கும்பகோணம்

கும்பகோணத்தில் இருந்து சாமிதியாகராஜன் என்ற ஓய்வுபெற்ற கல்லூரிஆசிரியர்தான் என்னைத்தொடர்பு கொண்டார் அவரது மூவர் முதலிகள் முற்றம்என்ற அமைப்பு சார்பாக ஓர் கருத்தரங்கு நடத்த ஆர்வமிருப்பதாகச் சொன்னார்.பெயரைக் கேட்டதுமே முதலில் ஏதோ சாதியமைப்பு என்ற எண்ணம் ஏற்பட்டது.சைவக்குரவர் மூவரையும் அவரது வழிவந்தவர்களையும்தான் அந்தப்பெயர்சுட்டுகிறது என்றார்.

இந்தக்கருத்தரங்கின் நோக்கம் இன்றைய இந்துஞானமரபு எதிர்கொள்ளும் தத்துவப்பிரச்சினைகளைப் பற்றிய ஆய்வாக இருக்கலாம் என்று நான் சொன்னேன்.பொதுவாக இன்றைய இன்றியமையாத தேவை இந்த விவாதம்தான் என்பது என்எண்ணம். இந்துஞானமரபு சார்ந்த தத்துவ விவாதத்துக்கே இப்போது இடமில்லாமல்ஆகியிருக்கிறது. பொதுவாக எங்கும் நிகழ்வது பக்திச் சொற்பொழிவு மட்டுமே.பக்திக்கு ஆகிவந்த பேச்சுமுறை ஒன்று உண்டு. அதையே சலிக்காமல்சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்

இந்துஞானமரபை தத்துவ ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் ஆராய்வதற்கானகளமே இல்லை. இதற்குள் உள்ள பல்வேறு தரப்புகள் தங்கள் கருத்துக்களைபகிர்ந்துகொள்வதற்கே இன்று மேடையில்லை. மேலும் கடந்தஐம்பதாண்டுக்காலத்தில் இத்தளத்தில் என்ன நடந்திருக்கிறதென்பது இத்தளத்தின்தலைமூத்தவர்களுக்கு முற்றிலும் தெரியாமலும் உள்ளது. தங்கள் ஞானமரபுகறாரான தத்துவ வரலாற்று நோக்குடன் புறவய ஆய்வுக்கு ஆளாக்கப்படுவதும்மறுபரிசீலனை செய்யப்படுவதும் பழமையாளர்களுக்கு சிரமம் தரக்கூடும். ஆனால்அது இன்று நடந்தாகவேண்டியிருக்கிறது.

அத்தகைய மேடைகளை எங்காவது அமைக்க ஆரம்பித்தாகவேண்டியிருக்கிறது.ஆரம்பத்தில் சற்றே மோதல்களும் கருத்துப்பூசல்களும் இருந்தாலும் அத்தகைய ஒருதொகுப்பும் விவாதமும் இல்லாமல் இனி இந்து ஞான மரபு முன்னால் செல்லஇயலாது. ஆகவே இந்து ஞான மரபின் பொதுக்கூறுகள் என்ற தலைப்பில் பேசஒத்துக்கொண்டேன்.

இந்தத்தளத்தில் சிந்திக்கும் இளையதலைமுறையினரையும் மரபான முறையில்சிந்திக்கும் அமைப்புசார்ந்தவர்களையும் ஒரே மேடையில் உரையாடச்செய்தவேசாமிதியாகராஜன் அவர்களின் நோக்கமாக இருந்தது. தருமபுரம் ஆதீனம், மதுரைஆதீன, திருவாவடுதுறை ஆதீனம், கும்பகோணம் எஜமான் சுவாமிகள். கும்பகோணம்வீரசைவ மடம் ஆதீனம், குன்றக்குடி அடிகளார் போன்ற மரபார்ந்தசிந்தனையாளர்களையும் சங்கர்நாராயணன், அரவிந்தன் நீலகண்டன், நான் என புதியகோணத்தில் சிந்திப்பவர்களையும் அழைத்திருந்தார்கள்.

