காலக்குகை

இனிய ஜெயம்

கார்டியன் இதழில் கடந்த வாரம் வந்திருக்கும் செய்தி இது, பிரிட்டிஷ் கொலம்பிய. சேர்ந்த  தொல்பழங்கால. ஆய்வாளர்கள் அமேசான் வனத்துக்குள் உலகின் மிகப் பெரிய தொல்பழங்கால பாறை ஓவியத்தை கண்டடைந்திருக்கிறார்கள். காலம் இன்றிலிருந்து 12,000 ஆண்டுகள் முன்பு துவங்குகிறது. துருக்கியின் கோபக்லி தப்பே கோவிலின் அதே காலம். கிட்டத்தட்ட பனியுக இறுதி.

பனியுகத்தின் இறுதியில் அழிந்து போன நியாண்டர்தால் போலவே, அப்போது அழிந்து போன யானை குதிரைகளின் மூதாதைகளை இந்த ஓவியங்கள் கொண்டிருக்கிறதாம். (கீழ்வாலை ஓவியத்தில் உள்ளதை போலவே பறவை அலகு கொண்ட கிரீடம் அணிந்த மனிதன் இதிலும் இருக்கிறான்).

லக்ஸர்ஸ் குகை, இன்னும் பெயரிடப்படாத இந்த சுவரோவியங்கள், கோபக்லி கோவில், மகாராஷ்டிரா பாறை வெட்டு ஓவியங்கள், கிழக்கு அமேரிக்கா நாஸ்காஸ் பிரும்மாண்ட ஓவியங்கள் பிரும்மாண்ட குத்துக் கற்கள்  இப்படி ஒரு வரிசையை தொடுத்து பண்டைய நாகரீகத்தை யூகித்தால் தலை சுற்றுகிறது.

கோபிக்லி கோவில்  உலோகங்களின் காலம் துவங்கும் முன்பு  (அதன் தூண்களில் புடைப்பு சிற்பங்கள்) 12,000 வருடங்களுக்கு முன்னால், கடினமான கற்களை உளி போன்ற பிற கருவிகளாக பயன்படுத்தி கட்டப்பட்டிருக்கிறது. ஒரு பிரும்மாண்ட கோவில் எழ, வளமான விவசாயம் செழிக்கும் உபரி உள்ளிட்ட  எத்தனை நூறு காரணிகள் தேவை என்பதை தஞ்சை பெரியகோவில் உருவான பின்புலத்தை வாசித்து அறிந்த வகையில், இந்த கொபெக்லி கோவில் எழுந்த சூழலை பொருத்தி யோசிக்க ஆச்சர்யமே மிஞ்சுகிறது.

இந்த அமேசான் ஓவிய வரிசை பன்னிரண்டு கிலோமீட்டர் நீளமுடையது எனில், பல நூறு தலைமுறைகளாக தொடர்ந்து அங்கே புனிதப் பயணமாக அன்றைய மானுடர் வெவ்வேறு எல்லைகளில் இருந்து வந்து கூடினர் என யூகிக்க எல்லா சாத்தியமும் உண்டு. யோசிக்க யோசிக்க எங்கெங்கோ சுழற்றி அடித்து, நேற்றைய இரவின் தூக்கம் போனதுதான் மிச்சம். இவர்கள் ஹோமோ இனத்தை சேர்ந்த மனிதர்கள் என்றால், இவர்களை மிஞ்சும் எதையும் இன்றைய நவீன மனிதன் செய்துவிட வில்லை. இவர்கள் நியாண்டர்தால்கள் எனில் (பொறாமையில்) நல்லவேளை செத்து ஒழிஞ்சானுக என்று தோன்றுகிறது. யாருக்கு தெரியும் அந்தக் கால இசைக்கருவிகள் கொண்டு வேகனாரை  மிஞ்சும் ஒபேரா கூட அவர்கள் வசம் இருந்திருக்கலாம். ஏன்ஷியண்ட் ஏலியன் என்றொரு தொடர் கண்டேன், உலோக காலத்துக்கு முந்திய பண்பாடு ஏலியன்களால் உருவாக்கப்பது என்பதே அந்த தொடரின் சாரம். நம்பலாம் போலத்தான் தோன்றுகிறது . :)

கடலூர் சீனு

மையநிலப்பயணம் பிம்பேத்கா

அன்புள்ள சீனு

இந்தியாவில் முக்கியமான பல குகை ஓவியங்கள் உள்ளன. எங்கள் பயணங்களில் தொடர்ச்சியாக அவற்றை பார்த்து, எழுதிவருகிறேன். எத்தனை காணொளிகள் பார்த்தாலும் மெய்யாகவே ஒரு குகையோவியத்தை பார்ப்பதென்பது மெய்சிலிர்க்கவைக்கும் ஒரு வரலாற்றனுபவம்

இந்தியக்குகை ஓவியங்களில் உச்சம் பிம்பேத்கா. பலவகையிலும் இதனுடன் ஒப்பிடத்தக்கது

ஜெ

முந்தைய கட்டுரைநித்யா புகைப்படங்கள்
அடுத்த கட்டுரைமரம்போல்வர்- சுஷீல்குமார்