எனது பர்மா வழிநடைப் பயணம்: பயணக் கட்டுரைகள்
அன்புள்ள ஜெ,
திரு.வெ.சாமிநாத சர்மாவின் “பர்மா வழிநடைப் பயணம்” வாசித்தேன். இரண்டாம் உலகப் போரின் 1942-ம் ஆண்டுத் தொடக்கத்தில் ஜப்பானியர்களின் ஆகாய விமானத் தாக்குதலின் விளைவாக பர்மாவிலிருந்து இந்தியாவிற்கு வரநேர்ந்த பல்லாயிரம் மக்களில் ஒருவராக பதிவுசெய்த குறிப்பு அது.
1941-ம் வருடக் கடைசியில் ஜாவா, சுமத்ரா, மலேயா முதலிய நாடுகளைக் கைப்பற்றிக்கொண்டு ஜப்பான் பர்மாவுக்குள் நுழைகிறது. அந்த நேரத்தில் ஆங்கிலேய அரசு இதை உணர்ந்திருந்தாலும் பெரிதாக பர்மாவில் வைத்து சண்டை செய்ய முயன்றதாக தெரியவில்லை. பர்மாவில் செயல்பட்டு வந்த அரசு அலுவலகங்கள், மற்றும் அங்கு வேலைசெய்த பணியாளர்களை கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா நோக்கி வரும்படி உத்தரவிடுகிறது.
அன்றைய ஆங்கிலேய அரசின் பகுதியாக இருந்த பர்மாவில் அரசு அலுவலகங்களில் பெரும்பாலும் இந்தியர்களும் தமிழர்களும் இருந்திருக்கிறார்கள்.ஆசிரியர் பர்மாவில் ஜோதி என்ற மாதப் பத்திரிகையில் நிர்வாக ஆசிரியராக இருக்கிறார். அங்கு போர்ச் சூழலில் வசதியான வாழ்க்கை வாழ்பவர்களும் எளிய வாழ்க்கை வாழ்பவர்களும் எளிதாக வெளியேற முடிவெடுத்துவிட்டாலும், அவர் காட்டும் தயக்கம் நடுத்தர வாழ்க்கைக்கே உரியது.
அகதிகளாக வெளியேறும் அரசு ஊழியர்களுக்கு கொஞ்சம் வாகன ஏற்பாடுகள் செய்து கொடுத்திருக்கும் அரசு, நடந்தே இந்தியா வரை வரும் சாதாரண மக்களை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறது. வரும் வழியில் பத்து பதினைந்து மைல் தூரத்திற்கு ஒரு அகதிகள் தங்கும் முகாம் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். பர்மாவிற்குள் உள்ள முகாம்கள் இருப்பதற்கு தகுதியில்லாமல் எனோ தானோ என்று பராமரிக்கப்படுகிறது.
நூற்றுக் கணக்கான மைல்கள் நடந்து வரும் மக்கள் பரிதாபமாக உயிருக்கே உணவில்லாமல் செத்து விழுகிறார்கள். ஒரு எளிய குடும்பம் பண்ட பாத்திரங்கள், குழந்தைகள், மற்றும் கைக்குழந்தையோடு நடந்து வருகிறது. உணவில்லாமல் நோயில் கைக்குழந்தை இறந்துவிடுகிறது. இறந்த குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு மற்ற குழந்தையை அழைத்துக்கொண்டு நடந்து வருவதை சொல்கிறார்.
இந்திய மக்களும் பொதுச் சுகாதாரத்தை கொஞ்சம் கூட பேணாமல் இருக்கிறார்கள். போகும் இடமெல்லாம் பொது இடங்களை அசிங்கம் செய்து நீர் நிலைகளை சீரழித்து வருகிறார்கள். முகாமில், ஆசிரியர் குடும்பத்தார் உணவு சமைக்கும் இடத்திற்கு அருகில் ஒரு பெண்மணி மலம் கழித்துக் கொண்டு இருப்பதை பதிவுசெய்கிறார்.
இந்திய எல்லைக்குள் உள்ள முகாம்கள் ஓரளவு வசதியாக பராமரிக்கப் படுகிறது. நேரடியாக ஒரு முகாமை நேரு பார்த்துச் செல்கிறார். மேலும் இந்திய எல்லைக்குள் இருக்கும் முகாம்களில் ராமகிருஷ்ண மடத்தை சேர்ந்தவர்களும் மேலும் சில அமைப்புகளும் உணவு மற்றும் சில வசதிகளை நல்லபடியாக செய்கின்றன. இந்திய எல்லைக்குள் அகதிகள் தங்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல இலவச பயணம் புகைவண்டியில் அனுமதி அளிக்கப் படுகிறது.
