மனு ஒரு கடிதம்- அந்தியூர் மணி
இனிய ஜெயம்
அந்தியூர் மணி எழுதிய கட்டுரை மீது புதுவை வெண்முரசு கூடுகையின் முடிவில், சாலையில் நின்று பிரிய மனமின்றி தொடர்ந்த உரையாடலில் நண்பர்கள் கலந்துரையாடினோம். திருமாவளவன் மணி கட்டுரை குறித்து எனது பார்வையை கேட்டார். அப்போது நீலத்தின் மனநிலையில் இருந்து மீளாமல் இருந்தேன். வெறும் புன்னகையுடன் நிறுத்திக் கொண்டேன்.
மிக முக்கியமான கட்டுரை. ஒரு பக்கம் ஆபாச மனுவை கொளுத்து கோஷம், மறுபக்கம் ‘புனிதமான’ பாரத நிலத்தின், ‘புனிதமான’ இந்துமதத்தின், ‘புனிதமான’ சமய நூலான மனுஸ்ம்ருதியை கொளுத்துவோரை கொளுத்து கோஷ்டி. இந்த இரண்டிலிருந்தும் வெளியேறி மனு ஸ்ம்ருதியை இன்றைய தேதிக்கான ஆக்கப்பூர்வ உரையாடலை நோக்கி உங்களது பதிவும் அந்தியூர் மணியின் பதிவும் திருப்பிவிட்டது. உங்களுடையது தீசிஸ் அவருடையது ஆண்ட்டி தீசிஸ்.
இருப்பினும் மணி அவர்களின் கட்டுரையில் அவருடன் நான் முரண்படும் வகைமையை தொகுத்துதுப் பார்க்க முயல்கிறேன். உதாரணமாக அவரது வாதகதிக்கு துணை சேர்க்க ராஜன் குறை ஆய்வு குறித்து அவர் எழுதியது, இந்த வாதத்தின் வழிமுறையில் சரியே எனினும், மற்றொரு வகைமையில் ராஜன் குறையின் அந்த ஆய்வும் அது அவ்வாறு வெளியானமயும் ‘சரிதான்’ என்றொரு த்வனி வந்து விடுகிறது. அந்த ஆய்வு கொரானா வைரஸ் போன்றது. அது ஒளிந்தே கிடக்க வேண்டும். (விஷ்ணுபுரம் இனைய சந்திப்பில் ஆசிரியர் அ கா பெருமாள் அவர்கள், அது ஆய்வு உண்மையே எனினும், அதை எதன் பொருட்டு வெளியிட மாட்டேன் என்று சொல்லி இருப்பார். எந்த ஆய்வாளரும் நெஞ்சில் சுமக்க வேண்டிய சாசனம் அது.) அந்த விவாதமும் இந்த விவாதத்துடன் உதாரணம் சொல்ல தக்கது அல்ல.
அடுத்து மணி மார்க்சிய சமூகவியல் பார்வை என்பதை மார்க்சில் துவங்கி (முதல் கோணல் முற்றும் கோணல்) அவருடன் முடிந்து விட்டது என்பதாகவே நினைத்திருக்கிறார். அகத்திலிருந்து புறம் எனினும் புறத்திலிருந்து அகம் எனினும் ஆய்வுக்கு பயன்படுத்தும் கருவி சரியாக இருப்பின், முடிவும் சரியாகவே இருக்கும். உதாரணமாக இந்துத்துவர் ஜடாயு எழுதிய காலம்தோறும் நரசிங்கம் நூலில் நரசிங்கம் எனும் தொன்மம் தோன்றி வளர்ந்த வரலாற்றை சொல்லி இருப்பார். சிற்பமும் தொன்மமும் நூலில் மார்க்சியர் செந்தீ நடராஜன் அவர்கள் நரசிங்கம் எனும் சிற்பம் கொண்டு அந்த தொன்மத்தின் சமுகவியல் வரலாற்றை சொல்லி இருப்பார். இந்த இரண்டு நோக்குமே அகம் புறம் என்ற இரண்டு வெவ்வேறு இலக்குகளில் இருந்து கிளம்பி சரியான புள்ளியை தொடும். இரண்டு நூலுமே கிடைக்கிறது வாசித்துப் பார்க்கலாம். அதே நோக்குதான் சாதி. நிலவுடமை போன்ற இன்ன பிற விஷயங்களிலும். இவற்றை கோவை ஞானி எப்படி அணுகுவார், ராஜேந்திரசோழன் எவ்வாறு அணுகுவார் என்பதை வாசித்தறிந்தால், அவ்வளவு அவசரமாக டிஸ்மிஸ் செய்ய வேண்டிய இடத்தில் இந்திய மார்க்சிய சமுக வரலாற்று ஆய்வு முறை இல்லை என்பது தெரியவரும். ஜெயமோகன் மார்க்சிய ‘கருவி’ஐ சரியாக பயன்படுத்தி இருக்கிறாரா இல்லையா என்பதைத்தான் பதிவு பேசியிருக்க வேண்டும்.
