முதன் முதலில் என்னுடைய பள்ளி சுற்றுலாவின்போதுதான் இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் கோவிலுக்குச் சென்றேன். எங்கோ ஓர் இடுக்கான தெருவில் வேன் நின்றபோது ஓர் அலுப்புடன் தான் அனைவரும் வண்டியிலிருந்து இறங்கினோம். மடப்பள்ளியில் படிப்பவர்களுக்கு சுற்றூலா என்பது கூட கோவில் குலம் தான். பாகுபாடில்லாமல் இந்து, கிறுத்தவக் கோயிலென சில கோவில்களை தேர்ந்தெடுத்து கூட்டிச் சென்றனர். எனக்கும் அதைத்தாண்டிய பிற உலகங்கள் அப்போது தெரிந்திருக்கவில்லை. ஒரு வகையான தனிமை அன்பின் ஏக்கம் கடவுளை இறுகப் பற்றிக் கொள்ள வைத்திருந்த விடலைப் பருவம் அது.
தெருவில் ஆயசமாக கதை பேசிக் கொண்டே தான் அந்த கோவிலிருக்கும் தெருவில் நுழைந்தோம். பேசிக் கொண்டே திடீரென நிமிர்ந்த் போது அதன் பிரம்மாண்டத்தில் பிரமித்துப் போய்விட்டேன். அருகிலிருந்து நச்சரித்துக் கொண்டிருந்த தோழியிடம் “ஏய் அங்க பாருடீ!!” என்று சொன்ன சொல் தான் என் இறுதி சொற்கள். அதன் பின் நான் பேசவில்லை. உள்ளும் புறமும் அதன் அழகு என்னை கிரங்கடித்திருந்தத்து. இதற்குமுன் இத்துனை பிரம்மாண்டமான கிறுத்துவ ஆலயத்தை நான் பார்த்ததேயில்லை. ஊட்டியில் நாங்கள் செல்லும் சர்ச்சுகளில் இத்துனை அம்சங்கள் இருந்ததாய் நான் பார்த்ததேயில்லை.
ரோமன் கத்தோலிக்கர்கள் கும்பிடும் வழக்கமென்பது இந்துக்களை பெரும்பாலும் ஒத்திருக்கும். அதனாலோ என்னவோ எனக்கு இந்த கிறுத்தவ வழக்கங்கள் அந்நியமாய் இல்லை. எல்லா புனிதர் சிலைகளையும் தொட்டு வணங்கிக் கொண்டிருந்தோம். உள்ளிருந்த பீடத்தின் முன்பு மண்டியிட்டு அங்கிருந்த ஓர் இரத்தச் சிவப்பான இருதயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். உணர்ச்சிப் பெருக்கால் கண்களில் நீர் நிறைந்திருந்தது.
என் தலைமை ஆசிரியர், சிஸ்டர் பாத்திமா அவர்கள் என் அருகில் வந்து “இங்கு இயேசுவை அறைந்த சிலுவையின் ஒரு துண்டு வைக்கப் பட்டிருக்கிறது. இங்கு பல புனிதர்களின்- அவர்கள் சார்ந்த ஒரு பொருள் (எலும்பு, சாம்பல்) ஏதோவொன்று இருக்கிறது. ஆற்றல்மிக்க கோவில் இது. உனக்கு என்ன வேண்டுமோ கேள். கிடைக்கும்” என்றார். ”என்ன வேண்டுமோ கேள்” இந்த வரிகள் நெஞ்சை நிறைத்திருந்தது. நான் நம்பிக்கையோடு வேண்டிக் கொண்டேன்.
வாழ்க்கையின் ஓட்டத்தில் இவை அனைத்தும் மறைந்து விட்டது. என்றாவது மீண்டும் போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் மறந்தும் போனேன். ஊர்சுற்ற ஓர் சுயாதீனமான சூழலில் அந்தக் கோவிலின் பெயரை ஒருவாராக நினைவுக்குக் கொணர்ந்து கூகுளில் அதைத் தேடி அடைந்தேன்.
