கருத்துச் சுதந்திரம்

சார்லி ஹெப்டோ – அரசின்மைவாதத்தின் சிரிப்பு

வணக்கம் ஜெ

தற்போது பிரான்ஸில் இஸ்லாம் குறித்த கேலிச்சித்திர விவகாரத்தில் ஆசிரியர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் நீங்கள் எழுதிய ‘சார்லி ஹெப்டோ- அரசின்மைவாதத்தின் சிரிப்பு’ கட்டுரையை தற்போது மீண்டும் படித்துப் பார்த்தேன். இந்த விஷயத்தில் இப்படி ஒரு ஆழமான கட்டுரையை இன்று அச்சு ஊடகங்களில் கட்டுரை எழுதுபவர்களால் கூட எழுத முடியாது. இந்த விவகாரம் இஸ்லாமிய நாடுகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நம் பிரதமரும் பிரான்ஸுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அதை எளிதில் பிறர் இஸ்லாமிய வெறுப்பு என்று சொல்லிவிடக்கூடும். மோடி மட்டுமல்ல, இன்று யார் பிரதமராக இருந்தாலும், பிரான்ஸுக்கு வெளிப்படையாக ஆதரவாக நிற்பதே நியாயம்.

இந்த ‘மத உணர்வு புண்படுகிறது’ கோஷம் ஒரு தற்காத்துக்கொள்ளும் ஆயுதம்தான். அது இஸ்லாம் விஷயத்தில் மத குருக்களாலும், அமைப்புகளாலும் நன்கு பயன்படுத்தப்படுகிறது. நம்நாட்டில், அரசியல் சூழலில், இஸ்லாமியர்களின் குழு மனப்பான்மையை நன்கு பயன்படுத்திக் கொண்டு அவர்களைக் கொத்தாக வாக்கு வங்கியாக பயன்படுத்திக்கொள்ளும் உத்திதான் உள்ளது.

ஆனால் இந்தியாவில் ஒப்புநோக்க, இஸ்லாமியர்களை விட இந்துக்கள் விமர்சனங்களுக்கு மட்டுமல்லாது, கேலி கிண்டலுக்கும் கூட பழகிவிட்டார்கள். கொஞ்சம் யோசித்தால், இதில் வருத்தப்படுவதற்கோ, ஆதங்கப்படுவதற்கோ ஏதுமில்லை. அது நம்மை பலப்படுத்தவே செய்யும். அதற்கு முதன்மையான காரணம், நம் மரபே அப்படிப்பட்டதாக உள்ளதென்பதே.

ஞானி குறித்த கட்டுரைகளில், அவர் பெரியார் குறித்துச் சொன்னதாக குறிப்பிட்டிருந்தீர்கள். இங்க தமிழ்நாட்டு கிராமங்கள் ஒவ்வொண்ணிலும் கிட்டத்தட்ட பெரியாரை மாதிரி ஒரு கிழடு உக்காந்திட்டிருக்கும். ஞானமும், கிறுக்குத்தனமும், அக்கறையும், வாய்த்துடுக்குத்தனமும் எல்லாம் கலந்த ஒண்ணா இருக்கும்…”  அந்த ஞானக் கிழடுகளின் நீட்சியே நம் சித்தர் மரபு. விமர்சனமும், எதிர்வாதமும், ஏன், எதிர்ப்பும் கூட நம்மோடு கலந்தே இருக்கிறது.