அரவிந்தன் நீலகண்டனும் நானும் நாகர்கோயிலில் இருந்து சென்ற 23-1-09வெள்ளிக்கிழமை மாலை ஏழுமணிக்கு பாண்டிச்சேரி செல்லும் பேருந்தில்கிளம்பினோம். அரவிந்தன் ஏராளமாகப் படிக்கக் கூடியவர். நாகர்கோயிலிலேயேஇருந்தாலும் பொதுவாக நாங்கள் சந்திப்பது மிகக் குறைவு. சந்தித்தாலும் அவர்படித்த நூல்களைப்பற்றித்தான் அதிகம் கேட்பேன்ஒன்பது மணிவரைபேசிக்கொண்டிருந்தாலும் எனக்கு முந்தியநாள் தூக்கக் களைப்பால் மேலேவிழித்திருக்க முடியவில்லை. நான் ஆற்றவேண்டிய சொற்பொழிவை ஒரே இரவில்எழுதி அன்று விடிகாலை முடித்துவிட்டு அலுவலகம் சென்றிருந்தேன்.

அதிகாலை கும்பகோணம் வந்தோம். ராய மகால் என்ற கல்யாண மண்டபத்தில்கருத்தரங்கு. அங்குதான் தங்குமிடமும். விடிகாலையில்சென்று வாட்ச் மேனைஎழுப்பினோம். அவர் வாட்ச்மேன்களுக்கு மட்டுமே காணக்கிடைக்கும்பொறுப்பின்மையுடன் பதில் சொன்னார். தொலைபேசியில் எங்களை வரவேற்கவரவிருந்த நண்பரைத் தொடர்பு கொண்டேன். அவர் வந்து எங்களுக்கு அறை ஏற்பாடுசெய்து தந்தார். நல்ல அறைதான்.

நான் படுத்ததுமே தூங்கிவிட்டேன். அரவிந்தன் அவர் தூங்கவில்லை என்றார்.கும்பகோணம் பெரிய கொசுக்களுக்காக புகழ்பெற்றது என்பதை இரவெல்லாம்உணர்ந்ததாகச் சொன்னார். காலையில் நான் எழுந்து குளித்து வந்ததும் சங்கரநாராயணனையும் சேதுபதி அருணாச்சலத்தையும் பார்த்தேன். சேதுபதிஅருணாச்சலம் நான் நினைத்ததற்கு மாறாக இளமையாக இருந்தார். நண்பர்சுகாவுடன் [சுரேஷ் கண்ணன்] இப்போது இசை வழியாக மிக மிக நெருங்கியிருந்தார்.தொலைபேசியில் இப்போதெல்லாம் தினமும் இரண்டுமுறை சேது சொல்றான்…’என்று சுகா சொல்கிறார்.

மாநாடு பத்துமணிக்கே ஆரம்பித்தது. மதுரை ஆதீனம் தலைமைப்பேருரை.வெட்டுக்கிளிப்பேருரை என்ற ஒன்று உண்டு. நுனிப்புல் மேய்வதாவது சரி, மேய்தல்இருக்கிறது. இது நுனிப்புல் மீது கண்டபடி தத்தித்தத்தி அலைவது. எஜமான் சுவாமிகள்அளவாகவும் சிப்பாகவும் பேசினார்கள்.நான் பேச வரும்போது மதியம் ஒரு மணி. ”என்னுடைய பேச்சுக்கு யாரும் கைதட்டவேண்டாம். நாம் கைதட்டல் பேச்சுகளைக் கேட்டே பழகிவிட்டோம். நம்பேச்சாளர்கள் பெரும்பாலும் ஆழமில்லாத நகைச்சுவைகளைப் பேசி அதையே மக்கள்விரும்புகிறார்கள் என்று காரணமும் சொல்கிறார்கள். ஆகவே சீரிய விஷயங்களைக்கேட்கும் வழக்கமே நம்மவரிடம் இல்லாமல் ஆகியிருக்கிறது. இங்கே நான் சிலவிஷயங்களைச் சொல்ல வந்திருக்கிறேன்உங்களை மகிழ்விப்பதற்காக அல்லஎன்று திட்டவட்டமாகச் சொன்னபின் பேச்சைஆரம்பித்தேன்.

