வெண்கலவாசலின் கதை

உலகுடைய பெருமாள் கதை

நாட்டார்ப்பாடல்களை எப்படி வரலாறாகக் கொள்ளமுடியும்? பெரும்பாலும் அவை தரவுகளால் ஆதாரபூர்வமாக நிறுவப்பட்ட பொதுவரலாற்றுடன் பொருந்துவதில்லை. அவற்றில் மிகை இருந்துகொண்டே இருக்கிறது. அவற்றை இலக்கிய ஆதாரமாகக் கொள்ளலாம் என்றால் அவற்றின் சுவடிகள் தொல்லியல் சான்றுக்கு தாக்குப்பிடிப்பவை அல்ல. வாய்மொழியை ஆதாரமாக கொள்ள ஆய்வாளர் தயங்குவார்கள்

அனைத்துக்கும் மேலாக நாட்டார்ப்பாடல்கள் சாதிய வரலாறுகளின் அடிப்படையாக அமைந்துள்ளன. அவற்றில் இருந்தே சாதிப்பெருமிதங்கள் உருவாக்கப்படுகின்றன. தமிழகத்தில் எண்பதுகளில் பிற்படுத்தப்பட்ட சாதியினர் அரசியலதிகாரத்தை அடைந்தபோது அனைவருமே தங்கள் சாதிப்பெருமித வரலாறுகளை எழுதத் தலைப்பட்டனர். ஒவ்வொரு சாதிக்கும் வீரநாயகர்கள் கண்டெடுக்கப்பட்டு முன்னிறுத்தப்பட்டார்கள். அவர்களின் வரலாற்றை அப்படியே வரலாற்றில் ஏற்றுவது வரலாற்றையே பலவாறாக சிதைப்பது போன்றது. ஏனென்றால் ஒவ்வொரு சாதியின் வரலாறும் இன்னொன்றுக்கு முரணானது. அவற்றை அப்படியே எடுத்தால் ஒற்றை வரலாறாக இணைத்துக்கொள்ள முடியாது

நாட்டார்ப்பாடல்கள் முன்வைக்கும் நாட்டார் வரலாற்றை இணைவரலாறு என்று கொள்ளவேண்டும். வரலாறென்பது ஒற்றை உருவம் கொண்டது அல்ல என்று கொண்டால் அது இயல்வதுதான். இவை மாற்றுவரலாறுகள். இவை மைய ஓட்ட வரலாற்றிலிருக்கும் விளக்கமுடியாத புதிர்களையோ, அதிலிருக்கும் இடைவெளிகளையோ நிரப்புவதற்கு உதவியானவை. அதேபோல இவற்றை எங்கே பொருத்துவது என்பதை மைய ஓட்ட வரலாற்றின் காலச்சட்டகத்தைக்கொண்டு முடிவுசெய்யலாம். ஒன்றையொன்று முரண்பட்டும் நிரப்பியும் முன்செல்லும் இரு ஒழுக்குகளாக இவற்றைக்கொள்ளலாம்.

திரிவிக்ரமன் தம்பி

நாஞ்சில்நாட்டில் புகழ்பெற்றிருக்கும் ஒரு நாட்டார் கதைப்பாடல் வெங்கலராசன் கதை. வில்லுப்பாட்டு வடிவிலும் இது உள்ளது. இதை ஒரு நாட்டார்காவியம் என்று சொல்லலாம். தென்னாட்டின் நாட்டார்காவியங்களில் அளவிலும் வீச்சிலும் உலகுடையபெருமாள் காவியத்திற்கு அடுத்தபடியாக இதைச் சொல்லலாம்.[உலகுடைய பெருமாள் கதை ]

சோழநாட்டிலிருந்து பத்ரகாளியின் மைந்தர்களான ஒரு குடியினர் பாண்டிநாட்டை கடல்வழியும் கரைவழியும் கடந்து குமரிக்கடற்கரைக்கு வந்து சேர்கிறார்கள். அவர்களின் தலைவனின் பெயர் வெங்கலராஜன். நாஞ்சில்நாட்டிலுள்ள பறக்கை என்ற ஊரை அவர்கள் தங்கள் வாழ்விடமாக தெரிவுசெய்தனர். வெங்கலராஜன் அப்பகுதியின் அரசனாக ஆனார்

