மனு ஒரு கடிதம்- அந்தியூர் மணி

மனு இறுதியாக…

மனு இன்று

அன்புள்ள ஆசிரியருக்கு,

இன்றைய மனுவைப் படித்தேன்.மிகச்சரியாக உங்களின் நிலைப்பாட்டினைத் தெரிவித்திருக்கிறீர்கள். மனுநீதியின் தொடக்கம் முதல் அது கடந்து வந்த பாதை அது சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றம் அனைத்தையும் விளக்கி சமகாலச் சிக்கலையும் எடுத்துக் கூறியிருக்கிறீர்கள்.இப்போதைய அரசியல் சூழ்நிலையை பற்றிய உங்களுடைய கருத்தையும் கூறியிருக்கிறீர்கள். இப்போதைய விவகாரத்தில் உங்கள் பார்வையோடு முழுமையாக உடன்படுகிறேன்.அதேசமயம் மனுநீதி பற்றிய உங்களுடைய  பார்வையில் சில மாற்றுக்கருத்துக்கள் இருக்கின்றன.உங்களுடைய கட்டுரை காலம் கடந்தும் இங்கு நிற்கும் என்பதால் அதற்கு மாற்றான கருத்தும் இங்கு தேவை என்பதாலேயே இக்கடிதத்தை எழுதுகிறேன்.

மார்க்சிய வரலாற்றுப் பார்வை சார்ந்து மனுநீதியை இந்தக் கட்டுரைக்காக நீங்கள் பார்த்த பார்வை மார்க்சிய சட்டகத்தைச் சார்ந்தது. புறவயமான வரலாற்றைச் சொல்ல அதைத் தவிர வேறுவழியில்லை என்பதற்காகக்கூட நீங்கள் அதை எடுத்திருக்கலாம். என்னைப் பொறுத்தவரை அந்தச் சட்டகம் இந்தியாவைப் பற்றிய வரலாற்றுப் பார்வையில் சில இடங்களில் மட்டும் சரியாகவும் பெரும்பாலான இடங்களில் தவறானதாக மாறும் இயல்பு கொண்டது.காரணம் அதை உருவாக்கிய நபரின் இந்தியாவைப் பற்றிய அறிவின் போதாமை.

ஐரோப்பிய வரலாற்றுத் தரவுகளை மட்டும் வைத்து உருவான சிந்தனைகளை முரணியக்கம் மூலமாக தத்துவமாக மாற்றியதே மார்க்சியம். அதன் சிந்தனைகள் அனைத்தும் ஐரோப்பாவில் ஆட்சியில் இருந்த மன்னர்கள் மற்றும் கிறித்தவ சபைகளுக்கும் அவர்களால் ஆளப்பட்ட மக்களுக்குமான மோதலின் தரவுகளை கொண்டு உருவானவை.எனவே ஆள்பவர்கள் அவர்களால் ஆளப்படுபவர்கள் என்பதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு உருவான தரவுகளின் தத்துவம் மார்க்சியம்.

மனுநீதி சொல்ல வருவது ஒருங்கிணைந்த சமுதாயமாக வாழும் பல தொழிற்குழுக்களின்  மக்களின் கடமைகளும் உரிமைகளும் அச்சமூகத்தின் பங்கில் என்ன  என்பதைக் குறித்து. அதிகாரம் பொறுப்புகளால்  கட்டுப்படுத்தப்பட்டதற்கான அத்தனை சான்றுகளும் அப்புத்தகத்திலேயே உள்ளன.அதிலும் அதிகாரம் அதிகமாகப் பெறும் தொழிற்குழு  கட்டுப்பாடுகளாலும்  பொறுப்புகளாலும் பிணைக்கப்பட்டிருந்தனர்.

அதாவது கிட்டத்தட்ட நான்கு புறமும் சற்றுத்தொய்வாகக் கட்டப்பட்டதால் குறிப்பிட்ட வட்டத்திற்கு மேல் செல்ல இயலாத நபரைப் போன்ற நிலை. ஒவ்வொரு குழுவுக்கும் இதே நிலை என்பதால் இணைந்தும் வெட்டியும் ஒட்டியும் வாழ்ந்த தொழிற்குழுக்களின் சமூக நிலை. எனவே அனைத்தையும் வர்க்கச் செயல்பாடாகப் பார்க்கும் மார்க்சியப்பார்வையால் இந்த மனுநீதி எதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதோ அந்தச் சிந்தனை புரிந்திருக்குமா என்பது ஐயமே.