விமர்சனம் என்று வரும்போது, ஏதோ ஒரு மூலையில் அர்த்தமற்ற வெறும் வெறுப்புக் கிண்டல்கள் கூட இருக்கவே செய்யும். அதுவும் இன்றைய இணைய ஊடகங்களில் எல்லோரும் தங்களுடைய கருத்துகளைக் கொண்டு கொட்டும் வாய்ப்பு இருக்கும்போது, அதில் எல்லாமும்தான் வெளிப்படும். அதற்காக அதை மூர்க்கமாக எதிர்ப்பது என்பது நம்மைத் தேங்கச் செய்துவிடும். இன்று என்னுடைய கவலை இஸ்லாம் குறித்தல்ல; இந்துக்கள் குறித்துதான். இன்று இந்துக்களும் ‘உணர்வு புண்படுகிறது’ என்று புலம்புகிறார்கள். தமிழ்நாட்டில் இந்துத்துவ அமைப்புகளும், ‘அவர் இந்து மதத்தை புண்படுத்திவிட்டார், இவர் இந்து மதத்தை புண்படுத்திவிட்டார்’ என்று மதம் புண்படுவதை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் நம் மரபிற்கும், கருத்து சுதந்திரம், தனிமனித சுதந்திரம் போன்றவைகளுக்கும் எவ்வித சிக்கலான முரண்பாடும் கிடையாது. ஒன்றுக்காக மற்றொன்றை நிராகரிக்க வேண்டிய பிரச்சனையும் இங்கில்லை. அந்த நம்பிக்கை சற்று ஆறுதலளிக்கிறது.

நன்றி

விவேக்

***

அன்புள்ள விவேக்

இந்த  ‘உணர்வுகள் புண்படுதல்’ பற்றி நிறையவே எழுதியிருக்கிறேன். எதிர்விமர்சனங்களுக்கு இருக்கும் உரிமையை ஏற்றுக்கொள்ளுதல் என்பது ஒரு பண்பட்ட நிலை. பண்பாட்டின் ஒரு வளர்ச்சிநிலையிலேயே அது மக்களுக்கு இயல்வதாகும். அதற்கு எல்லாராலும் இயலாது. ஆனால் குறைந்தது அது ஓர் எதிர்கால இலக்கு என்றாவது அது இருந்தாகவேண்டும். அதை நோக்கி நகரும் இயல்பாவது சமூகத்தில் இருக்கவேண்டும்.

இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்த தொடக்கநாட்களில் இந்த ஜனநாயகப்பண்புகளுக்காக முயல்வதும், கனவுகாண்பதும் உச்சத்தில் இருந்தன. நேரு அப்பண்புகளின் தலைமைக்குறியீடு எனத் திகழ்ந்தார். அந்த யுகத்தைச் சேர்ந்தவர்கள் அனைவருமே ஒருவகையில் அந்தப் பண்புகளை கொண்டவர்கள்தான். ஸ்டாலினிஸ்டாகிய ஈ.எம்.எஸும் திராவிட இயக்கத்தவராகிய அண்ணாத்துரையும். தமிழகத்தில் நாம் கண்ட அப்பண்புகள் கொண்ட கடைசித் தலைவர் திரு. மு.கருணாநிதி அவர்கள்தான்

அடுத்த தலைமுறையில் இந்திய அளவில் அந்த ஜனநாயகப் பண்புகள் மிக விரைவாக சரிந்துகொண்டிக்கின்றன. இன்று அது ஒருவகை பலவீனமாகவே பார்க்கப்படுகிறது. அரசியல் தலைமை முதல் அன்றாடம் வரை. எல்லா தளங்களிலும் அதைக் காண்கிறோம். உண்மையில் ஜனநாயகப் பண்புகள் பற்றி பேசுவதே ஒரு இழிவான விஷயம்போல ஆகிவிட்டிருக்கிறது

எங்கிருந்து இந்தச் சரிவு தொடங்குகிறது? முதல்விஷயம், இதைச் சொன்னால் சொல்பவர் மீது உச்சகட்ட அவதூறும் முத்திரைகுத்தலும் நிகழும். ஆனால் இந்த உண்மை சொல்லப்பட்டாகவேண்டும். ஜனநாயகத்துக்கான தேடல்கொண்ட சுதந்திரசிந்தனையாளர்கள் மற்றும் இடதுசாரிகளிடமே முதல் பிழை உள்ளது. நான் இதை முப்பதாண்டுகளாகச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். இந்தியாவில் எங்கும் இதைக் கண்கூடாகவே காணலாம்