மதியம் தாண்டி அரவிந்தனும் சங்கர நாராயணனும் பேசினார்கள். அண்ணாமலைப்பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமாரசாமி, குன்றக்குடி ஆதீனம்,திருவாவடுதுறை ஆதீனம் ஆகியோர் வரவில்லை. சேக்கிழார் அடிப்பொடி டி என்ராமச்சந்திரன் பேசினார். அதன் பின் தருமபுரம் ஆதீனம் பேருரையாற்றினார்.முதுமையால் அவருக்கு நேரக்கட்டுப்பாடு மறந்துவிட்டது. ஆனால் அவர்சொன்னவை எல்லாமே அவரது ஆழ்ந்த புலமையையும் நடுநிலைமையையும்காட்டுவதாக இருந்தது.

ஒன்பது மணிக்கு விழா முடிந்தது. அதன்பின் நானும் அரவிந்தனும் சேதுவும் சங்கரநாராயணனும் சாப்பிடச்சென்றோம். அவர்கள் மீனாட்சி மெஸ்ஸில் சாப்பிட நான்கும்பகோணத்தில் அலைந்து வாழைபழக்கடையைக் கண்டடைந்து இரவுணவுக்குப்பழங்கள் வாங்கிக் கொண்டேன்.

மறுநாள் காலையில் ஒரு கார் ஏற்பாடு செய்திருந்தோம். ஐந்தேமுக்காலுக்கு என்னைசேது தொலைபேசியில் கூப்பிட்டு எழுப்பிவிட்டார். ஆனால் கிளம்புபோது ஏழுமணிஆகிவிட்டது. நேராக தாராசுரம் சென்றோம். தாராசுரத்துக்கு நான் வருவது அதுமூன்றாவது தடவை. முதல்முறை 1987ல் நான் தனித்த பயணியாக வந்தேன்.அப்போது அது ஒரு சிறுகிராமமாக கைவிடப்பட்டு கிடந்தது. இடிபாடுகளாகக் கோயில்திறந்து கிடக்க உள்ளேயும் வெளியேயும் யாருமே இல்லை. நானேமொட்டைவெயிலில் அலைந்து கோயிலைப்பார்த்துவிட்டு கிளம்பினேன். பேருந்துவசதியும் இல்லை. கும்பகோணம்வரை நடந்தே சென்றேன்.

பின்னர் 1997ல் விஷ்ணுபுரம் பிரசுரமாக இருந்தபோது கும்பகோணம் வந்தேன்.அப்போது அகரம் கதிர் கும்பகோணத்தில் இருந்தார். அன்று தாராசுரத்தில் பெரியஅளவில் மறுசீரமைப்பு வேலைகள் நடந்துகொண்டிருந்தன. சிற்பிகள்வேலைசெய்துகொண்டிருந்த உளிச்சத்தம் கிளிச்சத்தம்போலக்கேட்டுக்கொண்டிருந்தது. யுனெஸ்கோவின் நிதியுதவியுடன் கோயில்பராமரிக்கப்படுவதாகவும் யுனெஸ்கோ கோயிலை ஏற்றுக்கொள்ளப்போவதாகவும்சொன்னார்கள்.


இப்போது
கோயில் நன்றாகவே இருக்கிறது. சுற்றுலாப்பயணிகள் நிறையவேவருகிறார்கள். ஆகவே சுற்றுமுள்ள கிராமமும் அபிவிருத்தி அடைந்திருக்கிறது.காலைநேரம் அந்தப் பெரிய கோயிலுக்குள் நுழைந்தது மனதுக்கு மிகவும்பிடித்திருந்தது. தமிழகத்தில் மணல்கல்லால் கட்டப்பட்ட அபூர்வமான சிலகோயில்களுள் ஒன்று இது. காலைமாலை செவ்வொளியில் பொன்னிறமாக அதன்மகுடங்கள் மின்னும். மணல்கல் சிற்பங்களை நுட்பமாகச் செதுக்குவதற்கு மிகவும்உகந்தது. ஆனால் கருங்கல்லின் வழவழப்பு அதில் வருவதில்லை. காலத்திற்குஈடுகொடுப்பதும் இல்லை.

தாராசுரத்தில் கோயில்கொண்ட சிவன் ஐராவதேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.பன்னிரண்டாம் நூற்றாண்டில் இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டதுஇந்தப்பேராலயம். தஞ்சை பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரம் ஆலயம்,இக்கோயில் ஆகிய மூன்றும் ஒரு சிற்பப்பொற்காலத்தின் மூன்று சாதனைகள்.கட்டிடக்கலை, சிற்பநுட்பங்கள் போன்றவற்றில் பொதுகூறுகள் பல உண்டு என்றுஆய்வாளர்கள் சொல்கிறார்கள். பழையாறை, நந்திபுரம் என்றெல்லாம் இவ்வூருக்குப்பெயர் உண்டு. ராஜராஜன் பெயரால் ராஜராஜேஸ்வரம். பேச்சுவழக்கில் இது தாராசுரம்என்று ஆகியிருக்கிறது.

