மீரா- கடிதங்கள்

மெய்யான முன்னுதாரணங்கள்

அன்புள்ள ஜெ

மெய்யான முன்னுதாரணங்கள் ஒரு முக்கியமான கட்டுரை. அந்தக்கட்டுரையின் மீதான எதிர்வினைகளை இருவகையாக காணமுடிகிறது. நம் சூழலில் தங்களைத்தாங்களே சில அடையாளங்கள் அல்லது நிலைபாடுகளில் நிறுத்திக்கொண்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் அகம் சொல்லும் நிலைபாடு அது. அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ அதை நியாயப்படுத்தி கொண்டே இருந்திருப்பார்கள். அதன் தொடர்ச்சியாகவே அவர்கள் கருத்துக்களைச் சொல்லமுடியும்

இலக்கியம், அறிவுச்செயல்பாடு என்பதெல்லாம் ஒரு வகையான தன்னலமில்லாத பணிகள் என்றும், அது ஒருவகையான தன்னிறைவுக்காகவே செய்யப்படுகிறது என்றும் நம்பும் ஒரு வட்டம் என்றும் உண்டு. அவர்களுக்கு மீரா ஓர் ஐடியலாக தெரிகிறார். அவரை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். நெகிழ்ச்சி அடைகிறார்கள். இன்னொருபக்கம் இலக்கியம் மட்டுமல்ல எல்லாமே ஒருவகையான உலகியல் விஷயங்கள், ஏதாவது லாபத்துக்காகத்தான் எல்லாருமே செய்கிறார்கள் என்று நம்புபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எடுக்கும் நிலைபாடு இரண்டு. ஒன்று, எல்லாருமே கணக்குடன் செயல்படுகிறார்கள், இதிலே எவர் மேலே எவர் கீழே என்று எப்படிச் சொல்லமுடியும் என்று கேட்கிறார்கள். இன்னொரு தரப்பு என்னவென்றால் இது ஒருவகை வியாபாரம், இதிலே வெற்றி அடைந்தவர்தான் சிறந்தவர். க்ரியா ராமகிருஷ்னன் வெற்றி அடைந்தவர். மீரா தோற்றவர். தோற்றவரை ஏன் கொண்டாடவேண்டும். இப்படி ஒரு கேள்வி

ஒருவர் தன்னை வியாபாரி என்றும், சுயநலநோக்குடன்தான் செயல்படுகிறேன் என்றும் மனசுக்குள்ளே உணர்ந்திருக்கிறார் என்றால் அவருக்கு மீரா பற்றிய கட்டுரை ஒரு எரிச்சலைத்தான் அளிக்கிறது. ஒரு பேராசிரியருக்கு அன்னியநிதி பற்றிய சபலம் இருக்கும் என்றால் அவருக்கு க்ரியா ராமகிருஷ்ணன் பற்றிய கருத்து எரிச்சலை அளிக்கிறது. இப்படியெல்லாம்தான் எதிர்வினைகள் இருக்கின்றன. பொதுவாக இது வணிக யுகம். தியாகம் சேவை அர்ப்பணிபு என்பதிலெல்லாம் எவருக்கும் நம்பிக்கை இல்லை. அதெல்லாம் எண்பது தொண்ணூறுகலுடன் முடிந்த விஷயம். இன்றைக்கு இருப்பவர்கள் எல்லாமே கணக்குபோட்டு வென்றுகொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் க்ரியா ராமகிருஷ்ணன்தான் பெரியவராகத் தெரிவார்

