லீலை

இப்போதெல்லாம் பாதிநாட்களை ஈரட்டியில்தான் கழிக்கிறேன். ஒரே இடத்தில் இருப்பதன் சலிப்பு இல்லை. இயற்கையின் நடுவே இருப்பதன் நிறைவு. அதேசமயம் கொரோனாவிடமிருந்து முழுப் பாதுகாப்பு. ஈரட்டிப் பகுதியில் மக்கள்நடமாட்டமே குறைவு. அதிலும் நானிருக்கும் மாளிகையில் நான் மட்டும்தான்

வந்த முதல்நாளே நடக்கப்போனபோது ஒரு முனகல். அந்தக்காலத்திலெல்லாம் எங்கள் வெளியூர்ப் பாட்டிகள் எங்களை அவர்கள் ஊரில் கண்டால் அப்படித்தான் ஒருவகை ஒலியை எழுப்புவார்கள்.  “எனக்க மக்களே’ என்று அழைத்தபடி கைவிரித்து ஓடிவருவார்கள். அதைப்போல ஒரு அரற்றலுடன் நாலுகால் பாய்ச்சலில் ’கறுத்தம்மா’ ஒடிவந்தது. இங்கே அருண்மொழியும் குழந்தைகளும் தங்கியிருந்தபோது சைதன்யா போட்ட பெயர்

பிள்ளைகளை பலரும் தூக்கிப்போன நிலையில் மீண்டும் வேட்டையாடி உண்டு உடம்பைத்தேற்றிக்கொண்டு அரைக்காடுகளில் அலைந்துகொண்டிருந்தது. நான் வந்ததுமே வந்து வாசலில் இடம்போட்டுவிட்டது. அதன்பின் மொத்த வீட்டுக்கும் அவள்தான் பொறுப்பு. எவராவது வந்தால் உறுமி எச்சரிக்கை அளிக்கும். ஆனால் கடிப்பதெல்லாம் இல்லை. மனிதர்கள் நல்லவர்கள் என்று நம்பும் மனிதாபிமானியான நாய்

வந்துசேர்ந்ததுமே ‘மணம்’ பெற்று இளங்காதலன் ஒருவன் தேடி வந்தான். சற்று தொலைவிலேயே எச்சரிக்கை உறுமல். கறுத்தம்மா நல்ல கம்பீரமானவள். காதலன் சின்ன உருவம்கொண்டவன், நாட்டுவகை. ஆனாலும் ஆசை அச்சமறியாது. அங்கேயே நின்று வாலை குழைப்பது, உடல்வளைத்து நடனமிடுவது, பல்லைக்காட்டுவது என பலவகையான அசைவுகள் வழியாக ஒரு நடனம் ஆடினான்

மிகமெல்ல கறுத்தம்மா ஆவேசம் குறைந்து அருகே சென்றாள். அவன் அப்படியே படுத்துவிட்டான்.  ‘நின்னைச்சரணடைந்தேன்’ பாணி. அவனுடைய அடிவயிற்றை முகர்ந்து காதுகளையும் மோப்பம் எடுத்ததும் ‘பயல் பரவாயில்லை போலையே’ என்று ஒரு விதமான ஏற்பு. அவனை அப்படியே விட்டுவிட்டு வேறுபக்கம் திரும்பி படுத்துக்கொண்டாள்

வந்தவனுக்கு செவத்தான் என்று பெயரிட்டேன். ஒருவயதான கட்டிளங்காளை. நாய்களிலும் காளைகள் உண்டு. அவனுக்கு பெண்களை நல்ல அறிமுகம் இல்லை. வாலை ஆட்டியபடி ஓடிவந்து கறுத்தம்மாவின் அருகே நின்றான். அவள் சட்டென்று திரும்பி அப்போதுதான் அவனைப் பார்ப்பதுபோல சினந்து சீறி  பல்தெரிய ‘வள்ளிட்டு’ ஒரு கடி கொடுத்தாள். ’அய்யய்யோ’ என ஓர் அலறலுடன் அவன் ஓடி அப்பால் சென்று நின்றான்

கடுந்துயருடன் ஒற்றைமுன்காலை தூக்கியபடி நின்றான். கண்களை தாழ்த்தி தலையை தரைதொட வைத்துக்கொண்டு ‘என்ன தப்பு பண்ணினேன்?”என்று ஒரு பார்வை. பெண்மனம் இரங்கியது. ஆனால் திரும்பிப்பார்க்கவில்லை. வால் மட்டும் அன்பாக அசைந்தது. அதை நம்பி அருகணைய முடியுமா என பேதை ஆணுள்ளத்தின் பரிதவிப்பு

