ஆலயம் அமைத்தல்

ஒரு வாசகநண்பர் அவர் கட்டவிருக்கும் சிவாலயம் ஒன்றுக்கு ஆலோசனை கேட்டு கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்துக்கு நான் எழுதிய மறுமொழி இது. இதில் பேசப்பட்டிருப்பவை பொதுவிலும் அறியப்படவேண்டியவை என்பதனால் இக்கடிதம். இதன்மீதான விவாதங்களை எதிர்பார்க்கவில்லை. இதில் நான் விவாதித்து அறிய ஏதும் இல்லை, உரிய ஆசிரியர்களிடமிருந்தே கற்றுக்கொள்கிறேன்.

ஜெ

அன்புள்ள நண்பருக்கு,

உங்கள் கடிதம் கண்டு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. நான் என்ன சொல்லக்கூடும் என்று யோசிக்கவே சலிப்பாக இருந்தது. அது இந்தக் காலகட்டம் மீதான சலிப்பு.

இன்று என்ன ஆகிறதென்றால் ஒருவர் பொதுவெளியில் தன்னை மிகமிக எளிமையாக, முற்றிலும் பாமரமொழியில், தொடர்ச்சியாக முன்வைத்துக்கொண்டே இருந்தால் அவர் முக்கியமானவராக ஆகிவிடுகிறார். அவர்மேல் மிகப்பெரிய பற்றுடன் ஓர் ஆதரவாளர் வட்டம் உருவாகிவிடுகிறது. அவரை அவர்கள் அறிஞன், மேதை என்றெல்லாம் கொண்டாட ஆரம்பித்துவிடுகிறார்கள். அத்தனை பிரபலமாக ஒருவர் இருப்பதே அவர் முக்கியமானவர் என்பதற்கான சான்றாக ஆகிவிடுகிறது.

தொடுசிகிழ்ச்சை, இல்லுமினாட்டி,மாற்று மருத்துவம் என்று ஒரு பக்கம். ஆரியச்சதி, பார்ப்பன எதிர்ப்பு, இந்துப்பெருமிதம், வேதத்தில் ராக்கெட் தொழில்நுட்பம் என்று இன்னொரு பக்கம். இவர்கள் ஏற்கனவே இருந்துகொண்டிருக்கும் வழக்கமான அரசியல் கருத்துக்களை மிக உச்சகட்ட விசையுடன், பாமர மொழியில் சொல்கிறார்கள். ஒன்றுமே தெரியாமல் கேட்கும் ஒருவர் ‘சரியாத்தானே சொல்றார்’ என்று நினைக்கும்படியாக இருந்தாலே போதும், அங்கீகாரம் வந்துவிடும்.

சென்றகாலங்களில் ஆலயம் அமைப்பது போன்ற முயற்சிகளைச் செய்பவர்கள் அதற்கு ஆலோசனை சொல்ல அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்த, முன்னர் அனுபவம்கொண்ட, பெரியவர்களிடம் விசாரிப்பார்கள். தங்களுக்கு அவ்வகையில் ஒன்றும் தெரியாது என்றும், தெரிந்தவர்களிடம் கேட்கவேண்டும் என்றும் எண்ணிக்கொள்வார்கள். ஆனால் இன்று முகநூல், யூடியூப், வாட்ஸப் ஆகியவை வழியாக எல்லாருமே ஏதோ ஒன்றை அரைகுறையாகத் தெரிந்துவைத்துக் கொள்கிறார்கள். எதுவும் தங்களுக்குப் புரியும் என்று எண்ணிக்கொள்கிறார்கள்.

ஆகவே தங்களுக்கு புரியக்கூடியதே உண்மை, சரியானது என நினைக்கிறார்கள். ஜனநாயக யுகத்தில் அதிகம்பேருக்குப் புரிவதே உண்மை என பொதுவாக ஏற்கப்படுகிறது. இந்த காலகட்டத்தின் இச்சிக்கலை எப்படி கடந்து செல்லப்போகிறோம் என்றே திகைப்பாக இருக்கிறது.