க்ரியா ராமகிருஷ்னனை தூக்கிப்பிடிப்பவர்கள் இன்றைக்கு உள்ள வெற்றிபெற்றவர்களே சிறந்தவர்கள், பணம் சம்பாதிப்பதே வெற்றி என்ற வேல்யூஸை முன்வைக்கிறார்கள். நீங்கள் சென்றகாலத்தைய வேல்யூஸை முன்வைக்கிறார். ஒருவர் ஜீவானந்தத்தையும் காமராஜையும் தலைவராகச் சொல்கிறார். இன்னொருவர் எம்ஜிஆரையும் கருணாநிதியையும் முன்னுதாரண தலைவர்களாகச் சொல்கிறார். இருவர் நடுவே உரையாடலே நடக்கமுடியாது. நீங்கள் இன்றிருக்கும் ஒரு வேல்யூ சிஸ்டத்துக்கு எதிராக ஒன்றை எடுத்துக் காட்டுகிறீர்கள். அது இன்று ஒரு மைனாரிட்டியின் குரல் மட்டும்தான். ஆனால் அதுவும் இருந்துகொண்டே இருக்கும்

ஆனந்த்

 

அன்புள்ள ஜெ,

நலம்தானே? க்ரியா ராமகிருஷ்னன் கட்டுரைபற்றி என் நண்பர்களிடையே விவாதம் நடைபெற்றது. அப்போது வழக்கம்போல ஒரு அரைவேக்காடு ‘ஜெமோ அஞ்சலிக் கட்டுரைகளிலே நஞ்சு ஊட்டுபவர்’ என்று ஆரம்பித்தது. ‘ஜெமோ இதுவரை எழுதிய அஞ்சலிக்கட்டுரைகள் என்ன சொல்லு, அதில் எதிலெல்லாம் நஞ்சு இருக்கிறது?’என்று நான் கேட்டேன். பதில் சொல்லத்தெரியவில்லை. ஜெமோ எழுதிய அஞ்சலிக்கட்டுரைகள் வழியாகத்தான் நீயெல்லாம் பாதிப்பேரை அறிமுகமெ செய்துகொள்கிறாய் என்று சொன்னேன்.

அதோடு க்ரிய ராமகிருஷ்ணனுக்கு நீங்கள் அஞ்சலிக்கட்டுரையே எழுதவில்லை, அஞ்சலிக்கட்டுரைகள் வெளிவந்து நீண்டநாட்களுக்கு பிறகுதான் எழுதினீர்கள். அதெல்லாம் அஞ்சலிக்கட்டுரைகளில் இருந்த பொய்களுக்கு எதிர்வினைகள்தான்.ஒருவரை அஞ்சலிக்கட்டுரைகள் வழியாக பொய்யான ஐக்கான் ஆக மாற்றுவதை கண்டிப்பதற்காகவே அந்தக்கட்டுரைகள் எழுதப்பட்டன என்று நான் சொன்னேன்.

ஆனால் இந்த அரைவேக்காடுகளுக்கு புரியாது. பத்துநாட்களுக்குப்பின் மீண்டும் அதையேதான் சொல்லி இளிக்கும். இது ஒரு தலையெழுத்து. எங்கே இலக்கியம் பேச ஆரம்பித்தாலும் இப்படி முகநூலில் மேயும் ஒரு வெள்ளாடு குறுக்கே வந்துவிடுகிறது

எம்.பாஸ்கர்

அன்புள்ள ஜெ

இணையச்சூழலில் க்ரியா பற்றி வந்த விவாதங்களை கவனித்தேன். தெளிவான ஒரு நிலைபாட்டை கண்டேன். ஃபோர்டு ஃபவுண்டேஷன் உட்பட அன்னிய நிதியை பிராமணர்கள் பெற்றால் அது தேசநன்மைக்கு, நாட்டுக்கு நலம்பயக்க. கிறிஸ்தவர்கள், லிபரல்கள் பெற்றால் தேசத்துரோகத்துக்காக. இவ்வளவுதான் இங்கே அரசியல்

எஸ். பென்னி ஜோசப்

மீரா- கடிதங்கள்

மீரா- கடிதங்கள்-2

முந்தைய கட்டுரைவெண்முரசு இருகடிதங்கள்
அடுத்த கட்டுரைஎண்ணும்பொழுது- கடிதங்கள்