தொன்மையான தொழிற்குழுக்களின் அதிகாரம் பற்றிய தரவுகளோ, கொடுக்கப்பட்ட அதிகாரத்திற்கேற்ற கட்டுப்பாடுகள் என்ற சிந்தனையோ இல்லாமல் உருவாக்கப்பட்ட மார்க்சிய  தத்துவத்தின் வழிமுறை  இந்தக் கூடுதல் தரவுகள் மற்றும் சிந்தனை கொண்ட இங்கு பயன்படுத்தப்பட்டால் தவறான விடைகளையே கொடுக்கும் என்பது என் நிலைப்பாடு.எனவே மார்க்சியத்தின் அந்த வரலாற்றுப் பார்வை இங்கு தவறாகிறது.

மார்கசியத்தின் அந்த வரலாற்றுப் பார்வைக்குப்பதிலாக நான் இங்கு வைப்பது தொழிற்குழுக்களின் வரலாற்றை.நான்கு வர்ணங்களாக இந்தியச் சமூகம் பிரிக்கப்பட்டு தொழிற்குழுக்கள் உருவாக்கப்பட்டாலும் அது காலம்தோறும் ஒரேமாதிரியான அமைப்போடு இருந்ததில்லை.அதற்கான காரணம் எந்தத் தொழிற்குழுவிடம் ஒற்றுமையும் வளமும் பிறருடனான ஒருங்கிணைப்பும் இருக்கிறதோ அக்குழு அதிகாரத்தை அடைந்தது என்பதை இந்திய வரலாற்றுத் தரவுகள் உறுதி செய்கின்றன.

இதனால்தான் தமிழகத்தின் வரலாற்றில்கூட ஓரிடத்தில் அடிமைகள் போல ஒடுக்கப்பட்டவர்கள் வேறிடத்தில் ஆட்சியாளர்களாக இருந்தநிலை நிலவியது.இந்த நிலை ஐரோப்பாவில் இல்லை என்பதை நாம் உணர்ந்தால் இந்தத்தரவே மார்க்சியத்தின் வரலாற்றுப் பார்வை இந்த இடத்தில் தவறாகும் என்பதை உறுதிப்படுத்தும்.

மனுநீதி சார்ந்த என் நிலைப்பாடு இந்த இடத்தில் மனுநீதிக்குச் சாதகமாக நான் பேசுவதால் நான் பெறப்போவதை விட இழப்பதே அதிகமாக இருக்கும்.மனுநீதியைப் பாராட்டுவதன் மூலமாக நான் கேவலமானவனாகவே இதைப் படிப்பவர்களுக்குத் தோன்றுவேன்.ஆனாலும் இதைச் செய்ய காரணம் இருக்கின்றது.அறிவுநேர்மை என நான் பின்பற்ற உத்தேசிக்கும் கருத்துக்காக இதை எழுத வேண்டியது என் கடமையாகிறது.

என் வாழ்வில் இதுவரை நான் படித்த புத்தகங்களில் என்னைச் சோதித்த புத்தகங்களில் மனுநீதிக்கே முதலிடம்.அவ்வளவு கடினமாக என்னைச் சோதித்த புத்தகத்தை கடின முயற்சிக்குப் பிறகே படிக்க முடிந்தது.படிக்கும் ஒவ்வொரு சுலோகத்திற்கான மொழிபெயர்ப்பும் எவ்வளவு கொடூரன் இந்த மனு என்றே அரசியல் சரிநிலையோடு கூறும்.ஏனெனில் மனு சொன்ன நெறிமுறைகளின்படி நான் சூத்திரனே.என் இனக்குழு வேறாக இருந்தாலும்.

மனு வேதத்தை பின்பற்றுவதை வைத்தே வர்ணங்களை முடிவு செய்கிறார்.பிறப்பின் அடிப்படையில் மட்டும் அமைந்ததே மனுதர்மம் என்ற பொதுவான பார்வையே தவறென்பதை அதைப் படித்த பின்னரே உணர முடிந்தது.எனவே வேதத்தை முன்னோரின் அறிவு என்பதாக மட்டுமே எடுத்துக்கொள்ளும் எனக்கு அதை அறிவதும் பின்பற்றுவதுமே அனைத்துமானது என்பதே காலத்துக்கு ஒவ்வாத கருத்தாகவே தோன்றுகிறது.