சுதந்திரசிந்தனையாளர்- இடதுசாரிகளின் தரப்பில் கூலிபெற்றுக்கொண்டு நசிவுவாதம் பேசுபவர்கள், பிரிவினையாளர்கல் ஊடுருவினர். அவர்களுக்கு பின்புலமாக அமைப்புகளும் நிதியும் இருந்தமையால் அவர்களின் குரல் ஓங்கி ஒலித்தது. அவர்களின் முதன்மைக்குரல் காரணமாக மெய்யான சுதந்திரசிந்தனையாளர்- இடதுசாரிகள் அவர்களை ஏற்று முன்னிறுத்தினர். பலசமயம் அரசியல் சூழ்கையாக அவர்களை முன்வைத்தனர்

இந்த நசிவுவாதிகள் – பிரிவினையாளர்கள் இந்தியாவின் ஜனநாயகச் சூழல் அளிக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்திக்கொண்டு இங்குள்ள பாரம்பரியமான அனைத்தையும் இழித்துரைத்து அவதூறுசெய்தனர். திரித்து வரலாறுகளை எழுதினர். மரபின் தரப்புகளை எல்லாம் இழிவு செய்தனர். ஒரு பெருந்தேசத்தின் கோடிக்கணக்கான மக்களின் வரலாறு, நாகரீகம், பண்பாடு, வாழ்க்கைமுறை எல்லாமே இழித்துரைக்கப்பட்டன, சிறுமைசெய்யப்பட்டன, அதன் இளையதலைமுறையினர் கண்களில் அவை அருவருப்பானவையாக காட்டப்பட்டன

இந்த அழிவுச்செயல்பாடு இந்தியாவில் மட்டுமல்ல ஆப்ரிக்காவிலும் ஆசிரியாவிலுமுள்ள அத்தனை நாடுகளிலும் செய்யப்படுகிறது. இந்த அழிவுச்செயல்பாடு சுதந்திரசிந்தனையாளர்- இடதுசாரிகள் என்னும் முகமூடியுடன் எங்கெல்லாம் செய்யப்பட்டு வெற்றியடைந்ததோ அங்கெல்லாம் கிறிஸ்தவம் வந்து அமர்ந்தது. இவர்கள் சுட்டிக்காட்டிய அத்தனை சமூகத்தீங்குகளும் மூடநம்பிக்கைகளும் மும்மடங்கு நிலவும் மூர்க்கமான கிறிஸ்தவம். கொரியாவும் ஜப்பானும் மிகச்சிறந்த உதாரணம்

சுதந்திரசிந்தனையாளர்- இடதுசாரிகளின் தரப்பில் ஒலிக்கும் இந்த நசிவாளர்களும் பிளவுபடுத்துவோரும் அடிப்படையில் மதமாற்றப் பெரும்படை ஒன்றின் ஆயுதங்கள்தான். இந்த உண்மையை இன்றுகூட இங்குள்ள சுதந்திரசிந்தனையாளர்- இடதுசாரிகளின்ல் பெரும்பாலானவர்கள் புரிந்துகொள்ளவில்லை. இதைச் சுட்டிக்காட்டுபவர்கள் இங்கே இழிவுசெய்யப்படுகிறார்கள். அவர்களை எதிரிகளாக கண்டு எதிர்முனைக்கு தள்ளுகிறார்கள்.

