மனு, கடிதம்

மனு இன்று

மனு இறுதியாக…

மனு- கடிதங்கள்

அன்பு ஜெயமோகன்,

மனுஸ்மிருதியைக் குறித்த சர்ச்சை ஓய்ந்த பொழுதில் அந்தியூர் மணி எழுதியிருக்கும் கடிதம் கவனம பெற வேண்டிய ஒன்று. மார்சியத்தைப் புறவய அணுகுமுறையாக மட்டுமே ’புரிந்து’ கொண்டு அவர் முன்வைத்திருக்கும் உரையாடல், காத்திரமானது. கோட்பாடுகளை அணுகும்போது வெகுகவனமாய் இருக்க வேண்டி இருக்கிறது. மார்க்சியம் உள்ளிட்ட கோட்பாடுகளை இன்றைய தலைமுறை ‘வாய்பாடுகளாகவே’ மனனம் செய்து கொண்டிருக்கிறது. அதனால்தான் சமுகச் ‘சிக்கல் கணக்குகளுக்கு’ அவற்றைக் கொண்டு ’கறார்த்தீர்வு’ கண்டுவிடலாம் என்றும் அசட்டையாய் நம்புகிறது. என்னைப் பொறுத்தவரை, கோட்பாடு என்பது சமூகக் கட்டமைப்பை விளங்கிக் கொள்வதற்கான ஒரு கோணம். அவ்வகையில் அது மிகவும் பயனுள்ளது.

நடைமுறைக்கோட்பாட்டின் அடிப்படையை இரண்டு நிலைகளாகப் பகுக்கலாம். ஒன்று, மெய்யியல் அல்லது தத்துவம்(கொள்கை); மற்றது செயல்பாடு(அரசியல்). இங்கு மெய்யியல் என்பது தனிமனிதனை நோக்கியது; செயல்பாடு என்பது குழுவை நம்பியது. மார்க்ஸ் ஒரு தனிமனிதர். அந்நிலையில் இருந்தே சமூகத்தை ஊன்றிக்கவனித்திருக்க முடியும். அக்காலச் சமூக மையப்பிரச்சினையின் கோளாறுகள் வழியாகவே அவர் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை வந்தடைந்திருக்கலாம். பிறகு, இதை அவர் அக்காலச் சமூகமையக் குழுவை(முதலாளி எதிர் தொழிலாளி) அடிப்படையாகக் கொண்ட அரசியலாக வார்த்தெடுத்திருக்கலாம். சுருங்கச் சொல்வதாயின், பொருளியல் கண்ணோட்டம் மேலோங்கி இருந்த காலத்தில் வாழ்ந்த அவரின் மெய்யியலும், அரசியலும் அதனடிப்படையில் பொருத்தமானது; நியாயமானதும்தான்.

மார்க்ஸின் காலத்தில் அவரின் கோட்பாடு மிகத்தேவையான ஒன்று. பொருளியல் ரீதியில் ஒடுக்குமுறைகள் அதிகம் இருந்த காலத்தில் பொருளியலில் ஒடுக்கப்பட்டவர்களுக்கான குரலும் ஆதரவுக்கரமும் அவசியம். அவ்வகையில் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை தெளிவானது. நமக்கு என்ன பிரச்சினை என்றால், இக்கால நவீனச் சூழலிலும் அக்கால ’அரசியல் வடிவத்தையே’ பரிந்துரைப்பதுதான்; மார்க்சிய மெய்யியலில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இளம் மார்க்ஸ், முதிய மார்க்ஸ் என்றெல்லாம் அல்தூசர் போன்றவர்கள் மார்க்ஸை நவீனத்துக்கான துலக்கத்துக்குத் தயார்படுத்திய பிறகும், ’மார்க்சிய அரசியல்’ இன்றைக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையையே தீர்வாக நம்பிக் கொண்டிருப்பதுதான்.