தாராசுரம் ஒருநாள் முழுக்க இருந்து பார்க்கவேண்டிய அபூர்வமான சிற்பங்கள்கொண்ட ஆலயம். இரண்டாள் உயரமான அடித்தளம் மீது அமைந்திருக்கிறதுகோயில். அந்த அடித்தளம் முழுக்க சிற்பங்கள்தான். கோயிலை குதிரைகள் இழுக்கும்தேர்போல சக்கரங்களுடன் அமைத்திருக்கிறார்கள். இந்த அமைப்பின் பேருருவத்தைகொனாரக்கில் காணலாம். ஸௌரமதத்தில் இருந்து இந்த கருத்து வந்திருக்கலாம்.படிகளின் இருபக்கமும் யானைகள் அமைந்திருக்கின்றன .யானைகளும்குதிரைகளும் இணைந்து கோயிலை இழுப்பதுபோன்ற ஒரு சித்திரம் உருவாகிறது.

சிலைகளை நோக்கியபடி, இந்திய மரபின் பல்வேறு தத்துவங்களை விவாதித்தபடிஅந்த மாபெரும் கோயிலைச் சுற்றிவந்தோம். கோயில் முகப்பில் உள்ள நந்தி சிலைதமிழகத்தின் சிறந்த பெரிய நந்தி சிலைகளில் ஒன்று. ஓரளவுக்கு காகதீய நந்திகளைநினைவுறுத்துவது. தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், அர்த்த நாரீச்வரர் சிலைகள் மிகஅழகானவை. சிலைகளை மட்டும் பளபளப்பான கருங்கல்லால்அமைத்திருக்கிறார்கள். மதுரையில் இருக்கும் அஹோர வீரபத்ரரை நினைவுறுத்தும்ஆக்ரோஷமான சிலை ஒன்று சுவரில் இருந்தது. அர்த்த நாரீஸ்வரர் சிலைகளில்இதேபோல பலகைகளுடன் சமபங்கநிலையில் நேரக நிற்கும் சிற்பங்கள்அபூர்வமானவை. அர்த்தநாரீஸ்வரரின் அமைப்பு சூரியர் சிலையை நினைவூட்டியது.

மணல்கல்லால் ஆன தூண்களில் அதிகமான விடுபட்டுநிற்கும் [முக்த] சிலைகளைச்செய்யமுடியாதென்பதனால் நுட்பமான செதுக்குவேலைகளுடன் ஓவியம்போன்றபுடைப்புச் சிற்பங்களை உருவாக்கியிருக்கிறார்கள். நடனமிடும் பெண்களின்அதிவேகச்சுழற்சியை ஒன்றுமீது ஒன்று படர்ந்த சிற்பங்களாக படைத்திருப்பதைஒருவகை காட்சிக்கலை என்றே சொல்லவேண்டும். காலையில் கல்லில் இருந்துகுளுமை இன்னமும் விலகாத நிலையில் மண்டபங்களாகவும் பிராகாரங்களாகவும்பெருகிச் சூழ்ந்திருக்கும் கோயிலுக்குள் நடப்பது ஓர் அபூர்வமான அனுபவமாகஇருந்தது.

அங்கிருந்து திருவலஞ்சுழி சென்றோம். திருவலஞ்சுழிக்கு நான் ஒருமுறைதான்சென்றிருக்கிறேன். எண்பத்தேழில். அன்று அது பாழடைந்து கிடந்ததாக நினைவு.இப்போது புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மொத்த கோயிலுக்கு மேலும் ஒருபாலிஸ்டர் லுங்கியை போர்த்திவிடதுபோல அசிங்கமாக ஆசியன் பெயிண்டைஅடித்திருக்கிறார்கள். கோபுரத்துப் பூதகணங்கள் வடிவேலு பாணியில் கோடுபோட்டஅண்டர்வேர் அணிந்திருப்பதாக வரைந்த மேதையை என்ன செய்வதென்றேதெரியவில்லை.

