எழுத்தாளனின் பார்வை- கடிதம்

எழுத்தாளனின் பார்வை

அன்பின் ஜெ…

உங்கள் விரிவான பதிலுக்கு நன்றி.

இந்த விஷயம் இரண்டு தளங்களில் உள்ளது. புனைவு மற்றும் அபுனைவு.

புனைவுத்தளத்தில் நீங்கள் சொல்லியிருக்கும் விஷயங்களின் அடிப்படைகளில் எனக்கு எந்த விலகலும் இல்லை. நீலம் படைப்பின் முதல் அத்தியாயத்தை, பெங்களூர் ஜேபி நகரில் எனது வீட்டு முற்றத்தில் அமர்ந்து படிக்கையில் கண்களில் நீர் வழிந்த கணம் இன்றும் நினைவிலிருக்கிறது. ஒரு படைப்பாளியின் உலகமும், இலக்கிய உண்மைகளும் முற்றிலும் வேறு என்பது மட்டுமல்ல, அவை அந்தரங்கமானவையும் கூட.

அபுனைவிலும் கூட, படைப்பாளி தான் கண் முன்னே தென்படும் அநீதிகளை, அநியாயங்களை எதிர்த்துக் குரல் கொடுப்பதும் எனக்குச் சரியென்றே தோன்றுகிறது.

எனது விலகல் ஒரே புள்ளியில்தான். அற வீழ்ச்சிகளைக் கண்டு ஒவ்வாது குரலெழுப்பும் படைப்பாளி, கண் முன்னே நிகழும் நேர்மறையான நிகழ்வுகளைக் கண்டு எழுதுவதில்லை என்பது மட்டுமே.

இதை நீங்கள் இன்னொரு எல்லையில் கொண்டு வைத்து, அதுவும் அரசியலை மட்டும் முன் வைத்துப் பேசுவது, எனது தரப்பு என்பதாகச் சொல்கிறீர்கள். அதுவல்ல என் தரப்பு என்பதை மீண்டும் ஒரு முறை தெளிவு படுத்தி விடுகிறேன். நான் இந்திய/ தமிழக அரசியலில் ஊழல் இல்லை என்றோ, இந்திய/ தமிழக அரசு நிர்வாகம் மிகச் சரியாக நடக்கிறது என்றோ வாதாடவில்லை.. ஒவ்வொரு விஷயத்தையும், அதன் நிறைகுறைகளை கொஞ்சம் அலசி, பின்னர் உங்கள் பார்வையை எழுதுங்கள் என்கிறேன்.

எடுத்துக்காட்டாக, கொரோனா துவக்க காலத்தில், நீங்கள் ஒரு கட்டுரை எழுதியிருந்தீர்கள். நேர்மறையாக  அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு பிஸினஸ் மேன் மாதிரி முடிவெடுக்கிறார் என. அது உங்கள் அவதானிப்பிலிருந்தும், ஒரு பத்திரிகையாளரிடமிருந்தும் பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் உருவானது.

அது ஒரு ரெஃப்ளக்‌ஷன் மட்டுமே. உள்ளுணர்வின் அடிப்படையினால் உருவானதல்ல.  ஒரு படைப்பாளியாக நீங்கள் செயலாற்றும் தளமும், ஒரு குடிமகனாக கொரோனா பற்றிய உங்கள் கருத்துக்கள் உருவாகும் தளமும் மிக வேறானவை.

உங்கள் கட்டுரை வெளியான காலத்தில், இந்தியாவின் மிக முக்கியமான Epidemiologist களில் ஒருவரான, சி.எம்.சி மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்.ஜெயப்ராகாஷ் முல்லையில் மிக விரிவாக இந்த வைரஸ், அதன் வீரியம், herd immunity, அரசு முன்னெடுக்க வேண்டிய பொதுநலத்துறை செயல்பாடுகள் பற்றி விரிவாகச் சொல்லியிருந்தார்.  அதே திசையில், ஜெயப்ரகாஷ் முல்லையிலின் மாணவரான நம் குழும நண்பர் தங்கவேல் ஒரு எதிர் வினையாற்றியிருந்தார்.  சரவணன் விவேகானந்தன், இந்த வைரஸின் குண்நலன்களைப் பற்றிய விரிவான தரவுகளை வைத்திருந்தார்.