பறக்கை என்பது பக்ஷிராஜபுரம் என்று பெயர் பெற்ற வைணவத்தலம். அதன் தமிழ்ப்பெயர் பறவைக்கரசனூர்,அதன் சுருக்கமே பறக்கை. பறக்கை கோயிலில் வழிபடுவதற்காக வஞ்சிநாட்டை ஆட்சிசெய்த ராமவர்மா மகாராஜா வருகிறார். அவர் விழாவில் ஒர் அழகியைப் பார்க்கிறார். அவள் யாரென விசாரிக்கிறார். அவள் வெங்கலராஜனின் மகள் என்று தெரிகிறது

வெங்கலராஜனிடம் மகாராஜா ராமவர்மா அவர் மகளை அரசியென கேட்கிறார். குடிமாறி பெண்கொடுக்கச் சித்தமில்லாத வெங்கலராஜன் அதற்கு மறுக்கிறார். ராமவர்மா மகாராஜா கோபமடைந்து படைகொண்டு வருகிறார். வஞ்சிநாட்டின் பெரிய படையை எதிர்க்கும் படைபலம் வெங்கலராஜனிடம் இல்லை. ஆகவே அவர் தன் மகளின் கழுத்தை வெட்டி தலையை ஒரு தாம்பாளத்தில் வைத்து ராமவர்மாவுக்கு பரிசாக அளிக்கிறார். பறக்கையியிலிருந்து கிளம்பி நெல்லை சென்று பாண்டிய எல்லைக்குள் குரும்பூர் என்ற ஊரில் குடியேறிவிடுகிறார். அங்கே ஒரு சிறிய அரசை அவன் அமைக்கிறார்

இன்னொரு கதைப்பாடல் உள்ளது, அது வெங்கலவாசல் மன்னன் கதைப்பாட்டு எனப்படுகிறது. இதுவும் கிட்டத்தட்ட வெங்கலராஜன் கதைதான். ஆனால் கதை நடப்பது மணவாளக்குறிச்சி அருகே உள்ள படைநிலம் அல்லது படர்நிலம் என்ற ஊரில். அரசன் திருவிழா பார்க்க வருவது மண்டைக்காட்டு கோயிலில். ஒரு மகளுக்கு பதில் இரண்டு மகள்கள். தலைவெட்டி காணிக்கையாக்கவில்லை, இரு மகள்களையும் கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு தானும் கிணற்றில் குதிக்கிறார்

வெங்கலவாசல் மன்னன் கதை பிற்காலத்தையதாக இருக்கலாம். ஏனென்றால் மண்டைக்காடு ஆலயமே பிற்காலத்தையது. மேலும் கதையும் மிக எளிமையானதாக உள்ளது

வெங்கலராஜன் என்ற பெயர் அவருடைய இயற்பெயர் அல்ல. அந்த சிறுமன்னன் தன் மாளிகையில் வெண்கலத்தாலான பெரிய கதவை வைத்திருந்தார். ஆகவே அப்பெயர் பெற்றார். வெண்கலத்தாலான கோட்டை என்று அது புகழ்பெற்றது

தென் நாஞ்சில்நாட்டில் வந்து
சிறந்த வெங்கலக் கோட்டையிட்டு
வெங்கல கோட்டையதிலே
வீற்றிருக்கும் நாளையிலே
பங்கஜம்சேர் பூவுலகில்
பறக்கை நகரமானதிலே
மதுசூதனப்பெருமாளுக்கு
வருஷத்திருநாள் நடத்தி
பதிவாக தேரோடி
பத்தாம் நாள் ஆறாட்டும் நடத்தி

அ.கா பெருமாள்

என்னும் வகையில் ஒழுக்குள்ள நாட்டுப்புற பண்ணுடன் இப்பாடல் அமைந்திருக்கிறது. திரிவிக்ரமன் தம்பி பதிப்பித்த வெங்கலராஜன் கதையின் வடிவம் இது.

