வெண்முரசு தொடங்குதல்

அன்புள்ள ஜெ

இன்று வெண்முரசு நாவல் வரிசையின் முதற்கனலை வாங்கினேன். சென்ற முறை ஆர்டர் செய்த போது பதிப்பு வர சற்று காத்திருக்க வேண்டும் என்றனர்.  இப்போது புதிதாய் வந்த இன்னொரு பதிப்பில் ஆர்டர் செய்திருந்தது இன்று மாலை கையில் கிடைக்கப் பெற்றேன்.

வெண்முரசின் அளவில், வீச்சில் பிரமித்து நான் அதன் பக்கமே வரவில்லை. ஒன்றிரண்டு பக்கங்கள் வாசித்தோடு சரி. வெண்முரசின் நிறைவுக்கு பின் அதை பற்றி ஏராளமாக தங்கள் தினந்தோறும் வாசகர் கடிதங்களை வெளியிட்டு கொண்டிருக்கிறீர்கள். இவற்றை பார்த்து நாம் மகத்தான நழுவவிட்டு விடுகிறோமோ என்ற ஐயம் ஏற்பட்டது. இறுதியாக என் ஐயங்களை களைந்து வெண்முரசை வாசிக்க முடிவெடுத்து விட்டேன்.

இந்த தருணத்தில் என் ஆசிரியராகிய உங்களிடம் ஆசி வேண்டி நிற்கிறேன். கடலூர் சீனு அவர்கள் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார் அவரை நினைத்து நாவலின் பக்கத்தை புரட்டி சொல்லொன்று எடுத்துரைப்பீர்கள் என்று.
அதுபோல எனக்கும் சொல் அருள் வேண்டுகிறேன்.  என் புகைப்பட ஒன்றையும் உங்களுக்கு அனுப்ப விரும்புகிறேன்.

வியாசரின் பாதங்களில் பணிந்து வெண்முரசெனும் தவத்தை நிகழ்த்த சொல் வேண்டுகிறேன்.

அன்புடன்

சக்திவேல்

***

அன்புள்ள சக்திவேல்

நலம்தானே?

வெண்முரசு தொடங்குவது என்பது அடுத்த ஓராண்டுக்காவது நிறைவான ஓர் புனைவுலகில் வாழும் அனுபவத்தை அளிக்கும் என உறுதியுடன் சொல்வேன். வாழ்க்கையின் வெவ்வேறு தருணங்களை, நாம் காணும் மானுடரின் அகப்பெருந்தோற்றங்களை, நம் பண்பாட்டின் விரிவை, நம் நிலத்தை அதில் காணமுடியும். அது அமர்ந்த இடத்திலிருந்தபடியே ஒரு பயணம்

உங்களுக்காக சட்டென்று தேடியபோது சிக்கிய வரி இது

வெண்தந்தம் நீண்டெழுந்த மதகளிறு அது. வேங்கைமரத்தை வேருடன் சாய்த்து உண்ணும் துதிக்கை கொண்டது. இளவெயிலில் சுடர்ந்து நின்ற சிறிய மலர்களை துதிக்கை நுனியால் கொய்து சுருட்டி வாய்க்குள் போட்டுக்கொண்டிருந்தது. [மழைப்பாடல்]

என்ன பொருள் என்று சொல்லத்தெரியவில்லை.நீங்களே எண்ணிக்கொள்ளுங்கள். பெரிய செயல்கள் அளவுகே சிறியவையும் அரியவைதான் என்று வேண்டுமென்றால் பொருள்கொள்ளலாம்

ஜெ

வியாசர்

அன்பு ஜெயமோகனுக்கு வணக்கம்,

வெண்முரசு பற்றிய மூன்று ஆசிரியர்களின் கருத்தை படித்த பிறகே இக்கடிதத்தை எழுதுகிறேன்.அரசுபணி தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் என்னை போன்றவர்கள் படித்த பாடத்தை நினைவில் வைத்து கொள்ள மீண்டும் மீண்டும் படித்ததையே படிப்போம்.அதுவும்  20,30 பக்கங்களை கடந்தால் அலுப்பு தட்டிவிடும்.எங்களுக்கு மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் என்றும் எட்டா கனி தான்.