இன்று வைகைக் கரையின் வழியே மதுரையிலிருந்து இராமேஸ்வரம் போகும் சாலையில் ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பின்னர் அதன் வட கரையில் இடைக்காட்டூர் என்ற கிராமத்தை அடைந்தோம். மதுரையிலிருந்து பிரிந்த சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சார்ந்த ஊர் இந்த இடைக்காட்டூர். தெருவில் நுழைந்தபோது அதன் பிரம்மாண்டத்தைக் கண்டு மீண்டும் பிரமித்தேன். பழைய பள்ளி நினைவுகளை மீட்டினேன்.
அன்று நான் பள்ளிப் பருவத்தில் வேண்டிய வேண்டுதல் நிறைவேறியிருப்பதை நினைத்துக் கொண்டேன். இந்தமுறை எனக்கு வேண்டுவதற்கு ஏதுமிருக்கவில்லை. ஆனால் அந்த பலிபீடத்தின் முன் சென்றதும் உணர்வுப் பெருக்கு அதிகமாகி கண்ணீர் வந்தது. ”என்னை பயன்படுத்து” என்பதைத் தவிரவும் சொல்ல எனக்கு இங்கு ஒரு சொல்லும் இல்லை. வெறுமே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கிருந்த ஆற்றலை நுகர்ந்து கொண்டிருந்தேன்.
இப்பொழுது கட்டிடக்கலை பற்றி தெரிந்திருப்பாதால் அதன் கண் கொண்டும் பார்த்தேன். ஐரோப்பியக் கட்டிடக் கலையான கோதிக் gothic கட்டிடக்கலை கொண்டு கட்டப் பட்டிருக்கிறது. அதற்கே உரிய பிரம்மாண்டமும், உயரமும் கூடிய கட்டிடம், பறக்கும் பட்ரஸ் (Flying Butress), கூரிய முனை கொண்ட வளைவுகள் (Pointed Arches), தொடர் வளைவுகள் கொண்ட கூரை (vaulted ceiling), காற்றும், வெளிச்சமும் புகும் வண்ணமான உட்புறங்கள், வண்ணப்பூச்சுக் கண்ணாடிகள், அற்புதமான அலங்காரங்கள் என அனைத்தும் இருந்தன வரலாற்று ரீதியாக ஓர் பிரெஞ்சு வாசனையை அதன் சுவர் சித்திரங்களில் என்னால் காண முடிந்தது.
1894 ஆம் ஆண்டு Fr. Ferdinand Celle என்பவரால் பிரான்ஸ் நாட்டிலுள்ள Rheims Cathedral -ஐப் போன்றே கட்டப்பட்டது. அதைத் தாண்டிய சிற்பபம்சமாக 200 வித விதமாக வார்க்கப்பட்ட செங்கற்கள்; உள்ளும் புறமுமாக 153 தேவதுதர் சிலைகள் என மலைக்க வைக்கும் சிற்பங்கள். அது தவிரவும் இயேசுவின் புனித இருதயம் வைக்கப்பட்டிருக்கும் பிராதன தளத்தில் 40 புனிதர்களின் நினைவுச் சின்னங்கள் நான்கு மரப் பேழைகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. இவையனைத்துமே சேர்ந்து ஓர் அகவயமான ஆற்றலை தன்னகத்தே உருவாக்கிக் கொண்டிருப்பதாக எண்ணுகிறேன்.
இடைக்காட்டூர் என்ற பெயர் இக்கிராமத்தில் வாழ்ந்த இடைக்காடார் எனும் சித்தரால் வந்ததெனவும், அவர் நவக்கிரகங்களை மாற்றி வைத்ததாகவும், அதற்காக ஓர் கோயில் உள்ளதென்றும் மக்கள் கூறுகிறார்கள். கிழவன் சேதுபதியின் மருமகனான கட்டையதேவனை புனிதர் ஜான் பிரிட்டோ கிறுத்துவத்துக்கு மாற்றியதான வரலாறும் இங்குண்டு. அதனால் ஆத்திரமடைந்த சேதுபதி ஜான் பிரிட்டோவிற்கு மரணத்தைப் பரிசாக அளித்ததான ஓர் சுவர்ச் சித்திரமும் இங்குள்ளது.
