பண்பாடு- கேரளம்- ஒரு கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு,

ஒரு பதிற்றாண்டுக்கு முன்பு விக்கிப்பீடியாவில் தமிழைப் பற்றி படித்துக்கொண்டிருந்தபோது மலையாளத் தமிழியல் என்ற பதிவின் கீழே சுட்டியிருந்த “”தமிழ் நவீன பயன்பாட்டுக்கு உதவுகிறதா?” எனும் உங்கள் கட்டுரை வழியாக ஜெமோ என்னும் உலகத்திற்கு அறிமுகமானேன்.  என் அன்றைய அளவீட்டில், அது நீளமான கட்டுரையாக இருந்தாலும் அதன் மொழிநடையும் கூறுமுறையும் இத்தளத்திற்குள் என்னை விரைந்திழுத்துக்கொண்டது. அதன்பின்  ஒவ்வொரு நாளுமென பத்தாண்டுகளாக தொடரும் இப்பயணம் என் சிந்தனை முறை, என்னையும் இவ்வுலகையும் நான் நோக்கும் விதம் என அனைத்திலும் நிகழ்த்திய மாற்றங்கள் சிறிதல்ல. ஆசிரியருக்கு நன்றி.

தங்களின் தகடூர் தங்கல் பற்றி அறிந்ததும் இன்னும் அணுக்கமாக உணர்ந்தேன். தர்மபுரி அருகில் உள்ள என் சிற்றூரில் தமிழோடு கன்னடமும் தெலுங்கும் சரளமாக புழங்கும். இம்மொழிகளை ஒப்பு நோக்குவது என் சிறு வயது விளையாட்டுகளில் ஒன்று. மலையாள மணத்தை மட்டும் நுகராததால் அதன் மீது ஒரு ஏக்கம் இருந்தது. சண்டிகரில் முதுகலை படிக்கும்போது கேரள நண்பர்கள் அறிமுகமானதும் அது மேலும் பெருகிற்று. ஆகவே ஐந்தாண்டுகளுக்கு முன்பு கொச்சி நகரத்தில் பணியிலமர்ந்தேன். அச்சிறுவயது விளையாட்டின் அடுத்த கட்டத்தில் நுழைய வாய்ப்பமைந்தது.

முதல் நாள் என் வீட்டு உடமையாளரிடம் “டைனிங் டேபிள் எவிடே வாங்கலாம்?” என எனக்கு தெரிந்த தமிழாளத்தில் கேட்க “ரெடிமேடாயிட்டு வாங்காம், இல்லங்கில் ஒரு கடயில் நமக்கு வேண்டது போல நன்னாயிட்டு வனச்சு  தரும்” என்றார். ஒருநொடி துணுக்குற்று உங்கள் சங்கச்சித்திரங்களில் படித்த கலஞ்செய் கோவே பாடலில் வரும் ” வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி அகலிதாக வனைமோ” என்ற வரியும், அதை படித்தபோதுதான் எனக்கு அறிமுகமான இச்சொல்லும் நினைவுக்கு வந்தது. நமக்கு வனைதல், முடைதல், வேய்தல், எல்லாமே வெறும் “செய்தல்” தான். மேலும் “பண்ணுத்தமிழ்” வந்ததும் இன்னும் பல வினைச்சொற்கள் நாளும் களம்பட்டுக்கொண்டிருக்கின்றன.

பிறகு ஒரு நண்பரின் வீட்டுக்குச் சென்றபோது அங்கே குளத்திலிருந்த மலரைக்கண்டு “குறயே தாமரப்பூ உண்டல்லோ” என்றேன். “அது  தாமரயில்லா ஆம்பல் ஆணு” என்றார். மீண்டும் அதே துணுக்குறல். சிவாஜி படம் வந்தபோது கல்லூரியில் நண்பர்கள் “ஆம்பல்ஆம்பல்” பாட்டை வைத்து ஆராய்ச்சி செய்ததும், கடைசியாக அதிலே வரும் vowel (கவிஞர் குறிப்பிட்டது, மெளவல் மலர் என நினைக்கிறேன்) போல ஆம்பலும் ஒரு ஆங்கிலச்சொல்லாக இருக்கக்கூடும் என முடிவுரைத்ததும் நினைவில் வந்து சென்றது. அன்றெல்லாம் இணையம் கையருகே இல்லாததால் கூகிளாரிடம் அக்கணமே வினவி அறியவும் இயலவில்லை. சங்ககாலத்து முதன்மையான மலர்களில் ஒன்றான ஆம்பல் கூட இன்று நம் பொதுஒர்மையில் இல்லை.

