கருத்து ஜனநாயகம் – ஒரு விளக்கம்

அன்புள்ள ஜெ

ஒரு கேள்வி, நீங்கள் உரையாடலிலும் ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்டவர் என்கிறீர்கள். அப்படியென்றால் ஏன் உங்கள் தளத்தில் உங்களை மறுக்கும் கட்டுரைகளை வெளியிடக்கூடாது?   நீங்கள் ஒரு தரப்பை முன்வைக்கிறீர்கள். கடிதங்களும் அதையே ஆதரிக்கின்றன. உதாரணமாக, என் நண்பன் ஒருவன் எழுத்தாளர்கள் இலக்கியம் பற்றி மட்டும்தான் பேசவேண்டும், மற்றவற்றைப் பற்றி பேசினால் அவர்களை மக்கள் கண்டிக்கவேண்டும் என்கிறான். அதை எழுதி அனுப்பு என்று சொன்னேன். நீங்கள் அதை வெளியிடவில்லை. அந்தக்கருத்தும் சேர்ந்துதானே ஜனநாயகம்? ஒரு சந்தேகமாகவே இதை கேட்கிறேன்.

என் ஜெகன்னாதன்

***

அன்புள்ள ஜெகன்னாதன்,

தமிழ்ச்சூழல் என்பது ஒரு பெரிய கருத்து வெளி. அதில் பெருவாரியான இடத்தை அடைத்திருப்பவை நீங்கள் சொல்லும் உங்கள் நண்பனின் தரப்பு சார்ந்த கருத்துக்கள். தமிழ் ஹிந்து அல்லது தடம் போல இலக்கியத்துக்கு மட்டுமாக ஒரு தளம் அமைந்தால்கூட விரைவிலேயே அந்த பெருவாரிக்கருத்து அங்கே ஊடுருவிவிடுகிறது. ஏனென்றால் அதுதான் ’மக்கள்’ கருத்து. ஆகவே விற்கக்கூடிய கருத்து.

இந்த தளம் அந்த பெருவாரிக்கருத்துக்கு மாற்றாக, என்றும் ஒலித்தாகவேண்டிய ஒரு குரலை மட்டும் முன்வைக்கிறது. இதன் நோக்கம் அதுவே. இது பொதுத்தளம் அல்ல, அந்த மாற்றுக்குரலுக்கான தளம் மட்டுமே.

எங்கும் எதிலும் அன்றாடக் கட்சி அரசியல், இலக்கியம் அரசியலுக்கு சேவை செய்யவேண்டும் என்ற ஆணவப் பார்வை, இலக்கியம் ஒரு கேளிக்கை என்ற நுகர்வு அணுகுமுறை, அறிவியக்கங்கள் மீதான விலக்கமும் ஏளனமும் என இங்கே ஓங்கியிருப்பவை இந்த தளத்திற்கு வெளியே ஓங்கி ஒலித்து செவிகளை மூடுகின்றன. நடுவே இது ஒற்றை வீணைநரம்பின் ஓசை போல தேடும் காதுகளுக்கு மட்டுமே ஒலிக்கிறது.

இப்படி இன்று இருப்பவை எல்லாமே மிகச்சிறிய ஊடகங்கள். இவற்றுக்கும் இடமுண்டு என்பதே ஜனநாயகம். பெரும்பான்மை ரசனை, பெரும்பான்மை கருத்தின் அடிப்படையில் இதை நசுக்குவதும் இங்கும் பெரும்பான்மையின் குரலையே ஒலிக்கவிடுவதும் ஜனநாயகம் அல்ல. இங்கே ஜனநாயகம் என்றபேரில் அக்குரல்களை உள்ளே விட்டால் அவை மட்டுமே ஓங்கி ஒலிக்கும். இந்த தளமும் பிற பொது ஊடகங்களில் ஒன்றாக ஆகிவிடும்.

நான் ஏற்றுக்கொள்ளாத, என்னை மறுக்கும் கருத்துக்களும் இங்கே பேசப்பட்டுள்ளன. மறுப்புகள் பதிவாகியிருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் இந்த மெல்லிய குரலை பொருட்படுத்தி விவாதிக்க முயல்பவை. ஏளனம் செய்தும் வசைபாடியும் அழிக்கமுயலும் குரல்களுக்கு இங்கே இடமில்லை.

ஜெ

முந்தைய கட்டுரைநவீனத்தமிழிலக்கிய வாசிப்பு- கடிதம்
அடுத்த கட்டுரைகோணங்கியின் குரல்