வரலாறும், கலையும், ஆன்மீகமும் கலந்து இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் கோவில் நின்று கொண்டிருக்கிறது. அந்தத் தெருவிலுள்ள வீடுகள் சில காலத்தில் மூழ்கிக் கொண்டும், சில காலத்திற்கேற்றாற் போல தன்னை தகவமைத்துக் கொண்டும் இருக்கிறது. பயணத்தின் பாதையில் நீராதாரம் வற்றி ஆற்றுமணலை ஆடையாக உடுத்தியிருந்த வையையைக் கண்டோம். இடைக்காட்டூர் பாலத்தினின்று வையையின் ஆற்று மணலில் சூரியன் தன்னை இரவுக்குள் செலுத்திக் கொண்டிருக்கும் அந்த காட்சிபிம்பத்தை கண்டோம். ஓர் நிறைவுடனே இராமேஸ்வரத்தை நோக்கிச் சென்றோம்.
இடைக்காட்டூரிலிருந்து இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை-87 வழியாக பயணப் பாதையென்பது எனக்கு புதிய அனுபவம் தான். மதுரையிலிருந்து தென்கிழக்கின் வழியான முதல் முறைப் பயணமிது. நிலம் என்பதின் திரிபை கண்கூடாகக் கண்டேன். இடைக்காட்டூரிலிருந்து மானாமதுரை வழி முழுவதும் கருவேலஞ்செடிகள் நிறைந்திருந்தன. ஆக்கிரமிப்புச் செடிகளான இந்தச் செடிகள் அகற்ற இயலாக் காடுகள் போல காட்சியளிப்பது கண்டு மனம் பதபதைத்தது. ‘
என் வரையில் இது சரியாக ஆராயாமல் செயல்படுத்தப்பட்ட திட்டம். ஆட்சியாளர்கள் பொறுப்பேற்று இந்த 1960 –ன் குறைகளை கண்டிப்பாக களைய வேண்டும். இதற்கென ஒரு சிறப்புத் திட்டம் வரைந்தால் தான் கலைய முடியும் என்று நினைத்துக் கொண்டேன். வைகையின் நீரைக் குடிக்கும் ஓர் உயிர்கொள்ளி போல கடக்கவே முடியாதளவு பரவி விரவிக் கிடக்கிறது இந்த புரோசோபிஸ் ஜூலிபோரா என்ற கருவேளம். மதுரையிலிருந்து சென்றுகொண்டே இருக்க இருக்க ஆள் நடமாட்டம் இல்லாதிருந்தது போன்ற ஒரு வகை உணர்வு.
ஊரின் பெயர்கள் நான் எப்பொழுதும் தவற விடாத ஒன்று. சில ஊர்ப்பெயர்கள் தன்னகத்தே வரலாற்றை, புனைவுக்கதையைக் கொண்டவை. இராமேஸ்வரம் வரும் வரையில் வழிகளிலுள்ள ஊரின் பெயர்களை பார்த்துக் கொண்டே வந்தேன். ”ராஜகம்பீரம், கீழங்காட்டூர், மறுச்சுக்கட்டி, மேலபார்த்திபனூர், பரமக்குடி, தினைக்குளம், திருவடி, சதிரகுடி, தீயனூர், கருங்குளம், குசவன்குடி, வழுதூர், பெருங்குளம், நாகச்சி, உச்சிப்புளி, இருமேனி, பிரப்பன்வலசை, மண்டபம்…” என ஒவ்வொரு பெயர்களிலும் ஒன்றைக் கண்டுகொண்டே வந்தேன்.