இந்த மூன்று தரவுகளை வைத்துப் பார்க்கும் போது, ஒருவருக்குக் கிடைக்கும் சித்திரமே வேறு. இன்று 8 மாதங்களுக்குப் பிறகு உலகம் நியுசிலாந்தின் ஜெஸிண்டாவை ஏன் முன்னிறுத்துகிறது என்பதை ஜெயப்ப்ரகாஷ் முல்லையில் என்னும் நிபுணரின் கருத்துக்களை வைத்து விளங்கிக் கொள்கிறேன்.

இலக்கியம் பற்றிய எனது அறிதலுக்கு உங்கள் தரவுகளை நான் எப்படி மிக உயர்ந்த மதிப்புடன் அணுகுகிறேனோ அதேபோல, மற்ற துறையின் மிக உயர்ந்த தலைவர்களின் கருத்துக்களை பார்த்துப் புரிந்து கொள்ள முயல்கிறேன்.

உங்கள் பதிலில், கண்ணும் சூத்தும் ஒன்னெனத்தகும் எனச்சொல்லும் சில ஐஏஎஸ் அதிகாரிகளைச் சொல்லியிருந்தீர்கள்.  அதிலிருந்து நான் என்ன புரிந்து கொள்வது? இலக்கியம் தவிர மற்ற துறைகளில், எதையும் தங்களுக்குச் சாதகமாக வளைத்துப் பேசும் சராசரிகள் மட்டுமே இருக்கிறார்கள் எனப் புரிந்து கொள்வதா?

பால் பற்றிய விவாதங்களில் எனது தரப்பை, எதிர்த் தரவுகள் இருந்த போதும் மறுத்தேன் எனச் சொல்லியிருந்தீர்கள். நான் உங்களுக்கு எழுதிய முதல் கடிதத்திலேயே, வட மாநிலங்களில் பயணம் செய்யும் போது, டெட்ரா பேக்கில் கிடைக்கும் அமுல் பாலை வாங்கிச் செல்லுங்கள் என பரிந்துரைத்திருந்தேன். ஏனெனில், வட மாநிலங்களில், பால் கலப்படம் அதிகம் உண்டு. இந்த இடத்திலேயே நீங்கள் சொன்ன அந்தக் குற்றச்சாட்ட்டில் உள்ள உண்மையை ஏற்றுக்கொள்வதைத்தான் அந்தக் கடிதம் சொல்கிறது.

ஆனால், அந்த ஒரு தரவை வைத்துக் கொண்டு, இந்தியா முழுவதும் செயற்கைப் பால் உற்பத்தி செய்யப்படுகிறது என ஒரு முடிவுக்கு வருகிறீர்கள்..  உங்கள் நாக்கில் பட்ட அந்தப் பாலின் குமட்டலும், அதுவரை நீங்கள் செய்தித்தாள்களில் படித்திருந்த செய்திகளும் ஒன்று சேர, அந்தக் கருத்து உங்களுக்கு ஏற்படுகிறது. அது உள்ளுணர்வல்ல. அது பால் துறை பற்றிய ஒரு முழுமையான அறிதல் இல்லாத நுகர்வோரின் கருத்து மட்டுமே.

பால் துறை பற்றிய அறிதல் உள்ள ஒரு நிபுணரோ அல்லது பொருளாதார அறிஞரோ அப்படிச் சொல்ல முடியாது. அந்த விவாதத்தில், உங்கள் தரப்பில் விவாதித்தவர்கள் அனைவருமே நுகர்வோர் அல்லது பால் உற்பத்தியாளர். மறு தரப்பில், நானும், பால் துறையில் பணியாற்றிய ஒரு வெட்ரனரி டாக்டர்.  இருவருமே பல ஆண்டுகள் துறையை அவதானித்தவர்கள். அந்த கடிதங்களில், நுகர்வோரின் தரப்புகளை ஏற்று, அவர்களின் பல கருத்துக்களின் உண்மையான பிண்ணனியை விளக்கியிருந்தோம்.. எடுத்துக்காட்டாக பால் பவுடர் என்றால் என்ன, க்ரீமர் என்றால் என்ன.. வீட்டில் உறை குத்தும் தயிருக்கும், தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் தயிருக்கும் வித்தியாசம் என்ன என்பதைப் பொறுமையாக விளக்கியிருந்தோம்.

