காட்டுவிலங்கு ஒன்றை மிக அருகே கண்களோடு கண் பார்க்க நேர்ந்தது ஒரே ஒருமுறை. நான் பத்தாம் வகுப்பு மாணவனாக இருந்தபோது. பேச்சிப்பாறை காட்டுக்குள் ‘கூப்பு’ வேலைக்காகச் சென்ற நண்பர்களுடன் நானும் சென்றிருந்தேன். அன்றெல்லாம் காடுகளை வெட்டி அழித்து தடியும் விறகுமாக்கி விற்க அரசே ஏலம்போடுவதுண்டு. அதை கூப்புக்கான்டிராக்ட் என்பார்கள். காடுவெட்ட ஏராளமான வேலைக்காரர்கள் தேவை. அதற்கு விடுமுறைநாட்களில் நண்பர்கள் செல்வார்கள். ஒரு வேடிக்கைக்காக நானும் செல்வதுண்டு.
அன்று அதற்கு நாளுக்கு நான்கு ரூபாய் சம்பளம் மூன்றுவேளை உணவு. சூடான கஞ்சியும் கிழங்கும் கிடைக்கும். பெரிய வேலை இல்லை. வெட்டிய கிளைகளை இழுத்துக்கொண்டு சென்று போடவேண்டும். வேடிக்கைப்பேச்சும் கொண்டாட்டமுமாக நாட்கள் செல்லும். இரவில் மரங்களின்மேல் கட்டிய பரணில், கடுங் குளிரில் கமுகுப்பாளையை பின்னி செய்த போர்வையை போர்த்துக்கொண்டு விறகுக்கரியால் ‘நெரிப்போடு’ அமைத்து சூழ்ந்திருந்து பேசியும் படுத்து தூங்கியும் பொழுதைக் கழிப்போம். கஞ்சா தாராளமாகவே கிடைக்கும். நெரிப்போடு கீழே புகையை கிளப்பியபடியே இருக்கும். இல்லாவிட்டால் தூங்கமுடியாது. கொசுக்களின் படை.
அன்றொரு நாள் ஒரு மூச்சின் ஒலி கேட்டேன். கீழே பார்த்தபோது யானை மேலே தலைதூக்கி நின்றிருந்தது. துதிக்கையால் பரணை எட்டிவிடமுடியுமா என்று பார்த்தது. ஒருநிமிடம் பிரமையா கனவா என அதன் கண்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.கண்கள் அல்ல, ஒரு கண்.மின்னும் சிறிய நீர்க்குமிழி. பின்னர் அலறி அனைவரையும் எழுப்பினேன். எழுந்து அமர்ந்து கூச்சலிட்டபோது வாலைமுறுக்கி ஒரு பிளிறலுடன் திரும்பிச் சென்றது
கான்விலங்குகளை கூண்டிலடைத்திருக்கும் இடங்களில் கண்களை நோக்குவேன். அவற்றிலிருப்பது காட்டின் வன்மை அல்ல. சிறையின் சலிப்பும் சோர்வும் அணுகிவரும் சாவும். சிங்கப்பூரிலும் அமெரிக்காவிலும் விலங்குக் காட்சிநிலையங்களில் வலுவான கண்ணாடிக்கு அப்பால் வரும் புலியின் கண்களை மிகமிக அண்மையில் கண்டதுண்டு. அவை நம்மை பார்ப்பதில்லை என்பதனால் அவற்றை நாமும் பார்ப்பதில்லை என்று தோன்றும்
ஈரட்டியில் என்னருகே வந்து அமர்ந்திருக்கும் இந்த பெட்டைநாய் கறுத்தம்மா இப்போது குட்டிகள் சென்றுவிட, மீண்டும் தின்று உடல்மீண்டு கம்பீரமாக இருக்கிறது. இது எவராலும் வளர்க்கப்படவில்லை. ஊரை ஒட்டிய காட்டிலேயே பெரும்பாலும் இருக்கிறது. வேட்டையாடி உண்கிறது. உணவு கொடுத்தால் உண்ணுமே ஒழிய கேட்பதில்லை. மனிதர்களை பிடித்திருக்கிறது அவ்வளவுதான். இது காட்டுவிலங்குதான், மனிதர்களால் பிடிக்கப்பட்டது அல்ல, மனிதர்களை ஏற்றுக்கொண்டது
