வேலைகிடைத்ததால் தற்கொலை

வேலைகிடைத்ததனால் வங்கி அதிகாரி தற்கொலை

அன்புள்ள ஜெ.,

நாகர்கோயில் அருகே எறும்புக்காடு என்னும் ஊரைச் சேர்ந்த நவீன்(32) என்னும் பொறியியல் பட்டதாரி வாலிபர் வேலை கிடைத்து மும்பைக்குச் சென்றவர் (இந்த மும்பை மோகம் இன்னும் தீரவில்லையா?) ஊருக்குத் திரும்பிவந்து நேர்த்திக் கடனைச் செலுத்தியிருக்கிறார், புத்தேரி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தலை வைத்துப்படுத்து உயிர்கொடுத்து. வேலை கிடைத்ததும் உயிர் விடுவதாக கடவுளிடம் ஒப்பந்தம். போன வாரம் பத்திரிகையில் இந்தச் செய்தியைப் படித்தவுடன் சிறிது நேரம் மூளை மரத்துவிட்டது.  இந்திய அளவில் கேரளாவிலும்(அதை ஒட்டிஇருப்பதால் குமரி மாவட்டத்திலும்), உலக அளவில் ஜப்பானிலும் தற்கொலை அதிகஅளவில் நடப்பதாகக் கூறுகின்றன புள்ளிவிவரங்கள்.

வாழ்க்கையில் நாம் என்ன செய்தாலும் தவறாகப் போகிற ஒரு காலகட்டம் அநேகமாக எல்லோருக்கும் வருவதுண்டு. நான் திருமணம் ஆகி, முதல் குழந்தை பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தபின்பு ஒரு மேலாளரின் அராஜகத்தினால் வேலையிழந்தேன். திரும்ப வேறிடத்தில் முயன்று ஒரு சம்பந்தமில்லாத இடத்தில் சம்பந்தமில்லாத வேலை. மூன்றே மாதத்தில் ஒரு சிறிய காரணத்திற்காக மறுபடியும் வேலையிழப்பு.

பிளாட்டில் ‘என்ன பைக்கையே ரொம்ப நாளா எடுக்கக் காணும்’ என்று விசாரணை வரத்தொடங்கியதும் காலையில் சாப்பிட்டுவிட்டு பைக்கை எடுத்துக்கொண்டு பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் போட்டுவிட்டு நேர்முகத்தேர்வு ஏதாவது இருந்தால் செல்வேன். இல்லையென்றால் நேரே எழும்பூர் கன்னிமாரா நூலகத்தில் தஞ்சம். அங்கிருப்பவர்களெல்லாம் அநேகமாக என்னைப்போலத்தான் என்று நினைத்துக் கொள்வேன். ரெண்டு நாளைக்கு ஒரு நாவலாக படித்துத் தள்ளினேன். ஸம்ஸ்காரா, மதிலுகள், எரியும் பனிக்காடு, எத்தனையோ புத்தகங்கள்….நரகத்திலே இளைப்பாறல்தான். உள்ளே உலைமேல் அரிசியாக மனது கொதித்துக்கொண்டிருக்கும். கைபேசிஒலித்தால், நேர்முகத்தேர்வுக்கான அழைப்போ என, வெளியேபோய்ப் பேச விலுக்கிட்டு எழுந்து ஓடுவேன். ‘ஒங்க எக்ஸ்பீரியன்ஸுக்கு இப்ப எதுவும் ஓப்பனிங் இல்லை’ , ‘எம்.டி அவுட் ஆஃப் ஸ்டேஷன். அடுத்தவாரம் வந்து பாருங்க’, ‘சார், இன்னொரு ரவுண்டு இருக்கு, கால் பண்ணுவோம் கொஞ்சம் பொறுமையா இருங்க’ எத்தனைவிதமான மறுதலித்தல்கள்.

