அறிவுச்செயல்பாடும் தமிழக உளநிலையும்
வணக்கம் சார்,
நலமாக இருக்கிறீர்களா?
2008ல் முதுகலை ஆங்கில இலக்கியம் சேர்ந்த நாளில் இருந்து புத்தக வாசிப்பு இல்லாமல் அன்றாட வாழ்க்கை இல்லை என்றாகி விட்டது.
நான் 2011ல் இருந்து உங்கள் தளத்தை வாசிக்கிறேன்.
என்னுடைய நண்பர்கள் மற்றவர்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைக்கும் போது “பய நிறைய book லாம் படிப்பான்” என்கிற ரீதியில் தான் இருக்கும்.
இதில் பலருக்கும் புத்தகம் படிப்பது ஏதோ நல்ல விசயம் தான் ஆனா என்னால முடியாது என்கிற வகை தான். பெரும்பாலான மாணவர்களுக்கு என் மீது பெரிய மரியாதை உண்டு. நான் தல, தளபதி ரசிகன் என்று அவர்கள் முன்னால் சென்று நின்றால் நிச்சியம் அந்த மரியாதை கிடைக்காது.
சொந்த பந்தங்கள் கொஞ்சம் “book படிக்கிறது எல்லாம் குறை” என்று தான் பேசுவார்கள். அவர்களின் பிள்ளைகள் பிறந்த நாளுக்கு எஸ். ரா எழுதிய சிறார் நாவலை பரிசாக கொடுத்து அவர்கள் மேல் ஒரு இடியை இறக்கி வைப்பது என் style.
வேலை செய்யும் இடத்தில் புத்தகம் வாசிக்க முடியுமா என்றால் சாத்தியம் இல்லை என்றே சொல்வேன். Staff Room ல் பெண் பேராசிரியர்கள் பேசிக்கொள்ளும் விஷயங்கள் அற்பமானவை. Canteen பக்கம் தான் அத்தனை சதி வேலைகளும் தொடங்கும். வகுப்பறையில் 20 நிமிடத்திற்கு மேல் அவனவன் திறன்பேசியை எடுத்து விளையாட ஆரம்பித்து விடுவான்கள். அங்கே கொஞ்சம் வாசிக்கலாம்.” LSRW Skills improve பண்ணனும். Reading is also essential. So Read something ” என்று சொல்லி விட்டு நான் கையில் வைத்திருக்கும் புத்தகத்தை வாசிக்க தொடங்குவேன்.
இதில் வழி தவறிய ஆடு சிக்கினால் அவனுடைய செல்பேசியை வாங்கி அ. முத்துலிங்கம் அய்யாவின் வலைதளத்தை திறந்து ஒரு கட்டுரையை எடுத்து வாசிக்க கொடுப்பேன். அதை வாசித்து விட்டான் என்றால் பின்னர் தொடர்ந்து வாசிப்பான் என்ற நம்பிக்கை தான்.
நூலகத்திற்கு செல்லும் நான்கு பேராசிரியர்களில் நானும் ஒருவன். என்னைத்தவிர யாரும் புத்தகம் பக்கம் போக மாட்டார்கள். நூலகத்திற்கு கடைசியாக இலக்கியம், பொது வாசிப்புக்கு புத்தகங்கள் வாங்கி சுமார் 10 வருடம் இருக்கும் என்று நினைக்கிறேன்.கல்லூரி என்பது பயிற்சி மையம் போல் தான் செயல்படுகிறது.
வீட்டில் வாசிக்க முடியுமா என்றால் நம் வீடுகளில் அதற்கான இடம் இல்லை. எந்நேரமும் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கும். நம் வீட்டில் நிறுத்தினால் பக்கத்து வீட்டில் ஓடுவது இங்கு கேட்கும். அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து கொஞ்சம் வாசிக்கலாம். பயணங்களின் போது செல்பேசியில் வாசிக்கலாம். ரயிலில் என்றால் புத்தகமும் வாசிக்கலாம். ஆனால் படித்து, வேலைக்கு போன பிறகு எதற்கு புத்தகம் படிக்க வேண்டும் என்று கேட்பவர்கள் அநேகம்.