குமரிமாவட்ட நாட்டாரிலக்கியங்களை பதிப்பித்த முன்னோடியான ஆறுமுகப் பெருமாள் நாடார் “வலங்கை நூல் எனும் வெங்கலராசன் காவியம்” என்ற தலைப்பில் 1979 ஆம் ஆண்டில் வெங்கலராஜன் கதையை பதிப்பித்தார். இந்த பாடல் கிபி 1605ல் [ மலையாளக் கொல்லம் ஆண்டு 781] அகஸ்தீஸ்வரம் ஆறுமுகப் புலவர் என்பவரால் இயற்றப்பட்டது என்பதற்கான சான்று பாடலில் உள்ளது.

இந்நூல் நாடார் குலத்தவரைப் பற்றியது. நாடார்கள் இந்நூலில் வலங்கை உய்யக்கொண்டார்கள் என்று குறிப்பிடப்படுகிறார்கள். இவர்கள் சோழநாட்டில் இருந்து கிளம்பி தென்குமரி நாட்டுக்கு வந்த கதை பல்வேறு மகாபாரதப் புராணக்கதைகளுடன் கலந்து சொல்லப்படுகிறது. இவர்கள் கந்தம முனிவரிடமிருந்து தோன்றியவர்கள். வெவ்வேறு முனிவர்களின் கோத்திரங்களும் உள்ளே உள்ளன. குமரிமாவட்டத்திற்கு கதை வந்தபின்னர்தான் வரலாற்றுச்செய்திகள் துலக்கமடைகின்றன. பண்டைய திருவிதாங்கூரின் ஊர்களும் மரபுகளும் சொல்லப்படுகின்றன

[அ.கா.பெருமாள் அவர்களின் நூலில் இருந்து வெண்கலராஜனின் கதையை இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் விக்கியில் தட்டச்சி வலையேற்றம்செய்தேன்.அது முரசு அஞ்சல் எழுத்தில். யூனிகோடு மாற்றத்தில் இன்று அதில் ஆ என்ற எழுத்து காணாமலாகியிருக்கிறது. பார்க்க வெங்கலராஜன் கதை.]

வெங்கலராஜன் கதையின் வேறுசில வடிவங்களில் இன்னும் பெரிய ஒரு சித்திரம் உள்ளது. ஆய்வாளர் ராமச்சந்திரன் விரிவான கட்டுரை ஒன்றில் அதைச் சுட்டுகிறார். [வெங்கலராசன் கதையை முன்வைத்து ஓர் ஆய்வு. ராமச்சந்திரன்] 

ராமச்சந்திரன்

காந்தம ரிஷி வழிவந்தவர்களாளாகிய வலங்கை நாடார்கள் சோழநாட்டில் புட்டாபுரம் என்னும் ஊரில் ஆட்சி புரிந்து வருகின்றனர். சோழ அரசன் அவர்களிடம் காவேரிக்கு குறுக்காக ஓர் அணையைக்கட்ட ஆணையிடுகிறான். அதை ஏற்க அவர்கள் மறுக்கிறார்கள். போர்க்குடியினராகிய தாங்கள் எந்நிலையிலும் தலையில் மண்சுமக்க மாட்டோம் என்கிறார்கள்.

சோழனுடன் போர் வருகிறது. எழுநூற்றுவர் எனப் பெயர் பெற்ற வலங்கைத் தலைவர்கள் புட்டாபுரம் கோட்டையிலிருந்து இடம் பெயர்ந்து செல்கின்றனர். தொண்டைநாடுக்கு ஒரு கிளை செல்கிறது. ஒருகிளை இலங்கைக்குச் செல்கிறது. இலங்கைக்குச் சென்றவர்களின் இளம்பனைக்கா எனப்படும் இடத்துக்குச் சென்று கள்ளிறக்கும் தொழில் செய்து பெருஞ்செல்வர்கள் ஆகிறார்கள்.

அந்த குலத்தைச் சேர்ந்த வீரசோழ நாடான் என்பவன் ரசவாதம் கற்றுப் பொருள் சேர்த்து அதிகாரமும் செல்வாக்கும் பெறுகிறார். அவனுக்கு வெள்ளைக்காரனின் ஆதரவு கிடைக்கிறது. வீரசோழ நாடான் ‘சாணான் காசு’ எனப்படும் பொற்காசு அடித்துப் புழக்கத்தில் விடுகிறார். தனது உருவத்தைக் காசில் பொறித்து வெளியிடுமாறு வெள்ளைக்காரன் கேட்கிறான். வீரசோழ நாடான் மறுத்ததால் வெள்ளைக்காரன் வீரசோழ நாடானைக் கொன்று விடுகிறான். வீரசோழ நாடானின் மகன் வெங்கலராசன் எஞ்சிய குடும்ப உறுப்பினர்களுடன் தப்பி உயிர் பிழைத்துக் கப்பலேறித் தென் தமிழகக் கடற்கரைக்கு வருகிறார்.