இதற்கு மாற்றாக மணி தொழில்குழு சமுகத்தின் ஆய்வாக மனுவை பார்ப்பார் எனில் அப்படிப் பார்த்த தத்துவவாதிகள் வேறு எவர்? காரணம் தத்துவவாதியின் துணை கொண்டே நமது பார்வையை கூர்மை செய்து கொள்ள முடியும். உதாரணமாக பௌத்தம் மேலோங்கி இருந்த சூழலில் புலால் படைக்கும் கோவிலை சேர்ந்த பூசாரி என்ன ஆகி இருப்பார்? புலால் வணிகத்தை அடிப்படையாக கொண்ட குடிகளின் சமூக நிலை என்னவாக ஆகி இருக்கும்?
இவை போன்ற கேள்விகளை தத்துவ ஆசிரியர் ஆரம்பத்திலேயே உடைத்து நம்மை அடுத்த கேள்விக்கு நகர்த்துபவராக இருப்பார். பௌத்தம் வன்முறை மதமல்ல. அது கருத்தியல் மாற்றத்தையே முதன்மையாக கொண்டது. கோவில் எனும் பண்பாடே ஐந்தாம் நூற்றாண்டில் துவங்கி வளர்ந்த ஒன்று. மனு கிபி ஒன்று இல் துவங்கி அரங்குக்கு வந்து விட்டார். முப்புறமும் கடலால் சூழ்ந்த இந்தியாவில் அலைதிகழ் கரையெலாம் வாழ்ந்த மீனவ குடிகள் பௌத்த சமண மதங்களின் பெயரால் தொழில் விட்டு தாழ்ந்து போன நிலை அடைந்த சுவடுகள் எங்கும் இல்லை. இவை போன்ற விடைகளை அந்த தத்துவ ஆசிரியர் அளித்திருப்பார்.
இன்றிலிருந்து அன்றை விமர்சிக்க கூடாது. அன்று தனிமனிதன் என்பதே கிடையாது. இது அன்றைய சமுக அமைப்புக்கான நீதி. இன்றைய தனி மனித நீதியை அதற்க்கு உரைகல் எனக் கொள்ளக்கூடாது என்கிறார் மணி. தனிமனிதன் என்பதை ஐரோப்பாதான் கண்டு பிடித்தது என்பதை போல மணி முன்வைக்கிறார் . மனுவுக்கு முன்பே இங்கே தனி மனிதன் உண்டு. அவரே இந்தியாவின் முதல் சமுக சீர்திருத்தவாதி. அவர் பெயர் புத்தர். போதம் பகுத்தறிவு இதன் பாற்பட்ட தனிமனித விடுதலை. சமத்துவம் வழியிலான சமுக விடுதலை. இந்த அடிப்படை கூறுகளே பௌத்தம் நோக்கி ஆசிரியர் அம்பேத்கார் நகர காரணம்.
அன்று இருந்த பௌத்தம் அன்றிருந்த பார்வையிலும் இன்று பேசப்படும் இவற்றை சமூக கொடுமை என்றே காணும்.
மனு லட்சிய சமுதாயம் நோக்கிய கருத்து முதல்வாதி என்கிறார் மணி. எதிர்காலம் குறித்த தரிசனம் அற்றவர் எப்படி லட்சியவாதி ஆக முடியும்? வள்ளுவனில் தொழிற்படும் அறமும் தார்மீகமும்தான் மனுவில் இருக்கிறதா என்ன? மானுடம் மானுடர்கள் ஆகிய ‘நாம்’ என்ற எழுச்சி அதுவே வள்ளுவனின் சாரம். மனு எவர் ‘பிறன்’ அந்த பிறனை என்னவெல்லாம் செய்ய்யலாம் என்று பட்டியலிட்டுக் கொடுத்தவர். மனுவை கொஞ்சம் hardஆன வள்ளுவர் அவ்வளவுதான் என்பதை போல சித்தரிக்கிறார் மணி.
என்னளவில் இந்தப்பதிவு ஆசிரியர் அம்பேத்கார் எனக்களித்த பதிவில் தர்க்கமும் தார்மீகமும் கொண்டு உடைவை ஏற்படுத்துகிறதா என்று மட்டுமே பார்ப்பேன்.