நவமார்க்சியம் என்பது இன்றைக்கு சிந்தனைத்தளத்தில் உரையாடல் அளவுக்குக் கூட இல்லை. மார்க்சியப் பயிலரங்குகள் என்றாலே பொருள்முதல்வாதம், மூலதனச்சுருக்கம், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, லெனின்-ஸ்டாலின் போன்றோரின் புரட்சிகர வரலாறு, பொதுவுடைமைச் சமூகக்கனவு என்பதான கூறியவை கூறுபவையாகவே இருக்கின்றன(கோவில்களில் நடைபெறும் பூசைச்சடங்கு போன்று). அவை அவசியம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எனினும், தற்கால நடைமுறைக்கேற்ப அவை விமர்சனத்துக்கு உட்படுத்த வேண்டியவை என்பதும் முக்கியம் அல்லவா? ந.முத்துமோகன், தியாகு போன்ற நவச்சிந்தனையாளர்களை அவர்கள் மார்க்சியர்கள் என்பதற்காக மட்டுமே பலர் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். மற்றபடி, அவர்களின் மார்க்சிய விளக்கங்களைக் காதுகொடுத்துக் கேட்பவர்கள் மார்க்சியத்தளத்திலேயே வெகுசொற்பம்.

இயங்கியலைப் புரிந்து தெளிந்த முற்போக்காளர்கள் நிறைந்திருக்கும் மார்க்சியமே இன்றைக்கு ‘அடிப்படைவாதச்’ சிக்கலில் இருக்கும் சூழலில், இயங்கியலைக் கிஞ்சித்தும் உணராத அடிப்படைவாதிகள் மலிந்திருக்கும் சமயத்தளம் மட்டும் சீர்படுத்தப்பட வேண்டும் அல்லது மாற்றத்துக்குட்பட  வேண்டும் என்பது எவ்வகையில் நியாயமானதாக இருக்கும்? இப்படிச் சொன்னவுடன், புதுமை முற்போக்காளர்களும், பழைமைச் சமயவாதிகளும் பொங்கிக்கொண்டு வரக்கூடும்; குமுறிக்கொண்டு எதிர்வினை செய்யவும் கூடும். நாம் கேட்பது, சமூகம் என்பது வெறும் பொருளியல் அல்லது சமய அடிப்படையிலானது மட்டும்தானா? சமூகம் என்பது அவை போன்ற பல அலகுகளின் தொகுப்பு என்பதைக் கொஞ்சம் கவனமாய்ச் சிந்தித்தாலே புரிந்துவிடும். ஒவ்வொரு அலகை மையப்படுத்திச் சிந்தித்தல் என்பது அவசியமே. அதற்காக அதையே ‘சமூகமாகப்’ பிடித்துக் கொண்டு தொங்குவதுதான் அபத்தமாகப் படுகிறது.

19-ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய சமூகப்பின்புலம் தெரியாமல் மார்க்சியத்தை ஒருவரால் நெருங்கவே முடியாது. அதைப்போன்றே, 20-ஆம் நூற்றாண்டு இந்தியப்பின்புலத்தை ஓரளவேனும் அறிந்து கொள்ளாமல் காந்தியம், அம்பேத்கரியம் மற்றும் பெரியாரியம் உள்ளிட்டவைகளை அணுகமுடியாது. 21-ஆம் நூற்றாண்டின் சமூக அரசியல் செயல்பாடுகளில் இருப்பதாகச் சொல்லும் எத்தனை பேரிடம் இப்படியான குறைந்தபட்சத் தெளிவு இருக்கிறது? 30 நாட்களில் ஆங்கிலம் என்பதைப் போல 3 நிமிடங்களில் மார்க்ஸ் போன்ற வலைதளக்கசடுகளே மிகுதி. தொழில்நுட்ப வளர்ச்சியை நாம் எதிர்மறையாகப் பார்க்கக்கூடாது என்பது சரியே எனினும், நம் சிந்தனையைக் குறுகலாக்கி இருக்கும் தொழில்நுட்பத்தைக் குறைசொல்லாமல் இருக்க முடியவில்லை. மேலும், இப்போது பெருகி இருக்கும் வலைதளப்போராளிகளைக் காணும்போது பயமாய் இருக்கிறது; வருந்தலைமுறை மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் கவனமும் தெளிவாகிறது.

