வீடுபெறுதல்

லக்ஷ்மி மணிவண்ணனின் ‘கடலொருபக்கம் வீடொருபக்கம்’ சிறிய கைக்கடக்க வடிவ கவிதைநூல். அழகிய அட்டையும் அச்சும் கட்டமைப்பும் கொண்டது. தன் கவிதைகளை தானே சிறிய தொகுதிகளாக தொடர்ச்சியாக வெளியிடலாமென நினைக்கிறார். சென்ற நவம்பர் 23 அவருடைய பிறந்தநாள். அதையொட்டி இந்த முதல்தொகுதி வெளிவந்துள்ளது.

நான் அந்நூலை வெளியிடவேண்டும் என விரும்பினார். நான் 25 ஆம் தேதிதான் வெளியூரிலிருந்து வந்தேன். ஆகவே 26 அன்று அந்நூலை என் வீட்டில் வைத்து வெளியிட்டேன். அருண்மொழி பெற்றுக்கொண்டாள். புகைப்படக்காரர் ஆனந்த், நண்பர் மாதவன் [குவைத்] ஆகியோர் கலந்துகொண்டார்கள். அஜிதன், சைதன்யா உடனிருந்தார்கள்.

லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைகள் எழுதத் தொடங்கிய காலம் முதல் அவரை படித்துவருகிறேன். ஆரம்பகாலத்தில் அவருடைய கவிதைகள் கொந்தளிப்பு நிறைந்தவை. அவருடைய அன்றாடவாழ்க்கையின் கசப்புகளும் உலகியல் ஒவ்வாமைகளும் மானுடஉறவுகளின் சிடுக்குகளும் அப்படியே வெளிப்படுபவை அவை. ஒருவகை ஆவேசமான நாட்குறிப்புகள் போன்றவை

அத்தகைய கவிதைகளின் தேவையை, இடத்தை நான் புரிந்துகொள்கிறேன். தொடக்ககால கவிஞர்கள் அவற்றைத்தான் எழுதுகிறார்கள். அவற்றையே வாசிக்கவும் விரும்புகிறார்கள். உலக இலக்கியத்திலும் அவ்வகை வெளிப்பாட்டுக்கு முன்னுதாரணமாக அமைந்த சில கவிஞர்கள் உண்டு. உணர்ச்சிவெளிப்பாட்டுக்கு கவிதையில் பிரிக்கமுடியாத இடமும் உண்டு

ஆனால் உணர்ச்சிவெளிப்பாடு மட்டுமே உள்ள கவிதை, நேரடியாக அது நிகழும் கவிதை, தன்னளவில் பண்படாதது. ஒரு போரின் அழிவை, ஒரு மாபெரும் காலக்கொந்தளிப்பைச் சொல்லவரும்போது மட்டும் அந்தப் பண்படாத தன்மைக்கு ஒரு குறியீட்டுப் பொருளும், கவிதைமதிப்பும் உருவாகிறது. ஒரு தனிமனிதனின் உணர்வுகளென மட்டுமே அவை வெளிப்படும்போது அவை கவித்துவத்தின் எல்லைக்கு சற்று முன்னரே நின்றுவிடுகின்றன

கவிதை என்பது எந்நிலையிலும் நிலைகொள்ளலாம். கொந்தளிப்பும் அலைக்கழிப்பும் முதல் நிலை. தேடலும் தவிப்பும் இரண்டாம்நிலை. கண்டடைதலும் அமைதலும் மூன்றாம்நிலை. கொந்தளிப்பும் அலைக்கழிப்பும் கவிதையை சிதறடிக்கின்றன.தேடல் கவிதையை கூர்மையாக்குகிறது. கண்டடைதலும் அமைதலுமே ஆழத்தை உருவாக்குகின்றன

இந்த கண்டடைதலும் அமைதலும் ஒரு கொள்கையாக அன்றி, விடையாக அன்றி, அக்கவிஞனின் ஆளுமைக்கனிவாக மட்டுமே ஆகி அவன் மொழியில் இயல்பாக வெளிப்படுமென்றால் அவன் அறியாமல் எழுதும் வரிகள்கூட கவித்துவம் கொள்கின்றன. கவிதை என்றால் என்ன என்ற கேள்விக்கு ‘கவிஞனால் எழுதப்படுவது’ என்று தேவதேவன் ஒருமுறை பதில் சொன்னார்.

லக்ஷ்மி மணிவண்ணனின் முதல்காலகட்ட கவிதைகளில் சிலவே எனக்கு உவப்பானவை. அதை எழுதியிருக்கிறேன். இந்த இரண்டாவது காலகட்டத்தில் அவருடைய கவிதைகளில் இரண்டு போக்குகள் உள்ளன. கண்டடைதல்களை நேரடியாகச் சொல்லும் கவிதைகள், அடைந்து நிறைந்த ஒன்று மொழியில் இயல்பாக வெளிப்படும் கவிதைகள். இவ்விரண்டாம் வகை கவிதைகளில் அவர் இன்று தமிழில் எழுதிக்கொண்டிருக்கும் முக்கியமான கவிஞராக வெளிப்படுகிறார்.

