எழுத்தாளனின் பார்வை
அரசியலும் எழுத்தாளனும்
அன்பு ஜெ,
”எழுத்தாளனின் பார்வை” கடிதத்தைப் படித்தேன்.”புனைவென்பது நனவிலிக்குள் ஓர் ஊடுருவல் [A raid into the unconscious] ” என்ற வரி எத்துனை உண்மையென்பது உங்களின் விளக்கங்கள் வழி என்னையே சுய பரிசோதனை செய்து அறிந்தேன் ஜெ. படிக்கும்போது நான் என்ன செய்கிறேன் என்பதை/ நானே அறியாத நானைக் கூட துள்ளியமாக இவரால் எப்படி அறிய முடிகிறது என்று நினைத்துக் கொண்டேன்.
இங்கு நான் பாலா அவர்களின் கடித்ததை வாசிக்கும்போது ஒரு சிறு புன்னகை வந்தது. முதன்முதலில் போட்டித் தேர்வு எழுதும் இளைஞர்கள் பொதுவாக உணர்ச்சிவசப்படுபவர்களாக, மிகுந்த நம்பிக்கையுடன், நேர்மறையாகவே பெரும்பாலும் இருப்பார்கள். அதுவும் முதல் இரண்டு வருடங்களில் கேட்கவே வேண்டாம். அதற்கு நேர்மறாக பயப்படுபவர்களும் உண்டு.
ஒரு வருடத்தின் புத்தக அறிவு (பெரும்பாலும் CBSE புத்தகங்கள், சில வாடிக்கையாகப் படிக்கும் தேர்வுக்கான பாடவாரி புத்தகங்கள்), செய்திவாசிப்பு, அரசு சார் நிகழ்வுகள், செயல்பாடுகளைத் தெரிந்தபின் என அவன் தன்னை முழுமையாக சார்ஜ் ஏற்றிக் கொள்ளும்போது இன்னும் OPTIMISTIC ஆக மாறிவிடுவான். அதே நிலையிலேயே இவர்கள் அதிகார வர்க்கத்தில் நுழைந்தால் (CIVIL SERVANT) குடிமைப் பணியாளன் என்பதிலிருந்து ஒரு முழுமையான (GOVERNMENT SERVANT) அரசு அதிகாரியாக தன்னையறியாது மாறுவதைப் பார்க்கலாம்.
இவர்கள் OPTIMISTIC VIEW என்று சொல்லி நிதர்சனத்தையே ஏற்க மறுப்பவர்கள். ஒரு கட்டத்தில் அரசுக்கு வக்காலத்து வாங்கும் வக்கீல்களாகவே அவர்கள் மாறிப்போவர்கள். ஆளும் கட்சிகளும் அதைத் தான் எதிர்பார்க்கிறது. CONSTRUCTIVE CRITISISM; GRASS ROOT DEMOCRACY, BOTTOM UP APPROACH, EMPOWERMENT etc etc மற்றும் எதையெடுத்தாலும் POLITICALLY, SOCIALLY, ECONOMICALLY, ENVIROMENTALLY, SUSTAINABLY என்ற வார்த்தைகளை உள்சேர்த்துக் கொள்வார்கள். எல்லா பிரச்சனைகளுக்கும் ஏற்கனவே அரசிடம் ஒரு தீர்வு, திட்டங்களின் வாயிலாக, கொள்கைகள் வாயிலாக இருக்கிறது என்றும். அதை கீழ் நிலையிலிருக்கும் அரசாங்க அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், மக்களாலும் தான் சரியாக பயன்படுத்தவில்லை என்ற எண்ணம் இருப்பதையும் காணலாம். காலம் முழுவதும் இந்த மாயை எண்ணத்துக்குள் உழன்று அரசின் அதிகாரியாக மட்டுமே இருந்து நிதர்சனத்தை கவனிக்கத் தவறிவிட வாய்ப்புள்ளது. சிலர் மாறுவதுமுண்டு.
