மகாபாரதம்- பீட்டர் புரூக்ஸ்- வெண்முரசு

அன்புள்ள ஜெ

பத்தாண்டுகளுக்கு முன்பு பீட்டர் புரூக்ஸ் இயக்கிய மகாபாரதம் நாடகத்தை சினிமா வடிவில் பார்த்தேன். என்னால் அப்போது அதை தாங்கவே முடியவில்லை. அது ஊட்டிய எரிச்சலில் ஒரு நீண்ட வசையை ஆங்கிலத்தில் எழுதினேன். அப்போது நான் நிறைய பிளாக் எழுதிக்கொண்டிருந்தேன்.

வெண்முரசு முடிந்தபின் மகாபாரதத்தை மீண்டும் வேறுவடிவில் வாசிக்கவோ பார்க்கவோ வேண்டும் என்று தோன்றியது. ஆனந்த் நீலகண்டன் போன்றவர்களின் நாவல்களை பத்து பக்கம் படிக்கமுடியவில்லை. அவற்றின் ஆழமில்லாத நடை மட்டுமல்ல மகாபாரதத்தில் அவர்கள் எதையுமே கண்டடையவில்லை என்று தோன்றியது.

புகழ்பெற்ற நாவல்கள்கூட அப்படித்தான். பைரப்பாவின் பர்வாவை படித்தபோது மீண்டும் சலிப்பு. பைரப்பா மகாபாரதத்தின் மிஸ்டிக் தன்மையையும் மேஜிக்கையும் யதார்த்தமாக மாற்றிக்காட்டுகிறார். அதில் என்ன இருக்கிறது. பிடிஎஃப் பைலை ஜெபிஜி ஃபைலாக மாற்றுவதுபோலத்தான். அதில் என்ன கண்டடைந்தார். மகாபாரதம் உண்மையில் இப்படி நடந்திருக்கும் என்று ஊகிப்பது தவிர அதிலே ஒன்றுமில்லை.

மகாபாரதக் கதாபாத்திரங்களை யதார்த்தத்தில் நிறுத்தினால் அந்தப்பிரச்சினைகளும் யதார்த்தமாக ஆகிவிடுகின்றன. அந்த பிரச்சினைகளை யதார்த்தத்தில் வைத்துப்பார்த்தால் வெறும் பிடிவாதமோ பேராசையாகவோ தெரிகின்றன. துரியோதனனையோ கர்ணனையோ சின்னமனிதர்களாகத்தான் பார்க்கமுடியும். நம்மைப்போல அல்லாமல் வளராத மனம் கொண்ட பழையகால ஆட்கள் என்று நினைத்துக்கொள்ளலாம், அவ்வளவுதான். அதில் எந்த பயனும் இல்லை

மகாபாரதத்தின் சாராம்சமான ஒரு விஷன் கொஞ்சமாவது உண்டு என்றால் அது பி.கே.பாலகிருஷ்ணனின் இனிநான் உறங்கட்டும் நாவலில்தான். ஆனால் கர்ணகொடூரமான மொழிபெயர்ப்பு. படிக்கவே முடியவில்லை. தள்ளித்தள்ளித்தான் முடிக்கவேண்டியிருந்தது.

இப்படியே தவிர்த்து கடைசியில் பீட்டர்புரூக்சின் மகாபாரத நாடகசினிமாவை பார்த்தேன். சலிப்புடன்தான் பார்த்தேன். ஆனால் பிள்ளையார் கிருஷ்ணனாக மாறும் இடத்தில் அட என்று எழுந்துவிட்டேன். அதுதான் கிரியேட்டிவிட்டி. மொத்த நாடகமும் மகாபாரதத்தை தத்துவார்த்தமாக திறந்து பார்க்கும் முயற்சி. அபாரமான அனுபவம்

ஆரம்பத்தில் எனக்கு மகாபாரதக்கதையை அப்படியே மாற்றமில்லாமல் பார்க்கவேண்டும் என்ற ஆசை இருந்ததனால்தான் இது பிடிக்காமல் போய்விட்டது என்று நினைத்தேன். கிருஷ்ணன் அர்ஜுனன் எல்லாம் நினைத்தே பார்க்கமுடியாத ஆட்களாக இருந்தனர். ஆனால் அன்றைக்கு எனக்கு மகாபாரதக்கதையே தோராயமாகத்தான் தெரியும். சீரியல்கள் வழியும் படக்கதைகள் வழியும் தெரிந்துகொண்டதுதான்.

உண்மையில் மகாபாரதத்தை சரியாக முழுமையாக படிக்காதவர்கள்தான் மகாபாரதக்கதையை அப்படியே வாசிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் என நினைக்கிறேன். மகாபாரதத்தைப்பற்றி கொஞ்சம் யோசித்தவர்கள் மேலும் யோசிக்க என்ன கிடைக்கும் என்றுதான் பார்ப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு பீட்டர்புரூக்சின் நாடகம் பல புதிய வெளிச்சங்களை தந்துகொண்டே இருக்கும்

வெண்முரசு வாசகர்கள் நாடகத்தையும் பார்த்துவிடலாம்

எம். பிரபு

***

முந்தைய கட்டுரையுவன் 60- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஓபோஸ்- ஒரு சமையல்முறை