பூமணியின் அஞ்ஞாடி வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதில் பஞ்சத்தின் பிடியில் தென் தமிழகத்தின் நிலையை பூமணி விவரித்துச் செல்கிறார். ஒருவேளை கஞ்சிக்கு வழியில்லாமல் மக்கள் சுருண்டு சுருண்டு சாகிறார்கள். சுடுகாட்டில் தனித்தனியாக குழிதோண்டக் கூட முடியாமல் மொத்தமாக குழிக்குள் அழுத்தி மூடுகிறார்கள். அந்த வேளையில் பர்மாவிற்கும் இலங்கைக்கும் அவர்களை அழைத்துச் செல்ல கங்காணிகள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
(இந்த பஞ்சத்திலும் அருகில் இருக்கும் இரயில் பாதையில் தானியங்கள் நிறைத்து இரயில் சென்றபடியே இருக்கிறது. ஓடும் ரயிலில் இருந்து கருத்தையனும் கூட்டத்தினரும் கொஞ்சம் தானியங்களை எடுத்துக் கொள்கிறார்கள் ).
இவ்வாறான பஞ்ச காலங்களில் வெளியேறிய மக்கள் பர்மா இலங்கை போன்ற நாடுகளுக்கு சென்று அங்கும் வாழ்விழந்து திரும்பும் கதை கொடுமையானது. பெரும்பாலும் பயணக் குறிப்புகள் நிறைந்த பின் பகுதியை விட, அன்றைய அரசியல் உலகியல் சூழலை பதிவு செய்திருக்கும் முதல் சில அத்தியாயங்கள் மிகுந்த ஆர்வத்தை உண்டாக்கியது.
எனக்கு ஆச்சர்யம் அளிக்கும் செய்தியாக இருந்தது அன்று ஜப்பான் இருந்த நிலைதான். 1942ல் ரங்கூன் நகரத்தில் 80க்கும் மேற்பட்ட ஜப்பானிய விமானங்கள் குண்டு வீசுகின்றன. இவற்றை எதிர்த்து அமெரிக்க பிரிட்டிஷ் விமானங்கள் சண்டையிட்டு ஜப்பானுக்கு சொந்தமான 52 விமானங்களை சுட்டு வீழ்த்துகின்றன.
அடுத்தடுத்து இன்னும் நூற்றுக் கணக்கான விமானங்களைக் கொண்டு ஜப்பான் எளிதாக பர்மாவை வசப்படுத்துகிறது. உலகை தங்கள் ஆளுமைக்கு கொண்டுவந்து செல்வங்களைக் குவித்த ஐரோப்பிய தேசங்களுக்கு சவால் விடும் வகையில் அன்றிருந்த ஜப்பான் மிகப் பிரமாண்டமான சக்தியாக இருந்திருக்கிறது.
பள்ளிக் காலங்களில் ஜப்பானை மேற்கோள் காட்டி இரண்டாம் உலகப் போரில் வீழ்ந்த ஜப்பான் இன்று எழுந்துள்ளது அதுபோல நாமும் மேலே வரவேண்டும் என்று ஆசிரியர்கள் சொல்வார்கள். ஆனால் உண்மையில் அன்றிருந்த இந்தியாவை ஜப்பானுடன் கொஞ்சமாவது ஒப்பிட முடியாது என்று தெரிகிறது.
உங்களின் “சங்குக்குள் கடல்” கட்டுரையில் ஒரு வரி வருகிறது.
“அந்தப்பஞ்சத்தைச் சமாளிக்க நேரு அன்று உலகிலிருந்த அனைத்துத் தலைவர்களுக்கும் கடிதமெழுதினார். காலில் விழுந்து கெஞ்சி மன்றாடினார். உங்களிடம் என் நாட்டு மக்களுக்காக பிச்சைப்பாத்திரத்தை நீட்டுகிறேன் என எல்லா சுயமரியாதையையும் இழந்து கெஞ்சினார்.”
இது தானே அன்றைய இந்திய நிலை. அந்த நிலையிலிருந்து தானே இன்று இவ்வளவு நகர்ந்திருக்கிறோம். இதைச் சொல்வதில் தானே எனது பெருமை. இதில் தானே என் தன்னம்பிக்கை வளரவேண்டும்.
அதைவிடுத்து நாடுபிடிக்க ஐரோப்பிய நாடுகளுடன் போரிடும் அளவு வளர்ச்சியடைந்த, உள்கட்டமைப்பும், செல்வமும் கொண்ட ஜப்பானுடன் ஒப்பிடுவது சரியல்ல என்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.
அன்புடன்,
சி. பழனிவேல் ராஜா.