அதேசமயம் ஒருநூல் அதனுடைய பயனாளிகள் யார் என்பதனை இடம் பொருள் காலத்தோடு வெளிப்படுத்தி, அதன் பயனாளிகளுக்கு கொடுக்கும் அதிகாரத்துக்கு இணையாக கட்டுப்பாடுகளை விதித்து, கூடவே அந்தச் சமூகத்தில் காலமாற்றத்துக்கான மாறுதல்கள்  ஏற்பட்டால்  ஏற்றுக்கொள்வதற்கான வழிமுறைகளை  அமைந்திருந்ததெனில் அது மானுட வளர்ச்சியில் பங்கு கொண்ட  நூலே.அந்த வகையில் மனுநீதியும் அத்தகைய நூலே.

கங்கைச் சமவெளியில் மனுவின் காலத்தில்  இருந்த வேதவழியான யாகங்களை ஒழுங்குடன் நடத்திய சமூகத்திற்கான வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.கால மாற்றத்தால் ஏதேனும் விதிகள் மாற்றவேண்டும் என்றால் வேத அறிஞர்கள் கூடி அதைச் செய்ய வழிமுறைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.எனவே மனுநீதியை முற்றாகப் புறக்கணிக்கவே முடியாது.

இன்று இருக்கும் சில மதச்சிந்தனைகளில் கூட இத்தகைய மனநிலை இல்லாத நெகிழ்வும் பொறுப்பும் இல்லாததைப் பார்க்கும்போது, மனுவின் இந்த நடைமுறை அன்றே இருந்தது என்பதைக் காணும்போது,   இந்தக் கட்டமைப்பு கட்டாயம் இன்றுகூட தேவையானது என்றே தோன்றுகிறது.

எந்த தொழிற்குழுவிற்கு அதிகப்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டதோ அவர்களுக்கே அதற்கு இணையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன எனபதற்கு எடுத்துக்காட்டாக மனுவின் சமூகம் உயர் விழுமியமாகச் சொன்ன வேதவழி யாகங்களை நடத்துவதற்காக பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை எடுத்துக் கொள்வோம். வேள்வியைச் செய்யும் நோக்கத்திற்காக மற்றவர்களின் சொத்துக்களை கட்டாயமாக எடுத்துக் கொள்வதற்கான அதிகாரம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைத்தான் மேற்கோளாகக் காட்டுவார்கள்

அதே சமயம் வேள்விக்காகப்பெறப்படும் சொத்து வேள்விக்கு மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும் என்று அது சொல்கிறது. உவப்புடன் கொடுக்கப்படாத  பொருளைக் கொண்டு வேள்வி ஆரம்பிககப்படவே கூடாது, வேள்விக்கான பொருள்களில் பாதிக்கும் மேல் கையிருப்பில் சேர்க்காமல் ஆரம்பமே செய்யப்படக்கூடாது என்பது தொடங்கி பிச்சை எடுத்தாவது வேள்விசெய் எனப் படிப்படியான கட்டுப்பாடுகளை விதிக்கிறது. கடைசி வழிமுறையே மேல் சொன்ன வேள்விக்காக பொருளை கட்டாயமாகப் பெறலாம் விதி .

ஒருவிதி பல்வேறு துணைவிதிகளால் கட்டுப்படுத்தப்பட்ட அதிகாரமே எக்காலத்துக்குமான தேவையாக இருக்க முடியும். இன்று கட்டுப்பாடுகளற்ற அதிகாரத்தையே  இங்கு அனைவரும் வேண்டுகின்றனர்.இன்றிருக்கும் மனநிலையும் அன்று அதேபோலத்தான் இருந்திருக்கும் என்று நினைக்கின்றனர்.அது தவறானதாகவே எனக்குத் தோன்றுகிறது.

இந்த இடத்தில் அவரவர் வர்ணங்களுக்குரிய வேலையே செய்ய வேண்டும் என்று சொல்லும்  கண்டிக்காத நபர்களைப்  பற்றி சில வார்த்தைகள்.அவர்களில் சிலர் பிறப்பால் பிராமணராக இருக்கலாம். ஆனால் மனுவின் ஆணை என்பது அதிகாரம் மட்டுமல்ல பொறுப்பும் கூட. அவர்கள் பிறப்பதற்கு முன்பே வர்ணத்துக்கான சடங்குகள் ஆரம்பித்து விடவேண்டும். சரியானகாலத்தில் வேதத்தை முழுமையாகக் கற்று, மூன்றுநாட்களுக்கு ஒருமுறை தான் கற்ற வேதத்தை முழுமையாக ஓதி,  குறைந்தபட்சம் வாரத்துக்கு ஒருமுறை  பிறருக்காகவோ தனக்காகவோ அல்லாமல் வேதத்துக்காகவே செய்கின்ற வேள்வியைச் செய்யவேண்டும். இந்தக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றக்கூடிய நபர்கள் மட்டுமே மனுநீதி ஆட்சியில் இருந்தால் பிராமணர்களுக்கான அதிகாரம் பெற்றவர்கள்.