வெங்கலராஜன் குமரிக்கருகிலுள்ள மணக்குடிக் காயலில் கரையிறங்கிச் சாமிக்காட்டு விளையில் வெண்கலக் கோட்டை கட்டி வாழ்கிறார். கம்மாளர் உதவியுடன் காசு அடித்து வெளியிடுகிறார். ஒரு முறை சுசீந்திரம் தேரோட்டம் காண அவருடைய இரு மகள்களும் சென்றிருந்த போது திருவிதாங்கோட்டு ராஜா ராமவர்மா அவர் மகளைக் கண்டு ஆசைப்பட பூசல் உருவாகிறது. அவர் தன் மகள்களை கொன்றுவிட்டு இடம்பெயர்கிறார்

அ.கா.பெருமாளின் மாணவரான தே.வே.ஜெகதீசன் வெங்கலராஜன் கதையின் சுவடியை கண்டு எடுத்து ஒப்பிட்டு விரிவான ஆய்வுக்குறிப்புகளுடன் தன் முனைவர்பட்ட ஏட்டை வெளியிட்டார். அது பின்னர் ’பத்ரகாளியின் புத்திரர்கள்’ என்றபேரில் தமிழினி வெளியீடாக வந்தது.

இந்தக்கதைகளை ஒட்டுமொத்தமாக புரிந்துகொள்ள பல வரலாற்றுச் செய்திகளை ஆராயவேண்டியிருக்கிறது. சோழநாட்டில் பதினொன்றாம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்கன் காலம் முதல் சாதிகள் நடுவே வலங்கை இடங்கைப்பூசல் நிகழ்ந்திருக்கிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்கன் காலகட்டத்தில் அது உச்சத்தை அடைந்து சோழப்பேரரசின் வீழ்ச்சிக்கே காரணமாகியது.

வலங்கை இடங்கைப் போர் என்பது சாதிகளின் தரநிலையில் உருவான மாற்றத்தால் எழுந்த பூசல் என்பது பொதுவான ஊகம். வலங்கையர் பொதுவாக போர்வீரர்கள், நிர்வாகிகள், வணிகர், நிலவுடைமையாளர். இடங்கையர் உழைப்பாளிகள்.ஆனால் இன்று கிடைக்கும் வலங்கை இடங்கை பட்டியல்களைக்கொண்டு எதையுமெ சொல்லிவிடவும் முடிவதில்லை.பறையர்கள் வலங்கையிலும் வேறுசில சாதிகள் இடங்கையிலும் இருக்கிறார்கள்.

சோழர் காலத்தில் பாசனம் பெருகி புதியநிலங்கள் வேளாண்மைக்கு வந்து, செல்வநிலைகளில் மாறுதல் ஏற்பட்டபோது பலசாதிகள் சாதிப்படிநிலைகளில் மேம்பட விரும்பின. தங்களை மேம்பட்டவர்களாக அறிவித்துக்கொண்டு உரிமைகோரின. அதை பழையசாதிகள் எதிர்த்தன. அதன்விளைவாக உருவான கலகங்களில் பலர் கொல்லப்பட்டு ஊர்கள் அழிக்கப்பட்டன. சோழர்படைகள் அந்த கலகங்களை மூர்க்கமாக அடக்கின. இச்சித்திரத்தை கே.கே.பிள்ளை விரிவாக எழுதியிருக்கிறார்.

அந்தச் சூழலையே வெங்கலராஜன் கதையின் தொடக்கம் காட்டுகிறது என்று தோன்றுகிறது. சாதிப்படிநிலை மாற்றத்தை விரும்பாமல் ஊரைவிட்டுச் சென்றவர்களின் வரலாறாக நாடார்களின் இடம்பெயர்வை அது சித்தரிக்கிறது. அவர்களில் ஈழத்துக்குச் சென்று செல்வம் சேர்த்து அங்கிருந்து திரும்பி நாஞ்சில்நாட்டுக்கு வந்திருக்கிறார்கள். ஈழத்தில் அவர்கள் ஓரிரு நூற்றாண்டுகள் இருந்திருக்கலாம். ஏனென்றால் அவர்கள் அங்கிருந்து மீண்டும் கிளம்ப வெள்ளைக்காரர்கள் காரணமாகிறார்கள்.