அது உங்களின் தரப்புக்கு எதிர்வாதமல்ல. கொஞ்சம் திறந்த மனதுடன், எழுதுபவர்கள் துறையில் அனுபவம் கொண்டவர்கள் என ஒரு புரிதல் இருந்திருந்தால், நாங்கள் சொல்ல வந்ததைப் புரிந்து கொண்டிருக்க முடியும். அதில் நீங்கள் சொல்லியிருந்தீர்கள்.. கலப்படப் பால் உற்பத்தி செய்யும் ஒரு ஆலையைப் பார்த்தேன் என. அதை மறுக்கவில்லை.. ஒரு நகைக்கடையில் அல்லது ஜவுளிக்கடையில் பில் இல்லாமல் பொருள் விற்கிறார்கள் என்பது போன்ற குற்றச்சாட்டு அது. நிகழும் வாய்ப்புகள் உண்டு என்றே துறை சார் அறிஞர்கள் சொல்வார்கள்.  They will know the size, extent and context of the issue.  மொத்த பால்துறை எவ்வளவு பெரியது, அதில் கலப்படம் எவ்வளவு சதம்.. எந்தத் தளத்தில் கலப்படம் அதிகம் என்பதை என்பதையும் சொல்வார்கள்..

ஆனால், எவ்வளவு நுண்ணுணர்வு கொண்ட இலக்கிய வாசகராக இருந்தாலும், பால்துறை பற்றிய அறிதல் இல்லாமல் எப்படி இந்தத் துறையின் உண்மையான அலகை, பிரம்மாண்டத்தை, பிரச்சினைகளின் தீவிரத்தை உள்ளுணர்வை மட்டுமே வைத்து, சரியாகப் புரிந்து கொள்வார்? எனக்குப் புரியவில்லை.. உங்கள் ஆதர்ச வாசகரான கடலூர் சீனு கூட அபத்தமாக ஒரு தமிழ்நாளிதழ் செய்தியைத்தான் பகிர்ந்திருந்தார்.

இன்னொரு எடுத்துக்காட்டாக, பண மதிப்பிழப்பு விவாதங்கள். அது அறிவிக்கப்பட்டவுடன், பெரும் ஆரவாரம் எழுந்தது.. மக்களாட்சி என்பதால் எதிர்க்குரலும் எழுந்தது.. பல குரல்கள் வெறும் கூச்சல்கள்.. ஆனால், அதற்கிடையே அருண் குமார் என்னும் பொருளியல் அறிஞர் பேசியது – It made lot of sense. அவர், கறுப்புப் பணம் என்பது கரன்சியாக 5-6% மேலே இருக்க வாய்ப்பில்லை என்னும் வாதத்தை முன் வைத்தார். ஏனெனில், அதை முறையாக ஆய்வு செய்த அறிஞர் அவர்.. உலகின் முன்ணணிப் பொருளியல் அறிஞர்கள் அனைவருமே இது பெரிதும் பயன் தராது எனச் சொல்லியிருந்தார்கள். அதாவது, பலன்களை விட நஷ்டம் அதிகம் என. உலகில் இது போன்ற நடவடிக்கைகளை எடுத்த நாடுகள் யார் எனப் பார்த்தால், வெனிசூலா, ஜிம்பாப்வே போன்றவை. பேராசிரியர் ஜான் ட்ரெஸ் போன்றவர்கள், இன்னொரு பிரச்சினையை முன்வைத்தனர்.. ஊரகப் பொருளாதாரம் பெரும்பாலும் கரன்சிப் பொருளாதாரம்.. அடுத்து வரும் பருவத்தில் விவசாயம் பாதிக்கப்படும். எனவே, இந்த நோட்டுகளுக்குப் பதில் நோட்டுகளை உடனடியாக மாற்றிக் கொடுக்கும் வசதிகளைச் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.. சில நாட்கள் கழிந்துதான் தெரிந்தது, பண மதிப்பிழப்புச் செய்யப்படும் நோட்டுகளுக்குப் பதில் நோட்டுகள் ஏற்பாடு செய்திருக்கவில்லை.. நோட்டுகள் அடிக்க 6-7 மாதங்கள் ஆகும் என்று. விளைவு, ஊரகப் பணப்புழக்கம் நின்று போனது. அது ஒரு man made crisis. ஆனால், ஒரு இலக்கியவாதியாக, மோதி நல்லது செய்வார் என்னும் நம்பிக்கையில் உங்கள் கருத்துக்களைச் சொன்னீர்கள்.. அரசியல்வாதிகள், பொருளாதார அறிஞர்கள் அனைவருமே கறுப்புப் பணத்துக்கு ஆதரவாகக் களம் இறங்கியுள்ளார்கள் என்னும் வாதத்தை முன்வைத்தீர்கள். ஆனால், அது, பொருளாதாரம், பணம், நிதி நிர்வாகம் போன்ற துறைகளின் macro economic perspective இல்லாத ஒரு பார்வை என்பதுதான் உண்மை. அது உள்ளுணர்வல்ல.