ஆனால் இன்று ஆட்சியில் இருப்பதோ அரசியலமைப்புச் சட்டம். புறக்கணிக்கப்பட்ட மனுவின் சட்ட நடைமுறையின் அடிப்படையில் ஏற்கனவே தங்கள் முன்னோர் பெற்றிருந்த அதிகாரத்தை பழமையான சில நம்பிக்கைகளை மட்டும் ஏற்று சில சடங்குகளை மட்டும் பின்பற்றுவதன் மீட்டெடுக்க முயலும் காலமறியா நபர்களில் சிலர்தான் அத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். பிறப்பால் பிராமணர்களாக இருப்பதனால் மீண்டும் தங்கள் மேன்மையை மீட்க வேண்டும் என்பதனால்,மனுவின் வழிமுறைகளைக் கடைபிடித்துப் பார்ப்போம், ஒருவேளை மீண்டும் அந்தப் பொற்காலம் வரக்கூடும் என்று நினைக்கும் பிராமணர்களிலேல் சிறு குழு முயல்வதையே அந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.

ஆனால் அந்தக்குழுவிலேயே  மனுவின் நெறிப்படி இன்று வாழமுடியுமா, இன்று வாழ்வதால் ஏற்படும் இழப்புகள் என்ன என்பதைப் புரிந்து கொண்டவர்கள் இன்றைய சட்டங்களின் வழிமுறையில் தங்களுக்கான வாழ்வை அமைத்துக் கொண்டிருக்கின்றனர். இன்று மனுவைப் பற்றிப் பேசும் நபர்களுக்கு பழமை கொடுக்கும் அதிகாரம்  வேண்டும். அதேசமயம் நவீனத்தின் அத்தனை வசதிகளையும் சேர்த்தே அடையவேண்டும். ஆனால் மனு ஆணையிடும் பொறுப்புகளையும் கடமைகளையும் செய்யக்கூடாது. இங்குதான் இவர்களின் சிக்கல் வருகிறது.

மனு காலத்தில் இருந்த  தொழிற்குழுக்களின் அதிகாரம் முழுமையாக இன்றும் அழிந்து போகாததால் அந்த அதிகாரத்தில் தனக்கான பங்கைப் பெற நினைப்பவர்கள் இதுபோன்று சற்று அதிகப்படியான சிந்தனையுடன் தங்கள் தரப்பைச் சார்ந்தவர்களிடம் பேசுகின்றனர்.இன்றிருக்கும் இணையச் சூழலில் சிறுகுழுவில் பேசுபவை பொதுவெளிக்கு வந்து அதனால் பொதுவெளியே கொந்தளிக்குமளவிற்கு தொழிட்நுட்பம் காரணமாவதைப் புரிந்து கொள்ளாமல்  பேசுகின்றனர்.

அனைத்துத் தரப்பைச் சேர்ந்தவர்களும் தங்கள் தரப்பில் உள்ளே பேசுபவை பொதுவெளிக்கு வந்திருக்கின்றன. அதனால் சிலமுறை பொதுவெளியும் கொந்தளித்திருக்கிறது .ஆனால் மற்ற மத இன சாதிக்குழுக்களின் பேச்சுக்கள் புத்தகத்தை முன்வைத்து பெரும்பாலும் நடப்பதில்லை. அதனால் மனுநீதியைப் போலச் சிக்கலாவதும் இல்லை. இப்படிப் பேசும் நபர்களில் எத்தனைபேர் மனுவின் நெறிமுறையின்படி இன்று நடக்கச் சித்தமாக இருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே  குறைந்தபட்சம் இன்று இருக்கும் அந்தக் தொழிற்குழுவின் கருத்தியல் அதிகாரத்திற்கு தகுதியானவர்கள்.