புத்தக வாசிப்பு நுண்ணுணர்வு உடையவர்களாக நம்மை ஆக்கி விடுகிறது. இலக்கிய வாசகர்கள் கொஞ்சம் நொய்மையான உள்ளம் கொண்டவர்கள் என்று சமீபத்தில் நீங்கள் கூட எழுதியிருந்தீர்கள். எளிதில் அகம் காயப்பட்டு விடும். அதனால் புத்தக வாசிப்பு பற்றி அறியாத, புரியாத, பிடிக்காத நபர்களை தவிர்க்க ஆரம்பித்து விடுவோம்.
இலக்கிய வாசிப்பு வாழ்க்கைக்கு மட்டுமல்ல நான் பார்க்கும் வேலைக்குமான முதலீடு. ஆனால் இதை என் பெற்றோருக்கே என்னால் புரியவைக்க முடியவில்லை. இந்நிலையில் எனக்கு பெண் பார்க்கும் படலம் நடந்தது. என்னுடைய மாணவிகளில் சிலர் ”நீங்க புத்தகம் படிப்பீங்க அப்டிங்கிறதலாம் அங்க சொல்லாதீங்க” என்றெல்லாம் சொன்னார்கள். இதையே என்னுடைய தோழி ஒருத்தரும் சொன்னார்.
நானும் சரி என்று ’நல்ல பிள்ளையாக’ அவர்கள் சொன்னது போல் நடந்து கொண்டேன். பெண் பார்த்து நிச்சியமும் நடந்தது. எனக்கு பார்த்த பெண்ணின் புகைப்படம் வந்த போது பின்னணியில் ஒரு book shelf இருந்தது. பெண் பார்க்க போன அன்று பெண் தயக்கம் இன்றி என்னோடு பேசினாள். நான் சம்மதம் தெரிவித்து விட்டேன்.
நிச்சயம் முடிந்து பேசும் போது தான் புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டா என்று கேட்டாள் நானும் மறைக்காமல் ஆமாம் என்று சொன்னேன். Favourite Writers என்றாள். அ.முத்துலிங்கம், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், கு. அழகிரிசாமி என்றேன்.
“ஜெயமோகனை எனக்கு பிடிக்காது, basically அவர் ஒரு காவி” என்றாள்.
குடியை கெடுத்துட்டாளே என்று நினைத்தேன். இருந்தாலும் இது போல நினைத்துக்கொண்டிருந்த பலர் உங்கள் வாசகர்கள் ஆன கதை உண்டு என்பதால் சரி பார்ப்போம் என்று நினைத்தேன்.
அடுத்த குண்டு. பெரியார் தான் அவளுடைய first love என்றாள். பெரியார் எழுதிய எதையாவது வாசித்து இருக்கிறாயா என்று கேட்டதற்கு pdf file வைத்திருக்கிறேன் என்றாள்.
பெண் Facebook addict. ஒரு அரசு நிறுவனத்தில் குமாஸ்தா வேலையில் இருக்கிறாள். பெண்பால் ’பால்வண்ணம்பிள்ளை’ தான். அவளுக்கு தெரிந்த அத்தனையும் முகப்புத்தகம் வழி தெரிந்து கொண்டது தான். அவள் வீட்டில் இருந்த எந்த இலக்கிய புத்தகமும் திறக்கப்படாமல் புதிதாக இருந்தது. பஷீரின் காதல் கடிதம் மட்டும் படித்ததாக சொன்னாள்.
பின்னர் 50 ஆயிரம் ரூபாய்க்கு முகூர்த்த பட்டுப்புடவை கேட்டாள். நிச்சய புடவையே 40 ஆயிரத்திற்கு கேட்ட போது “நேரம் ஆக வில்லை இதோடு நிறுத்தி விடுவோம்” என்று அம்மா சொன்னார்கள் நான் கேட்கவில்லை. வாங்கட்டும் என்று விட்டு விட்டேன்.
திருமணம் அல்ல இணையேற்பு விழா அழைப்பிதழ் என்று அடிக்க வேண்டும் என்று சொன்னாள். சரி என்று அடித்து நான் ஊரெல்லாம் கொடுத்து விட்டேன். ஆனால் அவர்கள் தரப்பில் திருமணத்திற்கு 2 வாரம் இருக்கும் வரை ஒரு பத்திரிக்கை கூட யாருக்கும் கொடுக்கவில்லை.
