எழுத்தாளனின் பார்வை
வணக்கம் ஜெ
‘எழுத்தாளனின் பார்வை’ கட்டுரையில் நீங்கள் கூறிய ஒவ்வொரு வரியும் நிறைவளிக்கக்கூடியதாய் இருந்தது. ஒரு நிபுணனின் ஆய்வுக்கட்டுரையை விட ஒரு இலக்கியவாதியின் சிறுகதைக்கு உண்மைத் தன்மை அதிகம் என நான் பலமுறை எண்ணுவதுண்டு. மூன்றாம் மனிதனிடம் நிரூபிக்க அவசியமில்லாத உண்மை அது. ஒரு ஆய்வாளனின், ஒரு சிறந்த அதிகாரியின் ஆய்வும், கருத்தும் யார் சீண்டினாலும் சீண்டாவிட்டாலும் அப்படியே கிடக்கும். அது கூட்டத்தை நோக்கிப் பேசுவது. ஆனால் இலக்கியம் யார் கண்ணுக்கும் படாது. அதைத் தனிமையில் எடுத்துக் பார்க்கும் ஒருவனுக்கு மட்டும் ரகசியமாய்த் தெரிவது. அது தனியொருவனின் அகத்திற்கு மட்டும் காட்சியளிக்கும்; கூட்டத்திற்கு அல்ல.
அக்கடிதத்தில் பாலா, மருத்துவர் ஒருவர் சொன்னதாகச் சொன்னார். ‘மரணித்த நபரின் உறுப்புகள் சமூகத்துக்குச் சொந்தம்’ என்று. என்னைப் பொறுத்தவரை இது அபத்தமானது. இறந்த மனிதனின் உடலை ஆய்வு செய்து அறிவது வேறு. ஒருவரின் உறுப்பை இன்னொருவருக்கு வைப்பது வேறு. இன்று தொழில்நுட்ப அறிவே மனித சமுதாயத்தின் பெருஞ்சாதனையாகப் பேசப்படுகின்றன. உறுப்பு மாற்று சிகிச்சைகள் பலருக்கு பூரிப்பு அளிக்கின்றன. அது எதோ இன்று வியாபாரமாக இருக்கிறது என்பதால் அதை பற்றி எதிர்மறையாகச் சொல்லவில்லை. அது வியாபாரமாக இல்லாவிட்டாலும், இலவசமாகவும், சேவையாகவும் இருந்தால் கூட அதில் கொண்டாட ஏதுமில்லை. அதை தொழில்நுட்பக் கருவிகளின், தொழில்நுட்ப அறிவின் வெற்றியாக மட்டுமே கொள்ள முடியும். தொழில்நுட்ப வளர்ச்சியை மட்டுமே மனித சமூகத்தின் வளர்ச்சியாகக் கொள்ளமுடியாது.
என்னுடைய உடலுறுப்பு எனக்கானது மட்டுமே. எனது உடலமைப்புக்கும், செயல்பாட்டுக்கும் மட்டுமே பூரணமாய்ப் பொருந்தக் கூடியது. இன்னொருவருக்கு அது ஏற்புடையதல்ல. இன்னொருவருக்கு என் உறுப்பை வைத்தால் அது செயல்படாது என்பதல்ல. எப்படியும் அப்படி இப்படி என்று அது செயல்பட்டுவிடும். ஆனால் அது எனக்கானதே. அது என்னுடனும், எல்லாமுடனும் சேர்ந்தே வளர்ந்தது. அதாவது, பல்வேறு தொழிற்சாலையில் பல்வேறு உதிரி பாகங்களைத் தனித்தனியே தயாரித்து, அதை ஓரிடத்தில் வைத்து ஒன்று சேர்த்து, ஒரு இயந்திரத்தை இயங்க வைப்பது போன்றதல்ல மனித உடல். நான் கருவாக உருவாகி வந்தபோதே எல்லாம் சேர்ந்தே நான் உருவாகி வந்தேன். என் உடலுக்கென்று ஒரு ஒத்திசைவு இருக்கிறது. அவ்வொத்திசைவுக்கு ஏற்றார் போலத்தான் என் உறுப்புகள் இயங்கும். இன்னொருவருடைய ஒத்திசைவு வேறு. தொழிற்சலையில் உதிரி பாகங்கள் தயாரிப்பது போன்றே இன்றைய மருத்துவம் மனித உடலைப் பார்க்கிறது.