ஓர் ஆலயம் கட்டவேண்டும் என்றதுமே, தமிழ்ச்சூழலில் இத்தனைபேர் இருக்க நீங்கள் உடனடியாக முழுக்கமுழுக்க பொய்யான ஒருவரை தேடிச்செல்வது எப்படி என்று யோசித்துப்பாருங்கள். அவர் கண்ணுக்குத் தட்டுப்பட்டுக்கொண்டே இருக்கிறார். ஒன்றும் தெரியாதவர்களுக்கும் புரியும்படி, கவரும்படி பேசுகிறார். முந்தைய காலகட்டத்தில் அரியவை கொஞ்சம் மறைவாகவே இருக்கும் என்றும், தேடிச்செல்லவேண்டும் என்றும் எண்ணமிருந்தது. இன்று வீட்டுவாசலில் வந்து ஓயாமல் தட்டிக்கொண்டிருப்பதே உயர்ந்தது என்று எண்ண ஆரம்பித்திருக்கிறோம்.

ஆலயம் பற்றி பேசுவோம். நீங்கள் ஆலயம் கட்டுவது எதற்காக? ஆலயம் என எதை உத்தேசிக்கிறீர்கள்? நீங்கள் ஆலயம் என கட்ட நினைப்பது ஓர் அரசியல்நினைவிடமா, வழிபாட்டிடமா? இதை தெளிவுபடுத்திக்கொண்டபின்னர் மேலே யோசிக்கலாம்.

நீங்கள் பேசுவதைக்கொண்டு பார்த்தால் நீங்கள் திட்டமிட்டிருப்பது ஓர் அரசியல் நினைவிடம் மட்டும்தான். அதற்குரியவரை தேர்வுசெய்திருக்கிறீர்கள். இன்று பிரபலமாக இருக்கும் சில அரசியல் கருத்துக்களை அங்கே பிரச்சாரம் செய்ய எண்ணுகிறீர்கள். அவற்றைச் சொல்ல நீங்கள் தெரிவு செய்திருக்கும் நபர் எந்த சைவ அறிஞரின் மாணவரும் அல்ல. சைவ மரபு பற்றிய எந்த அறிவும் இல்லாதவர்.

நினைவில் கொள்ளுங்கள், ஓர் ஆலயம் எந்த எதிர்மனநிலையுடனும் கட்டப்படலாகாது. அரசியலோ எதிர்நிலையிலேயே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஆகவே ஆலயம் அமைக்க முற்றிலும் தகுதியற்றவர்கள் அரசியலாளர்கள்தான். எவராக இருந்தாலும் அரசியல்நோக்குடன் அமைக்கப்படும் ஆலயம் அரசியல் நிலையமே ஒழிய ஆலயம் அல்ல.

ஆலயம் முற்றிலும் நேர்நிலையில் நின்று கட்டப்படுவது. அது மானுடகுலத்தை முழுக்கத் தழுவி எழும் ஒரு பெருநிலையில்தான் உருவகிக்கப்படுகிறது. அதற்கு எதிரிகள் இல்லை, மாற்றார் இல்லை. அது வானைநோக்கி மானுடன் செய்யும் ஒரு மாபெரும் தவம். ஒரு கனிந்த நிலை. ஆலயத்தை அமைப்பவர்களும் அதே மனநிலையில் இருந்தால்தான் அது ஆலயம். நீங்கள் குறிப்பிடுபவர் அந்நிலையிலா இருக்கிறார்? நாள்தோறும் காழ்ப்பைக் கக்கும் ஒருவர் அமைக்கும் ஆலயத்தில் காழ்ப்பன்றி எது நிலைகொள்ளும்?

இந்து, சைவ மரபை எதிர்த்து வந்தவர்கள் இப்போது திரிபு எண்ணங்களுடன் உள்ளே நுழைகிறார்கள். சைவத்தை திரித்து அழிக்க முயல்கிறார்கள். நீங்கள் அவரை ஏற்கிறீர்கள் என்றால் சைவத்தின் பெயரால் சைவத்தை அழிக்கும் நோக்குடன் ஒருவருக்கு இடம் கொடுக்கிறீர்கள். சைவத்துக்கு எதிரான ஓர் அரசியல் அமைப்பை சைவத்தின் பெயரால் நிறுவிக்கொள்கிறீர்கள். இதற்கு நீங்கள் வெட்கப்படவேண்டும். என் பார்வையில் நீண்டகால அளவில் உங்கள் வாரிசுகளுக்கே பெரும்பழியை தேடி வைக்கிறீர்கள்.

