மதுரையில்…
அன்புள்ள ஜெ,
நான் மதுரை அறிந்திராதவன்.கட்டுரையை ஒரு பக்கம் வைப்போம்.முக கவசம் இல்லாத தங்கள் நிழற்படம் பாரத்தேன்.அதனால் தான் எழுதுகிறேன்.ஒரு எஸ்பிபி போனது போதும்.அருள்கூர்ந்து கவசம் அணியுங்கள்.
அன்புடன்,
ஜெய்கணேஷ்.
***
அன்புள்ள ஜெய்கணேஷ்
உண்மைதான். முகக்கவசம் அணியவேண்டும். அது சட்டமும்கூட. ஆனால் எப்படியோ முகக்கவசத்தை கழற்றிவிடுகிறேன். மூச்சுவாங்குகிறது. முகக்கவசம் இல்லை என்பதை கழற்றி நீண்டநேரம் கழித்த பின்னரே உணர்கிறேன்
ஜெ
***
அன்புள்ள ஜெ,
மதுரை பயணம் குறித்தும் அழகர் கோவில் சென்றது குறித்தும் நீங்கள் எழுதிய கட்டுரையை வாசித்தேன் .அதில் நீங்கள் எழுதியிருந்த ஒரு விஷயம் எனக்கு மிகுந்த உறுத்தலாக இருந்தது .மதியம் அஞ்சப்பரில் அசைவ உணவு உண்டு விட்டு மாலை அழகர் கோவிலிற்கு சென்றதாக எழுதியிருக்கிநீர் கள் . பொதுவாக நம் பக்கங்களில் அசைவ உணவை உண்டால் அன்றைய தினமும் அதற்கு அடுத்த தினமும் கோவிலிற்கு செல்லக் கூடாது என்பார்களே .(இப்போது அசைவ உணவு உண்ட நாள் மட்டுமாவது என்ற கணக்கு இருக்கிறது ) .
பொதுவாக நீங்கள் ஆகமம் சார்ந்த விஷயங்களில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் அது முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் ; நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையை மதிக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறவர் .இந்த கட்டுரையில் கூட அர்ச்சகர்களுக்கு காணிக்கை இட வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி இருந்தீர்கள் .அதனால் தான் இந்த விஷயம் என்னை துணுக்குற செய்து அமைதி இழக்க வைத்தது .ஒரு வேளை மறந்து விட்டீர்களோ ? இல்லை மறுபடியும் குளித்தால் போதும் என்று எண்ணிவிட்டீர்களா ?
பொதுவாக பயண திட்டங்களில் கோவில் தரிசனங்களும் உண்டு என்றால் சைவ உணவை உண்பது தான் சரியாக இருக்கும் .
நன்றி
அனீஷ் க்ருஷ்ணன் நாயர்
***
அன்புள்ள அனீஷ்கிருஷ்ணன்
நாங்கள் எங்கள் பயணங்களில் ஆலயங்களுக்குச் செல்வது வழிபாட்டுக்காக அல்ல, பண்பாட்டுப்பயணம்தான் அது. ஆயினும் அசைவ உணவை தவிர்ப்பதே வழக்கம். அதை ஒரு நிபந்தனையாகவே முன்வைப்பதுண்டு
அரிதாகச் சிலசமயம் திட்டமிடாதபடி ஒரு பயணம் அமையும். சட்டென்று தோன்றி கிளம்புவது. அப்படி தோன்றுவதும் கிளம்புவதும் எப்போதுமே ஒர் அரிய அனுபவம், அதை தவிர்க்கவேண்டியதில்லை என்பது என் எண்ணம். அப்போது நீராடிவிட்டுச் செல்வதுண்டு. அப்படிச் செல்லலாம் என்பதே வழக்கமாக உள்ளது. இவை ஆசாரங்களே ஒழிய ஆகமமுறையிலான நெறிகள் அல்ல என்பதே என் புரிதல். ஆசாரங்கள் எப்போதும் நடைமுறைக்கேற்ப மாறிக்கொண்டிருக்கின்றன.
ஆனால் அசைவ உணவு உண்டபின் ஆலயம் செல்லாமலிருப்பதே நல்லது என்பதே என் எண்ணமும். பொதுவாக திரைப்படம் பார்ப்பது போன்ற கேளிக்கைகளுக்குப் பின்னரோ, வணிகச்சூது போன்ற தமோகுணம் மிக்கச் செயல்களுக்குப் பின்னரோ ஆலயம் செல்லக்கூடாது என்பதுதான் முறை.
ஜெ
***
அன்புள்ள ஜெ
மதுரையில் நீங்கள் வேட்டிகட்டி நடப்பது மதுரை ஃபைனான்சியர்களுக்கு உரிய நடை. சுற்றிலும் அடியார்[ட்]கள் வேறு
ஆனந்த்
***
அன்புள்ள ஆனந்த்
பலர் இப்படி கலாய்த்துவிட்டார்கள். நல்லவேளை நிஜமான மருரை பைனான்ஸ் ஆசாமிகள் உண்மை என நம்பி என்னை போட்டுத்தள்ளாமல் விட்டார்கள்
ஜெ
***