எல்லா மனிதர்களையும் இதற்குப்பிடித்திருக்கிறது. ஏன் என்பது ஆச்சரியம்தான். இது மனிதர்களை தனக்குச் சமானமானவர்கள் என்று நினைக்கிறதுபோல. மனிதர்களுடன் குழைகிறது, வாலாட்டுகிறது, கொஞ்சும்பொருட்டு ஏங்குகிறது, தொட்டாலே மகிழ்ந்துவிடுகிறது. குட்டியாக இருக்கையிலேயே மனிதர்களுடன் இணங்கிவிட்டிருக்கும். காட்டுக்குள் சென்றால் உடன் வந்து முன்னால் சென்று மோப்பம் பிடித்து பத்திரமாக கூட்டிச்சென்று பத்திரமாக திரும்ப அழைத்துவருகிறது. பொறுப்பேற்றுக்கொள்கிறது. எப்போதுமே உரையாடச் சித்தமாக இருக்கிறது
மனிதர்களுடன் சாலைக்கு வர மிக விரும்புகிறது. ஆனால் சாலை இதற்கு பழக்கமில்லை. சாலைக்கு சென்றால் மட்டும் நம் கால்நடுவே நடக்க விரும்பும். வண்டிகளை எதிர்கொள்வதெப்படி என்று தெரியாது. வேறுநாய்கள் இதைப்பார்த்தாலே சீற்றமடைகின்றன. அப்போது இதன் பிடரியில் மயிர் முள்ளம்பன்றி போல சிலிர்த்துக்கொள்கிறது. அவை மிக அருகே வருவதில்லை. காட்டின் ஆற்றலை அவை அறிந்திருக்கின்றன
கறுத்தம்மா என்று இதற்கு பெயரிட்டவள் சைதன்யா. ஆனால் பெயர் சொல்லியெல்லாம் அழைக்க முடியாது. பெயர் அவளைப் போய் சேரவில்லை, காட்டுவிலங்குகளுக்கு அவர்களுக்குள் போட்டுக்கொண்ட பெயர்கள்தான் இருக்கும். காடு நாவலில் குட்டப்பன் சொல்வான். யானைக்கு நாம் பெயர்போடமுடியாது. யானைகள் தங்களுக்குள் போட்டுக்கொண்டு அழைக்கும் பெயர்கள் இருக்கும். அந்தப்பெயரை நாம் அழைக்கமுடியாது. குண்டி கிழிந்துவிடும்.
கறுத்தம்மா இளவெயிலில் திண்ணையில் அமர்ந்திருக்கிறது. அப்படியே சொக்கி தூங்கி விழித்துக்கொண்டு கால்களை நக்கியபின் என்னைப்பார்த்து வாலை ஆட்டி அன்பை தெரிவித்தபின் மீண்டும் இமைதளர்தல். அதன் உடலை பார்த்துக்கொண்டிருக்கிறேன். புரத உணவிட்டு, ஷாம்பூபோட்டு குளிப்பாட்டி, நாள்தோறும் சீவி, பௌடர்போட்டு பேணிவளர்க்கப்படும் உயர்குடி நாய்களுக்குக் கூட இத்தனை அழகான முடிப்பரப்பு அமைவதில்லை. ஆரோக்கியமான உடல். அது வேட்டையுணவிலிருந்தே வருவது.
நாய்களுக்கு குருதியிறைச்சி முக்கியமான தேவை. அதை வேறெதிலும் ஈடுகட்ட முடியாது. ஆனால் அதற்காக மாட்டிறைச்சி வாங்கி போடமுடியாது. வயிற்றில் நாடாப்புழு வந்துவிடும். காட்டில் அவையே தேடிப்பிடித்து உண்ணும் உணவே சிறந்தது. அது வெறும் உணவல்ல. அந்த உணவுடன் அதற்குரிய வேட்டையும் இருப்பதனால் தசைப்பயிற்சியும் உள்ளது
கறுத்தம்மாவின் கண்களை படமெடுக்க பலவகையாக முயன்றேன். செல்பேசியை அருகே கொண்டுசென்றால் எச்சரிக்கை அடைந்தாள். என்ன செய்யலாம் என்று யோசித்தேன். செல்பேசியை அவள் முன் போட்டேன். முகர்ந்து ,நக்கிப்பார்த்து திருப்தி அடைந்தபின் கண்களை மூடிக்கொண்டாள். மீண்டும் படமெடுத்தபோது கண்டுகொள்ளவே இல்லை
புலியின் கண்கள் இந்த நாய்க்கு. வழக்கமான நாய்விழிகள் அல்ல. அண்மைக்காட்சியில் புலி என்றே காமிரா மயங்கியது. அந்த விழிகளில் இருந்த பொருட்டின்மையை கண்டேன். நிற்பில், கிடப்பில், அமர்வில், ஏன் துயிலில்கூட இருக்கும் நிமிர்வு. அந்த தோரணை ஊர்நாய்களுக்கு வருவதே இல்லை. அது காட்டின் கொடை.