அய்யர் இல்லாமல் கல்யாணம் செய்ய வேண்டும் என்றாள். நான் வீட்டில் மல்லுகட்டிவிட்டு அதெல்லாம் சரிப்பட்டு வராது என்றேன். நான் வேலைக்கு போகிறேன் அதனால் வழக்கமான தாலிச்செயின் போட மாட்டேன் என்றாள். அதுவும் அவர்கள் சொல்லும் கடையில், அவர்கள் சொல்லும் தேதியில், அவர்கள் சொல்லும் நேரத்தில் வாங்கித்தர வேண்டும் என்றார்கள். இந்த தாலிச்செயின் விவகாரத்தில் அவர்கள் குடும்பத்தில் அத்தனை பேரும் ஒரே தொனியில் பேசினர்.
எனக்கு வெறுத்து விட்டது.”பெரியார் கொள்கை எல்லாம் பேசினாய், ஆனால் 50 ஆயிரம் ரூபாய்க்குத்தான் புடவை வாங்கி கல்யாணம் பண்ணனும்னு ஏன் நினைக்கிறே? தாலிச்செயின்ல என்ன design வேண்டிக்கிடக்கு? தங்கத்துல வாங்கி போடணும், அது எந்த ஊர்ல வாங்கினா என்ன?” என்று கேட்டேன்?
”ஒரு ரூமுக்குள்ள உக்காந்து ஜெயமோகன் படிச்சுட்டு இருக்கிற உங்களுக்கு இந்த உலகம் தெரியாது” என்று அவள் சொன்னாள். பேச்சு வளர்ந்து அந்த திருமணம் நின்று போனது.
அரசு வேலை பார்க்கும் பெண் என்பதால் வரதட்சிணை என்று எதுவும் கேட்க கூடாது என்று எங்கள் வீட்டில் சொல்லியிருந்தேன். எங்கள் சமுகத்தில் பையன் வீட்டு திருமணம் என்பதால் எங்களுக்கு நிறைய பண நஷ்டம்.
நான் யோசித்தேன். எங்கே தவறு செய்தேன்? ஏன் இப்படி நடந்தது? எத்தனை புத்தகம் படித்திருக்கிறேன்? எவ்வளவு புத்திசாலித்தனமாக பேசுகிறேன் எங்கே கோட்டை விட்டேன்?
How Much Should A Person Consume? என்கிற Guha எழுதிய புத்தகம் படித்ததில் இருந்து நான் செலவு செய்யும் விஷயத்தில் கவனமுள்ள ஒருவனாகவே இருந்து வந்திருக்கிறேன். சுற்றுப்புறச் சூழல் குறித்த கவனம் அந்த நூல் வாசித்த பிறகு வந்ததுதான். கல்யாண விஷயத்தில் one time expense என்று compromise செய்து கொண்டது என் தவறு. அதற்கான costly ஆன பாடம் படித்தாகி விட்டது.
6 மாதம் கழித்து மீண்டும் பெண் பார்த்து திருமணம் செய்து கொண்டேன். இந்த முறை தெளிவாக terms பேசி விட்டேன். பெண்ணிடம் பிடிகொடுக்காமல் busy யாக இருக்கிறேன் என்று திருமணம் வரை காலம் கடத்தினேன்.
பெண்ணிற்கு படிப்பு வாசனையே ஆகாது. முதுநிலை பொறியியல் படித்து சென்னையில் வேலை பார்த்திருக்கிறாள். ஆனால் எந்த பண்பாட்டு அறிமுகமும் கிடையாது.
அறிந்து கொள்வதுதான் பேரின்பம். அறிதல் மீது தாகம் இல்லாதவர்களோடு 5 நிமிடத்திற்கு மேல் பேச என்ன இருக்கிறது? எனக்கு திருமணத்திற்கு வந்த புத்தகப் பரிசுகளை கண்டு கொஞ்சம் அரண்டு தான் போனாள். உங்களுடைய அறம் வாசிக்க கொடுத்தேன். சோற்றுகணக்கு, யானை டாக்டர், கோட்டி எல்லாம் வாசித்தாள். பின்னர் மூங்கில் மூச்சு, இவன்தான் பாலா. அ. முத்துலிங்கம் அய்யாவின் தோற்றவர் வரலாறு கொடுத்தேன். அது அவ்வளவாக பிடிக்கவில்லை என்றாள். கடவுள் தொடங்கிய இடம் 4 அத்தியாயம் வாசித்திருக்கிறாள்.எதுவும் வாசிக்கவிட்டாலும் பரவாயில்லை ,நாம் வாசிக்கும் போது தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும் என்று தான் இருக்கிறது.