இன்றைய அரசியலமைப்புச் சட்டம்  குற்றமென்று நீக்கியதை அவர்களும் தங்களிடமிருந்து நீக்குவதால்தான் நவீனத்தின் வசதிகளைப் பெறுவதற்கு தகுதியானவர்களாக ஆகமுடியும். அவ்வண்ணம் நீக்காமல் அந்த தொழிற்குழுவுக்கு மனு ஆணையிட்ட  அம்சங்களைப் பின்பற்றுவதன் மூலம்தான்  பழைய தொழிற்குழுவின் அதிகாரத்தைப் பெறுபவர்களாக மாற்றமுடியும். ஆனால் அத்தகைய செயலைச் செய்வதற்கு இங்கு யாரும் தயாராக இல்லை. இது முற்றிலும் கேவலமானது. இங்கு இருக்கும் முதன்மைப் பிரச்சனையே இதுதான்.அதிகாரம் வேண்டும் ஆனால் அதற்கான  கட்டுப்பாடுகளைப் பின்பற்ற மாட்டேன் என்பது.

பழைய தொழிற்குழுக்கான  நெறிமுறைகள் அழிக்கப்பட்டு, மேற்கிலிருந்து வந்த  ஐரோப்பா அறிஞர்கள் கொடுத்த உயர்தத்துவமான தனிமனிதவாதம் இங்கு இவர்களுக்கு தொழிற்குழுக்கள் கொடுக்கும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றவேண்டிய தேவையை நீக்கிவிட்டது .வர்ணம் கொடுக்கும் மரபு ரீதியான அதிகாரத்தை ஒருபுறம் தக்கவைத்துக்கொண்டு மறுபுறம் அதுகொடுக்கும் கட்டுப்பாடுகளை இங்கிருக்கும்  நவீனத்தால் ஒதுக்கிவிடும் நிலை இவர்களுடையது. இரண்டு தத்துவங்களின் நன்மைகளும் இவர்களுக்கு வேண்டும்.ஆனால் இரண்டும் கொடுக்கும் கட்டுப்பாடுகளும் பொறுப்புகளும் வேண்டாம். அவ்வளவுதான்.

மரபின் கட்டுப்பாடுகளைப் பின்பற்றாமலிருக்கும் அதிகாரத்தை   தனிமனிதவாதம் கொடுத்த உரிமை மூலம் தக்கவைத்தல் இவர்களின் வழிமுறை. தங்கள் செய்வது  எவ்வளவு கேவலமானது என்பதையே புரிந்து கொள்ளாத இயலாத அறிவற்ற நிலை. இங்கு இருக்கும் பெரும்பான்மை சமூகமே இப்படித்தான் இருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய சிக்கல் இது.இதைக் கணக்கில் எடுக்க இங்கு இருக்கும் அரசியல் சரிநிலைகள் தடுக்கின்றன. சிறிய குழுக்களின் முட்டாள்தனங்கள் பேசப்படுமளவு பெருங்குழுக்களின் அதிகார மிக்கவைகளின் முட்டாள்தனங்கள் பேசப்படவில்லை.அரசியல் சரிநிலை என்னும் உயர்விழுமியம் இன்று மிகக் கேவலமானதைப் போல மாறிவிட்டது.

குலங்களின் தொகுக்கப்பட்ட நீதியும், அதன் இரட்டைத்தன்மையும் அடுத்து வந்த காலகட்டத்தில் பொதுநெறியாக தொகுக்கப்பட்டு நிலப்பிரபுத்துவ பொதுநீதியாக மாற்றம் பெற்றன என்பது மார்க்சியத்தின் தவறான புரிதல்.காரணம். புறவயமாக இருக்கக்கூடிய சமூகங்களின் செயல்பாடுகள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு இருவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய நீதி உருவாகும் என்பது கருத்து முதல் வாதத்தின் தரப்பையே முற்றிலும் மறுக்கும்  மார்க்சியத்தின் பார்வை.பு றவயமான நிகழ்வுகளே அகத்திலும் நடக்கும் என்பது மோசமான பொருள் முதல்வாதப் பார்வை. மார்க்சியம் மோசமாக கருத்துமுதல்வாதத்திடம் தோற்கும் இடம் இது.

ஒரு விதையை ஊன்றி அது வளர்ந்து மரமாக பல்வேறு புறக்காரணிகள் கட்டுப்பாடுகளாக இருக்கின்றன.அந்தக் கட்டுப்பாடுகள் அந்த விதையின் வளர்ச்சிக்கு தடையாகின்றன.இது பொருள் முதல்வாதத்தின்   வளர்ச்சிநிலை பற்றிய கருத்து. ஆனால் மனித அகத்தின் சிந்தனைக்கு எல்லைகளே இல்லை.சிந்திப்பவனின் மனவிரிவொன்று போதும்.புறத்தில் எவ்வளவு சிறியவனாக இருந்தாலும் பிரபஞ்சத்தையும் தாண்டிச் சிந்திக்க மனிதனால் முடியும்.அதற்காக ஆகும்  காலம் சிலநொடிகளாகக்கூட இருக்க முடியும்.கருத்துமுதல்வாதத்தின் இப்பெரும் விரிவை என்றுமே மார்க்சியத்தால் எதிர்கொள்ளவே முடியாது என்பதால் வெகுலாவகமாக இதைக் கடந்து வரலாற்றுவாதத்தை மட்டுமே வைப்பார்கள்.