மதியம் சாப்பிடாததால் உணவுக் கடையையும் தேடிக் கொண்டே வந்தோம். கோவிலுக்கு செல்வதால் வெற்று வயிறிலேயே செல்வோம் என்றெண்ணி மதுரையில் சாப்பிடத் தவறியதையெண்ணி சிறு வருத்தம் இருந்தது. கடையைத் தேடியே இராமேஸ்வரம் வந்துவிட்டோம். அங்கு கிடைத்ததை உண்டுவிட்டு பாம்பன் பாலத்தை நோக்கிச் சென்றோம்.
போகும் வழியில் எங்களுடைய வலதுபுறத்தில் கடற்கரை சரியாக இல்லாத கடலைப் பார்த்துக் கொண்டே வந்தோம். ஒரு கட்டத்தில் இடதுபுறத்திலும் விலகி என கடல் தெரிந்தது. மண்டபத்தைத் தாண்டி ஒரு இடத்தில் வலதுபுறத்தில் சரியாக உருவாகாத சிறு கடற்கரையில் உந்தியை நிறுத்தி இந்தியப் பெருங்கடலை கண்டோம். அங்கு ஓர் சிறு குடிலமைத்து ஓர் வயது முதிர்ந்த தம்பதியினர் வெளியில் உட்கார்ந்து கதைத்துக் கொண்டிருந்தனர். காலம் செல்லச் செல்ல மனிதர் வாழும் குடில்கள் உள்ளும் புறமுமாக ஒரு இல்லறமாக மாறுவதாக நான் நினைப்பேன். அதை அவர்களின் முற்றமும் அந்தப் அன்புப் பேச்சுகளும் வெளிப்படுத்தின.
சற்றே தள்ளி ஒரு கூட்டுக் குடும்பம் உணவு இளைப்பாற்றிக்காக பாய் போட்டு அமர்ந்து கொண்டிருந்தனர். அருகில் ஒரு கருப்பசாமி கோவிலும் இருந்தது. அங்கே நின்று கடற்கரையை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தோம். எக்கச் சக்கமான துணிகள் கரையொதுங்கியிருப்பதைக் கண்டேன். அதன் நடுவே ஓர் கைவிடப்பட்ட ஆண் சிலை. என் மாமன் ”ஏ இது என்னத்தா?” என்று வேறொன்றைக் கை காணித்தான். அது பாதி துண்டாக்கப்பட்ட பெண் சிலை. “ஏதோ கைவிடப்பட்ட/ கரை ஒதுங்கிய சிலையா இருக்கும்” என்று சொன்னேன். “நாம இத எடுத்து அந்த கோவிலுக்கு முன்னாடி வைப்போமா?” என்றான். “ஏன் உனக்கு தேவையில்லாத வேலை. அதுவே கோவிலை விட்டு கடற்கரை வரனும்னு வந்திருக்கு. இருக்கட்டும். இங்கையே நல்லா தானே இருக்கு” என்று சொன்னேன். எப்பொழுதுமே அவன் நிம்மதியை விரும்புபவனாதலால் மறுபேச்சு பேசுவதில்லை.
தொடர்ந்து நாங்கள் அலையின் நுறைகளை காலில் படரவிட்டு நின்று கொண்டிருந்தோம். பின்பு பாம்பன் பாலத்திற்கு வந்தோம். அங்கிருந்து இடது புறம் வங்காள விரிகுடாவையும், வலதுபுறம் இந்தியப் பெருங்கடலையும் இரசித்திருந்தோம். ஏராளமான கழுகுகளைக் காணமுடிந்தது. அதன் பின் அங்கிருந்து இராமேஸ்வரம் கோவிலுக்குச் சென்றோம். கோவிட் காலத்திற்குப் பிந்தைய நியூ நார்மலில் கோவில் ரதவீதிகள் வெறிச்சோடியிருந்தன.