பக்கத்து வீட்டில் பாக்கு மரத்தை அவர்கள் “கமுகு” எனச் சொல்லும்போது தொண்டரடிப்பொடி ஆழ்வார் “பைம் பொழிற் கமுகின் மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற” என்று புலரியை போற்றும் அழகை முழுதுணரச் செய்கிறது. சோம்பலான ஒருவர் “மடியாணு” எனக் கூறும்போது திருக்குறளின் “மடியின்மை ” அதிகாரத்தின் பொருளை அருசொற்ப்பொருள் பகுதிக்குச் செல்லாமலே புரியத்தொடங்குகிறது. இத்தகு இன்ப அதிர்ச்சிகளை நாள்தோறும் இங்கு எதிர்கொள்கிறேன். தமிழகத்தில் நம் பேச்சுவழக்கு பழந்தமிழிலிருந்து பெரிதும் நகர்ந்துவிட்டது. பொதுவில் புழங்கும் ஒரு சில நூறு தமிழ்ச்சொற்களை மட்டுமே நாம் மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறோம்.

பேச்சுவழக்கு இவ்வாறெனில், பெரும்பாலான மலையாளத் திரைப்பாடல்களும் பழந்தமிழ் சொற்களால் நிரம்பி வழிபவை. ஒரு மலையாளப் பாடலில் “மண்ச்சுரங்கள்’ என  கேட்டபோது, அதே கலம்செய் கோவே பாடலில் வரும் “சுரம்பல வந்த எமக்கும் அருளி” எனும் வரி நினைவுக்கு வந்தது. வழி என்னும் பொருள் தரும் “சுரம்” என்ற பழந்தமிழ்ச் சொல்லை இன்று தமிழின் பேச்சுவழக்கில் மட்டுமல்ல, பொதுஊடகத்திலும் தமிழ் திரைப்பாடல்களிலும்  கூட பயன்படுத்துவது அரிது (மண் பாதையே நம் வழி).

எனக்கு தங்களை அறிமுகப்படுத்திய அக்கட்டுரையில், நீங்கள் கூறியது போல மலையாளத்தின் மறுபக்கத்தையும் உணர நேர்ந்தது. அரசும், கல்விநிலையங்களும், பொது ஊடகங்களும் பயன்படுத்தும் (standard) மலையாளம் என்பது இதற்கு நேர் எதிர். கலைச்சொற்கள் அனைத்தும் சமஸ்க்ருத சொற்களஞ்சியங்களால் ஆனவை. அன்றாட புழக்கத்திற்கு இன்றும் வராமல் மேலேநிற்கும் சொற்கள். விளையாட்டாக தொலைபேசிக்கு மலையாளச்சொல் என்ன என்று நண்பரிம் கேட்டபோது “phone” தான் எனச் சொன்னார். பிறகு இணையத்தில் தேடியபோது “ஆலக்திக ஸ்வநக்ராஹி” என கண்டேன். தொலைபேசியோடு ஒப்பிடும்போது இச்சொல்லை ஊடகங்கள் கூட கையாள்வது கடினம், இது பொது புழக்கத்தில் வருவது இயலாத ஒன்று.