மார்க்சியர்கள் சமூகத்தை முதலாளி எதிர் தொழிலாளியாகவும், பெரியாரியர்கள் பிராமணர் எதிர் பிராமணரல்லாதோர் என்பதாகவும், அம்பேத்கரியர்கள் தலித் எதிர் உயர்சாதியினர் என்பதாகவும், காந்தியர்கள் கிராமம் எதிர் நகரமாகவுமே இன்றைக்கும் அணுகுகின்றனர் என்பதை விளக்கச் சான்றுகள் தேவையில்லை. மேலும், அவற்றைக் கொண்டு அவ்வாளுமைகள் குறித்த விருப்பும் கசப்பும் நமக்களிக்கப்படுகிறது. துவக்கத்தில் செயல்பாட்டுத் தூண்டுகையாக இருந்த அவ்வாளுமைகள், காலப்போக்கில் அடையாள அரசியலின் ‘சடங்கியல்’ பிம்பங்களாக மட்டுமே எஞ்சி நிற்கிற அவலம் நேர்ந்து விடுகிறது. இதைப் புரிந்து கொள்ள பலவருட வாசிப்போ ஆய்வோ அவசியமில்லை; சிலநிமிட நிதானச்சிந்தனையே போதும். சமூகவலைதளங்களைக் கவனிக்கையில் அது சாத்தியமே இல்லையோ எனும் அச்சம் எழுகிறது. எனினும், நாம் உரையாடுவதைக் குறைத்துக் கொண்டுவிடக்கூடாது எனும் தீர்க்கம் இருக்கிறது.

~~~~~~~~~

மனுஸ்மிருதிக்கு வருகிறேன். இன்றைக்கு அரசியலாக்கப்பட்டிருக்கும் அந்நூல் தொடர்பான வரலாற்றுத் தரவுகளை நான் எடுத்துக் கொள்ளப்போவதில்லை. மேலும், அதன் உள்ள்டக்கம் பற்றியும் நான் பேசப்போவதில்லை. மாறாக, ஸ்ருதி மற்றும் ஸ்மிருதி போன்றவற்றைப் பற்றிய சிறுஅறிமுகத்தைச் செய்வதே நோக்கம்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் தன்னைத் தனித்த ’சமூகமாக’ உணர்ந்திராத காலம். அப்போது அவன் ’குழுவாக’ மட்டுமே இருந்தான். அக்குழுவும் அவனை இப்புவியில் தக்கவைத்துக் கொள்வதற்கான பயன்பாட்டுக்காகவே. உணவுத்தேவை பூர்த்தியாகி, இருப்பிடத் தேவையும் நிறைவான காலத்திலேயே ‘சமூகம்’ உருவாகி இருக்க வேண்டும். அதற்கு முன் அவன் ‘குழுக்களாகவே’ அலைந்து திரிந்திருக்க அல்லது வாழ்ந்திருக்க வேண்டும். ‘குழுக்களாக’ அவன் இருந்த வாழ்வை நாடோடி இனக்குழு காலமாகக் கொள்ளலாம். ‘சமூகமாக’ அவன் வாழும் தற்போதைய வாழ்வை நிலைத்த தொழிற்குழுத் தொகுப்பு வாழ்வாகப் பார்க்கலாம்.

நாடோடி இனக்குழுகள் தனித்தனியான நிலப்பரப்புகளையும்,  வாழ்க்கைமுறைகளையும் கொண்டிருந்தன. மேலும் அக்குழுக்களில் பலவகையான சடங்குமுறைமைகளும், பண்பாட்டுக்கூறுகளும் விரவிக்கிடந்தன. அவற்றை அவர்கள் சமயம் என்றெல்லாம் நிறுவனப்படுத்தி இருக்கவில்லை. இனக்குழுவில் ‘மேலாதிக்க அதிகாரம்’ என்பதற்கு வாய்ப்பே இல்லை. இனக்குழுக்களுக்கு இடையே மோதல்கள் நடக்கும்போது குழுவில் இருக்கும் மனிதர்கள் தங்களைத் தனித்து உணர்வதில்லை..குழுவாகவே கருதுகின்றனர். அதனால்தான் குழுவுக்கான உயிர்விடவும் தயங்குவதில்லை. சுருக்கமாக, நாடோடி இனக்குழுவில் ‘குழுவே’ முக்கியம்.