ஈழத்தில் இவர்கள் போர்ச்சுக்கீசியர்களின் ஆதரவுடன் இருந்திருக்கலாம். ஆனால் ஒருகட்டத்தில் இவர்கள்மேல் போர்ச்சுக்கீசியர் ஆதிக்கம் செலுத்த முற்பட்டபோது அதை எதிர்த்து அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்கள். நாணயத்தில் உருவம்பொறித்தல் என்பது ஆட்சிமேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளுதல் என்றே பொருள் தருகிறது

இவர்கள் குமரிநிலத்துக்கு வந்த காலகட்டம் பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதி அல்லது பதினாறாம் நூற்றாண்டாக இருக்கலாம். இக்காலப்பகுதி குமரிமாவட்ட வரலாற்றில் புகைமூட்டமானது. சோழர்களின் ஆதிக்கம் பதிமூன்றாம் நூற்றாண்டில் அழிந்தது. பதினேழாம்நூற்றாண்டில் திருவிதாங்கூர் அரசு மார்த்தாண்டவர்மாவால் வலுவாக நிறுவப்பட்டது. இவ்விரு காலகட்டங்களிலும் புதிய ஆதிக்கங்கள் உருவாக முடியாது. இந்த இடைக்காலகட்டத்தில் குமரிமாவட்டம் பல்வேறு ஆதிக்கங்களுக்கு ஆளாகி பல்வேறு ஆட்சியாளர்களால் ஆளப்பட்டு சிதறிக்கிடந்தது. மதுரைசுல்தான்களும் பின்னர் மதுரைநாயக்கர்களும் இங்குள்ள ஆட்சியாளர்களிடம் கப்பம் பெற்றனர்.உலகுடையபெருமாள் கதை போன்ற கதைகள் காட்டும் காலகட்டமும் இதுவே.

இவ்வண்ணம் நாடார் சாதியினரில் அரசர்கள் உருவாக அன்று வாய்ப்புண்டா என்னும் கேள்வி எழலாம். இந்தியாவின் அரசாதிக்கம் என்பது வரம்பில்லா முடியாட்சி அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். நாடு முழுக்க அரசனின் கட்டுப்பாட்டில் இருப்பதும், அரசப்படைகள் முழுநாட்டையும் காப்பதுமெல்லாம் 1729ல் மார்த்தாண்டவர்மா ஆட்சிக்கு வந்தபின்னர்தான் திருவிதாங்கூரில் நிகழ்கிறது. அது ஐரோப்பிய ஆட்சிமுறை. அதை உருவாக்க அவருக்கு அவருடைய  பெரியபடைத்தலைவனும் டச்சுக்காரனுமான பெனெடிக்ட் டி லென்னாய் உதவினார்.

அதற்கு முன்பும் , சோழர்கள் ஆட்சிக்காலத்திலும் எல்லாம் இங்கிருந்த ஆட்சிமுறை ஆதிக்கத்தின்மேல் ஆதிக்கம் என செல்வது. ஒரு நிலப்பகுதியை ஒரு குலம் கைப்பற்றி முற்றுரிமைகொண்டு வாழ்கிறது. அங்கே அவர்களின் தலைவர்கள் குறுஆட்சியாளர்களாக ஆள்கிறார்கள். அப்படி பல குறுஆட்சியாளர்களின் ஆட்சிக்குமேல் சிற்றரசர்களின் ஆதிக்கம் நிகழ்கிறது. இந்த குறுஆட்சியாளர்கள் மாடம்பிகள்,நாடுவாழிகள் என்று கேரளவரலாற்றில் பதினெட்டாம் நூற்றாண்டுவரைக்கும்கூட நீடித்தனர். மார்த்தாண்டவர்மாவும் கொச்சியில் சக்தன் தம்புரானும் ஈவிரக்கமில்லாமல் அவர்களை அழித்தே முற்றதிகாரத்தை கைப்பற்றினர்.