கற்பகநாதர் என்றும் கபர்தீஸ்வரர் என்றும் அழைக்கபடுகிறார் இங்குள்ள சிவன்.ஜடாதரநாதர் என்றும் பெயர் உண்டு. தாயார் பெயர் பெரிய்நாயகி. இங்குள்ள ஸ்வேதவினாயகர் என்ற வெள்ளைப்பிள்ளையார் அபூர்வமான ஏதோ கல்லால் ஆனவர் என்றுசொல்லப்படுகிறது. அவருக்கு அபிஷேகம் கிடையாது. புனுகு மட்டுமேசார்த்துவார்கள். திருவலஞ்சுழியில் அதிகமாக பக்தர்கள் இந்த பிள்ளையாருக்குத்தான்வருகிறார்கள். அத்துடன் நுழைவாயிலில் உள்ள காளி கோயிலுக்கும் நிறையபக்தர்கள் வருகிறார்கள். அந்தப்புராதனமான காளிகோயில் சோழமன்னன்

ராஜாதிராஜனால் போருக்குப்போகும் முன் வழிபடப்பட்டது என்றுசொல்லப்படுகிறது. கோயில்குளம் நாறிப்போய்க் கிடந்தது.

மதியம் கோயில் மூடியபோது கிளம்பி கும்பகோணத்துக்கே வந்தோம். ஆரியபவனில்சாப்பிட்டுவிட்டு மீண்டும் கிளம்பி கங்கைகொண்டசோழபுரம் சென்றோம்.கங்கைகொண்ட சோழபுரத்துக்கு நான் பலமுறை வந்திருக்கிறேன். கடைசியாகவந்தது சென்ற வருடன் சிதம்பரம் நாட்டியாஞ்சலிக்கு சிதம்பரம் வந்தபோது.அப்போது கிருஷ்ணனும் கல்பற்றா நாராயணனும் கூட இருந்தார்கள். கார் ஊருக்குள்சென்றதும் தெரியும் கோபுரம் சற்று சிறிதாக நம் பார்வைக்குப் படும். அருகே சென்றுநின்றால் கோயிலின் அடித்தளமே பல ஆள் உயரத்துக்கு தலைக்குமேல்சென்றுவிடும். கோயில் கோபுரம் மிக உயரத்தில் எங்கோ இருக்கும். கிட்டத்தட்டதஞ்சை பெரிய கோயிலின் பாணியில் அமைக்கப்பட்ட கோயில் இது.

கங்கைகொண்ட சோழபுரம் முதலாம் ராஜேந்திரசோழனால் பதினொன்றாம்நூற்றாண்டில் கட்டப்பட்டது. பெரும்புகழ்பெற்ற ராஜராஜசோழனின் மகன் அவர்.உண்மையில் ராஜராஜசோழனின் களவெற்றிகள் அனைத்தும் மாபெரும்போர்வீரரும்தளபதியுமான ராஜேந்திர சோழனால் அடையப்பெற்றவை. வடநாடுகளை வென்றுகங்கை நீரைக் கொண்டு வந்து இந்த ஊரில் கங்கைகொண்ட சோழீச்சரம் என்றஏரியை அமைத்தார் என்று வரலாறு. தன் தலைமையிடத்தை இங்கே புதிதாகஉருவாக்கிய நகரான கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றினார். ஆனால் பின்னர்கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டமையால் மீண்டும் தஞ்சைக்கே தலைநகர்மாற்றப்பட்டது.

தஞ்சைகோயிலைப்போலவே பிரம்மாண்டமான மதிலால் சூழப்பட்டதுஇந்தக்கோயில். உள்ளே விரிந்த திறந்தவெளிக்கு நடுவே ஓங்கிய கோபுரத்துடன்ஆலயம். கோபுரத்தை சமீப காலத்தில் கஜூராஹோ கோயில்களை பாத்த நினைவுஉடனே அவ்ந்து தீண்டியது. கோபுரத்தின் கோடுகள் நேர்கோடாக இல்லாமல்வளைந்து சென்று முகட்டைத்தொடுவதே கஜிராஹோ கோயில்களைநினைவுபடுத்தியது. மஞ்சள்நிற மணல்கல்லால் ஆன இக்கோயிலும் மாலையின்பொன்னொளியில் பார்க்கப்பட

வேண்டியதுதான்.

