திரௌபதி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம்தானே?

வெண்முரசு நாவலை பிரயாகை வரைக்கும் படித்திருக்கிறேன். படிக்கத்தொடங்கிய பன்னிரண்டாவது நாளில் இதைப் படிக்கிறேன். இந்நாவல் தொடராக வரும்போது எனக்கு இப்படி ஒரு நாவல் வந்துகொண்டிருக்கும் செய்தி தெரியாது. அப்போது நான் பாலகுமாரனின் உடையாரில் மூழ்கி இருந்தேன். இப்போது நாவல் முடிந்தபோது குங்குமத்தில் வந்த பேட்டியை வாசித்தபிறகுதான் நாவலை வாசிக்கவேண்டும் என்று தோன்றியது.

ஆனால் முன்னால் என்னால் வாசித்திருக்கமுடியுமா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் நான் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவள் அல்ல.இந்த கொரோனா காலகட்டத்தில் வீட்டிலிருந்தே வகுப்பு நடத்துவதற்காக ஒரு கம்ப்யூட்டரை வாங்க நேர்ந்தது. அதைத்தான் இப்போது பயன்படுத்துகிறேன். இப்போது ஒருநாள் ஐந்தாறுமணிநேரம் படிக்கிறேன். இப்படியே போனால் இன்னும் இரண்டுமாதத்தில் வெண்முரசை வாசித்து முடித்துவிடுவேன் என நினைக்கிறேன்

வெண்முரசை இத்தனை வேகமாகப் படிக்கமுடியும் என்று நான் நினைக்கவே இல்லை. உங்கள் கதைகளை முன்பே படித்திருந்த சிலர் இதை படிக்கக் கஷ்டமாக இருக்கும் என்று சொன்னார்கள். நான் நீங்கள் எழுதிய அறம் மட்டுமே படித்திருக்கிறேன். எனக்கு அந்தக்கதைகள் மிக ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. நான் வாசித்த இலக்கியங்களிலேயே என் வாழ்க்கையை ஊடுருவி என் சிந்தனையில் ஆழமான செல்வாக்கை உருவாக்கிய கதைகள் அறம் தொகுப்பில் உள்ள கதைகள்தான்

ஆனால் வெண்முரசை படித்த சிலர் தூயதமிழிலே இருக்கிறது என்றும் படிக்கக் கஷ்டமானது என்றும் சொன்னார்கள். இதைப்படிப்பது கஷ்டம் என்று எனக்கும் பார்த்ததும் தோன்றியது. சரி எப்படி இருந்தாலும் ஒரு ஐம்பது பக்கம் படித்துவிடுவோம் என்று முடிவுசெய்து படித்தேன். ஆனால் முதல் இரண்டு அத்தியாயங்களிலேயே கதை உள்ளே இழுத்துக்கொண்டது. கீழே வைக்கவே முடியவில்லை. இரண்டே நாளில் முதற்கனலை வாசித்தேன்

ஏன் இத்தனை வாசிப்புத்தன்மை என்று யோசித்தேன். இந்த நாவலில் கதை கண்முன் காட்டப்படுகிறது. நாம் அந்தக்காலத்தை அப்படியே பார்க்கமுடிகிறது. அரண்மனைகள், நகரங்கள், மனிதர்கள் எல்லாமே கண்முன் தெரிகிறது. மழைப்பாடலில் அஸ்தினபுரியில் வரும் வெள்ளத்தை வாசித்துக்கொண்டிருந்தபோது ஒரு விசித்திரமான உணர்ச்சி ஏற்பட்டது. அதை வாசித்து முடித்தபோதுதான் என் வீட்டைச்சுற்றி வெள்ளம் பெருகியிருப்பதாக நானே நினைத்துக்கொண்டிருந்தேன் என்று தெரிந்தது. அந்தளவுக்கு வாசிப்பு நம்மை பாதிக்கமுடியுமா என்றே நினைக்க நினைக்க ஆச்சரியம்தான்