நீங்கள் கட்ட நினைப்பது வழிபாட்டிடம் என்றால் அது எந்த மரபைச் சேர்ந்த வழிபாட்டிடம் என்ற தெளிவு உங்களுக்குத் தேவை. வழிபாட்டிடங்கள் பலவகையானவை. ஒன்று மரபான வழிபாட்டிடங்கள். இரண்டு மரபிலிருந்து கிளைத்தெழும் வழிபாட்டிடங்கள்.

மரபிலிருந்து கிளைத்தெழும் வழிபாட்டிடங்கள் ஏராளமாக உண்டு. கோவையில் ஜக்கி வாசுதேவ் உருவாக்கியிருக்கும் லிங்கபைரவி கோயில் ஓர் உதாரணம். முன்பு வள்ளலாரும், நாராயணகுருவும் உருவாக்கிய ஆலயங்கள் உதாரணம்.

அத்தகைய கோயில்கள் அதை உருவாக்குபவரின் தத்துவதரிசனம், தவ வல்லமை ஆகியவற்றால்தான் முக்கியத்துவம் பெறுகின்றன. உங்களுக்கு அந்த தத்துவதரிசனம் ஏற்புடையது என்றால் நீங்கள் அவற்றை நிறுவலாம். அந்த ஞானியின் தவ வல்லமையில் நம்பிக்கை இருந்தால் அங்கே வழிபாடு செய்யலாம். ஆனால் தெளிவான தத்துவதரிசனமும் அதற்குரிய ஞானமும் கொண்ட ஒருவரின் மீதான ஆழமான நம்பிக்கை இருந்தாலொழிய அவ்வாறு வழிபடுவதில் பயனில்லை.

மரபான கோயில்கள் பலவகை. ஆகமமுறைப்படி அமையும் கோயில்கள் உண்டு. தாந்த்ரீகமுறைப்படி அமையும் கோயில்கள் உண்டு. கேரளக்கோயில்கள் தாந்த்ரீக முறைப்படி அமைந்தவை. தமிழக கோயில்கள் ஆகமமுறைப்படி அமைந்தவை.

ஆகமமுறைப்படி அமையும் கோயில் என்றால் எந்த ஆகமம் என்பது முக்கியமானது. அந்த ஆகமப்படி எந்தப்பிழையும் இல்லாமல், எந்த மீறலும் இல்லாமல்தான் கோயில் கட்டப்படவேண்டும். ஆகமங்களில் ஆழ்ந்த பயிற்சியும், நம்பிக்கையும் உள்ள சிற்பியால் மட்டுமே கோயில் வடிவமைக்கப்படவேண்டும்.

நினைவில் கொள்ளுங்கள், ஆகமங்களை கற்று கடைப்பிடிக்கும் தகுதியும் பொறுப்பும் மட்டுமே சிற்பிகளுக்கு உண்டு. ஆகமங்களை மாற்றவோ வழிபாடுகளை திருத்தவோ அவர்களுக்கு தகுதியுமில்லை உரிமையுமில்லை. சிற்பிகள் ஞானிகள் அல்ல, தத்துவவாதிகளும் அல்ல.

அன்றி, ஒரு சிற்பி தன் தனிப்பட்ட கல்வியாலும் தகுதியாலும் ஞானியோ தத்துவவாதியோ ஆவார் என்றால் அவர் மரபான வழிபாட்டிடங்களை கட்டக்கூடாது. அதிலிருந்து விலகி ஜக்கி வாசுதேவ் போல தனக்கான தனிவழியை உருவாக்கிக்கொள்ளவேண்டும். அதை நம்பி ஏற்பவர்களை வழிகாட்டி இட்டுச்செல்லவேண்டும். அவர் மரபான ஆகமங்களை திரிக்கமுற்படுவார் என்றால் அவர் செய்வது மோசடி.

ஆகமமுறைப்படி அமையும் கோயில்கள் மூன்று தரப்பினரின் ஒத்திசைவுடன் நிகழ்த்தப்படவேண்டியவை. அதன் தத்துவநிலை மரபான தத்துவஅமைப்பில் இருந்து வரவேண்டும். தமிழகத்திலும் இலங்கையிலும் அதற்குரிய சைவ அமைப்புகள் உள்ளன. வெவ்வேறு வகையான சைவ மடங்கள்  உள்ளன. வீரசைவ மடங்கள் உண்டு. சைவசித்தாந்த மடங்கள் உண்டு. அதை சைவதத்துவம் அறிந்த அறிஞர்தான் முடிவுசெய்யவேண்டும்.