இந்தவகை கவிதைகளில் லக்ஷ்மி மணிவண்ணன் முயற்சியின் சிடுக்கு தெரியாத மொழி கொண்டிருக்கிறார். பேச்சின் ஒழுக்குடன் கவிமொழி நிகழ்கிறது. அவர் சொல்லவந்ததை அவர் சொல்லவில்லை, அவர் சொல்வதில் சொல்லவந்தது வந்து உடனுறைகிறது. அந்த இயல்புநிலையே கவிதையின் உயர்தளம் என நான் நினைக்கிறேன். கவிதை எழுதுபவன் கவிஞனாக ஆனபின் நிகழ்வது அது.

[தேவதச்சனைப் பற்றியும் எனக்கு இந்த கணிப்பு உண்டு. அவருடைய ஆரம்பகால கவிதைகள் அறிவார்ந்த தத்துவத்தன்மை கொண்டவை. இரண்டாம் கட்டக் கவிதைகளில் அவர் இயல்பாகச் சென்றுகொண்டிருக்கிறார். தேவையான இடத்தில் தத்துவம் வந்து இணைந்து விலகிக்கொள்கிறது. பின்தொடரும் வேட்டைநாய் போல. இன்றிருக்கும் கவிஞர்களில் தேவதச்சன் போல முயற்சியின் கசங்கல் சற்றும் இன்றி வெளிப்படும் இன்னொருவர் இல்லை}

கடலொருபக்கம் வீடொரு பக்கம் என்ற தலைப்பே உதாரணம். கவிதைத்தொகுதிக்கான தலைப்புகளில் இருக்கும் எந்த குறிப்புணர்த்தும்தன்மையும் இல்லை. ஆனால் நிலையற்ற, எல்லையற்ற,கொந்தளிப்பு ஓயாத பெருங்கடல் அங்கே. நிலைகொண்ட, சுவர்களால் வரையறைசெய்யப்பட்ட, அமைதியான வீடு இங்கே. அந்த இரண்டு எல்லைகளையும் ஒருங்கே காணும் ஒரு நிலையில் அமைந்தவை இத்தொகுதியின் நல்ல கவிதைகள்

அச்சு அசல் ஒரு நாய்க்குட்டி

குழந்தையைப் போலவே இருக்கிறது

குழந்தையைப் போலவே விளையாடுகிறது

குழந்தையைப் போலவே குதிக்கிறது

ஆர்ப்பரிக்கிறது

குழந்தையைப் போல

கனவுகாண்கிறது

ஏதோ ஓரிடத்தில் இருந்து

குழந்தை நாயாகிறது

குழந்தை பூனையாகிறது

நரியாகிறது

எலியாகிறது

மனிதனாகிறது

பல ஊர்களும்

பிரியும்

முச்சந்தி போலொரு இடம்

அதனதன்

ஊர்களுக்கு

அதிலிருந்து

திரும்பிச் செல்கின்றன

பல ஊர்களுக்கு

பல கிளைகளுக்கு

குழந்தை தன்னில் நீங்கியதும்

உரியவை வந்து எடுத்துச் செல்கின்றன

தங்கள் தங்கள் மிருகங்களை

மனிதனைப் பற்றிய என்றுமுள்ள வியப்பு ‘சின்னக்குழந்தையா இருந்தப்ப எப்டி இருந்தான் தெரியுமா?”என்று அம்மாக்களால் மீளமீளச் சொல்லப்படுகிறது. ஹிட்லரின் குழந்தைப்பருவப் படம் அளிக்கும் திகைப்பைப் பற்றி ஓர் உரையாடல் நித்யா குருகுலத்தில் நிகழ்ந்ததை நினைவுகூர்கிறேன். அதிலிருக்கும் அந்த கள்ளமற்ற, தயக்கம்கொண்ட, சிறுவனில் அந்த மாபெரும் கொலைக்காரன் உறைந்திருக்கிறான். விதைக்குள் இருக்கும் கரு போல.

குழந்தை குழந்தையைப்போலவே இருக்கிறது. பின்னர் குழந்தை மனிதனாகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான ஆளுமையாக மாறுகிறது. ஒரே குழந்தையே வெவ்வேறு வகை ஆளுமைகளை மாறிமாறிச் சூடிக்கொள்கிறது

ஒரு முச்சந்தி. வெவ்வேறு ஊர்களுக்கு சென்று சேர்வதற்கான வாய்ப்புகளின் மையப்புள்ளி. பின்னர் வெளிப்பாடுகொள்வனவற்றின் நிகழ்வாய்ப்பாக குழந்தையை காண்கிறது இக்கவிதை. அதன் இயல்பான கூறுமுறையில் அந்த தீராத வியப்பை சென்று தொட்டுவிடுகிறது.