பின்னர் கறுத்தம்மாவே எழுந்து செவத்தான் அருகே சென்றாள். அப்படியே மல்லாந்து படித்து ‘இந்தா கொல்லு என்னை. வேணுமானா கொல்லு’ என்ற பாவனை காட்டினான்.  ‘சரி வந்து தொலை’ என்று கறுத்தம்மா திரும்பி வர அதற்குள், கணநேரத்தில் கணவனாக மாறிய செவத்தான் வாலை நீட்டிக்கொண்டு பாந்தமாக தொடர்ந்துவந்தான்

அதன்பின் இருவரும் வீட்டின் முகப்பில் இருமூலைகளிலாக அமர்ந்து காவல் காத்தனர். மனைவியிடம் கணவன் கிறிஸ்தவ முறைப்படி ‘தான் உண்ணாவிட்டாலும் அவளை ஊட்டுக’ முறைப்படி நடந்துகொண்டான். கறுத்தம்மா உண்டு நாக்கால் மோவாயை நக்கி அகன்றபின்னரே செவத்தான் உண்டான். பெரும்பாலான நேரங்களில் இருவரும் இருபக்கமும் அமர்ந்து கண்சொக்கி தூங்கினார்கள்.

எனக்கே சலிப்பாகப்போய்விட்டது. அப்படியென்றால் இந்த லீலைகள் எல்லாமே அணுகுவதற்காகத்தானா? அணுகியபின் ‘சரிதான் அதுகெடக்கு’ மனநிலைதானா? அடப்பாவமே.

ஆனால் இங்கே ஈரட்டியில் பயங்கரக் குளிர். ஊட்டி அளவுக்கே. காலையில் சூரியன் வரவே ஏழு ஏழரை ஆகும். வந்தபின் வேட்டிக்குள் விளக்குபோல பனிப்படலத்துக்கு அப்பால் தெரியும். இதமான வெயிலில் காய வந்து அமர்வது ஒரு நல்ல தியானப்பயிற்சி. ‘அகம் பிரம்மாஸ்மி’ என்பது ‘மயிரேபோச்சு’ என்ற மனநிலையின் நீட்சி என கண்டுகொண்டேன்.

இளவெயிலில் சட்டென்று ஒரு சிவசக்தி நடனம் தொடங்கியது. கணவனும் மனைவியும் கவ்வியும் துழன்றும் விளையாடினர். ஆயிரம்கோடிமுறை தழுவி ஆற்றொணாது மேலும் தழுவினர். பாய்ந்து மேலேறினர், விழுந்து கவ்விப்புரண்டனர், உறுமிக்கொண்டனர்.

ஓர் அற்புதமான பாலே நடனம் போல எழுந்து எழுந்து அமைந்தனர். முகங்களில் மெய்யாகவே அப்படியொரு சிரிப்பின் மலர்வு. வால்கள் சுழன்றபடியே இருந்தன. பாய்ந்தோடி துரத்திச்சென்று கவ்வி மீண்டுவந்து மேலும் தழுவி.

காமத்தில் உடலை என்ன செய்வதென்று தெரிவதில்லை. உடலே காமத்தின் நிலை, காமத்தின் ஊர்தி. ஆனால் உள்ளம் காமம் கொண்டபின் உடல் போதாமலாகிறது. அது சிறை, அதன் எல்லையைக் கடக்கமுடியாது. அதனூடாக உடலையன்றி பிறிதொன்றை  தொடர்புறுத்த முடியாது. ஒன்றாகும் பொருட்டு தழுவி ஒன்றாக முடியாது என்று உணர்தல். உண்டுவிட முயன்று கவ்வி உண்ணமுடியாது என்று உணர்தல். முத்தமென்பது துளித்துளியாக உண்ணுதலன்றி வேறென்ன.

இப்பால் நின்று பார்க்கையில் அது போர் போலவும் இருக்கிறது. வெல்லும் கொல்லும் முயற்சி என தோன்றுகிறது. கவ்வுதலும் தழுவுதலும் கொலைக்கென்றும் ஆகலாம். உயிர்களின் உடலுக்கு வேறு வாய்ப்புகளே இல்லை.

ஆனால் மானுடர் சலிப்பதுபோல விலங்குகள் சலிப்பதே இல்லை. அவை கொஞ்சிக்கொண்டே இருந்தன. வெயில் நன்கு மேலேறியது. மென்மையான வெப்பம் பரவியது, போர்வையை நீக்கலாம் என்ற அளவு. இரண்டு உயிர்களும் தங்கள் உடலை மீண்டும் சென்றடைந்தன. நாக்கை நீட்டி மூச்சிரைத்தபடி இரு திண்ணைகளிலுமாக விலகி அமர்ந்திருந்தன. தங்கள் வழியாக கடந்துசென்றதென்ன என்று அவை அறிந்திருக்கவேயில்லை.

பின்தொடரும் பிரம்மம்

ஊரென்றமைவன…

காடுசூழ் வாழ்வு

முந்தைய கட்டுரைஆ.மாதவன் கடிதங்கள்
அடுத்த கட்டுரைநாளை வரும் நிலவு