இந்த நசிவுச்செயல் அதற்கான எதிர்வினையை உருவாக்குகிறது. அது அறிவார்ந்ததாக இல்லை. ஆக்ரோஷமான மரபுவாதமாக அது வெளிப்படுகிறது. அவர்களும் கண்மூடித்தனமான மூர்க்கம் கொண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக சுதந்திரசிந்தனையாளர்- இடதுசாரிகள் தரப்பையே நிராகரிக்கிறார்கள். அவர்களை துரோகிகளாக, அழிவுச்சக்திகளாகப் பார்க்கிறார்கள்

நம் மரபிலிருந்த சென்றகாலத்தின் உதவாத நெறிகள், நிலப்பிரபுத்துவகாலகட்டத்து  மானுடவிரோதத் தன்மைகொண்ட அமைப்புக்கள் ஆகியவற்றை சீரமைத்து மரபை புத்துயிர் கொள்ளச்செய்த சீர்திருத்தவாதிகளைக்கூட வெறுத்து பின்னொதுக்கும் அளவுக்கு இந்த மரபுவாதம் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது இன்று.  எந்தவகை விமர்சனத்தையும் இவர்கள் எதிர்ப்பாக மட்டுமே காண்கிறார்கள். எந்தவகையான மறுஆக்கத்தையும் திரிப்பாக காண்கிறார்கள்.சட்டென்று நம் மரபு பதினெட்டாம்நூற்றாண்டை நோக்கிப் பாய ஆரம்பித்துவிட்டது என்ற பிரமை எழுகிறது.

கருத்துச் சுதந்திரம் என்று பேசும்போதே ஜனநாயகவாதிகள் எதிர்கொள்ளும் ஒரு கேள்வி அவர்களின் எல்லா நியாயங்களையும் அறைந்துவீழ்த்திவிடுகிறது. உலகமெங்கும் இஸ்லாமியர் எந்தச் சிறுவிமர்சனத்தையும் ஏற்றுக்கொள்வதில்லை. அதெல்லாமே அவர்களுக்கு மதநிந்தனை, கொலைத் தண்டனைக்க்குரிய குற்றம். இந்தியக் கிறிஸ்தவர்களும் அவ்வாறு எந்த விமர்சனத்தையும் தங்கள் மீதான ஒடுக்குமுறையாக  மட்டுமே காண்கிறார்கள்.

அவர்கள் சிறுபான்மையினர் என்னும் சட்டப்பாதுகாப்பை அடைந்திருக்கிறார்கள். இந்திய அரசியல்சட்டமே அவர்கள் மீதான விமர்சனம், அவர்கள் புண்படுவார்கள் என்றால் , குற்றம் என்கிறது. சிற்பான்மையினர் உணர்வுகளை புண்படுத்துதல் இங்கே கடுமையாக தண்டிக்கவும் படுகிறது. இந்த சட்டப்பாதுகாப்பை ஜனநாயக விழுமியங்களில் ஆழ்ந்த நம்பிக்கையுடன் நம் முன்னோடிகள் அவர்களுக்கு வழங்கினார்கள்

ஆனால் இந்தப் பாதுகாப்பை அடைந்துள்ள சிறுபான்மையினர் அதற்குரிய பொறுப்புணர்ச்சியுடன் இருக்கிறார்களா? அவர்கள் இந்து, இந்தியப் பண்பாட்டை இழித்தும் பழித்தும் பேசுகிறார்கள். அது கருத்துச் சுதந்திரம் என நம்புகிறார்கள். மதமாற்ற நோக்குடன் இந்துமதம் மீது ஒவ்வொருநாளும் தாக்குதல் நடப்பதை கண்டுதான் நான் வளர்ந்து வந்திருக்கிறேன். நான் வணங்கும் தெய்வம் சாத்தான் என பழிக்கப்படுவதை ஒவ்வொருநாளும் காதால் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

மோகன் சி லாசரஸ் போன்றவர்கள் இந்து தெய்வங்களை சாத்தான் என்று மேடைமேடையாக பேசலாம், அது குற்றமல்ல. ஆனால் மோகன் சி லாசரஸ் மீது மிகமெல்லிய விமர்சனம் ஓர் இந்துவால் முன்வைக்கப்பட்டால்கூட அது சட்டப்படி குற்றம். சிறுபான்மையினர் மீதான தாக்குதல்.

