தாபமும் பித்தும்

அன்புள்ள ஜெ,

2014ல் வெளிவந்த நாள்முதல் நீலம் நாவலைப்பற்றி எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். அதை எழுதும்போது அந்தப் பித்தும் கொந்தளிப்பும் உங்களுக்கு மட்டுமே உரியது என்றும், அதை பொதுவாக இன்னொருவர் புரிந்துகொள்ள வாய்ப்பே இல்லை என்றும்தான் நினைத்திருப்பீர்கள். இத்தனை வாசகர்கள் தொடர்ச்சியாக அந்த கனவுநிலைக்குள் செல்லமுடிவதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நான் நீலம் நாவலை இப்போதுதான் படித்தேன். ஒரே வீச்சில் நீலம் வரை வந்தபின் அக்டோபர் முதல் அந்த ஒரு சிறுநாவலிலேயே இருந்துகொண்டிருக்கிறேன். என்னால் அதிலிருந்து கரையேற முடியவில்லை. ஒரு மகத்தான நாடகம். மனிதநாடகம் என்றெல்லாம் சொல்வார்களே அது. இரண்டு மனிதர்கள் வடிவில் இயற்கை ஆடும் லீலை. ஆண் பெண். அல்லது பரமாத்மா ஜீவாத்மா. கலையின் மகத்தான நடனம். எத்தனை உணர்ச்சிகள். நிகழ்ச்சிகளாக இவற்றை வாசிக்கமுடியாது.குறியீடுகளும் தனித்தனி வரிகளில் வெளிப்படும் உக்கிரமான உணர்ச்சிகளுமாகவே வாசிக்கமுடியும். அப்போதுதான் நாவல் பிடிபடும்.

நானும் என் தோழிகளும் 2019 முதல் வெண்முரசு படிக்க ஆரம்பித்தோம். நான் முதலில் படித்தேன். மற்றவர்களை படிக்கவைத்தேன். மதிய உணவுநேரத்தில் வெண்முரசு பற்றிப் பேசுவோம்.ஆனால் அவர்களால் நீலத்தை வாசிக்கமுடியவில்லை. அந்த மொழி தடையாக இருக்கிறது என்று சொன்னேன். அதன்பிறகு நான் வெண்முரசு நாவலில் சிலபகுதிகளை ஏற்கனவே படித்ததுபோல நீலத்தை படிக்க ஆரம்பித்தேன். படிக்கக்கேட்டபோது அத்தனைபேரும் கிறுகிறுத்துப் போனார்கள். என்னடி இப்படி ஒரு பித்தாக இருக்கிறது என்றுதான் எல்லாருமே சொன்னார்கள். பல இடங்களில் நாங்கள் கண்கலங்கி அமர்ந்திருந்துள்ளோம்

இந்த நாவல் ஏன் இப்படி கவர்கிறது என்றால் எல்லா பெண்களும் நீலத்தின் ராதையின் நிலைவழியாக மானசீகமாகவாவது வந்திருப்பார்கள் என்பதனால்தான் . எங்கள் சீனியர் டீச்சர் ஒருவர் உண்டு. அவர் தன் மணவாழ்க்கையில் 29 ஆண்டுகள் கணவனை பிரிந்தே வாழ்ந்தவர். அவர் கணவர் வளைகுடா நாடுகளில் இருந்தார். அங்கேயே செத்தும்போனார். ராதையின் நிலையிலேயே வாழ்க்கையை முடித்தேன் என்று சொன்னபோது அவர் அழுதுவிட்டார்

நீலம் ஒரு தனி நாவலாக என்றைக்கும் நம் மொழியில் இருக்கும் என நினைக்கிறேன். அதிலுள்ள தாபத்துக்கு அழிவே கிடையாது

ஜி.நாகலட்சுமி

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

நலம். நான்,  நீலம் எனும் பித்துடன் இதை எழுதினாலும், அன்று சனிக்கிழமை என்று உறுதியாகச் சொல்லமுடியும்.  இங்கு அமெரிக்க இலக்கிய வாசக நண்பர்கள் இணையவழி இணைந்து படைப்புகளைப் பற்றி பேசுவது சனிக்கிழமை மாலைப் பொழுதில்தான். அன்று, வேணு தயாநிதியின் படைப்புகளைப் பற்றி பேசினோம். வேணு தயாநிதியின் ‘மின்னியாப்பொலிஸில் திருப்பள்ளியெழுச்சி’ எனும் கவிதை பற்றி பேசிய நண்பர் வெங்கட் ப்ராஸாத் , நீலத்தில் ராதையை வந்து தழுவும் தென்றலைப்போல, இக்கவிதையில், விடுமுறை நாள் ஒன்றின் காலையில் உறங்கும் குழந்தையைக் காணச் செல்லும் காற்று என்றார். எங்கோ மறைந்திருந்த பித்து அப்பொழுதே பற்றிக்கொண்டது. சிறுவயதில் நண்பர்களை ஆற்றில் தள்ளிவிட்டு விளையாடியிருக்கிறேன். ‘இவர் என்ன , இப்படி என்னைக் காற்றில் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்’ என்று சொல்லிக்கொண்டேன்.

ஞாயிற்றுக்கிழமை, வேறுவேலைகளில் மிக்க கவனமாக இருந்தேன். திங்கள் கிழமை, மதியம் சாப்பிட்டு விட்டு இருக்கும் இடைவேளையில், நீலம்,  நாவலின், முதல் மூன்று அத்தியாயங்கள் மட்டும் படித்தேன். இனிவரும் நாட்களில் மதியம் மட்டும் வாசிக்கலாம் என்று இருந்தேன். செவ்வாய், புதன் அப்படி நகர்ந்தாலும், பித்தம் தலைக்கேறியிருந்தது. வியாழன் விடுமுறை போட்டு, முழுதும் வாசிக்காமல் இருக்க முடியவில்லை.

