ஒரு மீனவ மன்னனின் புகழ்

செண்பகராமன் பள்ளு

ஓர் அடிப்படையான கேள்வி அவ்வப்போது எழுவதுண்டு, தமிழகத்தில் ஏன் எல்லா ‘மாற்று’வரலாறுகளும் சாதிவரலாறுகளாகவே இருக்கின்றன? அதற்கான பதில் இதுதான், எல்லா மையவரலாறுகளும் சாதியற்ற வரலாறுகளாகவே எழுதப்பட்டுள்ளன.

தமிழ்வரலாறு, நவீன வரலாற்றெழுத்து நோக்கில் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்டது. அது தொடக்கம் முதலே மன்னர்களின் வரலாறாக கட்டமைக்கப்பட்டது. அது ஐரோப்பிய பார்வை, அக்காலத்தில் உலகமெங்கும் ஓங்கியிருந்த அணுகுமுறை .ஆகவே அது இயல்பானதுதான். மேலும் அதுவே வரலாற்றின் மையக்கட்டிடம். அதன்மேல் தான் வரலாற்றின் விரிவாக்கங்கள் எழுதிச்சேர்க்கப்படக்கூடும்.

தமிழ்வரலாற்றெழுத்தில் கே.கே.பிள்ளை இடங்கை- வலங்கை சாதிகளைப் பற்றி எழுதியது ஒரு திருப்புமுனை. அன்று அவருடைய நூல் பலத்த கண்டனத்துக்கும் ஆளாகியது. அது சோழர்களின் காலகட்டத்தில் தமிழகத்திலிருந்த சாதிப்பூசல்களை மிக வலுவாகச் சித்தரித்தது. தமிழ் வரலாற்றின் இயங்குவிசையே சாதியமுரண்பாடுகள் வழியாகத்தான் நிகழ்கிறது என்று காட்டியது. இன்றும் பேசப்படும் ஆய்வுநூல் அது

ஏறத்தாழ அதேகாலத்திலேயே ஜார்ஜ் எல் ஹார்ட் எழுதிய ‘பண்டைய தமிழக வரலாறு’ நூல் தமிழ்ச்சமூகம் சங்ககாலம் முதல், அல்லது அதற்கும் முன்பிருந்தே மிக இறுக்கமான சாதியக்கட்டமைப்பாலானது என்றும், அத்தகைய உறுதியான சாதியக் கட்டமைப்பு அக்காலகட்டத்தில் வடக்கே எங்கும் இருக்கவில்லை என்றும் ஆதாரங்களுடன் காட்டியது. இவ்விரு நூல்களுமே அறிஞர்கள் நடுவே விவாதிக்கப்பட்டு பின்னர் சிற்றிதழ்சார்ந்த அறிவுஜீவிகளிடம் வந்தடைந்தன

ஆனால் இன்றும்கூட மையவரலாறு சாதியை முதன்மையாகப்பேசுவதாக இல்லை. சோழர்காலத்தில் ஓங்கியிருந்த சாதிகள் என்னென்ன, அன்று உருவாகிவந்த சாதிய உட்பிரிவுகள் என்னென்ன என்றெல்ல்லாம் இன்னமும்கூட உறுதியான சான்றுகளுடன் எழுதப்படவில்லை. வரலாற்றாசிரியர்கள் எழுதாமல் விட்ட இடங்களில் அரசியல்வாதிகளும் சாதியவாதிகளும் புகுந்து ஆதாரமில்லாத வரலாறுகளை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் எல்லா பகுதிகளிலும் நாட்டாரிலக்கியங்களும், மைய ஓட்ட இலக்கியங்களில் இருந்து விலகிய உதிரிப்படைப்புக்களும் வேறொரு இலக்கிய வரலாற்றை நமக்கு காட்டுகின்றன. இணைவரலாறு, அல்லது மாற்றுவரலாறு. அவை சாதியவரலாறுகளாகவே இருக்கின்றன. ஆனால் இங்கே வழக்கமான இடதுசாரி வரலாற்றுச்சித்தரிப்புகள் கூறுவதுபோல அவை சாதிய ஒடுக்குமுறையின் சித்திரங்களைக் காட்டவில்லை. மாறாக சிறுசிறு வட்டார ஆதிக்கங்களாக சாதிகள் செயல்பட்டதை, அவற்றின் வீரநாயகர்களையே அவை சித்தரிக்கின்றன