அறிஞர் என்றதுமே உடனே மேடையில் கூப்பாடு போடும் பேச்சாளர்களை நினைத்துக்கொள்ளாதீர்கள். அவர் சைவம் சார்ந்த அறிதல் கொண்டவராக இருக்கவேண்டும். மரபான சைவ அமைப்பு சார்ந்தவராக இருக்கவேண்டும். அங்கே முறையான பயிற்சி பெற்றவராக இருக்கவேண்டும். அவருக்கு அந்த அமைப்பின் ஏற்பு இருக்கவேண்டும்.

இரண்டாவதாக, அதில் என்ன வழிபாடுகள் நடத்தப்படவேண்டும் என்பதை முடிவுசெய்பவர்கள் வழிபாடு நிகழ்த்தும் மரபு கொண்டவர்கள். அதற்கான பயிற்சி இன்றைக்கு மரபார்ந்தே அளிக்கப்படுகிறது. கேரளத்தில் மட்டுமே அந்தப்பயிற்சியை நவீன கல்விமுறையை ஒட்டி அளிக்கும் அமைப்புக்கள் உள்ளன.

இதில் மரபு ஏன் முக்கியம் என்றால் ஒன்று அந்த வழிபாட்டுக்கான மனநிலை மரபுசார்ந்தே வருகிறது என்பதனால்தான். இன்னொன்று நுட்பமானது, அதை தர்க்கபூர்வமாக சொல்லிவிடமுடியாது. நோன்பும் அதுசார்ந்த செயல்பாடுகளும் தலைமுறைகள் வழியாக கடக்கின்றன என்று நான் அறிவேன் – கவனியுங்கள் நம்பவில்லை, திட்டவட்டமாக அறிவேன். ஐயமின்றி சொல்வேன்.

ஆகவே வழிபாடுகளில் குருபரம்பரை, குலப்பரம்பரை முக்கியமானது. சைவ வழிபாடுகளில் சிவாச்சாரியார்களின் இடம் மறுக்கவே முடியாதது. அதை இழந்தோமென்றால் ஆயிரமாண்டு கோயில்களை இடித்து தள்ளி கான்கிரீட் கட்டிடம் போதும் என முடிவெடுப்பது போன்றதுதான்.

மூன்றாவது தரப்புதான் சிற்பிகள். தத்துவமும் வழிபாடும் வகுத்த வழியே செல்லவேண்டியவர்தான் சிற்பி. அவர் இந்துமதத்தின் வழிகாட்டி அல்ல. அவர் வழிபாட்டிடத்தை உருவாக்கவேண்டியவர் மட்டுமே, வழிபாட்டை வரையறுக்கும் தகுதியும் உரிமையும் அவருக்கு இல்லை.

ஓர் ஆலயம் எப்படி உருவாகிறது? அது முதலில் ஞானமாகவே உணரப்படுகிறது. பின்னர் தத்துவமாக விளக்கப்படுகிறது. பின்னர் வழிபாட்டுமுறைகளாக,[அனுஷ்டானங்களாக]  வகுக்கப்படுகிறது. இம்மூன்றுநிலைகளிலும் அது கருத்து வடிவில் இருக்கிறது. ஒர் உயிர் கருத்துவடிவமாக இருப்பதுபோல.

கருவில் அந்த உயிருக்கு உடல் உருவாகிறது. அதைப்போல அந்த கருத்தின் பருவடிவமாக ஆலயம் எழுகிறது. ஆலயம் கல்லிலும் மண்ணிலும் மரத்திலும் அந்த கருத்துவடிவை நிகழ்த்துவதுதான். ஆகவேதான் பேராலயங்களை கட்டிய சிற்பிகளை நாம் மதிக்கிறோம், ஆனால் அந்த ஆலயத்தை கருவடிவில் உருவாக்கிய ஞானியரைத்தான் அக்கோயிலை நிறுவியவர்களாக கருதுகிறோம்.

சிற்பி ஆலயத்தை கட்டி முடித்ததுமே அதிலிருந்து விலகிவிடவேண்டியவர். அந்த ஆலயம் பருவடிவில் இருந்து மீண்டும் கருத்துவடிவாக ஆக்கப்படுகிறது. அதன்பின்னரே அது ஆலயம், வழிபடப்படுகையில் அது கட்டிடம் அல்ல. ஒரு கருத்துநிலையின் ஒரு மெய்யறிவின் கண்ணால் பார்க்கக்கூடிய வடிவம் அது.

