மதுரையில்- கடிதம்

மதுரையில்…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

எப்போதுமே உங்களின் பயணக்கட்டுரைகள் எனக்கு மிக விருப்பமானவை.  ’மதுரையில்’ கட்டுரையை வாசிக்கையில். முழுமையாக மதுரையை குறித்த ஒரு அழகிய சித்திரமே   கிடைத்தது.

மதுரையின் தொன்மையை, உணவை, மக்களை, இரைச்சலை, எரிக்கும் வெயிலை, ஆலயங்களை, அங்கிருக்கும் சிலைகள்,  கடைகள், சுழலும் காற்று, வீடுகள் என விரிவாக வாசிக்கையில் மதுரை கண்முன்னே விரிந்துகொண்டே இருந்தது. கல்பெருகிய குளிர்நிழல்காடு இந்த சொற்கள் அளித்த உணர்விலேயே வெகுநெரம் மீள முடியாமல் சிக்கிக்கொண்டிருந்தேன். அதைப்போலவே வரிசையில் காத்து நிற்பதை குறித்து சொல்லி இருந்ததும்..

எப்போதுமே உங்கள் தளத்தில் கட்டுரைகளுடன் வரும் புகைப்படங்கள் சிறப்பாக இருக்கும் இதிலும் புகைப்படங்கள்  மிக அருமை. மதுரையை  உங்கள் எழுத்துக்களின் வழியே பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, இடையிடையே வந்து கொண்டிருந்த நீலப்படுதாக்களால் மூடப்பட்டிருக்கும்  தள்ளுவண்டிக் கடைகள், பெட்டிக்கடை வாசலில் சிரித்தபடி நின்று கொண்டிருக்கும் நண்பர்கள், மேம்பாலத்தின் அடியில் போர்த்திக்கொண்டு உறங்குபவர்,  அவர் காலடியில் நாய், மதுரையின் சந்துகள், தூண்கள், நனைந்த சாலை, ஆலயங்கள், கல்தூண் பிரகாரங்கள், போக்குவரத்து, ஒளிரும் சதுரங்களாய் கண்ணாடிச்சன்னல்கள், நடைபாதைக்கடை, என பகலும் இரவுமாய் படம் பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் நீங்கள் அனைவரும் மதுரையில் இருந்த நாட்களில் வாசிப்பவர்களையும் உடனிருக்க வைத்துவிட்டது.

பின்னணியில் ஆலய கோபுரம் தெரிய நாலைந்து பேராக நீங்கள் நடந்துவருவது மற்றும் கம்பியில் சாய்ந்து நின்றபடி  நீங்கள் அனைவரும் நிற்கும் புகைப்படங்களெல்லாம் மிக  அருமை. இப்படியான candid photography உங்களின் சிறப்பான கட்டுரைகளை மேலும் சிறப்பாக்கி விடுகின்றது.

மதுரையின் நெருக்கடியான இடங்களில் இருக்கும் கடைகளையும் அங்கு தீப்பிடித்ததையும் எழுதியிருந்தீர்கள், இந்த தீபாவளியன்றும் மதுரையின் நெரிசலான கடைவீதியில் தீ விபத்து ஏற்பட்டு கட்டிட இடிபாடுகளில் சிக்கி இளம்  தீயணைப்பு வீரர்கள் சிலர் அநியாயமாக உயிரிழந்து விட்டனர்.

சுரேஷ்குமார் இந்திரஜித் அவர்களை குறித்த ஆவணப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். கவிஞர் அபியின் ஆவணப்படம் திரையிடப்பட்டபோது கவனித்துக்கொண்டிருந்த அவரது குடும்ப உறுப்பினர்களின் முகங்களில் தெரிந்த பிரகாசமும் பெருமிதமும் நிறைவும் இன்னும் எனக்கு நினைவிலிருக்கிறது

அன்புடன்

லோகமாதேவி

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.

மதுரை நகர் பற்றிய உங்கள் கட்டுரை படித்து மகிழ்ந்தேன்.

பலமுறை சுற்றிய மதுரையை உங்கள் எழுத்தை வாசித்தப் பின்னர் மீண்டும் ஒருமுறை ஊர் சுற்ற தோன்றியது.வாய்ப்பு இருப்பின் இனி வரும் காலங்களில் கோவை ஈரோடு பற்றியும் எழுதிட வேண்டுகிறேன்.

உங்கள் கட்டுரை வாசிப்பதற்கு முன் அமைச்சர் ஒருவரின் மதுரை நகர் பற்றிய பேட்டி படித்தேன்.மதுரை ஸ்மார்ட் சிட்டி என்று பேட்டி கொடுத்ததை எண்ணி மனதுள் சிரித்தேன்.

வெகுநாட்களாக வாசிக்க வேண்டிய நூலாக அழகர் கோயில் நூல் காத்திருப்பிலேயே உள்ளது. விரைந்து வாசிக்க உங்கள் எழுத்து துணை மற்றும் தூண்டுதலால் உள்ளது.

நன்றி.

அன்புடன்

சங்கர்

அன்புள்ள ஜெ

மதுரையில் கட்டுரை வாசித்தேன். இன்று இந்தியாவிலுள்ள தொன்மையான நகரங்களெல்லாம் இப்படித்தான் உள்ளன. காசி கயா மதுரா பண்டரிப்பூர் புரி எல்லாமே இதே நிலைமையில்தான் உள்ளன. இதைச் சீரமைக்க ஒரு முறையான திட்டமிடல் வேண்டும். ஆனால் செலவு அல்ல முதலீடு. முதலில் இந்த தொன்மையான நகரங்களின் தொன்மையான பகுதிகளை ஒரு ஆர்டினன்ஸ் வழியாக அரசு [மத்திய அரசால்தான் முடியும்] கைப்பற்றவேண்டும். அதன்பின்னர் இந்த கோயில்களின் சுற்றிலும் இருக்கும் நவீன கட்டிடங்கள் எல்லாவற்றையும் அகற்றவேண்டும். அவற்றை பழமை கெடாமல் அப்படியே உறுதியாக அழகாக பேணவேண்டும். அவற்றைச் சுற்றி வலுவான காவல் கொண்ட வேலி வேண்டும்.

தேவையற்ற கடைகள் அங்கே வர விடக்கூடாது. அங்கே இருப்பவர்களை கணக்கெடுத்து அவர்களுக்காக ஒரு துணைநகரம் உருவாக்கி கொடுக்கலாம்.நஷ்ட ஈடு கொடுக்கலாம். ஆனால் இப்படி மீட்கப்பட்ட நகரத்தில் அரசுக்கு வரும் வருவாயில் பத்தே ஆண்டுகளில் அந்த முதலீடு திரும்ப வந்துவிடும். மிக எளிதானது இது. இந்தோனேசியா பாலி போன்ற பல ஊர்களில் மிக வெற்றிகரமாகச் செய்யப்பட்டது. நம்மைவிட பொருளாதார வளர்ச்சி இல்லாத நாடுகள் அவை. ஆனால் அதற்கு ஒரு அரசியல்தெளிவும் உறுதியும் வேண்டும். அப்படி ஒரு தலைமை நமக்கு அமையவே இல்லை

சரவணக்குமார் ஜி

முந்தைய கட்டுரைவெண்முரசு- வாசிப்பின் எல்லைகள்
அடுத்த கட்டுரைஇலங்கையிலிருந்து ஒரு கடிதம்