கொங்குவட்டார நாட்டாரிலக்கியங்களை சே.இராசு தொகுத்துள்ளார். அவை கொங்குக்கவுண்டர்கள் சோழர்காலம் முதல் தனித்தன்மைகொண்ட ஆட்சிமையங்களாக நீடித்த கதையையே காட்டுகின்றன. வெங்கலராஜன் கதை முதலிய தென்தமிழக நாட்டாரிலக்கியங்கள் நாடார் ஜாதி நாடாண்டதையே காட்டுகின்றன. இவையனைத்திலும் இந்த வட்டார ஆதிக்கத்துக்கும் சோழர், சேரர்,பாண்டியர், துருக்கர், நாயக்கர் போன்ற மைய அதிகாரங்களுக்கும் நடந்த பூசலும் பதிவாகியிருக்கின்றது. இந்தியாவின் சாதியமுறையும், ஆதிக்க அடுக்குமுறையும் குறித்து இந்த மாற்றுவரலாறுகளைக் கணக்கில்கொண்டு மிக விரிவாக மீண்டும் எழுதவேண்டிய தேவை உள்ளது.

இந்நூல்கள் எல்லாமே சாதிப்பெருமை நூல்களாக அந்தந்த சாதியினரால் பேசப்படலாம், அதற்கான கட்டமைப்பை அந்நூல்களும் கொண்டுள்ளன, அவை உண்மையிலேயே சாதிப்பெருமைபேசும் நூல்கள்தான். ஆனால் இங்கே ஆதிக்கம் எந்தெந்த வகையில் செயல்பட்டது என்று வரலாற்றாசிரியர்கள்தான் எழுதவேண்டும். முன்முடிவுகளும் ,அரசியல் உள்நோக்கங்களும் இல்லாமல். இங்கே ஆதிக்கம் ஒற்றைப்படையானதாக இருந்திருக்கவில்லை என்பதையே இந்த இணைவரலாறு காட்டுகிறது.

மிகப்பரந்த நிலமும் பெரிய எண்ணிக்கையிலான மக்கள்திரளும் கொண்ட இந்தியப்பெருநிலத்தில் ஆதிக்கம் மிகப்பரவலாக, சிறிய நுண்குழுக்களால் ஆனதாகவே இருந்தது. அவற்றை தொகுத்தும், அவற்றுக்கிடையே சமரசம் செய்துவைத்தும், அவற்றின் ஏற்பைப்பெற்றும்தான் மைய ஆதிக்கம் அமைந்தது. மைய ஆதிக்கத்துடன் முரண்படும் குழுக்கள் அழிக்கவும்பட்டன. அவ்வகையில் இங்கே எல்லா குடியும் நாடாண்ட வரலாறுகொண்ட அரசகுடிதான்.

தமிழக மாற்றுவரலாற்றில் கருத்தில்கொண்டாகவேண்டிய நூல்களில் ஒன்று செண்பகராமன் பள்ளு. கோட்டாறு கார்மேல் அங்கில உயர்ர்நிலைப்பள்ளி தமிழாசிரியராக இருந்த எம்.ஜே.காளிங்கராயர் இந்நூலை 1942ல் பதிப்பித்தார். கவிமணி தேசிகவினாயகம்பிள்ளை பிரதி ஒப்பீட்டு ஆய்வு செய்து உதவினார். எஸ்.வையாபுரிப்பிள்ளை ஆங்கிலத்தில் ஒரு முன்னுரையும் அளித்தார். செய்குத்தம்பிப் பாவலர் சாற்றுகவி அளித்தார். திருவிதாங்கூர் அரசால் இந்நூல் பள்ளிப்பாடங்களுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. 1947ல் மறுபதிப்பு வந்துள்ளது.

இந்நூல் சிற்றிலக்கியங்களில் ஒருவகையான பள்ளு என்னும் வடிவம் கொண்டது. குமரிமாவட்டத்தில் உள்ள கோவைக்குளம் என்னும் ஊரின் தலைவனான செண்பகராமன் காலிங்கராயன் என்னும் மீனவகுடியைச் சேர்ந்த ஆட்சியாளனை புகழ்ந்து பாடப்பட்டது. பள்ளர்கள் தங்கள் பாட்டுடைத் தலைவனரான செண்பகராமன் காலிங்கராயனை புகழ்ந்து பாடுவதாக அமைக்கப்பட்டது

செண்பகராமன் என்பதும் காலிங்கராயன் என்பதும் பட்டப்பெயர்கள்தான். செண்பகராமன் என்பது சோழர்காலத்தில் நிலவுடைமையாளர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் சோழமன்னர்களால் அளிக்கப்பட்ட பட்டம். பின்னர் திருவிதாங்கூர் ஆட்சியாளர்களும் அதை கடைப்பிடித்தனர். காலிங்கராயன் என்பது பழைய பாண்டியர்களால் அளிக்கப்படுவது

குமரிமாவட்டத்தில் கோவைக்குளம் பகுதியிலிருக்கும் பல கல்வெட்டுகளில் காலிங்கராயன் பெயர் காணப்படுகிறது. இந்த குடி எப்படியும் ஆயிரமாண்டுகள் தொடர்ச்சியாக இங்கே ஆட்சிப்பொறுப்பில் இருந்திருக்கிறது என்பது இவ்விரு பட்டங்களுமே இவர்களுக்கு இருப்பதிலிருந்து தெரியவருகிறது.

