மோகமுள்- கடிதம்

அன்புள்ள ஜெ

தாங்கள் நலமா? இன்று மோக முள் படித்து முடித்தேன். உடனே அதனை பற்றி எழுதிவிட நினைத்ததன் விளைவு இந்த கடிதம். பிரமிள் ஒரு கட்டுரையில் காமம் தான் அடிப்படையான சக்தி, அதுதான் ஒருவனைக் கலைஞனாக்குகிறது (கவிஞனாக்குகிறது) என்கிறார். எனக்கு அப்போது இருந்த எண்ணம் காமம் வேறு, கலைகளைப் படைக்கும் சக்தி என்பது வேறு. முன்னது பாவமானது, பின்னது புனிதமானது. ஆனால் இந்த கேள்வி பல நாட்கள் என்னுள் இருந்து கொண்டிருந்தது. தனிப்பட்ட முறையில் சுதர்மா பற்றித் தேடிக்கொண்டிருக்கிற எனக்கு இது முக்கியமான கேள்வியாக இருந்தது.

ஏன் ராஜத்திற்க்கோ அல்லது அவனது கல்லூரியில் படித்த அவனது வயதை ஒற்றிய பையன்களுக்கோ பாபுவைப் போலத் தடுமாற்றம் இல்லை. ராஜம் மிகத் தெளிவான முன் முடிவுகளோடு இருக்கிறான். பெண்களை மனதில் வைத்துப் பூசிக்கிறான். பாலு தன் பூத்துக் குலுங்கும் காமத்தை அடக்க முடியாமல் தவிக்கிற ஆளாக இருக்கிறான். ஒரு பக்கம் ராஜத்தைப் போலப் பெண்களைப் பூஜிக்க முயலுகிறான், மறுபக்கம் தங்கமாளுடன் உறவும் கொள்கிறான். இது எல்லா மனிதர்களுக்குமான தவிப்பாய் இருந்தாலும், பாலுவுக்கு மித மிஞ்சி இருப்பது அவன் கலைஞனாக இருப்பதால் தான்.

காதல் என்ற புனித/சமூகம் கண்டு பிடித்த அழகான விசயமாகவோ அல்லது கலையாகவோ காமத்தை மடைமாற்றலாம் (உலகியல் வாழ்க்கையைக் கணக்கில் கொண்டு). இது இரண்டும் இல்லை என்றால் அது உடல் சார்ந்த ஒன்றாக மாறி அவன் ஆளுமையை அழித்துவிடும். வெற்றிடத்தைக் காற்று நிரம்புவதைப் போலக் காமம் நிரப்பிவிடும், கலைஞர்களுக்கு மிகப் பொருந்தும் வரி அது. காமத்தைக் கண்டு அஞ்சுகிற, தப்பானதாக நினைக்கிற சாதாரண மனிதனின் மனநிலையில் பாலு தங்கமாவைப் பார்க்கிறான். தங்கமாளுக்கு (காமத்திற்கு) அஞ்சி, தான் செய்தது யமுனாவுக்கான (காதலுக்கு) துரோகமென அவளிடமே போய் தவற்றை ஒத்துக்கொள்கிறான். அவளிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்துவிட்டுக் காத்துக்கிடக்கிறான். மறுபுறம் சங்கீத கலையைக் கற்க புது குருவைக் கண்டடைகிறான். கலையின் மூலம் அவளை மறக்க/கடக்க முயலுகிறான். (காமத்தை மடை மாற்றம் செய்கிறான்). இருந்தாலும் காதலும், கலையுமாக அவன் ஊசலாடுகிறான்.

அவன் அப்பா மற்றும் ராமண்ணா அவனிடம் காமத்தை அடக்கி கலையில் செலுத்துவதைப் பற்றி விவாதிக்கின்றனர். அப்பா பூடகமாகவும், ராமண்ணா நேராகவும். கலையை அடைவதென்பதில் இருக்கிற சிக்கல் பற்றிய நாவல் என்பதே என் எண்ணம்.

இந்த நாவலைப் படிக்க ஆரம்பித்தவுடன் மனதுக்கு விலக்கமாக இருந்தது, பெண்கள் எல்லோரையும் மனதில் வைத்துப் பூசிக்கிறவன் என்ற சித்திரம். ஒருவன் வெளி உலகுக்கு அப்படி வேண்டுமானால் நடிக்கலாம் ஆனால் உள்ளூர அப்படி இருப்பார்களா என்பது சந்தேகமே? ஆண் பெண்ணை தனக்குச் சமமாக நினைப்பதே மிகப் பெரிய ஒன்று. ஒருவேளை அவன் காதலில் இருக்கும் சமயத்தில் மட்டும் அந்த பெண் வேண்டுமானால் அதி மானுடனாகத் தெரியலாம். பாலுவின், ராஜத்தின் அக மனம் இப்படி நினைக்கும் என எண்ணுவது கடினமான இருக்கிறது. ஒருவேளை நான் இந்த காலத்திலிருந்து அந்த கால மனிதனை எடை போடுவது என்பது தவறாகக் கூட இருக்கலாம்.

ராமண்ணா போல இருந்துவிட வேண்டுமென ஆசைப்படுகிறேன். வாழை மரத்தில் விழுந்த மழைத்துளியைப் பார்த்து ரசிக்கிற ஆளாக இருப்பது எப்படிப் பட்ட வரம். நத்தை ஊர்வதைப் பார்த்து அவர் அடையும் மகிழ்ச்சி. அந்த வாழ்க்கை கிடைத்துவிடாத என்ற ஏக்கம் இருக்கவே செய்கிறது. குருவுக்கும் சிஷ்யனுக்குமான உறவு எவ்வளவு முக்கியம்? உண்மையான குரு நம்மை ஞானத்தை நோக்கி நகர்த்திக்கொண்டே செல்கிறார், நம்மை அறியாமலேயே. ராமண்ணா உயிருடன் இருக்கும்வரை எனக்கு அப்படித்தான் இருந்தது. அவர் வழியே ஞானத்தின் சில கூறுகளை அறிந்துகொள்ள முடிந்தது.

