கோவையில் வெண்முரசு

 பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். கோவையில், கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இலக்கியத்திற்கென்று மாதக்கூடுகைகளை தொடர்ந்து நடத்தி வரும் “சொல்முகம்” வாசகர் குழுமத்தை தாங்கள் அறிந்திருப்பீர்கள்.

கடந்த ஆண்டு, மே மாதத்தில் உருவாக்கப்பட்ட இக்குழுமத்தின் இயக்கத்தில், இந்நாள்வரை பதினெட்டு அமர்வுகளை நிகழ்த்தி தமிழ் நாவல், இந்திய நாவல், சர்வதேச நாவல் எனும் சுழற்சியில் வாசித்து கலந்துரையாடியுள்ளோம். “புயலிலே ஒரு தோணி” யை முதல் நாவலாகக் கொண்டு 2019ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் எழுந்த நாங்கள், இன்று நவம்பரில் ஜப்பானிய நாவலான “மணற்குன்று பெண்” ஐ வாசித்துத் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

இடையில் இயற்கை இடரான கொரோனா விளைவித்த ஊறினால், சில மாதங்கள் நேர்ச்சந்திப்பை தற்காலிகமாக நிறுத்தியிருந்தாலும், உளத்தளர்வின்றி காணொளிக்காட்சியின் வழியாக மெய்நிகர் சந்திப்பைத் துவக்கி தொடர்ந்து உரையாடியும், மாதம் இரண்டு நாவல்கள் என வாசித்து விடுபட்ட மாதங்களை பூர்த்தி செய்தும் எங்கள் வாசிப்புப் பயணத்தை சீராக்கியுள்ளோம். இன்று கொரோனா நிலைமை மட்டுப்பட்டதைத் தொடர்ந்து, இந்நவம்பரில் நேர்ச்சந்திப்பை மீள்துவக்கம் செய்திருக்கிறோம் கூடுகையின் ஒராண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் தங்களின் “கொற்றவை” யை ஜூலையில் வாசித்து தமிழை சுவைத்து மகிழ்ந்தோம். அக்னி நதி, குழந்தைகள் பெண்கள் ஆண்கள், கோரா, புத்துயிர்ப்பு, தனிமையின் நூறாண்டுகள், நீலகண்டபறவையைத் தேடி போன்ற நாவல்கள் எங்களின் வாசிப்புத் தெரிவிற்கு சில உதாரணங்கள். இனிவரும் அமர்வுகளுக்காக, பருவம் மற்றும் நெடுங்குருதி மேல் ஆவலாயுள்ளோம்.

இவ்வண்ணம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் அமர்வுகளிலிருந்து பெற்ற வாசகர்கள் மற்றும் தன்னம்பிக்கையினால், வெண்முரசுக்கென்று தனிக் கூடுகைகளைத் துவங்கலாம் எனும் எங்கள் விழைவிற்கு தங்கள் வாழ்த்துச்சொற்களை நாடி இக்கடிதத்தை எழுதுகிறோம்.

எங்கள் குழுமத்தின் வாசகர்களில் கணிசமானவர்கள் வெண்முரசை வாசித்தவர்களாக அல்லது வாசித்துக்கொண்டிருப்பவர்களாக இருந்த போதிலும், கூடுகை நிகழ்த்த, அதற்கு தேவையான தீவிரத்தன்மையையும் அர்ப்பணிப்பையையும் கருத்தில் கொண்டு நாங்கள் தயங்கிக்கொண்டிருந்தோம் என்பது உண்மையே. ஆனால் கடந்த சில மாதங்களாக எங்களது ஒவ்வொரு அமர்விலும் வெண்முரசிற்கான சந்திப்பை உருவாக்குவதில் எழுந்த ஆர்வத்தையும் அதற்கான தேவையையும் கண்ட பிறகு, இனியும் தாமதிக்காமல் வெண்முரசுக் கூடுகையைத் துவங்கிவிடுவது என்ற எண்ணத்திற்கு நாங்கள் வந்துள்ளோம்.