ஆசிரியர் அம்பேத்கர் சொன்னவை,
இந்தோ ஆரிய சமுக மக்கள் ( இது பிரிவினை கூற்று அல்ல, இந்தோ ஆரியர் எனில் பண்டைய இந்தியாவின் அனைத்து மக்களும்தான், அல்லது திராவிடர் என்றாலும் பாரத மக்கள் எல்லோரும் திராவிடர்தான். இதுவும் அம்பேத்கார் ஆய்வு கூற்றே) அவர்களில் ரிக் வேதத்தை ஸ்ருதி என கொள்வோர், அதர்வண வேதத்தை ஸ்ருதி என கொள்வோர், தஸ்யுக்கள் இவர்களின் குமுகங்கள் முரண்பட்டும் முயங்கியும் உண்டானதுதான் மூன்று வர்ணம். (வர்ணங்களில் வேத சமூகத்தில் ஏற்ற தாழ்வு இல்லை) சத்ரிய நிலையை இழந்த குடி சூத்ர வர்ணம் பெறுகிறது. சூத்ரருக்கும் கீழான நிலைக்கு சென்றோர் அவர்ணர்.
புஷ்ய மித்ர சுங்கன் அரசு ஏற்கும்போது, அந்த பிராமணன் ஒரு பிராமணர் எதை எல்லாம் செய்யக் கூடாது என்று அன்று வழக்கிலிருந்த சாஸ்திரம் சொல்லியதோ, அனைத்தையும் செய்து அரசனாகிறான். முன்னர் அரசமதமாக இருந்த பௌத்தம் பின்வாங்கி, முதன் முறையாக பிராமண மதம் (பிராமண மதம் என்பது பிரம்மத்தை பின்னுக்குத் தள்ளி லௌகீகத்தை முன்னுக்கு கொண்டு வந்த பிராமணகுடிக்கு அம்பேத்கர் வழங்கும் பெயர்) அரச மதமாக மாறுகிறது.
வர்ண கடமையை தவறி அரசன் ஆனவன் என்ன செய்வான்? எந்தெந்த வர்ணங்களுக்கு என்னென்ன கடமைகள் என்பதைத்தானே முதலில் வகுப்பான்? அதையே புஷ்யமித்ர சுங்கனும் செய்தான். பொறுப்பை எடுத்து செய்தவர் சுமதி பார்கவர். இவரே புதியன புகுத்தி பழையன தள்ளி, மனு ஸ்ம்ருதியை மூன்றாம் முறை தொகுத்தவர். இவர் வைசியர்.
மனுவின் எல்லா பாசிட்டிவ் நெகட்டிவ் விஷயங்களையும் சீர்தூக்கி பார்த்த பின்பே ஆசிரியர் அம்பேத்கார் அதை நிராகரிக்கிறார். உதாரணமாக மனு பெண்களின் சொத்துரிமை குறித்து பேசியவற்றை கொண்டு அம்பேத்கார் ஆங்கிலேய சட்டத்துடன் வாதிட்டிருக்கிறார். சுதந்திரத்துக்கு பிறகான இந்து திருமண சட்டத்தில் குறிப்பிட்ட அளவு மனுவின் இருப்பும் உண்டு. இதையெல்லாம் செய்த அம்பேத்கார்தான் ரிக் வேத சமுகத்தில் பெண்களுக்கு இருந்த சமுக இடத்தை எந்த சமுக நியாயமும் இன்றி பார்கவர் பறித்ததை ஆய்வின் பின்னணி கொண்டு விளக்குகிறார். வேதம் உடன்கட்டை ஏற சொன்னதா என்ன? பெண் கல்வியை அது மறுத்ததா என்ன?
சாந்தோக்ய உபநிடத்தில் வரும் ஜானஸ்ருதி ஒரு வேத ஞானி. சூத்திரர் .பார்கவர் இந்த குலத்துக்கு வேதத்தை மறுக்கிறார். இப்படி ஒவ்வொரு வர்ணத்துக்கும் வேதம் அளித்த இடத்தையும், மனு அவற்றில் எதை எதையெல்லாம் எந்த நியாயமும் இன்றி பறித்தது என்பதை முன்வைக்கும் அம்பேத்கார் குறிப்பான அநீதி ஒன்றை சுட்டுகிறார். அடுத்தடுத்து பக்கவாட்டில் தொகுக்கப்பட்டிருந்த வேத சமுதாய குமுகங்கள் பின்னர் பிரமிட் போல அடுக்கதிகாரத்துக்கு மாற்றப்படுகின்றன. சூத்ர நிலையிலிருந்து வென்றெழுந்து சத்திரியர் ஆகும் அன்றைய சமுகத்தின் இயல்பான இயங்குவிசையை மனு ஸ்ம்ருதி இதன் வழியே அழித்தது. இயக்கமே நின்று போன சமுகத்தில் பஞ்சமருக்கு என்ன இடம்? (மனுவின் படி பிராமண ஸ்திரிக்கும் சூத்ரனுக்கும் பிறந்த குழந்தை பஞ்சமர்) மனு சொல்கிறார் இருட்டில் எவர் கண்ணிலும் படாமல் அம்மணமாக திரி, செத்த நாய் கறியை புசி, உடைந்த ஓட்டாஞ்சில்லு கொண்டு பிச்சை எடு. சுடுகாட்டில் வாழ்ந்து செத்துப் போ.
