குப்பத்துமொழி- கடிதங்கள்

குப்பத்துமொழி

வணக்கம் ஜெ

கமல் அவர்கள் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்திய பின் அறம் வாசித்தேன். அக்கதை தொகுப்பில் கோணங்கி மீண்டும் மீண்டும் படித்தேன். அந்த வட்டார வழக்கும் அதன் ஊடாக ஓடும் நகைச்சுவையும் எத்தனை முறை படித்தாலும் இனிப்பவை. காடு நாவலும் சமீபத்தில் நூறு கதைகளிலும் வட்டார வழக்கில் எழுதப்பட்ட கதைகளை பலமுறை வாசித்தேன்.

நண்பர்களுள் பேச்சுமொழியிலிருக்கும் சில வினோத amalgamations பற்றி பேசினோம். ஆங்கில சொல்லும் அதன் தமிழ் சொல்லையும் சேர்த்து பேசும் வழக்கம் பல நபர்களிடம் காணக்கிடைப்பது, ” இந்த கேட் கதவு மூடி இருக்கு” , ” போஸ்ட் கம்பத்துகிட்ட தான் நிக்குறேன்”என்பவை போல.

சேர்த்து சொல்லும் வழக்கத்தை விட குறைத்து சொல்வது அதிகம். “அந்த நாற்காலியை இந்த பக்கம் இழுத்து போடு ” என்பதை சொல்ல எடுக்கும் நேரத்தை விட “அந்த நாக்காலிய இன்னண்ட இஸ்து போடு” என்பது மிக குறைவு. இப்படி syllable-ஐ குறைத்து ஒரு தகவலை அடுத்தவரிடம் வேகமாக தெரிவிக்க இயல்கிறது. காலப்போக்கில் இதே வழக்கமாகி விட்டது. “சாப்பிட்டுவிட்டீர்களா?” என்பதை “சாட்டேளா?” என சட்டென கேட்கும் பிராமணர்கள் உண்டு.

விளாவல் என்ற சொல் என் வீட்டில் அனைவரும் சாதாரணமாக பயன்படுத்துவது. ஆனால் என் நண்பர்கள் சிலருக்கு அவ்வார்த்தை புதிதாக இருந்தது. வெந்நீரில் குளிர்ந்த நீரை ஊற்றி சுழற்றி குளி(டி)க்கும் பதத்திற்கு கொண்டுவருவது. “சுற்றிச்சுற்றி உழுதல். பாழ்ச்செய் விளாவி (திருவாச. 40, 9)”, என இணைய அகராதி சொல்கிறது. சுஜாதா கற்றதும் பெற்றதும்-ல் இவ்வகை தமிழ் சொற்களை பற்றி எழுதியிருக்கிறார்.

(இணைப்பு- https://m.facebook.com/permalink.php?story_fbid=540360282668040&id=254576441246427)

இச்சில சில மாற்றங்கள் மூலம் சில சொற்கள் குறிப்பிட்ட வேலை செய்பவர்களுக்குள்ளோ சமூகத்திற்குள்ளோ சுழன்று ஒரு கட்டத்தில் அது அவர்களின் தனிப்பட்ட மொழி என்றேகூட ஆகிவிடுகிறது. இம்மாற்றங்களின் கொடி பிடித்து அதன் வேர்ச்சொல்லை அறிவது சுவாரஸ்யமான ஒரு விளையாட்டு.

ஸ்ரீராம்

அன்புள்ள ஜெ

குப்பத்துமொழி ஒரு அருமையான கட்டுரை. நாம் இயல்பாகவே நம்மைவிட குறைவான பொருளியல்நிலையில் இருப்பவர்களின் மொழியை கிண்டலடிக்கிறோம். இதை நானே ஒருமுறை உணர்ந்தேன். சென்னையில் பிராமணர்கள் சென்னைபாஷையை கிண்டலடிப்பது சாதாரணம். பலர் இணையத்தில்கூட அப்படி எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சோ தொடங்கிவைத்தது அது

ஆனால் நாம் எப்படிப்பேசுகிறோம்? நாம் பேசுவதை ஒரு ஆங்கிலேயன் கேட்டால் என்ன நினைப்பான்? நாம்பேசும் ஆங்கிலம் ஒரு கொச்சையான மொழி. ஆங்கிலம் கலந்துபேசும் தமிழ் அதைவிடக்கொச்சை. ஆனால் அது நம் கண்ணுக்குத்தெரிவதில்லை

சி.எஸ்.ராம்

முந்தைய கட்டுரைகதைகள், கடிதங்கள்
அடுத்த கட்டுரைமலேசியாவில் பேய்ச்சி நாவலுக்கு தடை