இத்தகு கலைச்சொற்கள் கடைசிவரை அருங்காட்சியகத்து அருஞ்சொற்கள் தான். நீங்கள் கூறும் கலைச்சொல்லாக்கத்தின் அடிப்படை கூறுகளான சுருக்கம், பொருட்செறிவு, ஒலியிசைவு, விரிவாக்கப் பண்பு ஆகியன இங்கு சற்றும் கருத்தில் கொள்ளப்படுவதில்லை என நினைக்கிறேன். இது வெறும் மொழியறிவு சார்ந்த இடர்பாடு மட்டுமல்ல எனத் தோன்றுகிறது, இதற்கு  பயன்பாடு சார்ந்த விளைவுகளும் உண்டு. நான் ஒரு  தனியார் மருத்துவமனையில் புதிதாக நிறுவப்படவிருந்த ஒரு துறையின் தலைமை மருத்துவராக இங்கு பணியில் சேர்ந்தேன். நோயாளிகள் படிக்க பல படிவங்கள் ஆங்கிலத்திலிருந்து மலையாளத்தில் மொழியாக்கம் செய்ய வேண்டிய தேவை வந்தபோது, எனது துறையில் உள்ள பத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் உதவி கோரினேன், அனைவரும் கூறியது ஒன்றே தான் “ஸாரே ஈ வாக்குகள் ஓக்கே ஆர்க்கும் அறியில்ல, பொதுவே ஆஸ்பத்திரியில் புறத்தொரு ஏஜென்சியிடத்து கொடுத்தாணு செய்யுன்னது”.

பின்னர் ஒரு முகமை வழி பணம் கொடுத்து செய்யப்பட்டது. அதனை மெய்ப்பு நோக்கும்போதுதான் அறிந்தேன் பல ஆங்கிலச்சொற்கள் அப்படியே மலையாள எழுத்துருவில் எழுதப்பட்டுள்ளன என்று, மருத்துவர் என்ற சொல் கூட “டோக்டர்” என. முன்பு  சென்னையில் வேலை செய்தபோது இது போன்ற படிவங்களை மருத்துவர்களும் மற்ற ஊழியர்களும் இணைந்து எளிதில் மொழியாக்கம் செய்வார்கள். முகமை வழி மொழியாக்கங்களை ஒப்பிடுகையில், இந்த சொந்த மொழியாக்கங்களில்  கருத்துச்சிதைவு/மாற்றம் போன்றவை குறைவு என்பது கூடுதல் நன்மை.

ஆனால் இந்த நிலை மாற்ற இயலாதது ஒன்றுமல்ல. அண்மையில் கொச்சி வானூர்தி நிலையத்தில் Arrival பகுதியில் ஆகமனம் என்ற சொல்லுக்கு பதிலாக  “வரிக” எனக் கண்டேன். என் நண்பரின் முகநூல் ஐக்கிய அமீரகத்தின் தலைவர்களை புகழும் மலையாள பதிவில் “தலவன்மாருடே எளிம” (நேதாக்களுடே லலிதம் ?) என எழுதியிருந்ததை காணும்போது, புதிய தலைமுறையினர் சமஸ்க்ருதத்தில் முழுமையாக மூழ்கி விடாமல் standard மலையாளத்தை நாடன் / பச்ச மலையாளம் (ஒரு வகை பழந்தமிழும் கூட) நோக்கி நகர்த்தக்கூடும். ஏதேனும் ஒரு தமிழ்ப்பாடல் சற்றே செவ்வியல் தன்மை கொண்டால், அதன் நீண்டகால ரசிகர்களில் தமிழர்களை விட மலையாளிகள் கூடுதல். இத்தகு பாடல்களுக்கு யூடியூபில் இடப்படும் பின்னூட்டங்களை காணும்போதே அறியலாம் (எ.கா; நா. முத்து குமாரின் பூக்கள் பூக்கும் தருணம், தாமரையின் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை, மறுவார்த்தை பேசாதே போன்றவை).

நீங்கள் அடிக்கடி சொல்லும் பிரிட்டிஷாரின் இரட்டை முகம் போன்றே மொழிகளுக்கும் இரட்டை முகம் உண்டு போலும். அன்றாடத் தமிழ் வழக்கின் சலிப்பும் (இன்றும் நாட்டாரியல் வழக்கு அழகானதே, ஆனால் அருகிவிட்டது. நான் சொல்வது ஐம்பது ஆண்டுகளில் ஊடகங்கள் நம் மீது பாய்ச்சி உருவாக்கிய பொது பேச்சுவழக்கு) ஆனால் தன்னேரில்லாத தமிழின் கலைச்சொல்லாக்கமும், மலையாளத்தின் இனிய பேச்சுவழக்கும் ஆனால் மூச்சை முட்டும் மக்களிடமிருந்து விலகியே நிற்கும் மலையாள (சமஸ்க்ருத) கலைச்சொற்களும் இவ்விரு  மொழிகளின் இரட்டை முகங்களே எனத் தோன்றுகிறது. எது எவ்வாறாயினும், அழகிய சொற்கள் கொஞ்சி விளையாடும் கேரளத்தில் (சேரநாட்டில்) இருந்துகொண்டு, பழந்தமிழ் சொற்கள் மட்டுமல்லாது ஆயிரமாயிரம் புதிய தூய தமிழ் கலைச்சொற்களும் செறிந்த உங்கள் இணைய தளத்தை படிப்பதென்பது, ஆயிரம் ஆண்டுகளேனும் என்னை முன்னகர்த்தி பண்டைய தமிழகத்தில் உலா வருவது போல உணரமுடிவது ஒரு பெரும் பேறு. ஈ நல்லூழ் நீடூழி நில்கட்டே.