காட்டில் அண்டைகூட்டிப்

பொங்கிக் கலைந்த இடத்தில்

தெய்வங்கள் வந்துகூடிக் கலைந்தது

போலும்

தெரிகிறது

வீட்டின் பினபுறத்தில்

விறகடுப்பில்

பொங்கிக்கலைந்த பின்னர்

காடுவந்து

சற்றுநேரம்

அமர்ந்து ஓய்வெடுக்கிறது

இதற்கு நேர்மாறான அனுபவத்தை நான் காட்டில் அடைந்திருக்கிறேன். அடர்காட்டில் எவரோ அடுப்புகூட்டி சமைத்துச் சென்றிருப்பார்கள். சாம்பலும் உணவுமிச்சங்களும் இலைகளுமாக கிடக்கும் அந்த இடம் மட்டும் சுவர்கள் இல்லாவிட்டாலும் ஒரு சமையலறையாக, ஒரு வீடாக கண்ணுக்குத்தெரியும். நான்குபக்கமிருந்தும் செடிகள் எழுந்துவந்து அதை காட்டுக்குள் இழுத்து மூழ்கடிக்க முயல்கின்றன என்றி தோன்றும்

இக்கவிதையில் காடும் தெய்வங்களும் ஒன்றென இணைக்கப்படுகின்றன. வழிபட்ட இடத்தில் தெய்வங்கள் வந்து சென்றிருக்கின்றன. சமைத்து உன்டு மீள்வதுவரை காடு மனிதனுக்கு சற்று விலகி இடம் அளிக்கிறது

நவீனக் கவிதையின் அழகுகளில் ஒன்று நுண்சித்தரிப்பு. நுண்சித்தரிப்பு என இன்று எழுதிக்குவிக்கப்படுபவை அன்றாட உண்மை ஒன்றை அன்றாடநிகழ்வில் கண்டடைபவை. அவற்றை தாங்கிக்கொள்ளலாம். பொய்யான அரசியல்கருத்துக்களை அன்றாடத்தில் கண்டடையும் கவிதைகளை கொசுத்தொல்லைபோல எதிர்கொள்ளவேண்டிய நிலைக்கு வந்துவிட்டோம்

கலையில் அமையும் நுண்சித்தரிப்பு ஒர் அபூர்வத்தன்மை கொண்டிருக்கவேண்டும். மிகமிக நுண்ணியதாக, மிகமிக அரியதாக, மிகமிக கொடியதாக. ஆனால் எவ்வகையிலாயினும் அந்த  ‘மிகமிக’ என்பது இன்றியமையாதது. கவிஞன் அதனூடாக ஒருபோதும் நாம் நம் அன்றாடத்தில், நம் வழக்கமான சிந்தனையில் கண்டடைவனவற்றைச் சொல்லக்கூடாது. அதற்கப்பால் அவன் செல்வதன் வழியாகவே அக்கவிதையை அவன் எழுதியமைக்கு நியாயம் செய்கிறான்

விதவையான தாய்

தனது இரண்டு மகள்களுக்கும்

விதவைக் கணவனை

பங்குவைத்துக்கொடுத்தாள்

பிறகும் பற்றாது என்று

ஒவ்வொரு கைச்சோறாக

வாரிவாரிக் கொடுத்தாள்

கசந்தெடுத்து உண்டு

பெரியவர்கள் ஆனார்கள்

வர்களில்

சமாதியாகிய பெண்மக்கள்

அழுந்தி முகத்தில்

வாள்கொண்டு கீறிக் காய்ந்த வடுவாகத்

தெரிந்தான்

உயிர்மகனுக்குள் ஒடுங்கியிருந்து

மகனுக்குள் இருந்து

“இந்தச் சாப்பாட்டை சரியாகச் செய்யக்கூடாதா

எந்நேரமும் சொல்லணுமா”

என்று நித்தம் கிடந்து அரற்றுகிறான்

அவன்

”இங்கன எங்கயோதான்

மனுசன் குரல் கேக்கு”

என்று தேடிக்கொண்டிருக்கிறாள்

விதவையான தாய்

பத்துவருசமாச்சு காரியம் முடிந்து

தன் மகள்களை சமாதிகளாக்கி, அவர்களில் கருவடிவில், ஆணாகவே எஞ்சும் கணவனின் நுண்மையை எப்படியோ கண்டடைந்து அலைக்கழியும் அன்னையின் இந்த சித்திரம் நுண்ணிய சொற்கோப்பால் மட்டுமே சொல்லத்தக்கது. கவிதை அதற்காகவே எழுதப்படவேண்டும்

கடல் இன்னும் கொந்தளித்துக்கொண்டிருக்கிறது லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைகளில். ஆனால் அவர் கடலோரத்தில் அமைந்த நிலைத்த வீட்டில் இருந்து அதை நோக்கி எழுதுகிறார்.

முந்தைய கட்டுரைமீரா- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு செவியில்…