இதை வேதத்தின் பெயரால் பிராமண முதன்மையின் பெயரால், சுங்கன் வாள் கொண்டு இந்திய மக்கள் மேல் சுமத்திய சுமதி பார்கவர் இன்றல்ல என்றுமே கூட மானுட சமத்துவ விரோதியே. அவரை ஏற்புக்கும் மறுப்புக்கு இடையே வைத்து மதிப்பிட்டு ‘காப்பாற்ற’ அவரிடம் அதற்கான தார்மீகம் எதுவும் இருந்தால், அதையும் என் ஆசிரியர் அம்பேத்கார் அவர்களே செய்திருப்பார்.
கடலூர் சீனு
அன்புள்ள சீனு
நான் எதிர்பார்த்திருந்தது இந்தக் குரல். இதை நம் நண்பர்களில் எவரேனும் சொல்வார்கள் என நினைத்திருந்தேன். நானே பலமுறை சொன்னதுதான் இது
அ. மனுநீதியை ஆதரிப்பவர்கள் பல ஸ்மிருதிகள் இருந்திருக்கின்றன என்பதையும் அவற்றில் மனுஸ்மிருதி ஏன் முன்வைக்கப்பட்டது, எவ்வகையில் மேலானது என்றும் விளக்கவேண்டும். மனுஸ்மிருதி மேலும் கடுமையானது, நெகிழ்வற்றது. அது புனிதமானது என்றால் அதற்கு முந்தைய ஸ்மிருதிகள் புனிதமற்றவையா? முந்தைய ஸ்மிருதிகள் மாற்றப்படத்தக்கவை என்றால் ஏன் மனு அறுதியானதாக இருக்கவேண்டும்?
ஆ. மனுஸ்மிருதியே கூட புஷ்யமித்திரசுங்கன் காலகட்டத்தில் மறுஆக்கம் செய்யப்பட்டு அறுதியாக ஆக்கப்பட்டதுதான். மனுஸ்மிருதி புஷ்யமித்திரசுங்கன் காலகட்டத்தில் மறு ஆக்கம் செய்யப்பட்டபோதுதான் இன்று அதிலிருக்கும் இறுக்கமான நெறிகள் உள்ளே வந்தன. அவை ஒரு பேரரசின்பொருட்டு உருவாக்கப்பட்டவை. நடைமுறையில் வேதகாலம், உபநிடதகாலம் அளித்த உரிமைகளையும் மரபுகளையும் அவை ரத்துசெய்கின்றன. அந்த ரத்து புனிதமானது, அதற்கு முன்பு வேத – உபநிடதகாலம் வழங்கிய உரிமைகள் அநாச்சாரமானவை என்றா இவர்கள் சொல்கிறார்கள்?
இ. இந்தியாவில் அடுக்கதிகாரம் [hegemony] இல்லை என்பதெல்லாம் பேச்சுக்குச் சொல்பவையே ஒழிய உண்மை அல்ல. அப்படி நூல்களும் நடைமுறையும் காட்டவில்லை. அரசு அமைகையிலேயே அடுக்கதிகாரம் உருவாகிவிடும். பேரரசுகள் அவற்றை ஆழமாக நிலைநாட்டும். இந்தியாவில் மௌரியர் காலகட்டத்திலேயே பேரரசுகள் உருவாகிவிட்டன. மேல்கீழ் அடுக்கும் உருவாகிவிட்டிருந்தது. பக்கவாட்டு அடுக்கு என்பது வர்ணங்களுக்குள்தான். அதாவது வைசியர்களின் சாதிகளுக்குள் பக்கவாட்டு அடுக்கு உண்டு. அவர்கள் ஒட்டுமொத்தமாக சூத்திரர்களுக்கு மேலேதான்.
ஜெ