இனிய ஜெயம்
Archive இல் தமிழில் வாசிக்கக் கிடைக்கும் முக்கியமான சில தத்துவ அறிமுக நூல்களை இங்கே தொகுத்திருக்கிறேன். எழுபதுகளில் தமிழில் மேற்படிப்பாக தத்துவம் எல்லாம் மாணவர்கள் கற்கவேண்டும் என்று ஒரு கனவு அரசாங்கத்தில் எவருக்கோ இருந்திருக்கிறது. அநேகமாக அது தத்துவப் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் அவர்களாக இருக்கலாம். அவர்தான் இத்தகு தத்துவ பாட திட்ட குழுக்களின் தலைவராகவும் இருந்திருக்கிறார்.
முதல் சுட்டி வழியே உலக தத்துவங்களை இரு பாக நூல்கள் கொண்டு அறிமுகம் செய்து கொள்ளலாம்.இரண்டாம் சுட்டி கொண்டு, இரு பாகங்கள் கொண்ட நூல்கள் வழியே வேதம் முதல் உபநிஷத், கீதை, பௌத்தம், சமணம், ஆறு தரிசனங்கள் தொடர்ந்து பிற்கால வேதாந்தம் வரை அறிமுகம் செய்து கொள்ளலாம். மூன்றாம் சுட்டி வழியே அத்வைதத்தின் ஆழ அகலம் அறியலாம்.
ராதாகிருஷ்ணன் தலைமை எனில் ஹிரியண்ணா தொடர்ந்து இந்த நூல்களின் உருவாக்கத்தின் ஆசிரியர்கள் தேர்வு சரியாகவே இருக்கும் . எனவே பிழைகள் அற்ற தத்துவக் கல்வியே இந்த நூல்கள் நல்கும் என நம்பலாம்.ஆங்காங்கே சில அத்தியாயங்கள் வாசித்துப் பார்த்தேன். (தத்துவத்தின் கலை சொற்கள் மீது அடிப்படை பரிச்சயம் தெளிந்த பின்), இடறலற்ற வாசிப்பு அளிக்கும் நூல்கள்.
மார்க்சிய பார்வை கொண்ட ஆய்வுகள் பிற சார்புகள் கூடிய தத்துவ நூல்களுக்கு வெளியே, செவ்வியல் இந்திய தத்துவங்களை அறியவோ பயிலவோ வாசகர் தேடும் பட்சம் தமிழில் ஐந்து நூல்களுக்கு மேல் கிடைக்காது. இனியும் தமிழில் அத்தகு நூல்கள் பதிப்பில் கிடைக்க வாய்ப்பு குறைவே. ஆகவே இந்த சுட்டிகளின் நூல்கள் இன்றைய தேதியில் முக்கியமான நூல்கள் என்றாகின்றன. தத்துவ, வரலாற்று இலக்கியப் பகைப்புலம் வழியே இந்திய பண்பாட்டை அணுக விரும்பும், தமிழ் மட்டுமே அறிந்த வாசகர்களுக்கு இந்த தத்துவ அறிமுக நூல்கள் பெரிய வாயில்.
கடலூர் சீனு