சிற்றுந்தியை நிறுத்திவிட்டு திறந்திருந்த பிராதனப் பிராகாரத்தை நோக்கி நடந்து சென்றோம். இங்கு தென்படும் உந்திகள் குஜராத், மேற்கு வங்கமென பல வட மாநிலத்ததாய் இருந்தது. ஒவ்வொரு மாநிலத்தவருக்கும்/ஒவ்வொரு நம்பிக்கை சார்ந்தவருக்கும், ஒவ்வொரு குரு மரபினருக்கும் என பல சத்திரங்களைக் கண்டேன். வீடே தங்கும் விடுதியான அமைப்புகள், பல அரசு, தனியார் தங்கும் அறைகள் இருந்தன. கடைகள் பலவும் பூட்டியிருந்தன. திறந்திருந்த பலவற்றிலும் மக்கள் இல்லை.
கோவிலுக்குள் மூலவரை நோக்கிச் செல்லும் திசையில் சென்றோம். சிவன் அமைந்திருக்கும் சன்னதிகளின் மேல் எனக்கு ஒரு பற்று என்னையரியாமல் எப்பொழுதுமே வருவதுண்டு. நுழைவில் சிவனின் பல தாண்டவ நடனங்களையும், அவர் அங்ஙனம் கோயில் கொண்டுள்ள இடத்தை விளக்கையதான சித்திரத்தை
மேற்கூரையின் மேல் கண்டேன். நுழைவில் தொடர்ந்து அமைந்திருந்த யாழி சிற்பங்கள் மிகப் பிரம்மாண்டமாக இருந்தன. ஏனோ வண்ணப்பூச்சுகள் தான் ஓர் செயற்கைத்தன்மையைக் கொடுத்தன. சிவன் கோவிலுக்கே உரிய நந்தியைக் கண்டோம். மனதைக் கவரும் வண்ணமாக தேவார மூவரும், அறுபத்தி மூன்று நாயன்மாற் சிலைகளும் இருந்தன. சிலைகள் சிறு மனித உருவமோ எனத் தோன்றும் அளவிலான தோற்றத்தை தன்னகத்தே கொண்டிருந்தன.
தொடர்ந்து கருவறை நோக்கிச் செல்ல எத்தனித்தபோது காவலர் அவர்கள் ஒரு திசையை நோக்கி கை காணித்தார். நான் சரியாகப் போகிறேனா என்று பார்த்துக் கொண்டிருந்தார். ஸ்பெஷல் தரிசணம், சாதா தரிசணம் என்பதின் மேல் நம்பிக்கை எனக்கில்லை. அதனாலேயெ மிக முக்கியமான நாட்களில், கூட்டம் அதிகமாக இருக்கும் சமயங்களில் நாங்கள் எந்தக் கோவிலுக்கும் செல்வதில்லை. கொரனாக்குப் பிந்தைய நாட்கள் என்பதால் யாருமே இல்லாத கோவிலை நாங்கள் கண்டோம்.
கருவறையின் முன் சென்று அதனுள் வீற்றிருந்த காசியின் தலகர்த்தரைக் கண்டோம். இராமநாதசுவாமி லிங்க வடிவில் ஐந்து தலை நாகம் குடை பிடிக்க எழுந்தருளிய காட்சி. தூரத்தைனின்று ஓர் ஒளிக்கீற்றைக் கண்டாற்போல் இருந்தது. அருகிருந்த பூசாரி மற்றும் ஓர் கவலாலியின் ஓயாத அர்த்தமற்ற அரசியல் பேச்சுக்கள் அந்த இடத்தின் அமைதியைக் குலைத்தது. சிறிது நேரத்திற்கு மேல் அங்கே நிற்க இயலாது வந்துவிட்டேன். இனிமேல் கருவறைக்கு முன்னாவது பேசாமலிருக்க ஏதேனும் சட்டம் போட வேண்டும்.