அவர் பாலுவைக் கச்சேரி பண்ண வேண்டாம், கலை என்பது காசு பண்ணுவதற்காக இல்லை, தன் ஆனந்தத்தை அனுபவிப்பதற்கு எனச் சொல்லி அவனைக் கச்சேரி பண்ணாதே என அறிவுறுத்துகிறார். ராமுவையும், மகாராஷ்டிரா சங்கீத வித்துவானையும் பக்கத்தில் நிறுத்திப் பார்த்தால் புரிகிறது அது. முன்னவன் தன் முழுமை அடையாத கலைக்காக ஏங்குகிறவன், ஆனால் அதை வைத்து பணம் பண்ணுகிறான். பின்னவர் கலையை முழுமை அடைந்தவர், எனினும் தனக்கு வந்த பணத்தைக் கோவில் உண்டியலில் போட்டுவிடுபவர், இரயில் சந்தடியில் உறங்குபவர், தேசாந்திரியாக அலைபவர். உலக லாபத்திற்காகக் கலையைக் கைக்கொண்டவனா?ஞானத்தை அடைவதற்குக் கலையைக் கைக்கொண்டவனா? யார் கலைஞன்? யாருக்குக் கலை வாய்க்கும்? அதனால் என்ன பயன்? இந்த வினாவை எழுப்பிவிட்டுக் கதை எங்கோ தள்ளிப் போய்விடுகிறது. காமம்-காதல்-கலை எனக் காமத்தின் பல பரிமாணங்களைத் தொட்டு மட்டுமே செல்லுகிறது இந்தக் கதை.

நிச்சயம் ஒன்று மற்றொன்றை வெட்டி செல்லாமல் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறது, அதனால் ஆழமான தரிசனப் பார்வை கதைக்கு வாய்க்கவில்லை. இதைச் சாதாரண ஆண்-பெண் காமத்தைப் பேசும் கதை எனக் கடந்து போக வாய்ப்பில்லை. காரணம்: ராஜம் (சாதாரண மனிதன்) * பாலு (கலைஞன்) – ராமண்ணா (குரு) * பாலு (குழப்பமான சிஷ்யன்),  மகாராஷ்டிரா சங்கீத வித்துவான் (கலைஞன்- ஞானி) * ராமு (கலைஞன் போல), பாலு (கலைஞன்) * தங்கம்மா (காமம்), பாலு (கலைஞன்) * யமுனா (காதல்).

கலையை அடைய ஒருவன் எவ்வளவு தூரம் தன்னை அதற்குப் பழக்கப் படுத்த வேண்டும். ராகத்தைப் பாடிப் பாடி அதன் அழகைக் கண்டுபிடிக்கிறான் பாலு. ராமண்ணா இறந்த பிறகு, அவன் தனிமையில் அமர்ந்து சாதகம் பண்ணும் போது இவ்வாறு உணர்ந்து கொள்கிறான், “கச்சேரில ஒவ்வொரு ராகத்தையும் சாதகம் பண்ண எங்க நேரம், முணு மணி நேரத்துக்குள்ள எல்லாம் அதைப் பண்ண முடியாது. கச்சேரி பின்னால ஓடின அப்புறம் எங்க ரசிக்க காசுக்காக அத கூறு போட்டு விக்கலாம்”. ஓ! இதற்காகவா நம்மைக் கச்சேரி பண்ண வேண்டுமென ராமண்ணா சொன்னார் என உணர்ந்து கொள்வான்.அதன் பின்னால் கதை காதலர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பதைப் போல மாறிவிடுவது, இதுவரை அளித்து வந்த அனைத்து சாத்தியக்கூறுகளையும் உதறிவிட்டு காதலை மட்டும் பேசு பொருளாக எடுத்துக் கொண்டதைப் போல (காமம்-காதல்) தோன்றுகிறது. அதுவும் எங்குமே எதீரிடில்லாது இருப்பது (முன்பு சொன்னதைப் போல) ஆழமில்லாததைப் போன்று இருக்கும் தோற்றதை அதற்குக் கொடுக்கிறது.

நன்றி,

மகேந்திரன்

அன்புள்ள மகேந்திரன்

மோகமுள்ளை நான் வாசிக்கும்போது ஏற்கனவே நாவல்களில் செவ்வியல்படைப்புக்களை படித்திருந்தேன். எனக்கு அன்று அது ஆழமில்லாமல் நீட்டி நீட்டி வளவளக்கும் நூலாக, காமத்தை சிட்டுக்குருவிமூக்கால் தொட்டுத்தொட்டு பறக்கும் ஒன்றாகவே தோன்றியது

இப்போது நூற்றாண்டுவிழாவை ஒட்டி ஜானகிராமனின் நாவல்களை மேலோட்டமாக மீண்டும் படித்தேன். மேலும் ஏமாற்றம்தான் மிஞ்சியது. அவரைப்பற்றி சுந்தர ராமசாமியின் கருத்தை முழுமையாக வந்தடைந்திருக்கிறேன். எளிமையான கற்பனாவாதக் கனவுகளுக்கு அப்பால் போகாத கலைஞன். முதிராப்பருவத்துக்கான எழுத்து

சிறுகதைகளில் மட்டுமே இன்று ஜானகிராமனை இலக்கியரீதியாக பொருட்படுத்த முடியும்.

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு – புரிதலின் எல்லை
அடுத்த கட்டுரைபுதியகதைகளின் வருகை