இதற்கு ஆதரவாக, முதற்கனலிலிருந்து முதலாவிண் வரையிலான நூல்களை முதல் அல்லது மறு வாசிப்பு செய்வதில் ஈடுபாடும் பெருவேட்கையும் கொண்ட வாசகர்கள் எங்கள் குழுமத்தில் இருப்பது இவ்வமர்வுகளை தொய்வின்றி நடத்தி நிறைவுறச்செய்வதைச் சாத்தியமாக்கும். மேலும் தமிழகத்தின் பிற பகுதிகளில் நிகழ்ந்து கொண்டிருக்கும் வெண்முரசு உரையாடல்களங்களின் கட்டமைப்பை அறிந்த பிறகு, எங்களின் அமர்வு நிகழும் முறையாக, வெண்முரசு நிரையின் ஒவ்வொரு நூலையும் வாசித்து இரண்டு அல்லது மூன்று சந்திப்புகளிலாகக் கலந்துரையாடி அதன் முடிவிலா ஆழங்களுக்குச் செல்வதென்று வகுக்கப்பட்டுள்ளது. இங்ஙனம் அறிதலின்பத்தில் திளைத்திருப்பது எங்கள் நல்லூழ் என்று நாங்கள் உணர்ந்ததைப் போன்று கோவையின் பிற வாசகர்களும் உணரக்கூடும் என்பதால் இக்கூடுகையின் முளைத்தலை தங்களது தளத்தில் அறிவிக்க வேண்டுகிறோம்.

தொடர்ந்து வாசக நண்பர்களுடன் நடத்திய உரையாடல்களுக்குப் பின், வெண்முரசின் அனைத்து அமர்வுகளிலும் பத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் பங்கேற்க இயலும் என்பதில் தெளிவேற்பட்டதினால், வரும் ஜனவரி மாதத்திலிருந்து வெண்முரசைத் துவங்க முடிவு செய்துள்ளோம். இதன்படி ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிறின் காலைப் பொழுதில் அமர்வுகள் நிகழலாகும். இது குறித்த முறையான அறிவிப்பினையும், முழுமையான விவரங்களையும் உள்ளடக்கிய கடிதம் ஒன்றினை டிசம்பர் இறுதியில் தங்கள் பார்வைக்கு அளித்து, தளத்தில் பிரசுரிக்கக் கோரி இக்கடிதத்தை முடித்துக் கொள்கிறோம்.

பின்குறிப்பு: மதகுரு நாவலை விவாதிக்கும் பொருட்டு பிப்ரவரி மாதத்தில் நாங்கள் கூடிய போது எடுத்த புகைப்படம் ஒன்றினை தங்கள் பார்வைக்காக இங்கே இணைத்துள்ளோம்.

நன்றி.

என்றும்

பூபதி துரைசாமி.

வெண்முரசு கூடுகை தொடர்பிற்கு,

நரேன் – அலைபேசி எண் – 73390-55954

பூபதி துரைசாமி – அலைபேசி எண் – 98652-57233

அன்புள்ள பூபதி,

ஏற்கனவே கோவையில் வெண்முரசு கூட்டம் ஒன்றை நண்பர் விஜய்சூரியன் நடத்தினார். ஆனால் அதில் போதிய அளவில் நண்பர்கள் அக்கறை காட்டவில்லை. பெரும்பாலும் கோவைக்கு வெளியே உள்ளவர்களே கலந்துகொண்டார்கள். கோவையின் சூழல் அதற்கு எதிரானதுபோல என்று எண்ணிக்கொண்டேன்

ஆர்வம் கொண்டவர்கள் இருந்தால் நடத்தலாம். வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரைகாந்தியும் தலித் அரசியலும் -கடிதம்
அடுத்த கட்டுரைஉலகுடைய பெருமாள் கதை