என் பார்வையில் மனு இலட்சியச் சமூகத்தை கனவு கண்ட கருத்துமுதல்வாதி. எனவே அவனுடைய நீதியானது குலங்களின் தொகுப்பு நீதியாக இல்லாமலும், தொழிற்குழுக்களின் தொகுப்பு நீதியாக அல்லாமலும் இருக்கிறது. ஏனெனில் எப்போதும் குலங்களின் தொகுப்பு நீதி ஆள்பவர்களுக்கே சாதகமானதாக இருக்கும்.ஆள்பவர்களுக்கான கட்டுப்பாடுகளை விதிக்காமல் பெரும்பாலும் பார்த்துக்கொள்ளும். ஆள்பவர்களின் நலமே பெரிதாக இருக்கக்கூடுமே தவிர அனைவருக்குமான நீதியாக அது மாறாது, மாறமுடியாது.மனுந்தி அவ்வாறான நூலல்ல.அதிகாரமிருப்பவனுக்கே அதிகப்படியான கட்டுப்பாடுகள் என்பதை அது உறுதிப்படுத்துகிறது.

இதற்கடுத்து பழைய நிலப்பிரபுத்துவ நூல்களின் இரட்டைத்தன்மை என்பது அவற்றின் வளர்ச்சிப்போக்கை உணர்த்துவது.நாம் அதை உணராமல் அந்த இரட்டைத்தன்மை என்பதை மோசமானதாகப் பார்க்கிறோம்.இன்றும் நீங்கள் ஒரு கட்டுரை எழுதினால் ஏன் இரண்டுதரப்பையும் சீர்தூக்கிப் பார்த்து இரண்டுதரப்புக்குமான நன்மை தீமைகளை ஏன்  எழுதுகிறீர்கள்.அதுதான் எப்போதும் சரியாக இருக்கும் என்பதால்தானே!.அதில் இருதரப்பையும் சேர்ந்தவர்கள் உங்களை வசைபாடும் நிலையை நீங்களே உணர்ந்தும் நம்நிலையில் ஏன்  பழைய நூல்கள் இருக்காது என்று யோசிக்காமல் மார்க்சியம் சொன்ன கருத்தை ஏற்று எழுதியிருக்கிறீர்கள்.

இன்று நாம் அடிப்படையாகக் கொண்ட சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்பதெல்லாம் பழைய நீதி நூல்களுக்கு கிடையாது.ஏனென்றால் அவை உருவாகிய காலத்தில் அரசியல் சரிநிலையென்பதே கிடையாது.அது மட்டுமல்லாது தனிமனிதன் என்பதும் கிடையாது.மனிதன் கூட்டு விலங்காக இருந்ததால் அவனுக்கான கட்டுப்பாடுகளை மீறாமல் அவன் இனக்குழுவோ தொழிற்குழுவோ பார்த்துக்கொண்டன.அதிகாரம் கொடுக்கப்பட்டாலும் கட்டுப்பாடு என்பது உண்டு.

ஆனால் இன்றோ இந்த தனிமனிதவாதத்தில் தனிமனிதனுக்கென்று அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுவிட்டன.ஆனால் அந்த அதிகாரத்தை கட்டுப்படுத்தக்கூடிய காரணிகள் எதுவும் தனிமனிதனுக்கு கிடையாது.அமைப்புகளுக்கே அத்தகைய அதிகாரங்கள் கொடுக்கப்பட்டு விட்டன.இத்தகைய சூழலில் தனிமனித வாதத்தின் அடிப்படையில் அமைந்த நீதியோடு மனுநீதியை ஒப்பீடு செய்வது எந்தவகையிலும் சரியல்ல.