அதன் பின் வெளிவந்து இடதுபுறம் திரும்பி வருகையில் பலதரப்பட்ட அளவைகளில் லிங்கங்கள் இருந்தது. லிங்க ரூப சிவன் என்னில் பரவசத்தை நிறைத்தது. மாமனிடம் சற்று நேரம் கேட்டுக் கொண்டு ஆளரவமற்ற அந்த பிராகரத்தில் சம்மனிட்டு அமர்ந்து தியானித்திருந்தேன். எண்ணங்களற்ற நிலையில் ஆற்றலை நுகர்ந்திருந்தேன். நூற்றாண்டுகளாக அமைந்த ஆற்றலாயிற்றே. மனம் ஏதும் சொல்லவில்லை. அது பிரமித்த நிலையில் இருந்திருக்கக் கூடும்.
நானே விழித்த நேரத்தில் எழுந்து கையில் வைத்திருந்த விபூதியை நெற்றியிலிட்டுக் கொண்டு சிந்து சம்வெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்ட ப்ரோட்டோ சிவாவின் சிலையை நினைத்துக் கொண்டேன். எத்தனை ஆயிர வருடங்களாக நம் நினைவில் இந்த சிவ வழிபாடு இருந்து உள்ளுணர்வாக மாறிப் போகிறது என்று வியந்து கொண்டேன். நினைத்துக் கொண்டே இடப்புறம் திரும்புகையில் அதிர்ந்துவிட்டேன். ஒரு கருமலையைப் பெயர்த்தெடுத்து கோவிலுக்குள் வைத்தாற் போல யானை நின்று கொண்டிருந்தது.
எனக்கு ஜெ –வின் ”காடு”; சிறுகதைகளான ராஜன், ஆனையில்லா ஞாபகம் வந்தது ஒரு மின்னலைப் போல. காட்டின் பர்வத ராஜன்; காடேயான யானை கருங்கற்களுக்குள் பாகனால் கட்டுப்படுத்தப்பட்டு நிற்கவைக்கப்படிருக்கிறதே என்று நினைத்துக் கொண்டே அதைப் பார்த்துக் கொண்டே நகர்ந்தேன். சட்டென யானை என்னை நோக்கி வர பாகன் என்னை ”சீக்கிரம் போங்களேன்” என்றார். என் மாமன் ”நான் இவ்வளவு நேரம் நின்னுட்டு இருந்தேன் என்னைப் பார்த்து வரல” என்று குறைபட்டான். ”அவனவன் கவலை அவனவனுக்கு” என்று சொல்லி வெளியே வந்தேன்.
பிராகாரம் தோறும் எண்ணற்ற பெயர் தெரியாத சிற்பங்களைக் கண்டேன். ஜெ-வின் விடுறைவு கால சிறுகதையின் நிறைவு சிறுகதையான ”ஆகாயம்” நினைவிற்கு வந்தது. குமரன் உடன் நினைவிற்கு வந்தான். சிற்பிகளின் எண்ணத்திலிருந்தல்லவா இந்த சிலைகள் உருவத்தைப் பெறுகின்றன.
எண்ணிலடங்கா சிலைகள். பெயர் தெரிந்த சிலைகளான சூரியன், உஷா, பிரத்யுஷா, சகஸ்ரலிங்கம், தேவார மூவரும், அறுபத்து மூன்று நாயன்மார்களும், மூலவர், உற்சவர் விக்கிரங்கள், வச்சிரேசுவரர், மனோன்மணி, கந்தன், சங்கரநாரயாணன், அர்த்தநாரீஸ்வரர், கங்காளநாதர்,சந்திரசேகரர், ராமர், சீதை, லட்சுமணன், அனுமன், விபீஷணன், விசாலாட்சி, ஜோதிர்லிங்கம், நடராஜர், சந்திரன், கிருத்திகை, ரோகினி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, மாஹேந்திரி, சாமுண்டி முதலிய சப்த மாதர் சிலைகள், சண்டிகேசுவரியும், அஷ்டலட்சுமி, துவாரபாலகர், சிவதுர்க்கா, மனோன்மணி, வாகீசுவரி, புவனேஸ்வரி, அன்னபூர்ணா ஆகியவையும், இன்னும் பெயர் தெரியாத பல சிலைகள் என ஆகசமுல்லா! என்று சொல்லுமளவு விரிந்து கோவிலுக்குள் ஓர் பிரபஞ்சமே சமைக்கப்பட்டது போன்ற பிரமை ஏற்படுகிறது.