இந்நூல் தரும் குறிப்புகள் ஆர்வமூட்டுபவை. காலிங்கராஜன் பரத [பரதவ] குலத்தவன் என நூலாசிரியர் பல இடங்களி சொல்கிறார். ‘குருகுலச் சாதிப் பரதன்’ என்கிறார். பண்டையன் என்றும் பழையன் என்றும் குறிப்பிடுகிறார். இவை பாண்டியர்களுக்குரிய அடைமொழிகள். செண்பகராமன் காலிங்கராயனுக்கு கொடியும் மாலையும் இருந்ததை நூல் குறிப்பிடுகிறது. கடம்பமாலையும், மயில்கொடியும். இவை அவன் தனிக்கோல் கொண்ட அரசன் என்றே காட்டுகின்றன

கோவைக்குளத்தை அடுத்து செண்பகராமன் புத்தன்துறை என்னும் கடற்கரை உள்ளது. இது செண்பகராமன் காலிங்கராயனால் அமைக்கப்பட்ட கடல்துறையாக இருக்கலாம்.  கீழ்மணக்குடி என்று அருகிருக்கும் கடற்கரை அழைக்கப்படுகிறது. இது அக்காலத்தைய முக்கியமான ஒரு துறைமுகம். அதன்மேலிருந்த கட்டுப்பாடே செண்பகராமன் காலிங்கராயனை செல்வாக்கு மிக்கவனாக ஆக்கியது, தனியாட்சி நடத்தவும் செய்தது.

”பகர அரிய செண்பகராமன் பண்ணை விளங்க நண்ணியே பறளியாறு பெருகி வார பான்மை பாரும் பள்ளீரே” என்ற வரி பறளியாற்றின் கரையில் இவனுக்கு நிலங்கள் இருந்திருப்பதை காட்டுகிறது. பறளியாறு இன்றைய மேல்மணக்குடி அருகேதான் கடலில் கலக்கிறது.

செண்பகராமன் காலிங்கராயன் கிறிஸ்தவமதத்தினன் என்பது நூலில் சொல்லப்பட்டுள்ளது. கோவைக்குளத்திலுள்ள இஞ்ஞாசியார் கோயில் கன்யாகுமரியிலுள்ள அலங்காரமாதா கோயில் போன்றவற்றுக்கு இவன் நிதியளித்ததை நூல் குறிப்பிடுகிறது. ‘சந்த இஞ்ஞாசியார் பதசேகரத்தான்’ என்று நூலாசிரியர் பாட்டுடைத்தலைவனைக் குறிப்பிடுகிறார். கோவைக்குளத்தில் ஒரு பாறைமேல் கல்லுமூலை என இன்று அழைக்கப்படும் இடத்திலுள்ள பெரிய கற்சிலுவை செண்பகராமன் காலிங்கராயனால் நிறுவப்பட்டது என இந்நூலே சொல்கிறது

இந்நூல் எழுதப்படும் காலகட்டத்தில் குமரிமாவட்டத்திலுள்ள கடற்கரைகள் முழுக்கவே போர்ச்சுகீசியர் ஆதிக்கத்திலிருந்தன. குறிப்பாக மணக்குடி துறைமுகம் அவர்களின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்தது. செண்பகராமன் காலிங்கராயன் அவர்களுக்கு கப்பம் கட்டி வந்திருக்க வாய்ப்புண்டு. அக்காலகட்டத்தில் மதுரை நாயக்கர்களின் ஆட்சியில் இருந்தது. தென்காசி, வள்ளியூர் பகுதிகளில் பாண்டியர்வழிவந்த அரசர்கள் ஆட்சியமைத்திருந்தனர். அவர்கள் நடுவே பூசல்கள் இருந்தன. இன்னொரு நாட்டார் பாடலான  ‘கன்னடியன் போர்’ வள்ளியூரை ஆண்ட பாண்டியர்கள் நடுவே நிகழ்ந்த போரைப்பற்றிச் சொல்கிறது. இந்நூல் அந்தக் காலப்பின்னணி கொண்டது.