நேரு முதல் மல்லையா கட்டுரையை வாசித்த நம் குழும நண்பர், நேரில் சந்திக்கையில் கேட்டார், நீங்கள் கட்டுரையில் கொடுத்திருக்கும் தரவுகள் உண்மையா என.  அவர் ஒரு தொழில் முனைவரும் கூட.  நீங்கள் சொன்ன கருத்துக்களுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுக்கையில், நான் எனது கருத்தை மட்டும் வைத்திருந்தால், குழுமத் தற்கொலைப்படை, என்னைக் கொத்துக்கறி போட்டிருப்பார்கள்.. எனவே தான், நான் எவரும் சரி பார்க்கக் கூடிய, பொது வெளியில் உள்ள தகவல்களை முன்னிறுத்தினேன்..  அதை நண்பருக்கு விளக்கினேன்.. தேசியப் பங்குச் சந்தை மற்றும் இந்தியாவில் உள்ள பங்குச் சந்தைகள் மேலும் www.moneycontrol.com போன்ற தளங்களில் எளிதில் கிடைக்கும், நம்பகமான தகவல்கள்தாம் என அவருக்குச் சொன்னேன்..  மிக முக்கியமாக, நான் பெரிதும் மதிக்கும் என் உளங்கணிந்த எழுத்தாளருக்குச் செய்யும் மரியாதையும் கூட எனச் சொன்னேன் – I mean it.  உங்கள் கருத்துக்களை எதிர்த்து வைக்கும் ஒவ்வொரு சொல்லும் ஒரு credibility யுடன் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை.. தரவுகளையும், புள்ளி விவரங்களையும் நான் வளைப்பதில்லை.. அவையே என்னை வழிநடத்துகின்றன. அறிவியல், பொருளாதாரம், வணிகம், தொழில்நுட்பம் என 99% மனிதர்கள் புழங்கும் துறைகள் அவைகளினால்தான் வழிநடத்தப் படுகின்றன.

சமீபத்தில் குமரப்பாவைப் பற்றிய ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன்.. உப்புச் சத்தியாக்கிரகம் முடிந்த காலகட்டத்தில், குமரப்பாவுக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போய்க்கொண்டிருந்தது.. குமரப்பாவின் பிரச்சினை மனதில்தானே ஒழிய உடலில் அல்ல என்பது காந்தியின் நம்பிக்கை.. ஆனால், குமரப்பா அதை ஒத்துக் கொள்ளவில்லை..

அந்தக் காலகட்டத்தில், காந்தியிடம் பேசி அவரை மத மாற்றம் செய்யும் நோக்கத்தோடு ஒரு கிறித்தவ அம்மையார் நாக்பூர் வருகிறார்.. காந்திக்குத் திடீரென ஒரு யோசனை.. குமரப்பாவின் உடல் நிலைக் குறைவு அவரது மன அழுத்தம் தான் என்பதை நிரூபிக்க ஒரு வாய்ப்பு.. அந்த கிறித்தவப் பெண்மணியை, குமரப்பாவின் மீது ஏவி, பரிசோதனை செய்ய முடிவெடுக்கிறார்..

