்கள் சாதிமேட்டிமை ,பிறப்புப்பாகுபாடு சார்ந்த உள்ளடக்கம் கொண்டவை. அவற்றை தவிர்க்க வேண்டும்.

ஆனால் பெரும்பாலான தொன்மக்கதைகள் குழந்தைகளின் கற்பனையைச் சிறகடித்தெழச்செய்பவை. அபாரமான விளையாட்டுத்தன்மை கொண்டவை. உதாரணம் பீமன் அனுமனின் வாலை எடுக்க முடியாமல் தவிக்கும் இடம். அவை குழந்தைகளின் உள்ளத்தில் ஆழ்படிமங்களாக பதிகின்றன. ஆற்றலுக்கு எல்லையென அமையவேண்டிய பணிவையும் உணர்த்துகின்றன.

பீமன் கதையை நீங்கள் சொல்லிக் கொடுக்கவில்லை என்றால் ஹெர்குலிஸ் கதையை குழந்தை சென்றடையும். அவற்றை தவிர்க்க முடியாது.

புராண இதிகாசங்களின் நவீன வடிவங்களையே குழந்தைகளிடம் கொண்டுசேர்க்கவேண்டும். அவற்றை இன்றைய வாழ்க்கையுடன் இணைத்து விரித்தெடுக்க கதைசொல்பவர்களால் முடியவேண்டும். இன்றைய அறவியலுக்கும் தர்க்கவியலுக்கும் அவை பொருந்தவேண்டும். முழுமையாக விளக்க வேண்டியதில்லை, ஆனால் குழந்தை கேட்டால் அதற்கான பதில் நம்மிடம் இருக்கவேண்டும்.

தமிழ்க் குழந்தைக் கதைகளை இன்று  பார்க்கையில் அவற்றில் வாசகர்களின் வயதுசார்ந்த பாகுபாடு இல்லை என்பதை காண்கிறேன். அவை எத்தகைய குழந்தைகளுக்கானவை என்பது தெளிவாக இருக்கவேண்டும்.

சிறுகுழந்தைகளுக்கான நூல்கள் பெரிய எழுத்தில் அச்சிடப்படவேண்டும். ஒரு சொற்றொடரில் ஏழு சொற்களுக்குமேல் இருக்கலாகாது. மொத்தமே ஆயிரம் சொற்களுக்குள் அக்கதைகள் சொல்லப்பட்டிருக்கவேண்டும். ஒருகதையில் இருநூறு வார்த்தைகளுக்குமேல் செல்லக்கூடாது.

வளரும் குழந்தைகளுக்கான கதைகளில் ஒரு சொற்றொடரில் பன்னிரண்டு வார்த்தைகள் வரை இருக்கலாம். மூவாயிரம் வார்த்தைகளுக்குள் அமையவேண்டும்.

இப்படிச் சில நிபந்தனைகள் உண்டு. அவற்றை கருத்தில்கொண்டு குழந்தைக்கதைகள் எழுதப்படவேண்டும்

ஜெ

வெளிக்கட்டுரைகள்

சிறார் இலக்கியம் கடந்து வந்த பாதை – சுகுமாரன்
ஏன் வேண்டும் குழந்தை எழுத்தாளர் சங்கம்?
சிறார் இலக்கியச் சாதனையாளர்கள்

முந்தைய கட்டுரைகள்

குழந்தையிலக்கியம் – தொகுப்பு
குழந்தையிலக்கியம் பட்டியல்கள்

குழந்தையிலக்கியம் – கடிதம்

ஹாரி போட்டரும் பனிமனிதனும்: ஜீவா

குழந்தை இலக்கியம் -நிறைவு
முந்தைய கட்டுரைஅந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-8
அடுத்த கட்டுரைநியூசிலாந்து உரை