அடுத்தபடியாக, இந்தக்கதையும் இதிலுள்ள விஷயங்களும் அன்னியமானவை அல்ல. நிறைய நவீனநாவல்களில் பேசும் விஷயங்களை நாம் தெரிந்துகொள்ளலாமே ஒழிய நமக்கும் அவற்றுக்கும் சம்பந்தம் இருப்பதில்லை. இதில் அப்படி அல்ல. இதிலுள்ள பண்பாட்டு விஷயங்கள் நமக்கு ஆர்வமுள்ளவை. ஆரத்தி எடுப்பது, தாலம் காட்டுவது எல்லாமே இன்றைக்கும் நாம் செய்துகொண்டிருப்பவை. ஆகவே அந்தச் செய்திகளெல்லாமே எனக்கு கிளர்ச்சியை ஏற்படுத்தின. மகாபாரதக்கதை என்பது நம் வாழ்க்கைதான். நாம் அனைவருக்குமே மகாபாரதம் மீது ஈர்ப்பும் ஏதேனும் கதாபாத்திரத்துடன் நம்மையும் சேர்த்து யோசிக்கும் இயல்பும் இருக்கும். ஆகவே மகாபாரதக்கதையை வாசிக்கையில் ஆழமாக உள்ளே போகமுடிந்தது

என் அம்மா கொஞ்சம்தான் வாசிப்பார்கள். கல்கி வாசித்திருக்கிறார். நான் வெண்முரசு வாசிப்பதைக் கண்டு அம்மாவும் வாசிக்க ஆசைப்பட்டார். நான் தைரியமாக வாசி, ஐம்பது பக்கம் தாண்டினால் விடமாட்டாய் என்று சொன்னேன். அம்மாவுக்கு எழுபது வயது. ஆனால் வாசித்து மழைப்பாடல் பாதி வந்துவிட்டார்கள். தினமும் பேசிக்கொள்வோம். அம்மா மகாபாரதக் கதைகளில் ஊறிவளர்ந்தவர்கள். ஆகவே என்னைவிட ஆழமாக வெண்முரசை வாசிக்கிறார்கள். அம்மாவிடம் பேசும்போது புதியபுதிய நுட்பங்களைச் சொல்வார்கள்.

இந்நாவலை வாசித்துக்கொண்டிருக்கும்போது எனக்கு ஓர் எண்ணம் ஏற்பட்டது. அது சரியா தெரியவில்லை. ஆனால் அதைச் சொல்லவேண்டும் என்று நினைத்தேன். அதுக்காகத்தான் இந்தக்கடிதத்தை எழுதவே ஆரம்பித்தேன். ஆனால் வேறெங்கோ சென்றுவிட்டது. இந்த நாவல்களில் உள்ள பெண்கள்தான் எனக்கு மனம்கவர்ந்த கதாபாத்திரங்கள். சின்னவயசிலேயே எனக்கு பாஞ்சாலி திரௌபதி பிடிக்கும். சீரியலில் ரூபா கங்கூலி நடித்திருப்பார். நான் சின்னப்பெண்ணாக இருக்கும்போது தொடராக பார்த்திருக்கிறேன். இப்போது சீரியலாக எடுத்தால் நயன்தாரா நடிக்கலாம் என்று நினைப்பேன். பத்துவருஷம் முன்பு என்றால் சோபனா நடிக்கலாம். திரௌபதி என்னுடைய ஆஸ்தான கதாபாத்திரம். ஆற்றல் கொண்டபெண். சக்தி வடிவமான பெண்

அவளை எப்படிக் காட்டப்போகிறீர்கள் என்று நினைத்துக்கொண்டே இருந்தேன். அவளை நீங்கள் ஒரு சாதாரணப்பெண்ணாக காட்டிவிடுவீர்களா என்ற சந்தேகம் இருந்தது. ஏனென்றால் நான் நான்கு மகாபாரத நாவல்களை வாசித்திருக்கிறேன். ஒன்று எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதியது. இரண்டமிடம். இன்னொன்று இனி நான் உறங்கட்டும். பி.கே.பாலகிருஷ்ண  எழுதியது. இன்னொரு நாவல் பைரப்பா எழுதியது. பருவம் என்று பெயர். இவை மூன்றுமே நல்ல நாவல்கள். நான்காவது நாவல் பிரொதிபா ராய் எழுதிய திரௌபதி. மகாமட்டமான நாவல். ஆனால் அதற்குத்தான் ஞானபீட விருது கொடுத்திருக்கிறார்கள். அசட்டுத்தனமான அரசியல் கருத்துக்களை எல்லாம் திரௌபதி சொல்லிக்கொண்டே இருக்கிறாள்.

இந்த நாவல்களிலே எல்லாமே திரௌபதியை யதார்த்தமாகவே காட்டியிருந்தார்கள். நவீன நாவல்களில் அப்படித்தான் காட்டுவார்கள் என்று நினைத்திருந்தேன். திரௌபதிக்கு யதார்த்தமாக காட்டினாலும் ஆற்றல் உண்டு. ஆனால் மகாபாரதத்திலே அவள் தீயிலிருந்து வந்த பெண்ணாகவே இருக்கிறாள். கனலிடை தோன்றிய கன்னி என்று பாரதி சொல்கிறார்.