அன்று வேணாட்டில் [பண்டைய திருவிதாங்கூர்] பல சிற்றரசர்கள் இருந்தனர். அவர்கள் கூடி ஒரு பொதுப்புரிதலின் அடிப்படையில் அரசராக ஒருவரை ஏற்றனர். ஒவ்வொரு ஓணக்கொண்டாட்டத்திற்கு முன்னரும் அப்படி அரசரை ஓணக்காணிக்கை அளித்து, ஓணவில் படைத்து, அரசராக ஏற்றுக்கொள்ளும் சடங்கு உண்டு. அந்த ஓணவில்லை பத்மநாபபுரம் அரண்மனையில் இன்றும் காணலாம். ஆகவே பதினைந்து பதினாறாம்நூற்றாண்டுகளில் ஈழத்திலிருந்து செல்வதுடன் வந்து ஒரு நிலப்பகுதியை கைப்பற்றி அங்கே குறு ஆட்சியாளர்களாக நிலைகொள்வது முற்றிலும் இயல்வதே. அவர்கள் கொஞ்சம் படைபலமும் பணபலமும் இருந்தால் சிற்றரசர்களாக ஆவதும் நிகழக்கூடியதே.

எப்போதுமே சிற்றரசர், குறுஆட்சியாளர்களுடன் அரசருக்கு இருக்கும் உறவு முரண்பாடுகள் கொண்டதுதான். அவர்களை அணைத்துப்போய் கப்பம்பெற்றுக்கொள்ளவே அரசர் முயல்வார். எதிர்த்தால் படைகொண்டுவந்து அழிக்கவும் செய்வார். குறுஆட்சியாளர்களும் சிற்றரசர்களும் வேறு துணைவர்களை தேடிக்கொண்டால் அரசரை எதிர்த்து வெல்லவும்கூடும். சங்ககாலம் முதல் நமக்கு தொடர்ச்சியாக முடிகொண்ட மூவேந்தர்களும் சிறு-குறு ஆட்சியாளர்களும் நடத்திக்கொண்ட போர்களின் காட்சி காணக்கிடைக்கிறது. வெங்கலராஜனுக்கும் வேணாட்டு அரசருக்குமான போரும் அவ்வாறான ஒன்றே

இந்தப்போரிலும்கூட சங்ககாலத் தொடர்ச்சியை காண்கிறோம். அரசர்கள் சிறுகுடி அரசர்களின் பெண்களை கோருவதும் அவர்கள் மறுப்பதும் போர்நிகழ்வதும் புறநாநூறு முதல் காணக்கிடைக்கிறது. ‘மகடூஉ மறுத்தல்’ என்னும் துறையாக அது குறிப்பிடப்படுகிறது. அதுதான் இங்கும் நிகழ்கிறது. மகாபாரதம் முதல் இப்பூசல் காணக்கிடைக்கிறது. இது வெறுமே பெண்ணைபார்த்து ஆசைப்படுதல் அல்ல. ஓரு நிலப்பகுதியை கைப்பற்றி ஆட்சி செய்யும் செல்வாக்குள்ள சிற்றரசனின் மகளை அரசன் வலுக்கட்டாயமாக மணம்செய்துகொள்வது அவனுடன் குருதியுறவு கொள்வதுதான். அவனை மணவுறவின் வழியாக தன்னைவிட்டு விலகமுடியாதவனாக ஆக்கி தன் ஆட்சியதிகாரத்தை நிலைநாட்டுவது.

அதை பொதுவாக சிற்றரசர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அந்த புதிய அரசியின் படிநிலை ஒரு கேள்வி. வெறும் ஆசைநாயகி [கெட்டிலம்மை, பானைப்பிள்ளை என இவர்கள் சொல்லப்பட்டார்கள்] ஆக அவளை அரசர் வைப்பார் என்றால் அது பெண்கொடுத்தவனுக்கு புகழ் அளிக்காது, அதிகாரமாகவும் மாறாது. அவள் அரசியாக வேண்டும். அதில்தான் பூசல்கள் எழும், மற்ற குறுஆட்சியாளர்கள் ஏற்கமாட்டார்கள்.அப்படிப்பட்ட பூசலாக இது இருந்திருக்கலாம். வெங்கலராஜன் வேணாட்டு அரசனுக்கு தன் எதிர்ப்பை தெரிவித்துக்கொண்டு வரண்ட அரைபாலை நிலமான குரும்பூருக்கு செல்கிறார். குரும்பூர் -இத்தாமொழி வட்டாரம்தான் இன்றும் நாடார்களின் மையமாக உள்ளது.