இந்த உரிமை இங்கே சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டிருக்கையில் அந்தப் பொறுப்பையும் அவர்கள் ஏற்றுக்கொண்டாகவேண்டும் அல்லவா? அதை அவர்கள் செய்கிறார்களா? அவர்கள் தங்கள் மதத்தைப் போற்றலாம், அதன் விழுமியங்களை முன்வைக்கலாம், அதைக்கொண்டு மதமாற்றமும் செய்யலாம், ஆனால் விமர்சனத்தின் எல்லைகளை தாங்களே காத்துக்கொள்ளவேண்டும் அல்லவா?

ஷிர்க் ஒழிப்பு என்ற பேரில் இந்துக்கோயில்களுக்கு முன்னால் சிவலிங்கம் மீது கருப்பு பெருக்கல்குறி போட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததை கண்டோம். அது கருத்துரிமை என நம்புகிறார்கள், ஆனால் குரானின் புனிதத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என ஓர் இந்து சொன்னால்கூட மதநிந்தனை என புண்படுகிறார்கள். இங்கிருந்துதான் கருத்துச் சுதந்திரம் என்ற கருத்தின்மேலேயே அடிவிழத் தொடங்குகிறது.

இன்று இடதுசாரிகள், தாராளவாதிகள், திராவிட இயக்கத்தவர் என்ற முகமூடியுடன் கடுமையான இந்து- இந்திய எதிர்ப்பு பேசுபவர்களில் கணிசமானவர்கள் மாற்றுமதத்தவர். தங்கள் மதத்தின் அடிப்படைவாதம், மூடநம்பிக்கை ஆகியவற்றை அப்படியே ஏற்றுக்கொள்பவர்கள். இணையத்தில் ஒருமுறை சாதாரணமாக உலவினாலே போதும்.

இங்கே கருத்துரிமை பேசுபவர்கள், அதைப் பயன்படுத்தி இந்துப் பண்பாட்டை விமர்சனம் செய்பவர்கள், இஸ்லாமிய கிறிஸ்தவ அடிப்படைவாதிகளை ஏற்க தயங்குவதில்லை. அவர்களை அருகே வைத்துக்கொண்டு பேசும் எந்த கருத்துரிமைப்பேச்சும் ஜனநாயகப்பேச்சும் எந்த மதிப்பையும் பெறுவதில்லை.

சென்றகாலங்களில் இங்கே எஸ்.வி.ராஜதுரை போன்ற இடதுசாரிகள், தொ.பரமசிவன் போன்ற திராவிட ஆய்வாளர்கள் மிகமெல்ல ஒரு விமர்சனத்தை இஸ்லாமிய தரப்புமேல் முன்வைத்தபோது இஸ்லாமியர்களால் கடுமையாக தாக்கப்பட்டனர், அவர்கள் அதைப்பற்றி வருந்தி எழுதியிருக்கிறார்கள்.அ.மார்க்ஸ் அவர் எப்போதெல்லாம் இஸ்லாமிய சர்வாதிகாரிகள் அல்லது ஐஎஸ்ஐ எஸ் பற்றி மெல்லிய கண்டனத்தைச் சொல்கிராரோ அப்போதெல்லாம் இஸ்லாமியர்களால் கடுமையாக பழிக்கப்படுகிறார். இதெல்லாம் அச்சில் உள்ளவை

கருத்துரிமை என்பது இந்துப்பாரம்பரியம், இந்துப்பெரும்பான்மை மீதான தாக்குதலுக்கு மட்டுமே என்று சுதந்திரசிந்தனையாளர்- இடதுசாரிகளின் தரப்பிடம் இவர்களால் ஆணித்தரமாகச் சொல்லப்படுகிறது. அப்பட்டமான மதவாதிகள் சுதந்திரசிந்தனையாளர்- இடதுசாரிகளின் தரப்பில் ஊடுருவி நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். இச்சூழலில் சுதந்திரசிந்தனையாளர்- இடதுசாரிகளின் குரலில் ஒலிக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கு என்ன மதிப்பு?