மனுநீதியின் சில சட்டங்கள் இன்றைய அமைப்புகளின் நீதியோடு மட்டுமே ஒப்புமைப்படுத்தப்படவேண்டும். மனுநீதி போன்ற பழைய நூல்கள் ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல்’ என்பதை முன்வைப்பவை. இன்றைய நவீனமோ செயலால் அன்றி ஒருவனை மதிப்பிட முடியாது. ஆகவே மனதால் செய்வதெல்லாம் எங்களுக்குத் தேவையில்லை என்று ஒதுக்கிவிடுகின்றது.குற்றம் செய்பவன் முதலில் புறத்தில்  குற்றம் செய்யும் முன்னர் பலமுறை மனத்துள் செய்கிறான் என்பதை உணர்ந்த பழைய சமூகம் மனதால் செய்வதையும் குற்றமாகவே சொல்லும்.அதை இன்றைய அரசியல் சரிநிலையோடு பொருத்திப் பார்த்தால்  கொடூரமான சட்டம் என்றே தோன்றும்.

நாகரீகம் என்ற பெயரில் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் நமக்குத் தேவையான பலனைக் கொடுக்க்கூடிய திட்டமிட்ட வழிமுறைகளைப் பின்பற்றக்கூடியவர்களாக மாறிவிட்டோம். தனிமனிதவாதத்தால்  புண்ணை உள்ளே வைத்து வெளியே புனுகு பூசி மணமாகக் காட்சியளிக்கும் நிலை இன்று உருவாகியிருப்பதால் இது  இல்லாத பழைய நூல்கள் புண்ணின் நாற்றத்தோடு இருக்கும்போது அதன் நாற்றத்தால் முகம் சுளிக்கிறோம்.புண்ணின் நாற்றத்தோடு அவைகள் இருந்தாலும் பிளவுண்ட  சமூகங்களை ஒன்றிணைத்தவை அவை.இன்றோ புனுகின் மணத்தோடு புண்ணை மறைத்து சீழ்பிடித்து அழுகும் சமூகமாகவே இருக்கிறோம்.புனுகின் மணத்தைப் போற்றுபவர்களாகவும் மாறிவிட்டோம்.

உண்மையைச் சொன்னால் வரும் பாதிப்புக்கள் சீழ்பிடித்து அழுகுவதை உணர்ந்தும் வெளியில் சொல்லாமல் இருக்க வைக்கின்றன. ஆனால் மனத்துக்கண் மாசிலன் ஆதல் என்பதை முன்வைப்பதால் பழையநெறிநூல்கள் மனதால்கூட தவறு செய்யதவனை வணங்கவும் அதைத் தவறுபவனை இகழவும் செய்யும். காரணம் தெளிவானது. எந்தச் சமூகமும்  உயர்விழுமியங்களை முன்  வைத்தே தன்  சமூகத்தைத் தான் விரும்பும் பாதையில் திருப்ப முடியும் என்பதற்காக அவைகள் வகுத்துக் கொண்ட பாதை.

அப்பாதை இன்று அமைப்புகளுக்கு மட்டுமே தேவை.அதனால்தான் இன்றும் நம் சமூகம் வாழ்வதற்கான வழிமுறைகளைப் பின்பற்றாமல் அதற்கு எதிரான பார்வையுடையவனை கேவலமாகப் பார்க்கிறோம்.அவர்களைச் சிலநேரங்களில் அமைப்புகளால்  தண்டிக்கவும் செய்கிறோம் .நாம் தனிமனிதனையும் அமைப்புகளையும் இரண்டாகப் பிரித்து விட்டதால் வந்தவினை இப்பார்வை.அதனால் பழைய நூல்களின் இரட்டைத்தன்மை என்பது மார்க்சியப் பார்வையின்  தவறான புரிதலே தவிர பழைய நூல்களின் தவறல்ல.

அரசியல்சரிநிலையோடு சூத்திரனுக்கும் பெண்களுக்குமான மோசமான கருத்துக்களை கொண்டிருக்கிறது எனும் குற்றச்சாட்டு பற்றி சொல்லலாம். மேலே நான் குறிப்பிட்டதை வைத்தே அன்றைய தொழிற்குழுக்களுக்கான நீதிகள் இன்று எந்த தனிமனிதனுக்குமானதல்ல அமைப்புகளுக்கானது என்பதைப் பார்த்தோம். அறிவிற் சிறந்த தொழிற்குழுக்களான பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரம் இன்று அமைப்பு சார்ந்த விஞ்ஞானிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. மிகப்பெரும் செல்வமும் மரியாதைகளும் அவர்களுக்குத் தரப்படுகின்றன.அவர்கள் கண்டறியும் பொருட்களால் வசதிகளும் அவதிகளும் சேர்ந்தே நமக்கு கிடைக்கின்றன. அறிவியலாளர்களுக்கு இன்று வரம்பில்லா அதிகாரம் உண்டு, பழைய பிராமணர்க்ளைப்போல. ஆனால் அக்கால பிராமணர்களுக்கு இருந்த எந்த கட்டுப்பாடும் இல்லை.