மருத்துவர் சுசீலா நய்யாரிடம் சொல்லி, கிறித்தவப் பெண்மணி குமரப்பாவைச் சந்திக்கச் சொல்கிறார்.. சுசீலா நய்யார், குமரப்பாவின் ரத்த அழுத்தத்தை அளந்து ஆவணப்படுத்த  வேண்டும். கிறித்தவப் பெண்மணி, குமரப்பாவைச் சந்திக்கும் முன்பு குமரப்பாவின் ரத்த அழுத்தம் அளவெடுக்கப்படுகிறது.. குமரப்பா அந்தக் கிறித்துவப் பெண்மணியைச் சந்தித்து முக்கால் மணி நேரம் உரையாடிய பின் மீண்டும் அவரது ரத்த அழுத்தம் அளவெடுக்கப்படுகிறது.. எதிர்பார்த்தது போலவே குமரப்பாவின் ரத்த அழுத்தம் எகிறியிருந்தது.. அடுத்த நாள், குமரப்பாவின் ரத்த அழுத்தம் மீண்டும் அளவெடுக்கப்படுகிறது.. சுசீலா நய்யார் குமரப்பாவை 2 கிலோமீட்டர் ஓடி வரச் செய்கிறார்.. ஓடி முடித்தவுடன் மீண்டும் குமரப்பாவின் ரத்த அழுத்தம் அளவெடுக்கப்படுகிறது..

இரண்டு அளவுகளும் ஒப்பிடப்படுகின்றன.. கிறித்துவப் பிரச்சாரம் செய்ய வந்த பெண்மணியைச் சந்தித்த பின்னர் எகிறிய குமரப்பாவின் ரத்த அழுத்தத்தை விட, அவர்  2 கிலோமீட்டர் ஓடிய பின்னான ரத்த அழுத்த உயர்வு மிகக் குறைவாக இருந்தது.  இப்படியாக ஒரு hypothesis அறிவியற்பூர்வமாக நிருபிக்கப்பட்டது.

அபுனைவு எழுதுகையில், எதிர்மறைக் கருத்துக்கள் எழுதுவதில் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால், பல தளங்களில் நேர்மறை விஷயங்களும் நடக்கின்றன. அதையும் எழுதுங்கள் என மட்டும்தான் நான் வேண்டுகோள் வைத்தேன். நீங்கள் கி.ரா மீது தொடுக்கப்பட்ட ஒரு பாசிசத் தாக்குதல் வழக்கின் தீர்ப்பை முன்வைத்து அப்படிச் செய்யாதீர்கள் என்கிறீர்கள்.. இரண்டும் ஒன்றா?

 

அன்புடன்

பாலா

 

அன்புள்ள பாலா

நான் விரிவாக எழுதிவிட்டேன் – உங்கள் பதில் உங்கள் தரப்பையே மீண்டும் சொல்வதுதான். ஆகவே மேலே சொல்ல ஒன்றுமில்லை

வேண்டுமென்றால் இப்படிச் சொல்லலாம். ஜனநாயகம் ரத்துசெய்யப்படும் எல்லா சூழலிலும் அரசு எதிர்க்கட்சிகளிடம் ஆணையிடுவதையே நீங்கள் சொல்கிறீர்கள் – ஆவணங்களைப் படித்து அதன்படி கருத்துச் சொல்லுங்கள், வெறுமே எதிர்க்காதீர்கள்

கி.ராஜநாராயணன் மேல் முற்போக்கு அணி தொடுத்த வழக்குக்கும் உங்கள் பேச்சுக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. சோவியத் ருஷ்யாவின் நாட்களில் எழுத்தாளர்களிடம் அரசு ஆணையிட்டது – அரசையோ அரசியலையோ எதிர்க்கக்கூடாது, ஆக்கபூர்வ விமர்சனமே அனுமதிக்கப்படும். ஆக்கபூர்வ விமர்சனம் என்பது தரப்படும் செய்திகளின் அடிப்படையில் அமையவேண்டும். அது ஆக்கபூர்வமா அல்லவா என்று அரசு முடிவெடுக்கும்

நீங்கள் அரசில் இருந்து ஒரு திராவிட சர்வாதிகார அரசு வந்திருந்தால் நாஞ்சில் சிறையில் இருந்திருப்பார். நான் கொல்லப்பட்டிருப்பேன்

ஜெ

முந்தைய கட்டுரைகென்யா வாழ்க்கை- வெங்கடேஷ் சீனிவாசகம்
அடுத்த கட்டுரைநூற்கொடைகள்