பொதுமுடக்க காலத்தில் தான் உங்கள் இணையதளத்தை வாசிக்க தொடங்கினேன்.அதன் பிறகு தான் வெண்முரசு நாவலையும் வாங்கினேன்.முழு மூச்சாக 11 நாட்களில் வெண்முரசை படித்து முடித்தேன்.முழுமையாகவும் ஆழுமாகவும் படித்ததாகவே உணர்கிறேன்.இந்த வாசிப்புக்கு முழு காரணம் உங்கள் மொழி நடையும் கதை வீச்சும் தான். பாவம் திரு.ஞாநி , 50 ஆண்டிற்கு பிறகு இந்த நாவல்கள் நிற்காது என்கிறார்.இலக்கிய வாசிப்பே இல்லாத என்னை போன்றவர்களை நாள் ஒன்றுக்கு  50 பக்கம் படிக்க வைத்து இலக்கிய உலகத்ததை அறிமுகம் செய்த முதற்கனலே அவருக்கான பதிலாக இருக்கும் என நம்புகிறேன்.

வெண்முரசு என் கைக்கு வந்து சேர்ந்ததே ஒரு சுவாரசியமான சம்பவம். இரண்டு மூன்று முறை ஆர்டர் செய்தும் முதற்கனல் எனக்கு கிடைக்கவே இல்லை.கடைசியாக முதற்கனல் என் கைக்கு கிடைத்த நாள்  கிருஷ்ணஜெயந்திக்கு முந்தைய நாள்.கிருஷ்ணரே என் வீட்டிற்கு வந்ததாக தோன்றியது.கடவுளால் ஆசிர்வதிக்க படுகிறேன் என உணர்ந்த தருணம் அது.

முதற்கனலில் ஒரு அற்புதமான காட்சி என்றால் அது கங்கையில் மிதந்து வரும் படகில் அமர்ந்து இருக்கும் அம்பை தான்.அந்த காட்சியில் அம்பை அந்த வளைந்த படகின் ஒரு மூலையில் அமர்ந்திருப்பாள். அகல் விளக்கின் நுனியில் எறியும் தீபம் போல காட்சி படித்து இருப்பார் ஆசிரியர்.பல நாட்கள் காலையில் எழும்போது இந்த காட்சி என் நினைவில் வந்து வந்து செல்கிறது.

மற்றொரு காட்சி என்றால் வியாசரை சந்திக்க பீஷ்மர் வந்த போது சித்ரகனி குடிலில் உள்ள பசுவை அடித்து இழுத்து சென்றுவிடும்.அதிரடி சண்டை படத்தின் இறுதி காட்சி போன்று இருந்தது.பீஷ்மருக்கு சொல்லப்பட்ட நீதியாகவும் இருந்தது.

முதற்கனல் மூலம் ஒரு புதிய உலகத்தை அறிமுகம் செய்த ஆசிரியருக்கு நன்றியை தெரிவித்து கொண்டு சிறந்த வாசகனாகும் தகுதியை வளர்த்து கொள்ள விரும்புகிறேன்.

கிருத்திகேசன்

***

அன்புள்ள கிருத்திகேசன்

நீங்கள் தொடர்ச்சியாக வாசிப்பது நிறைவளிக்கிறது. புறவுலகச்சிக்கல்களால் வாசிப்பை ஒத்திப்போடாதீர்கள். ஒருநாளுக்கு ஒருமணிநேரமாவது எப்படியும் வாசிப்பதென்று உறுதியுடனிருங்கள். வாசிப்பு பெருகும். இக்காலகட்டத்தில் வாசிப்பதற்கு உரிய வழி என்பது வாசித்தேயாகவேண்டும் என்னும் ஒழுங்கை, உறுதியை உருவாக்கிக்கொள்வதுதான். முடிந்தால் வாசிப்போம் என்பதெல்லாம் சரியாக வராது

ஜெ

முந்தைய கட்டுரைபெண்கள் எழுதுதல்
அடுத்த கட்டுரைஅன்னமாச்சாரியாவும் கி.ராஜநாராயணனும்-கடிதம்