இதேபோன்று விந்து தானம், செயற்கை கருவுறுதல், வாடகைத் தாய் முறை போன்ற பல்வேறு விஷயங்கள் அபத்தமாகவே தெரிகின்றன. இருப்பதிலேயே ஆகப் பெரிய அபத்தம் என்றால் அது விந்து தானம் தான். காதல் கலக்காத விந்து ஒரு அசிங்கம். தன்னைச் சாராத ஒரு பெண்ணுக்கு ஒருவன் தன் விந்தை மட்டும் தனியே எடுத்துக் கொடுக்கிறான் என்றால், அது அந்த விந்துக்கும் கேவலம், அந்தப் பெண்ணின் கருவறைக்கும் கேவலம்.
நான் பள்ளியில் படித்த நாட்களில் என் வீட்டில் இருந்த பசுமாட்டிற்கு ஒவ்வொரு ஆண்டும் மாட்டு டாக்டர் வந்து சினை ஊசி செலுத்தி விட்டுச் செல்வார். பின்பு அது கன்று ஈனும். எனக்கு அப்போது அது பெரியதாகத் தெரியவில்லை. சாதாரணமான ஒன்றாகவே எண்ணினேன். ஆனால் இப்போது நினைத்துப் பார்த்தால் அது எவ்வளவு கொடுமையானது ? பூமியில் மனித இனத்தை விட மேம்பட்ட இனம் ஒன்று உருவாகி, அது மனிதனை அடிமைப்படுத்தி அடைத்து வைத்து அதற்குச் சினை ஊசி மூலமாகவே இனப்பெருக்கம் செய்வித்து, அதை உடலுறவே கொள்ளச் செய்யாமல் தடுத்து வைத்திருந்தால் எவ்வளவு கொடுமையானதோ, அதுபோன்றதுதான் இதுவும்.
இதுபோன்றதுதான் வாடகைத் தாய் முறை. யாரோ ஒரு மூன்றாம் மனிதருக்குப் பிள்ளை பெற்றுக் கொடுப்பது. கருப்பை என்ன இன்குபேட்டரா ? இன்று பெருகிவரும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தொழில்நுட்பத்திற்கு வெற்றியாக இருக்கலாம். ஆனால் அது மனித சமுதாயத்தின் வீழ்ச்சி. ஒரு சமூகமே வீரியமிழந்து பிள்ளை பெற திராணியாற்றுப் போய்க்கொண்டிருக்கிறது. அது பற்றி இங்கு கவலையில்லை. செயற்கைக் கருத்தரித்தலை சாதனையாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த விஷயங்கள் அனைத்தும் இன்று நடைமுறையில் ஒரு நியாயத்தைக் கொண்டிருக்கும். ஆகவே அதைத் தனியே எடுத்துப் பேசிப் பலனில்லை. அவைகளுக்கு என்ன நியாயம் சொல்லப்பட்டிருந்தாலும் அடிப்படையில் அவையெல்லாம் தொழில்நுட்பக் கருவிகளின் வெற்றியை மட்டுமே குறிக்கிறது. நாம் இன்று முன்னேற்றம், வளர்ச்சி என்று சொல்வதெல்லாம் அதைமட்டுமே. தொழிலுட்பமே தவறு என்பதல்ல. ஆதியில் மனிதன் நெருப்பைக் கண்டுபிடித்ததுகூட தொழில்நுட்பம்தான். ஆனால் இன்று, கருவிகளின் நெரிசலில் நாம் இழந்தவைகள் என்ன ?
முழு சூழலையும் கெடுத்துவிட்டு ஆரோக்கியத்தையும் தொலைத்துவிட்டோம். குறைந்தபட்சம் நோய்களும், உறுப்புகளின் செயலிழப்பும் இல்லாத சமுதாயமே சிறந்ததாக இருக்கும். ஏனெனில் அவ்வெற்றி முழுமையானது, உள்ளார்ந்த வெற்றி. அதில், இதயம், கிட்னியையெல்லாம் கழற்றி மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது.
நான் இவ்விஷயங்களை இங்கே குறிப்பிட்டது, இவைகள் தீமை, குற்றம் என்றோ, இவைகளை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதற்காகவோ அல்ல. அது வீண். இன்றய நிலையில் இவை இப்படித்தான் இருக்கும். அதேவேளையில் இவைகளை ஒரு தனிமனிதனின், சமுதாயத்தின் அடைவு என்றோ நிறைவு என்றோ எண்ணமுடியாது. ஆகவே தொலைவில் நின்று இவைகளை வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
விவேக் ராஜ்