இந்த இவள் – கி. ரா- வாசிப்பனுபவம்

இந்த இவள் வாங்க

நாட்டிற்காக போரில் முன் நின்று போராடி, அரசியலில்  குதித்து மிதித்து முன்னேறி தலைவனாகி, நாலெழுத்து படித்து பட்டம் வாங்கி கலெக்டர் ஆகி என்று எதுவும் இல்லாமல், தனிமனிதர்கள் வாழ்க்கையில் ஐக்கியமாகி அவர்களின் இதயத்தில் குடிகொண்டுவிடும் நாயகிகள் உண்டு. அப்படிப்பட்ட நாயகிகளில் ஒருவரைத்தான், ‘இந்த இவள்’ குறு நாவலில்,  கி.ரா. நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

இந்த இவளின் பெயர் பூச்சம்மா. ‘வெறும் காது, வெறும் களுத்து, வெறும் கை, வெறும் கால், வெறும் வெத்து மனுசி. பார்க்கும்படியாக இருப்பது வெளேர் என்று இருக்கும் அவளுடைய மாட்டுப்பற்கள் மட்டுமே. தலைகொள்ளாத கருங்கூந்தல்.’  என கி.ரா. வரைவது சிறுவயதிலேயே கணவனை இழந்த, மத்திம வயதில் உள்ள இந்த இவளின் புறச்சித்திரம்.   நாயகியின் அந்தஸ்திற்கு இந்த இவளை உயர்த்துவது அவளது சமையலின் ருசியில், வயிறாரச் சாப்பிட வைக்கும் மனித நேசத்தில் , பூனைக்கு காட்டுப் பருத்திப் பஞ்சில் பாலை நனைத்து புகட்டுவதில், கன்றை ஈனும் மாட்டுக்கு சுகப் பிரவசம் பார்ப்பதில் வெளிப்படும் அகச்சித்திரம்.

கி.ரா. முற்போக்குச் சிந்தனையாளர். அவளின் நாயகியும் அப்படித்தானே இருப்பார். வெள்ளைச் சேலை வேண்டாம் என்று காவி சேலை கட்டுபவள். ஊரில் நல்லது கெட்டது என எந்த விசேஷத்திற்கும், அழைத்தாலும், அழைக்காவிட்டாலும், அவளே வந்திருந்து சமைத்துக்கொடுப்பாள். அரிசி சாதம், பருப்புக்கறி, தொடுகறி , ரசம் என்று விருந்து நடந்தாலும், அரிசி சாதமும், பருப்புக்கறியும் மட்டுமே சாப்பிட்டு வயிறாறும் மக்கள் உள்ள கிராமம். இரண்டாம் பந்தியிலும் சாப்பிடும் வயிறுகளையும்  ‘வெக்கப்படமா சாப்பிடுங்க’ என்று உபசரிக்கும் ‘இந்த இவள்’. நாக்கில் பட்டதுமே இந்த இவளின் சமையல் என்று சொல்லிவிடும் ஜனங்கள்.

அவளது  சமையல் ருசிக்கு காரணம், அவள் கைபடாத பச்சை பாம்பை பிடித்து உருவி விட்டுக்கொண்டாள் என்று பாட்டிமார்கள் நம்பினார்கள். கதையோடு கதையாக கி.ரா.  கிராமத்து  நம்பிக்கைகளை தெளித்துவிட்டுக்கொண்டே இருக்கிறார்.. “பருவத்திற்கு வந்த பெட்டை மாடுகள் பருத்தி மார்ப் படப்புகளில்ப் போய் உரசித்தான் சினை பிடிக்கின்றன என்று ஒரு நம்பிக்கை’ . தன் பாட்டனிடம்  நாட்டு வைத்தியம் கற்றுக்கொண்ட , இந்த இவள்,  ‘பெயர் சொல்லாத பச்சிலையை’ கையெடுத்து கும்பிட்டு பறித்துவந்து, ஈனுவதற்கு படாதபாடு பட்டுக்கொண்டிருக்கும் பசுவின் உடம்பின் மேல் தடவிக்கொண்டே போய், அதன் ‘அறை’யில் பக்குவமாகத் தேய்க்கிறாள். பசுவின் அறைவாயிலில், கன்றுக்குட்டியின் வெள்ளைக்குளம்புகள் தெரிகின்றன. இங்கும் கிராமத்து நம்பிக்கை ,  நிகழ்வோடு நிகழ்வாக வருகிறது. கைகளுக்குள் பச்சிலை இருக்கும்போது எதிரில் வருபவர்கள் பேசக்கூடாது.