வெங்கலராஜன் கதையில் மேலும் பலநுட்பங்களை ஆய்வாளர்கள் சுட்டுகிறார்கள். அவர்கள் ஈழநாட்டிலிருந்து வந்தார்கள் என்பது முக்கியமானது. பனையிலிருந்து பனைவெல்லம் எடுக்கும் முறையை அங்கே கற்று அங்கிருந்து இங்கே கொண்டுவந்தார்கள். பனைவெல்லம் காய்ச்சும் முறை கம்பொடியா முதலிய நாடுகளில் முன்பே தேர்ச்சியுடன் செய்யப்பட்டிருந்தது. ஆனால் தமிழ் இலக்கியங்களில் கரும்புவெல்லம் மட்டுமே குறிப்பிடப்படுகிறது. பனைவெல்லம் பேசப்படவில்லை. அதற்கு தமிழில் பெயரே இல்லை. பனைவெல்லம் அல்லது கருப்புகட்டி என்பது போடப்பட்ட காரணப்பெயர்தான்.

கருப்புகட்டி செய்யும் தொழில்நுட்பம் வெங்கலராஜன் வழியாக வந்து நாடார்களை செல்வந்தர்களாக ஆக்கியது. ரசவாதம் கற்றுத்தேர்ந்து இங்கே வந்தார்கள் என்ற நுட்பமும் முக்கியமானது. அது தங்கம் காய்ச்சுவதை குறிப்பிடவில்லை. போர்ச்சுக்கீசியர்களிடமிருந்து பெற்ற வேதியியல் அறிவையே சுட்டுகிறது. அக்காலகட்டத்துக்கு தேவையான சில வணிக அறிதல்களாக இருக்கலாம். நாடார்கள் அக்காலத்தில் ஈழவர்கள் என்று தென்தமிழ்நாட்டில் அறியப்பட்டதையும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்

பத்ரகாளியின் புத்திரர்கள் என நாடார்கள் தங்களை அழைத்துக்கொண்டனர். பனைத்தொழில் விரிந்தபோது பல்லாயிரம்பேரை தொழிலுக்காகச் சேர்த்துக்கொண்டனர். அவ்வாறு மேலும் பெருகினர். அவர்களின் கதையாக எப்படி இந்த நூலை வாசிக்கலாம் என்பதை தெ.வே.ஜெகதீசனின் நூல் விரிவாக விளக்குகிறது.

நாட்டார் வரலாற்றை உரியமுறையில் இணைத்துக்கொண்டு மையவரலாற்றை வாசிப்பதே இனிவரும் காலகட்டத்தில் வரலாற்றாசிரியர்களின் பணியாக இருக்கும். சார்புகள் இல்லாமல் அதைச்செய்வதும் எளியபணி அல்ல. தமிழக வரலாற்றில் பதிநான்காம் நூற்றாண்டு முதல் பதினாறாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டம் மிகமிகக்குழப்பமானது. சிறுசிறு அரசர்கள் தோன்றி மறைந்தனர். அதிகாரப்பூசல் உச்சத்திலிருந்தது. பொதுவாகவே படையெடுப்புகளின் காலம் இது. ஆங்கிலேயர் வருகையுடன் அந்த காலகட்டம் முடிவுற்றது. அந்த காலகட்டத்தைக் காட்டுவனவாகவே பெரும்பாலான நாட்டார் பாடல்கள் உள்ளன என்பது ஒரு நல்லூழ். அந்த சிக்கலான காலகட்டத்தை இப்பாடல்களின் சாராம்சமான செய்திகளைக்கொண்டு எப்படி புரிந்துகொள்வது என்பதே அறைகூவல்.

மன்னர்களின் சாதி

குமரி மாவட்டச் சான்றோர் சமூக வரலாற்றில் ஆராயப்பட வேண்டியவை

முந்தைய கட்டுரைஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு
அடுத்த கட்டுரைவெண்முரசு: ‘இமைக்கணத்தில் எழுந்த முழுமையின் துளி’