ஆனாலும் அவ்வப்போது ஏன் படிக்கிறேன் என்ற கேள்வி வந்து கொண்டே இருக்கிறது. என்னுடைய மாணவர் ஒருவரின் தந்தை எனக்கு உபதேசமாக “மனைவியிடம் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் பேசுங்கள், அது தான் பெண் பிள்ளைகள் எதிர்பார்ப்பது” என்றார். நானும் முயற்சி செய்தேன். அத்தனை போரடிக்கும் விஷயமாக அந்த உரையாடல் இருந்தது.
இலக்கிய வாசகனாக அன்றாட விஷயங்களை பேசுவதில், கேட்பதில் நேரத்தை செலவு செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. பின்னர் நீங்கள் எழுதிய நான்கு வேடங்கள் போன்ற கட்டுரைகள் ஞாபகம் வரும். உலகியல் வாழ்க்கையில் இதையெல்லாம் செய்தாக வேண்டும் என்று பொறுமையாக கேட்டுக்கொண்டிருப்பேன்.
பேச விஷயம் வேண்டும் என்பதற்காக சேர்ந்து தினம் ஒரு சினிமா பார்ப்பது அதை பற்றி பேசுவது அவ்வப்போது படித்த புத்தகம் பற்றியும் பேச்சு நடக்கும்.
எனது மனைவியின் அப்பா இலக்கிய வாசகர் அல்ல. Book of Facts, Science போன்ற தடிமனான பெரிய அட்டை போட்ட, வண்ண படங்கள் நிறைந்த பொதுஅறிவு புத்தகங்களை வாங்கி கொடுத்திருக்கிறார். அதெல்லாம் silver fish விளையாட மனைவி வீட்டில் இன்னும் இருக்கிறது.பொங்கல் பரிசாக மூங்கில் மூச்சு புத்தகத்தை அவரிடம் தள்ளி விட்டேன். வாசித்து விட்டு தன்னுடைய பால்ய கால ஞாபகங்கள் பல வற்றை எனது மனைவியிடம் சொல்லியிருக்கிறார்.
இலக்கிய வாசகனாக நான் ஒரு சராசரி செய்யும் எதையும் செய்வதில்லை. TV பார்ப்பதில்லை. செய்தித்தாளை 5 நிமிடத்திற்கு மேல் பொருட்படுத்துவதில்லை. 5 நிமிடத்திற்கு ஒரு முறை whatsapp பார்ப்பது இல்லை. Facebook வாரத்திற்கு ஒரு நாள் போனால் அதிகம். Cricket பத்தி ஒன்றும் தெரியாது. இப்படி இருப்பது மற்றவர்களை திகிலடைய செய்கிறது. ”அப்ப என்ன செய்வீங்க?” என்ற கேள்வி வரும். ”புத்தகம் படிப்பேன்” என்று சொன்னால் பாவம் பைத்தியம் என்பதாக தான் அந்த பதில் பார்வை இருக்கும்.
Ray Bradburyயின் Fahrenheit 451 நாவலை Francois Truffaut அதே பெயரில் சினிமாவாக எடுத்திருக்கிறார். அதில் புத்தக வாசகர்கள் ஆளுக்கொரு புத்தகத்தை மனப்பாடம் செய்து கொண்டு ஒரு குழுவாக காட்டிற்குள் சென்று வாழ்வதாக படம் முடியும்.
இங்கு புத்தகம் வாசிப்பவர்கள் அப்படி தனிமையிலேயே இருக்க முடியும். ஏனென்றால் அற்பத்தனத்தை, சராசரி ரசனை உள்ளவர்களை சகித்து கொள்ளும் மனநிலையை நாம் இழந்து இருப்போம். இணைமனம், Kindred Spirit அனைவருக்கும் அமைவதில்லை. Necessary Evil ஆக உலகியல் கடமைகளை ஒழுங்காக செய்து கொண்டு இலக்கியம் வழி வாழும் வாழ்க்கையை பிறர் அறியாமல் தொடர வேண்டியது தான்.
மிக்க அன்புடன்
—
பி. கு
சார், இந்த கடிதத்தை தளத்தில் வெளியிடும் பட்சத்தில் இந்த முறை என்னுடைய பெயரை நீக்கி விடுங்கள்.
மிக்க நன்றி.