நிறைவில்…

‘மூவாமுதலா உலகம்’ என  சீவகசிந்தாமணி தொடங்குகிறது.  வளராத, முதலென இல்லாத உலகம். நான் விண்ணை தொடக்கமற்றது என எண்ணுகிறேன். முடிவற்றது என்பதைவிட அது நெஞ்சை உறையவைக்கும் ஒரு கருத்து. ஆகவே இத்தலைப்பு, முதலாவிண்.

பாண்டவர்களின் விண்புகுதலுடன் இந்நாவல் முடிகிறது. உண்மையில் இந்நாவல் இதுவரை வந்த பிறநாவல்களின் தொகுப்புக்கூற்று மட்டுமே. மூலமகாபாரதத்தில் இருந்து இது வேறுபடுவது ஒன்றிலேயே. அதிலுள்ளது புராணக்கதை. இதிலுள்ளது வேதாந்த மெய்மை.ஒவ்வொருவருக்கும் அவரவருக்குரிய கைவல்யநிலை, முழுமுதல்தூய்மைநிலை, உண்டு என்பது அது

வெண்முரசின் நாவல்நிரை ஒவ்வொன்றும் ஒவ்வொரு படி. நான் ஒவ்வொன்றினூடாகவும் ஏறி ஏறி வந்துசேர்ந்திருக்கிறேன். பெரும் அலைக்கழிப்புகள் வழியாக, கசப்புகள் சோர்வுகள் வழியாக, கண்டடைதலின் பெருந்தருனங்கள் வழியாக. இது ஒரு ஊழ்கப்பயணம். இந்நாவல் அதன் நிறைவு.

இத்தருணத்தில் உணரும் சொல்லின்மையை கடந்துவந்தே இச்சில சொற்களைச் சொல்கிறேன். இது என் நிலத்தில் முடிவுற்றதில் ஓர் நிறைவுணர்வு எழுகிறது. எப்போதும் அவ்வண்ணமே நிகழ்கிறது எனக்கு. இனி இதிலிருந்து நான் மீண்டு வேறெங்கேனும் செல்லவேண்டும். விலகியபின்னரே இதை என்னால் பார்க்கமுடியும்.

இந்நாவலை என் பிரியத்துக்கும் மதிப்பிற்கும் உரிய ஸ்ரீனிவாசன்-  சுதா  இருவருக்கும் உரித்தாக்குகிறேன். இந்த நீண்ட அல்லல்மிக்க பயணத்தில் அவர்கள் என்னுடன் இருந்தனர். தங்களை முழுதளித்தனர். இதெல்லாம் ஒருபிறவியில் நிகழ்ந்து முடிவதல்ல

அனைவருக்கும் நன்றி, ஆசிரியர்களுக்கு வணக்கம்

ஜெ

வெண்முரசின் இணையாசிரியர்கள்

முந்தைய கட்டுரைஎழுத்தாளனும் வாசகனும்
அடுத்த கட்டுரைமதுரை- கடிதங்கள்