என் அம்மா சொல்வாள், சீதை தீயில் புகுந்து மறைந்தாள். அந்த தீயிலே திரௌபதி தோன்றினாள்னு. இரண்டுபேருக்கும் குணச்சித்திரமே வேறு வேறு. சீதை பொறுத்துக்கொண்டாள். திரௌபதி சீறி எழுந்தாள். சீதைக்கு ஒரு கணவன், திரௌபதிக்கு ஐந்து கணவன். பெண்ணின் இரண்டு அவதாரங்கள் இரண்டுபேரும். திரௌபதியை சாதாரணமான பெண்ணாக காட்டினால் மகாபாரதத்திலே உள்ள அந்த ஆழம் போய்விடுகிறது

அதைத்தான் நான் வெண்முரசில் ஆச்சரியமான விதத்திலே பார்த்தேன். நான் எண்ணியதைவிட மகாபாரதத்தின் சாராம்சத்தை வெண்முரசு இன்னமும்கூட வலிமையகவும் விரிவாகவும் கொண்டுபோகிறது. ஆரம்பம் முதலே அந்த அஸ்திவாரம் பலமாக போடப்பட்டிருக்கிறது. அம்பையை முதற்கனல் என்று சொல்லி அதற்கு அடுத்தபடியாக வந்த பெருங்கனல்தான் திரௌபதி என்று சொல்வதுதான் வெண்முரசின் பார்வையாக இருக்கிறது

முதற்கனலான அம்பை படகிலே போகும்போது படகோட்டி சீதையைப்பற்றி பாடுகிறான். சீதையின் நினைவு மழைப்பாடலிலும் வந்துகொண்டிருக்கிறது. அம்பை ஒரு கனல்போல அஸ்தினபுரியின் முகப்பில் எரிந்துகொண்டிருக்கிறாள். நான் சின்னப்பெண்ணாக இருந்தபோது கேட்டது இது.எங்கள் குடும்பத்தில் ஒரு விதவைப்பெண்ணை அவளுடைய கணவனின் சகோதரர்கள் சேர்ந்து அடித்து துரத்திவிட்டார்கள். தஞ்சாவூரில் ஒரு அக்ரஹாரம். அவள் ஒரு கற்பூரம் வாங்கி அந்த வீட்டு முற்றத்தில் வைத்து எரித்து சாபம் போட்டுவிட்டு போனாள். அந்தக் கற்பூரம் அந்த குடும்பத்தையே எரித்து அழித்துவிட்டது. அந்தக்குடும்பத்தில் இரண்டுபேர் தீயிலேயே செத்தார்கள்.

அம்பையின் குரலாகத்தான் நான் முதற்கனல் நாவலை படித்து முடித்தேன். மழைப்பாடல் முழுக்க திரௌபதியின் வருகைக்கான களம்தான் தயாராகிக்கொண்டிருக்கிறது என்று தோன்றியது. அம்பையின் தீயை திரௌபதி வரைக்கும் கொண்டுவந்து சேர்க்கிறார்கள் மற்றபெண்கள். அம்பாலிகை அம்பிகை குந்தி எல்லாரும் செய்வது அதைத்தான். அதன்பின் திரௌபதியின் பிறப்பு நடைபெறுகிறது

யாஜரும் உபயாஜரும் திரௌபதியின் முகத்தை தீயிலே காட்டும்போது எனக்கு மெய்சிலிர்த்துவிட்டது. அவளுடைய மிடுக்கும் துணிவும் சிந்தனைத்தெளிவும் அற்புதமாக வந்துகொண்டே இருக்கிறது. அவள் எதையுமே விட்டுக்கொடுக்கவில்லை. ஏனென்றால் சீதை எல்லாவற்றையுமே விட்டுக்கொடுத்தாள். அவள் கர்ணனை பொருட்டாக நினைக்கவில்லை. ஏனென்றால் அவள் கர்ணனுக்காக எதையுமே விட்டுக்கொடுக்க விரும்பவில்லை.