பி.கு. கேரளம் வந்த பிறகு நெடுநாட்களாக உங்களுக்கு கடிதம் எழுத எண்ணினாலும் தயங்கி நின்றுகொண்டிருந்த எனக்கு, நேற்று நீங்கள் பதிவிட்ட “மலைநிலத்து குமரன்” அண்மை உந்துதலாக அமைந்தது. ஏனெனில் இதுவும் தமிழ் பற்றிய அந்த முதல் கட்டுரையை ஒத்த உணர்வையே எனக்கு அளித்தது. நான் கொச்சியில் குடியிருக்கும் இடத்தின் 3 கி.மீ சுற்றளவில் முருகனுக்கான ஐந்து தனிக்கோவில்களையாவது காணலாம், அதில் இரண்டு நாராயண குரு அமைப்பின் கீழ் வருவன. வேறு எந்தக் கடவுளுக்கும் எம் வீட்டைச்சுற்றி இத்தனை கோயில்கள் இல்லை.

ஆண்டுதோறும் தவறாமல் பழனி செல்பவர்கள் இங்கு ஏராளம், அதில் பலர் குழந்தைகளுக்கு முதல் மொட்டையை பழனியில் தான் அடிக்கிறார்கள். ஐப்பசி சஷ்டி, தைப்பூயம், பங்குனி உத்திரம் என எல்லா விழாக்களும் காவடியோடு சிறப்பாகவே இங்கு கொண்டாடப்படுகின்றன.  குறிஞ்சி நிலம் நிறைந்த சேரநாட்டில் வேலன் வழிபாட்டுக்கு குறைவுண்டாகுமா? நாம் நினைப்பதை விட முருகவழிபாட்டின் அகலமும் ஆழமும் இங்கு அதிகமே.  நீங்கள் முன்பே சுட்டியபடி வேலன் வெறியாட்டு, கொற்றவை (பகவதி) வழிபடு, பரணி விழா என பண்டைய தமிழகத்தின் பண்பாட்டுக் கூறுகள் இன்றளவும் நடைமுறையில் தொடரும் நிலம் இது. கேரளத்தில் சிறிது காலமேனும் வாழாமல் பழந்தமிழையும் பழந்தமிழ் பண்பாட்டையும் புரிந்துகொள்ள முயல்வதென்பது  தேர்வில் பாதி வினாக்களுக்கு மட்டுமே விடையளிக்கும் மாணவனின் அரைகுறைச் செயல் போன்றது.

அன்புடன்

இரா. செந்தில்

அன்புள்ள செந்தில்

உங்கள் கேரள வாசம் இனிதாக அமையட்டும். நாம் நமக்கு அன்னியமான ஒரு பண்பாட்டில் நுழையும்போதுதான் பண்பாடு என்பதை தனியாக பிரித்து அறிய ஆரம்பிக்கிறோம். அதன்பின்னரே நம் பண்பாட்டை அறிய ஆரம்பிக்கிறோம். அது மீன் நீரை அறியத் தொடங்குவது போல. இருபண்பாடுகளுக்கு நடுவே வாழும் குமரிமாவட்டத்தினனாகிய எனக்கு இயல்பாகவே அந்த வாய்ப்பு அமைந்தது

ஜெ

முந்தைய கட்டுரைகமல், ஒரு வினா
அடுத்த கட்டுரைதல்ஸ்தோய் மலர்