ரயில்பெட்டியில் உறவினர்களைக்காண நேரிட்டால் அடுத்தபெட்டியில் போய் ஏறிக்கொள்வேன். பொய் சொல்லவேண்டிய பல சூழ்நிலைகள். என்னை மிகக்கீழாக உணர்ந்தகாலம். மனைவியின் உறுதுணையோடு  எப்படியோ சேமிப்பைக் கொண்டு சமாளித்தேன். ஒரு ஆறுமாதம் நரகவாழ்க்கை. என்னசெய்வதென்று தெரியாமல் மறுபடியும் பழைய கம்பெனிக்கே சென்று வேறுபிரிவில் வேலை கேட்டேன். பழைய மேலாளரின் சம்மதம் இருந்தால்தான் எடுத்துக்கொள்வேன் என்றார்கள். வேறுவழியில்லாமல் சென்று கேட்டேன். அவருக்கும் உள்ளூர உறுத்தியிருக்கலாம், உடனே சம்மதம் சொல்லிவிட்டார். என் வாழ்க்கையின் மிகமகிழ்ச்சியான நாள் என்றால் அதைத்தான் சொல்வேன். அப்பிடி ஒரு வேலைகிடைத்த பின்பு உயிரை விடுவதென்றால்? நவீன் செய்துகொண்டது தற்கொலை, ஆனால் அவர்தன் வயதான பெற்றோர்களைச் செய்தது கொலையல்லவா? நவீனைச் செலுத்தியது எது?

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

***

அன்புள்ள கிருஷ்ணன் சங்கரன்

ப.சிங்காரம் அவருடைய புயலிலே ஒரு தோணி நாவலில் ஒரு வேடிக்கையான நாட்டார்பாடலின் ஈரடியைச் சொல்கிறார். அதன் மூலவடிவம் இது

நாட்டரசன்கோட்டையிலே நல்லகண்ணு மாரியாத்தா

கண்ணு சரியாகவேணும் கண்ணான மாரியாத்தா

கண்ணு சரியானா கண்ணான மாரியாத்தா

கண்ணுரெண்டும் குத்தித்தாறேன் கண்ணுபாரு மாரியாத்தா

அந்த மாதிரி ஒரு செயல் இது. வேலைகிடைத்தால் தற்கொலைசெய்துகொள்கிறேன் என்று வேலைகிடைக்காமல் நொந்துபோய் வேண்டிக்கொண்டு வேலை கிடைத்ததும் வேண்டுதலை நிறைவேற்றுவது

குமரிமாவட்டம் கேரளத்தின் பண்பாடு கொண்டது. கேரளம்போலவே இங்கேயும் தற்கொலை மிகுதி. இரண்டு காரணங்களை ஆய்வாளர் சொல்கிறார்கள். ஒன்று, கூட்டமாக குழுவாக வாழும் வழக்கம் ஒழிந்து மக்கள் தனியர்களாக வாழ்கிறார்கள். இரண்டு, கல்வியால் மக்களுக்கு வாழ்க்கை பற்றிய எதிர்பார்ப்பும் கனவுகளும் மிகுதி. கல்விக்குச் சமானமாகப் பொருளியல் வளரவில்லை

அனைத்துக்கும் மேலாக ஒன்றுண்டு, இங்கே சமூக அழுத்தம் மிகுதி. தமிழகம்போல ஒழுக்கவியல் கெடுபிடி இல்லை. தமிழகம் போல வம்பு புறம்பேச்சும் இல்லை. தமிழகம் அளவுக்கு உறவுச்சிக்கல்களும் இல்லை. ஆனால் தமிழகம் நினைத்தே பார்க்கமுடியாத அளவுக்கு உலகியல் நோக்கு உண்டு. வெறும்பணமே எல்லாவற்றுக்கும் அளவுகோல். ஆகவே அந்த கெடுபிடி சமூகத்திலிருந்து வந்து மென்னியைப்பிடிக்கிறது

பொதுவாக தற்கொலை எண்ணம் போன்றவை வைரஸ் போல. சூழலில் மிதக்கின்றன, பலவீனமானவர்களை தொற்றிக்கொள்கின்றன.

ஜெ

முந்தைய கட்டுரைஅறுபதும் அன்னையும்
அடுத்த கட்டுரைஎழுத்தின் இருள்- கடிதங்கள்-2