“நம்மை மட்டும் தாக்குறாங்க… அவங்களை சொல்லுவாங்களா?” இந்த ஒற்றை வரி இந்தியாவில் மிகமிகப்பிரம்மாண்டமாக ஊடுருவியிருக்கிறது. அதுவே இந்துத்துவ தரப்பில் அரசியல் வெற்றியாக ஆகியிருக்கிறது. பொய்யான பிரமைகள் வேண்டியதில்லை, தமிழகத்திலும் கேரளத்திலும்கூட இந்த ஒற்றைவரி ஆழமாக பொது உளவியலில் பதிந்திருக்கிறது. அது அரசியல்சக்தியாக ஆகவில்லை என்பதே வேறுபாடு

இங்கே வெற்று அரசியலாக அல்லாமல் உண்மையாகவே கருத்துரிமை என்பதற்காகப் போராடுபவர்கள் இன்று இருதரப்பினருக்கும் எதிரிகளாக, மிகச்சிறுபான்மையினராக, நின்றே பேசமுடியும்.  அவர்கள் எல்லா தரப்பின் வசைகளையும் பெற்றாகவேண்டும்.

சிறுபான்மையினரிடம் உங்கள் தரப்பு மீதான விமர்சனத்தை எவ்வகையிலும் பொறுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்றால் பிறர்மீதான விமர்சனத்துக்கு உங்களுக்கு உரிமையில்லை என உணருங்கள், அது கருத்துரிமை அல்ல அத்துமீறல் என்று சொல்லியாகவேண்டியிருக்கிறது.

இடதுசாரிகளிடம் மெய்யான கருத்துரிமை என்பது அனைவருக்கும் ஒரே வகையான உரிமையாகவே இருக்கமுடியும் என்று சொல்லவேண்டியிருக்கிறது. கருத்துரிமைக்கான உங்கள் குரலை  நசிவுவாத நோக்கம் கொண்டவர்களும் மதவெறியர்களும் தங்கள் கருவியாகக் கையாள விடாதீர்கள், உங்கள் தரப்பில் அவர்கள் ஒலிக்கலாகாது என்று உறுதிகொள்ளுங்கள் என்று சொல்லவேண்டியிருக்கிறது.

அனைத்துக்கும் மேலாக இடதுசாரிகளிடம் சொல்லவேண்டிய் ஒன்று, உண்மையான கருத்துச் சுதந்திரத்தில் உங்களுக்கு ஆர்வமிருக்கும் என்றால் அதை நீங்கள் உங்களுக்கு கடைப்பிடியுங்கள் என்பது. எந்த விதமான விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ளாத மதவாத மூர்க்கம் இடதுசாரிகளிடமே உண்டு. அத்தனைபேரையும் விமர்சிப்பவர்கள் சிறுவிமர்சனங்களுக்குக் கூட கொதித்தெழுகிறார்கள். இலக்கியவாதிகளைக்கூட மிரட்டுகிறார்கள். பொய்வழக்கு போட நீதிமன்றங்களை நாடுகிறார்கள். அதன்பின் நீங்கள் பேசும் கருத்துச் சுதந்திரத்துக்கு என்னதான் அர்த்தம்?

அதன்பின்னரே இந்துத்தரப்பிடம் இருநூறாண்டுகளாக நிகழ்ந்த சீர்திருத்தங்களுக்கு பின்னர் உருவான இந்துப் பாரம்பரியமே நம் சொத்து என்று சொல்லவேண்டியிருக்கிறது. விமர்சனமற்ற மரபு ஏற்பு என்பதே அடிப்படைவாதம் என்று விளக்கவேண்டியிருக்கிறது. அது சென்றகாலத்தை மீட்கும் கனவாகும், அழிவையே உருவாக்கும்

இந்துமதம் அதன் மையத்தரிசனங்களாலேயே அடையாளம் காணப்படவேண்டும், அதன் ஆசாரங்களால் அல்ல. ஆசாரங்கள் காலந்தோறும் மாறுபவை, மாறியாகவேண்டியவை. ஆசாரவாதம் அடிப்படையான ஆன்மிகத்துக்கும் தத்துவத்துக்கும் எதிரானதாகவும் ஆகக்கூடும் என்று கூறவேண்டியிருக்கிறது.