கோயிலின் புறச்சுவர்களில் தனித்தனிக் கோட்டங்களில் உள்ள ஒவ்வொரு சிலையும்ஒரு பெரும் கலைபப்டைப்பு. கஜலட்சுமி, நடராஜர், மாதொருபாகர் சிலைகளில் உள்ளதெய்வீகப்புன்னகை பெரும் கலைஞனின் கயால் மட்டுமே உருவாகக் கூடியது.கோயிலின் நுழைவுப்பகுதியில் உள்ள பெரும் சிலை ஒன்று உலகப்புகழ்பெற்றது.சண்டேசுவரருக்கு அருளும் சிவகாமசுந்தரனின் சிலையைப்பற்றி இந்தியக் கலைவிமரிசகர்கள் அனேகமாக அனைவருமே எழுதியிருக்கிறார்கள். சிவனின் உடல்தசைநார்கள் இல்லாமலேயே ஆண்மை ததும்ப செதுக்கப்பட்டிருக்கிறது. அருகேஇன்னமும் சிறுமியான அம்மை. இறைவனின் முகத்தில் உள்ள அந்தப் புன்னகைசோழர்காலச் சிலைகளுக்கே உரிய சிறப்பு.

கோயிலுக்குள் துவாரபாலகர்கள் மிகப்பெரியவர்கள். பூதவடிவம். உள்ளே லிங்கமும்பிரம்மாண்டமானதுதான். உள்ளிருந்து பார்க்கையில் வெளியே இருக்கும் பெரியநந்தியின் தலை வாசல் வழியாகத்தெரிவது ஓர் அபூர்வமான காட்சி.

கோயிலைவிட்டு மாலை இருள ஆரம்பித்த பின்னர்தான் வெளியே வந்தோம்.செருப்பு போடும் கடையில் கிழக்கு பதிப்பக நூல்கள் தொங்கின. ஒரு நூல் கவிஞர்அய்யப்பன் எழுதியது. புரட்சிப்பாக்கள். அவரே போட்டு கிழக்கு பதிப்பக பையில்செருகியிருந்தார். அய்யப்பன் உள்ளூர்காரர் போலும் என்றேன். அவருக்கு உள்ளூரில்என்ன வகையான அடையாளம் இருக்கும் என்று வேடிக்கையாகப்பேசிக்கோண்டோம். திரும்பும்போது சேதுபதி சொன்னார், அங்கே இருந்தவர்தான்அய்யப்பன். அவரது படம்தான் நூலில் இருந்தது என்று. உண்மையில் அது ஒருஅதிருஷ்டம்.நாம் செத்தபின் நம்மைப்பற்றி பிறர் சொல்வதை நாமே கேட்பது போல

கங்கைகொண்ட சோழனின் அரண்மனை இருந்த அரண்மனைமேட்டைசென்றுபார்த்தோம். செங்கல்லால் ஆன ஓர் அடித்தளம் அது. பண்டையஅரண்மனைகளைப்போல அதுவும் மரத்தால் ஆனதாக இருந்திருக்கலாம்.வரலாற்றின் கலட்சிச்சுவடு போல.

அந்தியில் கிளம்பி கும்பகோணம் வந்தோம். எனக்கு இரவில் நாகர்கோயிலுக்குப்பேருந்து. படுக்கை வசதி உள்ள பேருந்து. படுத்ததுமே பூமி கீழே நழுவிச்செல்வதன்தலைசுற்றல். உடனே தூக்கம். காலைமீண்டும் நாகர்கோயில். மீண்டும் வீடு.http://photogallery.webdunia.com/tamil/inner.aspx?GalleryID=464

http://svprsk.blogspot.com/2008/12/blog-post.html

http://www.poetryinstone.in/lang/ta/tag/darasuram

http://www.shivatemples.com/sofct/sct025.html

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

http://blog.arutperungo.com/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

புகைப்படங்கள்

http://picasaweb.google.com/sethupathi.arunachalam/MoovarMuthaliMutram?authkey=3uvLwWyJDPs#
http://www.flickr.com/photos/sethuarun/sets/72157613110634332/
http://picasaweb.google.com/sethupathi.arunachalam/DharasuramJan09?authkey=dkafqEC92A0#

முந்தைய கட்டுரைவிலக்கப்பட்டவர்கள்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைமதுரை ஆதீனம்