பிரபஞ்சத்திற்குள்ளான சிறு நேர வாசத்தினின்று தார்சாலைக்கு வரும்போது செருப்பைப் போட வேண்டுமே என்ற உலக துக்கம் வந்து சேர்ந்தது. இறுதியாக ஒரு முறை சற்றே நகர்ந்து கோவிலை பார்த்துக் கொண்டேன். திராவிடக் கட்டடக் கலையின் அம்சமான கோபுரங்கள், கற்றூண்கள், மதில்கள், மண்டபங்கள் என கட்டிடக்கலையின் சிறப்புகளை கண் முன்னே ஓட்டிவிட்டு கடலை நோக்கி நடந்தோம்.
வரும் வழியில் பல மடலாயங்களைப் பார்த்தோம். மனிதர்களின் நடமாட்டம் மிகக் குறைவாகவே இருந்தது. கடல் வந்ததும் ஓடிச் சென்று அங்கே நின்றேன். இரவின் கடல் என்னை எப்பொழுதும் என்னவோ செய்யும் தன்மையது. அவனிடம் திரும்பி நேரம் வேண்டும் என்றேன். “ஒன்னும் பிரச்சனையில்ல. நில்லு” என்று சொன்னான். அவனுக்கு இதெல்லாம் பிடிக்காது என்றாலும் கூட என்னை அவன் சகித்துக் கொள்வதுண்டு. அவனை தொலைத்துவிட்டு சிறிது நேரம் இரவின் கடலுக்குள் மூழ்கினேன். இராமேஸ்வரத்தின் கடல் அலை ஏனோ நான் பார்த்த் அலைகளிலேயே மிகவும் மூர்க்கமானது. ஆற்றல்மிக்கதென்றும் கூட சொல்லலாம். கடலில் அப்படி அலை தழுவும் போது நான் உள் சென்று கொண்டே இருப்பதாக எப்போதும் உணர்வேன். என்னை வந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கரைத்துக் கொண்டே இருப்பதான ஒரு உணர்வு. ஆற்றல் அதிகமான அலையினால் நான் விரைவிலேயே கரைவதான ஓர் எண்ணம்.
அரைமணி நேரத்திற்கு மேல் என்னால் நிற்க முடியவில்லை. இரவின் தீவிரமும், அலையின் தீவிரமும் ஓர் பித்து நிலையை என்னுள் உணரச் செய்தது. பின்னால் திரும்பி “முடியல” என்று சொன்னேன். அவன் “என்னாலும் முடியல. போலாம்” என்றான். நான் சிரித்துக் கொண்டே கடலில் ஒரு முறை தலையை முழுகி விட்டு “போலாம்” என்றேன். நடந்து வரும்போது குளிராய் இருந்தது. கால் வலிக்க ஆரம்பித்ததை உணர்ந்தேன். தண்ணீரை மண்டிவிட்டு இளையராஜாவின் மெல்லிசையின் துணையோடு கூடு நோக்கி கிளம்பினோம். காலமென்னும் பரிமாணத்தில் இந்த நிகழென்னும் ”நான்” சுவடுகள் சீக்கிரம் மறைந்துவிடும் ஆனால் கலையோ பல நூற்றாண்டுகள், சில ஆயிரமாண்டுகளாவது வாழும் தன்மையது என்று நினைத்துக் கொண்டேன். எந்தக் கலையும் மனித எண்ணத்தின் உச்சம் தான். பயணத்தை நினைவுகளாய் மனதில் நிறைத்துக் கொண்டேன்.