அந்த ஆலயத்தை கட்டிக்கொண்டிருக்கையில் சிற்பி மூலச்சிலைமேல் ஏறி அமர்ந்து செதுக்கலாம். கொடிமரத்தின் மேல் அமர்ந்து வெற்றிலை போட்டுக் கொள்ளலாம். ஆனால் அது கருவடிவாக மீண்டும் மாற்றப்பட்டுவிட்ட பின் அவருக்கு அதில் உரிமை இல்லை. அது வெவ்வேறு அனுஷ்டானங்களுக்கு கட்டுப்பட்டது. வழிபாட்டுமுறைகளுக்கு உரியது. அந்தந்த அனுஷ்டானங்களையும் வழிபாடுகளையும் எவரும் மீறமுடியாது.

இப்படித்தான் இங்கே ஆலயங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இத்தகைய ஆலயங்களுக்கே வழிபாட்டு மதிப்பு உண்டு. சும்மா கட்டிடமாக கட்டிவைக்கலாம். ஆனால் அதை ஆலயமாக ஆக்கவேண்டும் என்றால் கட்டவேண்டிய முறைப்படிக் கட்டவேண்டும்.

ஆலயவழிபாட்டில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் ஆலயமே கட்டவேண்டாம். ஆலயவழிபாட்டில் நம்பிக்கை இருந்தால் ஆலயமாகவே கட்டவேண்டும். ஒரு சிறுபிழைகூட இருக்கலாகாது. ஒரு பிழை இருந்தால் மொத்த ஆலயமுமே வீண் என்றுதான் பொருள்.

எந்த ஆகமப்படி அமைக்கவிருக்கிறீர்கள், எந்தெந்த அனுஷ்டானங்களை நிகழ்த்தவிருக்கிறீர்கள் என்பது கட்டுபவர்களாகிய உங்கள் தெரிவு. உரியவர்களை நாடி அதற்கான வழிகாட்டுதலைப் பெறலாம். சரியான தகுதிகொண்டவர்கள் இன்னும் இருக்கிறார்கள். தத்துவம், வழிபாடு, சிற்பம் என மூன்று நிலைகளிலும் தகுதிகொண்ட மூன்று தரப்பினரும் கூடி ஒருங்கே முடிவெடுத்து ஆலயத்தை அமைக்கவேண்டும். அதுதான் ஆலயம்.

ஆலயத்தை பண்பாட்டுநிலையாக ஆக்கலாமா? அங்கே சைவசித்தாந்தம் சொல்லிக்கொடுக்கும் கல்விக்கூடம் அமையலாம். சைவத்தை விளக்கும் அருங்காட்சியகமும் நூலகமும் அமையலாம்.

ஆனால் அவையெல்லாம் ஆலயத்தை ஒட்டிய அமைப்புக்களே ஒழிய, அவை ஆலயம் அல்ல. ஆலயம் என்பது ஒட்டுமொத்தமாக ஒரு சிற்பம். அந்த சிற்பத்தின் அமைப்பு ஈராயிரம் ஆண்டுகளாக படிப்படியாக உருவாகி வந்தது. செய்துசெய்து பார்த்து அதை அடைந்திருக்கிறார்கள்

நீங்களே பார்க்கலாம், சைதன்யம் என்னும் இறையமைவு கொண்ட ஆலயங்கள் ஒன்று இருந்தால் அது அமையாத ஆலயங்கள் நூறு இருக்கும். என்ன நிகழ்கிறது என்று விளக்கவே முடியாது. எல்லாம் சரியாக இருந்தாலும் அமையாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது. அது வானைநோக்கி நாம் செய்யும் ஓர் இறைஞ்சுதல் மட்டும்தான். வானிலிருந்து கொடை வந்துவிழலாம். ஆனால் நம்முடைய கையில் இருக்கும் கலம் பழுதற்றதாக இருக்கவேண்டும். அதை அவ்வாறு அமைக்கவேண்டியது நம் கடன்.

ஜெ

பிகு

சிற்பி, வழிபாட்டுமரபினர் இருவரின் தொடர்புகளை அனுப்பியிருக்கிறேன். நீங்கள் பேசி அவர்கள் வழிகாட்டுதலின்படி முடிவெடுக்கலாம்.

முந்தைய கட்டுரைமனுவும் மணியும் – கடிதம்
அடுத்த கட்டுரைராதையின் உள்ளம்