இந்நூலில் பல குறிப்புகளில் இருந்து இது எழுதப்பட்ட காலகட்டத்தில் கன்யாகுமரிப் பகுதி பாண்டியர்களின் நேரடி ஆட்சியில் இருந்தது என்று தெரிகிறது. 1738ல்தான் திருவிதாங்கூர் மார்த்தாண்டவர்மாவின் ஆட்சிக்கு வருகிறது. 1766 வரை கன்யாகுமரி பாண்டியர்களின் வசமே இருந்தது. 1766க்குப்பின் மார்த்தாண்டவர்மா சிற்றரசர்களை ஒழித்து திருவிதாங்கூர் முழுக்க ஒரே ஆட்சியை கொண்டுவந்தார். ஆகவே இந்நூல் 1766க்கு முன் எழுதப்பட்டதாக இருக்கலாம் என்று தொகுப்பாசிரியர் கருதுகிறார். கோட்டாறில் சவேரியார் ஆலயம் கட்டப்பட்ட செய்தியை இந்நூல் அளிக்கிறது. சவேரியாருக்கு புனிதர் பட்டம் 1622ல் அளிக்கப்பட்டது. எனவே இந்நூல் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டதாக இருக்கலாம் என்பது பொதுக்கருத்து.

இந்நூலில் மதுரையின் வடுகர்படை நாஞ்சில்நாட்டில் நுழைந்ததும், அதனால் உருவான அராஜகமும் பேசப்படுகின்றன. இது 1634ல் திருமலைநாயக்கரின் படைகள் நாஞ்சில்நாட்டில் நுழைந்த செய்தி. அதற்குப் பிந்தைய அராஜக நிலை முப்பதாண்டுகள் நீடித்தது.  அப்போது காலிங்கராயன் போன்ற சிற்றரசர்கள் போர்ச்சுக்கீசியர்களுடன் தொடர்புகொண்டு தங்கள் ஆதிக்கத்தை தக்கவைத்துக்கொண்டு தனி முடியாட்சி நடத்தியிருக்க வாய்ப்புண்டு

செண்பகராமன் காலிங்கராயன் அக்கால சேரநாட்டு ஆட்சியாளர்களைப்போல் மருமக்கள் வழி முறைமை கொண்டவன். அவன் தந்தைபெயர் பெரியகுட்டி. செண்பகராமன் காலிங்கராயனின் மருமகன்களின் பெயர்களை நூல்கள் சொல்கின்றன. கற்பூரக் காலிங்கராயன்,. இவனை ஆசிரியர் மூத்தநயினார் என அழைக்கிறார். இவனே செண்பகராமன் காலிங்கராயனின் வாரிசு என்பது தெளிவு. இவன் தம்பி பிரஞ்சீஸ் கொலிவேர். இவனை நூலாசிரியர் இளையநயினார் என்று அழைக்கிறார். கற்பூரக் காலிங்கராயனின் மகன் சுவானி நயினார் என்று சொல்லப்படுகிறான்

செண்பகராமன் காலிங்கராயனின் முன்னோர் ராமேஸ்வரம் அருகே திருஉத்தரகோச மங்கையில் இருந்து குமரிமாவட்டத்தில் குடியேறியவர்கள் என்று நூலாசிரியர் சொல்கிறார். திரு உத்தரகோசமங்கையில் அவர்கள் கல்ரதம் ஓட்டினர் என்னும் செய்தி அங்கும் அவர்கள் அரசகுடியாகவே இருந்தனர் என்பதை காட்டுகிறது. செண்பகராமன் காலிங்கராயனின் முன்னோர்  திருச்செந்தூர் முருகனுக்கு கல்மண்டபம் கட்டி அளித்த செய்தியும் சொல்லப்படுகிறது.

இந்நூலில் நூலாசிரியர் பெயர் இல்லை. ஆய்வாளர்களாலும் அதை கண்டறிய முடியவில்லை. ஆகவே வாய்மொழிப்பாடலாகவே இது நீடித்தது. பாடல் ஒன்றில் ஆசிரியர் ‘எந்த சந்நீக் குலாயு’ என்று சொல்வதிலிருந்து இவர் கிறிஸ்தவர் என்று ஊகிக்கமுடிகிறது. இவர் வேளாள குடிப்பிறந்த கவிஞர் என்றும் ஓர் ஊகம் உண்டு.