மனிதம் நிறைந்த நாயகியே ஆனாலும், இந்த இவளும் மனுஷிதானெ?  தனிமை, காமம், தொடுசுகம் என்று எல்லாவற்றையும் கி.ரா. அவருக்கே உரிய நளினத்துடன் தொட்டுச் செல்கிறார்.  அவளிடம் இருந்த பிடி அளவுக் கல்லை கொட்டைப் பாக்கை தட்டி உடைக்க வாங்கிய ஒரு பாட்டி , பல கோணங்களில் பிடித்துப் பார்த்துவிட்டு மனசுக்குள் சிரித்துக்கொள்கிறாள்.

கதை சொல்லி கி.ரா-வுக்கு குறு நாவலே என்றாலும்,  சொல்வதற்கு  கிளைக்கதைகளும், குறுங்கதைகளும்  நிறையவே இருக்கின்றன.  வெறும் இனிப்பே தின்று கெட்ட குடும்பம் ஒன்று, பஞ்சத்தில் எல்லாம் இழந்து , அவர்கள் மூத்த பெண் வாழ்க்கைப் பட்ட ஊருக்குச் செல்கிறார்கள். அங்கே, அவள் இவர்களுக்குப் பிடிக்குமென்று கருப்பட்டித் தோசைகளையும், இனிப்புப் பணியாரங்களையும், பரிமாற, இவர்கள் நாக்குச் செத்துப் போச்சு காரம் வேண்டும் என்கிறார்கள்.

கோபல்லபுரத்து மக்கள் நாவலில் , கிராமத்தின் அங்கமாக வரும் மடம் இந்த இவளிலும் உண்டு. கிராமம் என்றால் நான்கு தெருக்கள் என்று ஸ்கெட்ச் போட்டுச் சொல்லும் கி.ரா, ஊரின் வடகிழக்கு மூலையில் மடம் இருக்கும் என பெரிய ஆட்கள் சொல்வதாக அவர்கள் பக்கம் கையைக் காட்டிவிடுகிறார். இந்த மடத்தில் மூக்குப்பொடி தாத்தா கொண்டுவரும் பொடிப் பட்டைக்கு காத்திருக்கும் கூட்டம் ஒன்று உண்டு. மூக்குக்குப் போடும் பொடி, முப்பத்திரெண்டு பற்களுக்கும் தேவையான பொடி தெரியும். மூக்குப்பொடி தாத்தா கொடுக்கும் பொடியில் சொல்வதற்கு கூச்சப்படவைக்கும் இன்னொரு  உபயோகத்தையும் நாவல் விளக்குகிறது.

மடத்தில் சிரிக்க சிரிக்க ‘பால் கதை’களும்  பரிமாறப்படுகின்றன. தனது 96 வயதிலும் சிறு நடுக்கமும் இல்லாமல் எழுதியிருக்கும் கி. ரா, சமுதாயத்தை சாடுவதிலும், இருக்கும் நம்பிக்கைகளின் மேல் கேள்வி கேட்பதிலும்  தனது பாணியை மாற்றிக்கொள்ளவே இல்லை. “சம்சாரிகள் வீடுகளில் நாலு அய்ந்து வெள்ளைச் சேலைக்காரிகள்  இருந்தால் கூலி வேலைக்கு ஆட்கள் மிச்சம்தானே. கலர்கலராய் சேலைகள் எடுக்க வேண்டாம்.” “பொதுவாக  மனுச சாதிக்குப் புத்தி கிடையாது; புத்தி இருந்ததில்லை. எப்பவும் இருந்திருந்தால்  அற நூல்கள் ஏன் இந்த அளவுக்கு ?”

இந்த நூலில் சில குறிப்பிடத்தக்க புதுமைகள் போகிற போக்கில்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கி.ரா. கையெழுத்து ஒரு பக்கம். மறு பக்கம் அச்சிட்ட எழுத்துக்கள் எனப் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அடித்தல் திருத்தல் இல்லாமல் இருக்கும் அவர் கையெழுத்துக்காகவே இந்தப் புத்தகத்தை வாங்கி கண்ணில் ஒத்திக்கொள்ளலாம். முன்னுரையாக வரவேண்டியது, நாவல் வாசிக்க வாசிக்க நடுவில்,  நடுவுரையாக வருகிறது.

உரையில் புதுவை  இளவேனில் பாபுவின் தூண்டுதலில், இந்த நாவலின் வடிவம் பிறந்த கதை சொல்கிறார். ஏன் பெண்ணைப் பற்றியே  எப்பொழுதும் எழுதத் தோன்றுகிறது என்று தன்னையே கேள்வி கேட்டுக்கொள்ளும் கி.ரா, காலில் கல் தடுக்கி  விழுந்தாலும் நாம் முதலில் சொல்வது ‘அம்மா’தானே, கடவுள் என்பதில், ‘ள்’ இருப்பதால் கடவுளும் பெண்தானெ என்று விடையையும் சொல்கிறார்.

– வ. சௌந்தரராஜன்

இந்த இவள்- எஸ்.ராமகிருஷ்ணன்

முந்தைய கட்டுரைவெண்முரசு செவியில்…
அடுத்த கட்டுரைமனு, கடிதம்