இயற்கையின் சான்று- கடிதங்கள்

இயற்கையின் சான்றுறுதி

அன்பான ஜெ.

காலையில் கட்டுரையை பார்த்தவுடன் மகிழ்ச்சியாகவும் மனம் கனத்தும் போனது.

2010இல் நீங்கள் மலேசியா வந்தபோது போப்பிக்கு ஒரு வயது. மெட்ராஸ் கெப்பேயில் அமர்ந்து அவன் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். நீங்கள் விலங்குகள் பற்றி நிறைய கூறினீர்கள். நாய்களின் உடல் மொழி குறித்து விளக்கினீர்கள். போப்பியை நான் எடுத்து வந்த சில நாட்களில் (2009) நீங்கள் கறுப்பு நிற நாய்களைப் பற்றி எழுதியதை  நினைவு கூர்ந்தேன். போப்பியும் கறுப்பனாக இருப்பதின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டேன். அன்று நாம் விடைபெற்றது நாய்களைப் பற்றிய பேச்சுகளுடந்தான்.

அடுத்த முறை நீங்கள் வந்தபோது நான் காரிலிருந்து இறங்கும் முன்பே எனக்கு முன்பாகச் சென்று போப்பியை தடவிக்கொண்டிருந்தீர்கள். அதுவரை அப்படி யாருமே செய்ததில்லை. சொல்லப்போனார் அப்படி ஒரு வருகையாளர் போப்பியைத் தடவுவது அதுவே முதல் முறை. பார்த்தவுடன் பயந்து விலகி செல்வார்கள். அவன் உங்களை தடவலை உற்சாகமாக வாங்கிக்கொண்டிருந்தான்.

“கடிச்சிடப்போதுசார்” என்றேன்.

“அதெல்லாம் கடிக்காது” என்றீர்கள்.

போப்பியின் நகம் நீளமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி அதிகம் நடக்க வைக்க சொன்னீர்கள். அப்போதுதான் நகம் இயல்பாக தேய்மானம் அடையும் என்றீர்கள். கறுப்பு நாய்களின் நகங்களை வெட்டுவதன் சிக்கலும் உங்களுக்கு தெரிந்திருந்தது. வீட்டிலிருந்து நீங்கள் புறப்படும்போது மீண்டும் அவனை தடவச் சென்றபோது நான் அருகில் இருந்ததால் தொட விடாமல் உருமினான். அது பாவனைதான். ‘என் நண்பன் நவீன் மட்டும்தான்’ என சொல்ல நினைத்தான்.

பின் தொடரும் பிருமம் நீங்கள் எழுதியபோது ஆச்சரியம். அதற்கு முன் தினம்தான் அவன் என்னைக் கடித்திருந்தான். நான் உங்களை அழைத்து அதற்கு முன்பு அவனை மூன்று வாரங்கள் வெளியில் விட்டு வந்ததை கூறினேன். நீங்கள் அப்போதே அதன் உளவியலை விளக்கினீர்கள்.

அவன் என்னிடம் வந்ததுமுதல் இறுதி பயணம் வரை நீங்கள் உடன் வந்து கொண்டேயிருந்திருப்பதை இப்போது நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது

ம.நவீன்

ஜெ

இயற்கையின் சான்றுறுதி கட்டுரையும், அதனுடன் இணைந்த கட்டுரைகளும் மனதில் மிகுந்த நெகிழ்ச்சியை உருவாக்கின. வழக்கமாக நாய் வளர்ப்பவர்களுக்கு இருக்கும் பெரிய சிக்கல் நாய்மேல் அவர்களுக்கு இருக்கும் பிரியத்தை ஒருவகையான பலவீனம் அல்லது கிறுக்கு என்றுதான் சாதாரணமான உலகியல் மக்கள் புரிந்துகொள்வார்கள். அது அப்படி அல்ல, அதிலொரு ஸ்பிரிச்சுவல் விஷயம் உள்ளது என்று சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். ஆனால் அது போய்ச்சேராது.

அதிலுள்ள அந்த ஸ்பிரிச்சுவல் அம்சம் என்ன என்று நாய் வளர்ப்பவர்களால் சொல்லவும் முடியாது. அவர்கள் அதை உணர்ந்திருப்பார்கள், தியரியாக வகுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள். உங்கள் கட்டுரை மிக அழகாக அதை சொல்கிறது. அது வெறும் பாசம் அல்ல. அது ஒரு பலவீனமும் அல்ல.அதில் இந்த இயற்கையுடன் உறவுகொள்ளும் ஓர் அம்சம் உண்டு. இயற்கையிலிருந்து நம்மை உள்ளே அனுமதிக்கும் முக்கியமான விலங்கு நாய்தான்.

நாயோ யானையோ பசுவோ எதுவானாலும் ஒரு விலங்கு நம்மை நெருக்கமாக இருக்க அனுமதிக்கும்போது நமக்கு ஏன் அத்தனை நெகிழ்வு உருவாகிறது? அதை கள்ளமில்லாத அன்பு, அன்புக்கான ஏக்கம் என்றெல்லாம் நாய் வளர்ப்போர் சொல்வார்கள். அதெல்லாம் வெறும் க்ளீஷே. உடனே ‘அறிவுஜீவிகள்’ என்பவர்கள் அப்படியெல்லாம் கள்ளமில்லா அன்பு என்று ஒன்றும் கிடையாது, எல்லாம் பயனுக்கான அன்புதான் என்று அதை கட்டுரைப்பார்கள்.

ஆனால் இந்தக்கட்டுரை மிகமிக தெளிவாக அதைச் சொல்கிறது. அது அன்புக்கான ஏக்கம் அல்ல. நாய் ஒன்றும் அன்புக்காக ஏங்கிக்கொண்டிருக்கவில்லை. நாய் வளர்ப்பவர்களும் அன்பைத்தேடி செண்டிமெண்டலாக ஏங்கிக்கொண்டிருப்பவர்கள் அல்ல. நாய் மனிதனுடன் பயனுக்காக உறவில் இல்லை. நாம் ஒன்றுமே கொடுக்காவிட்டாலும் நாய் நம்முடன் அன்புடன் இருக்கும். நிறையபேர் கிராமங்களின் நாய்க்கு ஒன்றுமே கொடுக்கமாட்டார்கள். ஆனால் நாய் அவர்களை தன் உறவினராக நினைக்கும்.

நாயில் இருக்கும் அன்பு ஒரு சான்று. அதாவது அன்பு என்பது பயன் கருதி உருவான ஓர் ஏற்பாடு அல்ல, அது இயற்கையிலேயே இருந்துகொண்டிருக்கும் ஒரு விஷயம் என்பதற்கான சான்று. அது நாயில்தான் நமக்கு கிடைக்கிறது. தாய்ப்பாசம் போல ஒரு விஷயம் அது என்று தெரிகிறது. அதர்கு கண்கூடான சாட்சி நாய். கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஒரு சான்று கிடைப்பதுபோல ஒரு மாபெரும் உண்மையை காணும் அனுபவம் நாயுடன் இருப்பது

என்.ஆர்.ராஜ்குமார்

முந்தைய கட்டுரைகாவியங்களை வாசித்தல்
அடுத்த கட்டுரைஜப்பானியத் தேநீர்