சிதறிக்கிடந்த நிலப்பரப்பும், மக்களும் அரசால் அல்லது அதுபோன்ற நிறுவனத்தால் தொகுக்கப்பட்டு நிலைத்த தொழிற்குழு வாழ்வு உருவாகும் காலகட்டத்தில் ’அதிகாரம்’ உருக்கொள்கிறது. சமூகத்தின் தொழிற்குழுக்களுக்கான வரையறைகள் ஏற்படுத்தப்படுகின்றன. இனக்குழு வாழ்வில் தன்னைத் தனிநபராக உணராத ஒருவன்.. சமூகவாழ்வில் தன்னைத் தனியனாகவும் ஒரு தொழிற்குழுவின் தொடர்ச்சியாகவும் உணர்கிறான். அப்படியாகத்தான் ‘சமூக நிறுவனம்’ தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. சுருக்கமாக, நிலைத்த தொழிற்குழு வாழ்வில் ‘சமூகமே’ முக்கியம்.

இன்னும் எளிமையாக்கப் பார்க்கிறேன். நாடோடி இனக்குழு வாழ்வில் இயற்கைச்சூழலுக்கும் மனிதனுக்கும் ஊடாட்டம் நிகழ்ந்திருக்கிறது. அதுவே அக்காலவாழ்வின் பண்பாட்டுக் கூறுகளில் வெளிப்படவும் செய்திருக்கிறது. ஸ்ருதிகள் அப்படியான பண்பாட்டுப் பிரதிகள். அவற்றுக்கு அக்காலத்தில் இந்து ஸ்ருதிகள் என்றோ, சனாதன ஸ்ருதிகள் என்றோ பெயர் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஸ்ருதி எனும் சொல்லுக்கு காதால் கேட்பது என்று பொருள். இசைத்துறையில் புழங்கும் ஸ்ருதியை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். எழுதப்படாமல் ஒருவருக்கு ஒருவர் சொல்லக் கேட்டு நினைவில் நிறுத்திப் பிறருக்குச் சொன்னவையே ஸ்ருதிகள். பொதுவாக வேதங்களை ஸ்ருதிகள் என்பர். அவை எப்போதும் மாறாதவை. அப்படிச் சொன்னவுடன், நமக்கு கோபம் வரும். அதெப்படி என்றும் மாறாதவையாக அவை இருக்க முடியும்? திரும்பவும் சொல்கிறேன். இயற்கைக்கும் மனிதனுக்குமான ஊடாட்டத்தில் இயற்கையை முதன்மைப்படுத்தியவை ஸ்ருதிகள். அதை, அவை கடவுளர்களைக் கொண்டு பாடல்களாக்கி இருக்கும். அவற்றில் வாழ்வுக்கான தேவைகளை இயற்கையிடம் முன்வைக்கும் மன்றாடலே பெரிதும் இருக்கும். இயற்கை எப்போதும் இருப்பது; மனிதன் வந்து போகிறவன். எப்போதும் இருப்பது மாறப்போவதில்லை எனும் கோணத்தில் புரிந்து கொண்டோம் எனில் ஸ்ருதிகளை நெருங்குவது எளிது.