திரௌபதியின் கதாபாத்திரம் படிப்படியாக வளர்ச்சி அடைந்துகொண்டே இருக்கிறது. அற்புதமான பல இடங்கள். முதற்கனல் அம்பை என்றால் சொற்கனல் திரௌபதி. அப்படித்தான் பிரயாகை தொடங்குகிறது. பிரயாகையின் தொடக்கமே துருவநட்சத்திரத்தில்தான்.  தீதிலா வடமீனின் திறம் இவள் திறம் என்று கண்ணகியைப்பற்றி இளங்கோவடிகள் சொல்கிறார்.அந்தவரிதான் ஞாபகம் வந்தது .குருதிகொள் கொற்றவை என்று அந்த நாவல் முடிகிறது. திரௌபதி காட்டையே எரித்து தன் கையின் நெருப்பை அழியாமல் வைத்துக்கொள்கிறாள். அவளுடைய மொத்த வாழ்க்கையையுமே ஒரு குறியீடாகச் சொல்லிவிடுகிறது அந்தக்கதை. அது மகாபாரதத்தில் இல்லாத கதை. ஆனால் வியாசன் எழுதியதுபோலவே அற்புதமான ஒரு உருவகக்கதையாக உள்ளது.

திரௌபதியையும் மாயையும் இணையாகக் காட்டியிருக்கிறீர்கள். மாயை என்ற கதாபாத்திரம் மகாபாரதத்திலே இல்லை. திரௌபதியை துர்க்கையாக காட்டியதனால்தான் மாயை வருகிறாள் என்று நினைக்கிறேன். மாயை துர்க்கையின் மாயாரூபம். ஐந்து குலக்கோயில்களிலும் அவள் போய் வழிபடுவதும் ஐந்து புரிகளாக அவள் கூந்தல் இருப்பதும் எல்லாம் மகாபாரதம் அளிக்கும் வாய்ப்புகளை சிறப்பாக விரித்து எடுத்துக்கொண்டதையே காட்டுகின்றது.

பிரயாகையில்தான் அரக்குமாளிகைச் சம்பவம் வருகிறது. அதையும் நான் திரௌபதியுடன் தொடர்புபடுத்தித் தான் வாசித்தேன். பாண்டவர்கள் ஐவருக்கும் அது சாவுபோன்ற நிகழ்ச்சி. அவர்கள் சொந்தச்சிதையை கண்ணால் பார்க்கிறார்கள். சிதையில் எரிந்து மீண்டும் பிறக்கிறார்கள். அந்தக்குகைப்பயணத்தையே கர்ப்பப்பையிலிருந்து வெளிவருவதுபோல காட்டுகிறீர்கள். தொப்புள்கொடிகூட இருக்கிறது

அப்படி தீவழியாக வந்ததனால்தான் அவர்களால் திரௌபதியை அடையமுடிந்தது. தீயைத்தாண்டித்தான் தீயின் மகளை அடையமுடியும். அப்படி யோசிக்கும்போது தாங்கமுடியாத வஞ்சத்துடன் துருபதன் தீயைச்சுற்றி நடனமிடும் காட்சியும் ஞாபகத்துக்கு வந்தது. இந்தவகையில் ஒவ்வொன்றையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி வாசித்துக்கொண்டே போகலாம்.

அம்பை துருபதன் அரண்மனைக்குச் சென்று அவனுடைய கோட்டைமுன்னால்தான் தன் மாலையை போடுகிராள். சோமகன் அவளுடைய மகனை வளர்க்கிறான், அம்பை போட்ட அந்த மாலைதான் திரௌபதி. அவள் அந்த முதற்கனனில் தீ எரிந்து பெருகுவதுதான். திரௌபதியை கருமையாக காட்டியிருக்கிறீர்கள். அனல்வண்ணம் கொண்டவள் என்றுதான் மகாபாரதம் காட்டுகிறது என்று அம்மா சொன்னார்க்ள். ஆனால் நன்கு பார்த்தபோது கிருஷ்ணை என்றுதான் சொல்கிறது. அவள் கருமையானவள்தான். வில்லிப்புத்தூரார்தான் அவளை கருமையாகக் காட்டிவிட்டார்

திரௌபதி எரிக்கும் காடுவரை வந்ததும் நிறுத்திவிட்டு இதை எழுதுகிறேன். வெந்து தணிந்தது காடு என்ற வரிதான் ஞாபகம் வருகிறது. இனிமேலே படிக்கவேண்டும். இது எவருடைய கதையாக இருந்தாலும் நான் திரௌபதியின் கதையாகவே இதை வாசிக்கப்போகிறேன்.

எஸ்.தேவி

முந்தைய கட்டுரைஅஞ்சலி- கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி
அடுத்த கட்டுரைபைரப்பாவின் மொழிபெயர்ப்பாளர்