இந்நூலை பதிப்பித்தவர் செண்பகராமன் காலிங்கராயனின் நேரடி வாரிசாக வந்தவர். இவர் எழுதிய குறிப்பில் தன் தந்தை சு.மரிய இஞ்ஞாசி காலிங்கராயரின் பழைய நூல்சேகரிப்பில் இந்நூலின் ஏட்டுப்பிரதியை கண்டடைந்ததாகவும், அதை பதிப்பிப்பதாகவும் சொல்கிறார். 150 பாடல்கள் கொண்ட இந்நூலில் 137 பாடல்களே கிடைத்தன. மொத்தம் மூன்று ஏடுகள் கிடைத்தன. திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டப்புளி என்னும் ஊரில் ஒரு பிரதி கிடைத்தது.

இந்நூல் 1800களில்கூட மீனவர்களின் திண்ணைப்பள்ளிக்கூடங்களில் மாணவர்களால் மனப்பாடம் செய்யப்பட்டு வந்தது. இது சங்ககாலம் முதல் இருந்துவந்த கடற்சேர்ப்பர்கள் என்னும் மீனவ அரசர்களின் மரபில் வந்த கடைசியான அரசனைப்பற்றிய நூல் என்பதனால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது

இது ஒரு செவ்வியல்நூல். நாட்டார்ப்பாடல்களின் கூறுகள் ஆங்காங்கே பயின்று வருகின்றன

வில்லேபுருவம் சரமே இருகண்கள் வெண்நகை ஒண்

பல்லே தரளம் இதழே பவளம் பழகு தமிழ்ச்

சொல்லே தரும் செண்பகராமன் வெற்பில் சுருண்டிருண்ட

அல்லே குழல் என்னை இவ்வண்ணமாக்கிய ஆயிழைக்கே

என்பதே பொதுவான இந்நூலின் மொழிநடை. பள்ளன் – பள்ளி உரையாடல்களில் பேச்சுமொழி வருகிறது

அந்தப்பேச்சை விடு போனபுத்தியை

     ஆனை கட்டி இழுத்தால் வருமோ

இந்தப்பாடு பட என் தலையின் எழுத்தைச்

    மற்றதேன் சொல்லவேணும்?

என்னும் நடை அமைந்துள்ளது. இந்த மொழிமாறுபாடு பொதுவாக பள்ளு இலக்கியங்களின் பாணி. குறவஞ்சி, பள்ளு இரண்டுமே நாட்டார்ப்பாடல் வடிவிலிருந்து சிற்றிலக்கியத்தகுதி பெற்ற இலக்கியங்கள்.

இந்நூலின் இன்றைய முக்கியத்துவம் ஒன்றுண்டு. ஏன் இந்நூல் 1947க்குப்பின் மறுபதிப்பு பெறவில்லை என்று யோசித்தால் அது பிடிகிடைக்கும். 1947க்குப்பின்பு உருவான வரலாற்றுச் சித்திரம் ஒன்று உண்டு. அதாவது, மீனவர்கள் மிகமிகக் கடுமையாக ஒடுக்கப்பட்டவர்கள், சாதிய இழிவுநிலையில் இருந்தவர்கள், கிறிஸ்தவம் அந்த ஒடுக்குமுறை மற்றும் இழிவுநிலையிலிருந்து அவர்களை மீட்டது என்று ஒரு சித்திரம் உருவாக்கப்பட்டு இன்றும் வலுவாக நீடிக்கிறது. இந்நூல் அதை மறுக்கிறது. மீனவர்கள் தனி முடியாட்சியுடன் திகழ்ந்தமைக்குச் சான்றாக நிற்கிறது. அவர்களின் மதமாற்றம் ஆதிக்க அரசியலின் பொருட்டே ஒழிய, அடக்குமுறையிலிருந்தும் சாதிய இழிவிலிருந்தும் தப்புவதற்காக அல்ல என்று காட்டுகிறது

இன்று எல்லா சாதியும் மாற்றுவரலாறுகளின் வழியாக தாங்களும் ஆண்டசாதியே என்பதை கண்டடைந்துவருகிறது. ஆனால் கிறிஸ்தவ திருச்சபை உருவாக்கும் ‘ஒடுக்குமுறை- மீட்பு’ என்னும் சித்திரத்தைக் கடந்து செண்பகராமன் பள்ளில் இருந்து ஒரு வரலாற்றை உருவாக்கிக்கொள்ள மீனவர்களால் இயலவில்லை. ஆனால் எதிர்காலத்தில் முன்னிறுத்தப்படலாம்.

மன்னர்களின் சாதி
மீன்குருதி படிந்த வரலாறு
தோள்சீலை
முந்தைய கட்டுரைஅழகிய நம்பி- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇந்தியவியல் திருவிழா