நிலைத்த தொழிற்குழுத் தொகுப்பு வாழ்வில் இயற்கைக்கு இடமே இல்லை. மனிதர்களின் தொழிற்குழு வாழ்விற்கு இடையேதான் ஊடாட்டம். அவையே ஸ்மிருதிகளாக தொகுக்கப்பட்டிருக்கக் கூடும். இனக்குழு வாழ்வில் அதிகாரச் செயல்பாடுகள் இல்லை. ஆனால், தொழிற்குழுச் சமூக வாழ்வில் அதிகாரம் முக்கியப்பங்கு வகிக்கிறது. அதிகாரத்தைக் கையில் கொண்ட தொழிற்குழுவின் மேற்பார்வையிலேயே ஸ்மிருதிகள் உருவாகி வந்திருக்கும். மனு அப்படியான ஒரு ஸ்மிருதி. அதை இன்றைக்கு வாசிக்கும் ஒருவரால் அதை எவ்வகையிலும் விளங்கிக்கொள்ள முடியாது. அன்றைய தொழிற்குழுச்சமூக வாழ்வை அறிய விரும்பும் ஒருவனுக்கு அது ஓரளவேனும் உதவும். மற்றபடி, ஸ்மிருதிகளை ‘சதிச்செயலாகக்’ கொள்வது என்பது நம் அறிவின் பிறழ்வே.

இன்றைய காலகட்டத்தில் ஸ்ருதிகளையும், ஸ்மிருதிகளையும் கொண்டு ஒரு சமூகநிறுவனத்தை நம்மால் நிறுவிவிட முடியாது. அதிலும் குறிப்பாக உலகமயமாக்கல் தாராளமயமாக்கல் போன்றவற்றுக்குப் பிறகு அது அறவே சாத்தியமில்லை. வேண்டுமானால், அப்படியான தோற்றத்தைக் கற்பனை செய்யலாம். அதைத்தான் இன்றைக்கிருக்கும் மதவாத அரசியல் செய்கிறது.  அதைக்கண்டு நாம் மிரளத்தேவையில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பின்னோக்கித் திரும்பிவிட சிறிதும் வாய்ப்பில்லை. முற்போக்காளர்கள் என நம்புபவர்கள் தெளிவு கொள்ள வேண்டிய இடம் இது.

மற்றுமொரு அறிவுறுத்தல். இந்து மதம் என்றாலே ஒருவித காழ்ப்பு கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேல் இந்திய மண்ணில் ஊன்றப்பட்டிருக்கிறது. அதற்கு இந்துமத அடிப்படைவாதிகள் முக்கியக்காரணம். தற்போதிருக்கும் திராவிட அரசியலைக் கொண்டு பெரியாரைச் சந்தேகித்தால்.. அதைப்போன்று அடிப்படைவாதிகளின் அராஜகத்தைக் கொண்டு இந்துமதத்தை அணுகுவது சரியா? இந்துமதப் பண்பாட்டுக்கூறுகளை ‘முற்போக்காக’ நிராகரிக்கும் போக்கையும் நாம் யோசிக்க வேண்டிய காலம் இது. இந்து என்பதே தீயசொல் என்பதான பிரச்சாரம் அறிவுப்பூர்வமானதா என்பதையும் கூர்ந்து ஆராய வேண்டி இருக்கிறது. இந்து மதத்தின் மீதான விமர்சனங்கள் தொடர்ந்து எழுப்பப்பெறல் வேண்டும். அதைப்போல, இந்து மதமே பித்தலாட்டமானது எனும் கோணமும் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட வேண்டும். இரண்டுமே முக்கியம்.

தெளிவாகச் சொல்கிறேன். அப்போதைய ஸ்ருதிகளையும், ஸ்மிருதிகளையும் இப்போதைய கோட்பாடுகளைப் போல கருதுபவர்களைப் பார்த்து பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியே இல்லை.

சத்திவேல்,

கோபிசெட்டிபாளையம்.

முந்தைய கட்டுரைஇந்த இவள் – கி. ரா- வாசிப்பனுபவம்
அடுத்த கட்டுரைஒரு விமர்சனம்