நான், பொதுவாகவே கண்ணனை நேசிப்பவன். இருமல் வந்தாலும் அவன். இருமல் நன்றாக ஆனாலும் அவன் என்றே சொல்வேன். ஆஸ்டின் அலர்ஜி, பிப்ரவரி முதல் மே மாதம் வரை ஆட்டிப்படைக்கும். அது அவன் என்றே என் நாட்களை நகர்த்துவேன். கண்ணன் என் உணர்வு. பக்தி நூல் வாசித்தோ, உபாசனைகள் கேட்டோ அவன் மேல் பிரியம் வந்தது என்று சொல்லமுடியாது.  எப்பொழுது எனக்குள் உணர்வாக வந்தான் என்று எனக்குத் தெரியாது. ‘கடமையைச் செய், பலனை எதிர் பார்க்காதே’ என்ற அவன் சொற்களை முறையாக கற்றேன் என்று சொல்லமுடியாது.  எனக்கு அது மிக அணுக்கமாக இருந்தது பிடித்துக்கொண்டேன். 2016-ல் நான் தங்கள் தளத்திற்கு அறம் கதைகளின் மூலம் வந்தவன் என்றாலும், என்னை மயக்கி முழுதாக உள்ளிழுத்ததற்கு நீலம் நூலின் மொழிக்கும் பங்கு உண்டு. ‘கானுறைவோய்! கடலுறைவோய்! வானுறைவோய்! வளியுறைவோய்! எங்குளாய் இலாதவனாய்?’ என்னால் கடக்கமுடியாத வரிகள். இதுதான் போகட்டும் என்றால், தென்றலைப் போல, ராதையைக் கண்டு நானும் நின்றேன். அவள் அழகால் நின்றேன்.  கவிஞன் என்று நீங்கள் உங்களைச் சொல்லிக்கொள்வதில்லை. நீலத்தை நான் கவிதையாகவே வாசித்தேன். ராதையின் அழகை அப்படியே வாசகனுக்கு கடத்த முடிகிறது என்றால்,  நீலம் மொழியைக் கவிதை என்று சொல்லாமல் எப்படி சொல்வது?

குழந்தையின் முதல் சொல் , முதல் நடை,  நீலத்தை  மீண்டும் மீண்டும் வாசிப்பதால் மீண்டும் மீண்டும் அவ்வின்பம் கிடைக்கப் பெறுகிறது. அவன் , ராதை என்று சொல்லும்பொழுது, வாசகனுக்கும், ‘ம்ம்’ என்று பித்தம் தலைக்கு ஏறுகிறது. அவன் சொல்லி பலராமன் வெண்ணை திருட உடன்போக, வீடெங்கும் வெண்ணை , தவிடு போட்டுக் கழுவியும் வழுக்கும் கண்ணன். அன்று நான் எடுத்த பொருள்கள் எல்லாம் நழுவாமல் இருக்கப் பார்த்துக்கொண்டேன்.

தேய்வழக்குக் காட்சிப்படுத்தலில் இருந்து வெண்முரசு நாவல் வரிசை எங்கெல்லாம் மாறுபடும் என ஆயிரத்து முன்னூற்று நாற்பத்திரண்டு உதாரணங்கள் சொல்லலாம். நீலத்தில், மண் உண்ட கண்ணன் வாய் திறக்க, யசோதை பார்த்ததை ராதை பார்க்கிறாள்.

எந்தக் கடுமையான வலிக்கும் ,பிரசவ வலி என்று சொல்வதுபோல, காத்திருத்தலின் வலியை,  “காலூன்றி நின்று நானொரு கரும்பாறை ஆனேன். காலங்கள் என்மேல் வழிந்தோடக் கண்டேன். கன்னி என் கண்ணீர் கடல்மணலாயிற்று. காலையும் மாலையும் கையறு மதியமும் சோலையும் பாலையும் சொல்திகழ் நகர்களும் என் முன் அலையென எழுந்து அமைந்திடக் கண்டேன். என் கண்ணீர் தொட்டு கடல் சென்று மறைந்த கரியோன் வரக்காணேன்!”  என விம்மியழும் ராதையைச் சொல்லாமல் சொல்ல முடியாது.

காதலெனும் பிரேமையைச் சொல்லும் நாவலில் மறைந்திருக்கிறது வெவ்வேறு சூத்திரமும், சரித்திரமும். பூதனையின் கையிலிருந்து அப்பொழுதே பிறந்த குழந்தையை பிடுங்கி வெட்டும் கம்சனின் படைவீரன் வரும் பாலாழி. இந்திரனுக்குப் பசுவைப் பழிகொடுக்கும் ஆயர்களை தடுத்து நிறுத்தும் கண்ணன் மன்னனாகப் பிறக்கும் சரித்திரம்.

காய்ச்சலுக்கு டாக்டரிடம் செல்லாமல் க்ரோசின் போட்டுக்கொள்வதுபோல, இமைக்கணத்தில் எமன் வியாசர் உருவில் இளைய யாதவரிடம் சென்று, தன் துயர் தீர்க்க வழி கேட்பதை வாசித்தால், என் உளம் கொஞ்சம் அடங்கலாம். அந்த அத்தியாயங்களை வாசிக்கிறேன்.

அன்புடன்,

வ. சௌந்தரராஜன்

ஆஸ்டின்

முந்தைய கட்டுரைமெய்யான முன்னுதாரணங்கள்
அடுத்த கட்டுரைபாரதியின் ஊழிக்கூத்து