தரவுகள் எங்ஙனம் எடுக்கப்படுகின்றன! அறிக்கைகள் எங்ஙனம் தயாரிக்கப்படுகின்றன! என்பதை அரசு அமைப்பின் உள்ளிருந்தோ வெளியிருந்தோ கவனித்தாலே பல உண்மைகள் விளங்கிவிடும். இந்த மாயையிலிருந்து வெளிவந்து நிதர்சனத்திலுள்ள குறைகளைக் கண்டு, அதற்கு தீர்வு காணும் மிகச் சில குடிமைப் பணியாளர்கள், பல சமயம் வெளியில் தெரிவதுமில்லை, தெரியவிடுவதுமில்லை. நிதர்சன குறைபாடுகளை சுட்டுபவர்களைக் கண்டு எரிச்சலுருவதும்; ஒரு துறை சார்ந்த குறைபாடுகளுக்கான குறைகளை, தரவுகளின் வழி மட்டுமே அல்லது வல்லுனர்கள் மட்டுமே சொன்னால் தான் ஏற்றுக் கொள்வோம் என்று சொல்பவர்கள் கடைசி வரை GOVERNMENT SERVANT ஆக மட்டுமே இருக்கமுடியுமே ஒழிய, ஒரு போதும் PUBLIC SERVANT ஆக அவர்களால் மாற இயலாது.
நான் கூட அப்படி ஒரு optimist ஆக கல்லூரி காலங்களில் இருந்திருக்கிறேன். Pessimist களைக் கண்டாலே எரிச்சல் வரும் எனக்கு. ”ஏன் எதற்கெடுத்தாலும் அரசைக் குறை சொல்கிறார்கள்?” என்று கோபம் கொள்வேன். புத்தக அறிவினின்று நிதர்சன வாழ்க்கையை உற்றுப் பார்க்க ஆரம்பித்ததும் அவையாவும் ஆவியாகிட்டன. விவசாயத்திற்கான திட்டங்களை தேர்வுக்காக பட்டியலிட்டபோது வெறும் தலைப்பு மட்டுமே இரண்டு பக்கம் வந்தன. ஆனால் அது என் தாத்தாவின் வாழ்க்கையில், அவர் வயல்காட்டை சுற்றியிருக்கும் பல விவசாயிகளின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. அவர்கள் தலைமுறை தலைமுறையாக கடினப்பட்டு, ஏமாற்றப்பட்டு, கருமமே கண்ணாக பாடுபட்டு மாண்டு போகிறார்கள்.
இந்த நிதர்சன வாழ்க்கையை ஒரு சுட்டு விரலால் PESSIMISM என்று கடந்து போக இயலாத போது தான் நான் அந்த மாயையிலிருந்து வெளிவந்தேன். இன்னும் என் பயணப்பாதையினின்று பல நிதர்சன தரிசனத்தை சொல்ல முடியும். ஆனால் அது அவரவர் கண்டடைய வேண்டியது என்பதையும் உணர்கிறேன். உணராமல் இறுதிவரை அப்படியே அதே படி நிலையில் இருந்து மாண்டு போகிறவர்கள் பற்றி புன்னகை என்பதைத் தாண்டி ஒன்றும் சொல்வதற்கில்லை.
ஓர் எழுத்தாளன் நிதர்சனத்தின் உச்சமானவன் அவனை OPTIMISTIC ஆக மட்டுமே இரு என்று சொல்வதென்பது அவனுடைய இடத்திலிருந்து இறங்கி கீழே வந்து பார்ப்பதான ஓர் கிணற்றுத் தவளை பார்வையை பார்க்கச் சொல்லுதலாகும். நாஞ்சில் அவர்கள் சலித்துப்போய் சொன்ன அந்த வரிகளை நினைத்துக் கொண்டேன்.
அன்புடன்
இரம்யா.
அன்புள்ள ஜெ,
எழுத்தாளனின் பார்வை கட்டுரையில் ஒரு விஷயம் எனக்கு மிகமிக முக்கியமானதாகப் பட்டது. எந்த அடிப்படை வாசிப்பும் புரிதலும் இல்லாதவர்கள், நுண்ணுணர்வின் சாயலே இல்லாதவர்கள், ஓர் அரசியல்நிலைபாடு எடுத்துவிட்டதனாலேயே இலக்கியவாசகர்கள் எல்லாம் ‘அப்பாவிகள்’ அல்லது ‘அசடுகள்’ அவர்களை எழுத்தாளர்கள் ‘கடத்திக்கொண்டு’ சென்றுவிடுகிறார்கள் என்று சொல்கிறார்கள்.
படித்தவனை படிக்காத பாமரன் இளக்காரமாக நினைக்கும் இந்தச் சூழலே பரிதாபமாக இருக்கிறது. முன்பும் இப்படித்தான் இருந்திருக்கும். ஆனால் முகநூலில் இந்த அரசியல்பாமரர்களின் மிதப்பும் தர்க்கமும் மிக ஆபாசமாக தெரிகின்றன
சர்வேஷ்