அரசியலில் இருந்து மதமும் ஆன்மிகமும் விலகியே இருக்கவேண்டும். அரசியல்படுத்தப்படும் மதம் அதன் ஆன்மிகத்தை இழக்கும். ஒரு வெறிகொண்ட தரப்பாக ஆகும். உள்விரிவு உள்விவாதம் ஆகியவை ஒடுக்கப்பட்டுதான் அதை ஒற்றைத்தரப்பாக ஆக்கமுடியும். அதைச் சுட்டிக்காட்டியாகவேண்டும்.

புண்படுதல் என்பது தன்னைப்பற்றிய ஆழ்ந்த நம்பிக்கை இல்லாமை. உண்மையிலேயே காழ்ப்புடன் செய்யப்படும் தாக்குதல் புண்படுத்தலாம். ஆனால் அந்த புண்படுதலை உடனடி எதிர்ப்பாக காட்டத் தொடங்கினால் கடைசியில் எல்லாவகை விமர்சனங்களும், எல்லாவகை மாற்றுச்சிந்தனைகளும் புண்படுத்துவனவாக மாறிவிடும். இந்துமெய்ஞானமே பாறையாக இறுகிவிடும்

தனிப்பட்ட மெய்த்தேடலுக்கு இடமளிப்பதாக, பலகுரல்கொண்டதாக, மையத்தின் தரிசன ஒருமையாக் மட்டுமே கட்டுப்படுத்தப்படுவதாகவே இந்துமதம் இதுவரை வளர்து வந்திருக்கிறது. அந்த இயல்புகளை அது இழந்தால் இந்துமதம் என இன்றுவரை வந்த மெய்யியல் மரபு செத்துவிட்டது என்பதே அதன்பொருள். எஞ்சுவது வெறும்கூடு. அது அரசியல் ஆதிக்கத்துக்கு உதவலாம், ஆன்மிகத்துக்கும் பண்பாட்டு வளர்ச்சிக்கும் உதவாது.

உள்விவாதம்,மறுஆக்கம் செய்துகொள்ளும் இயல்பு, பிரிந்துவிரியும் தன்மை ஆகியவற்றை இந்துமதம் ஒருபோதும் கைவிடமுடியாது. ஆகவே அது விமர்சனங்களை ஏற்றாகவேண்டும். விமர்சனம் என்னும்போது அது எவ்வகையான விமர்சனத்தையும்தான். விமர்சனங்களில் தரம்பிரிக்க முடியாது. தரம்பிரிக்கும் உரிமைகொண்டவர் எவர் என்னும் கேள்வி எழும். விமர்சனங்களில் கொள்வன கொண்டு அல்லாதவற்றை பொருட்படுத்தாமல் செல்வதே உகந்த வழி.

இந்துமதம் மீதான விமர்சனங்களை மட்டுமல்ல தாக்குதல்களைக்கூட எதிர்கொள்ள ஒரே வழி அதன் பழைமைவழிபாடு, ஆசாரவாதம் போன்றவற்றைக் களைவதும் அதன் மையத்தரிசனத்தையும் தத்துவங்களையும் தொடர்ச்சியாக முன்வைப்பதும்தான். எதிர்ப்பதல்ல அதன் வழி, நேர்நிலைச்செயல்பாடுகள் மட்டும்தான்

ஜெ

முந்தைய கட்டுரைகாந்தியம் பேசுவோம்- இணையச் சந்திப்புகள்
அடுத்த கட்டுரைகுந்தியின் முகம்