எடுத்துக்காட்டாக இன்றைய நோய்த்தொற்றுச் சூழலில் நோய்கான மருந்து  மக்களுக்கு கொடுக்ப்படும் விதம். மனுநீதியின் படி சொல்ல வேண்டும் என்றால்  ஆய்வறிஞர்களான பிராமணர்களால் கண்டறியப்பட்ட மருந்து, நோயொன்றைக் குணப்படுத்தும் என்ற குறைந்தபட்ச ஆய்வுகளின் அடிப்படையில் வைசியர்களாகிய மருந்து நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு,  அரசாகிய சத்திரியர்கள் மூலமாக, கட்டாயமாக சூத்திரர்களாகக் கருதப்படக்கூடிய மக்களுக்கு செலுத்தப்படுகிறது. அம்மருந்தால் பாதிப்பு ஏற்படுவது தெரிந்தால் அம்மருந்து நிறுத்திவைக்கப்படுகிறது. இன்று இருக்கும் இச்செயலை சிலர் மட்டுமே கேள்வி கேட்கிறார்கள்.பெரும்பான்மையோர் கேள்வி கேட்பதே இல்லை.ஆய்வு அமைப்பின் நோக்கமும் தொடர்ந்த செயல்பாடும் அதனால் மக்கள் அடைந்த நன்மையும்  நம் கண்முன் தெரிவதால் அந்த அமைப்புகளின் மேல் உள்ள நம்பிக்கையால் எதுவும் கூறுவதில்லை.

ஆனால் இதே போன்ற பழைய அமைப்பின் நன்மைகளை அறியாமல் அது கொடுத்த துயர்களை மட்டும்  பேசுவது இங்கிருக்கும் சிக்கல். அந்த அமைப்பு உடையும் போது கீழ்நிலையிலிருந்தவர்கள் காலம் முழுவதும் நாங்கள் ஒடுக்கப்பட்டோமென்று சொல்வதில் சிலதவறுகள் இருக்கின்றன என்பது அவர்களுக்கும் தெரியும். பல்வேறு காரணங்களால் அதை ஒப்புக்கொள்ளவும் மறுக்கிறார்கள்.

அறிவாளிகளின் துணை கொண்டு தங்களுக்கான அதிகாரத்தைப் பெற ,எண்ணிக்கையை வைத்து அதிகாரத்தைப் பெற, எப்போதும் பொதுமனநிலையிலிருக்கும் பலம் பொருந்தியவனை வீழ்த்தும் பலமற்றவன் எனும் மனநிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த கடைசியாக இருந்த கட்டமைப்பின் மேல் தங்களுடைய பழியைத் தொடர்ந்து வைக்கின்றன.இன்று இருக்கும் சூழலில் சத்தமிடும் குழந்தைக்கே பால் கிடைப்பதால் இந்த நிகழ்வு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

பெண்களுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட நூல் என்னும் குற்றச்சாட்டு அந்த நூலை முழுமையாகப் புரிந்து கொள்ள முயலாமல் சில வரிகளையும் அத்தியாயத்தையும் மட்டும் புரிந்து கொள்வதால் வருவது.வெறும் அரசியல் சரிநிலைகளைத் தவிர இந்த இடத்தில் வேறு எதுவும் இல்லை. முன்னரே கூறியவாறு உயர்விழுமியத்தை நோக்கிச் செலுத்தப்பட இங்கு அதன்படி நடப்பவர்கள் உயர்த்தப்படவும் அதேசமயம் மானுடக்கீழ்மையால் எப்போது வேண்டுமானாலும் அந்நிலையிலிருந்து தவறக்கூடும் என்பதை உரத்துச் சொல்லவும் வேண்டும்.

பெண்களின் நிலை இன்று பெருமளவு மாறியிருக்கிறது என்பதற்கான காரணங்களில் இன்றைய நவீன அறிவியலுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.அது கொடுத்த வசதியால் அதிகப்படியான குழந்தைகளைப் பெறுவதன் மூலமே ஒன்றிரண்டு தப்பிக்கும் நிலையோ, அதிகப்படியான எண்ணிக்கைப் பலத்திற்கான சமூகங்களை உருவாக்க வேண்டிய தேவைகளோ இல்லாத நிலை இங்கு உருவாக்கப்பட்டாயிற்று. வீட்டின் தேவைகள் உறவுகளின் தேவைகள் அனைத்தையும் செய்யவே நேரம் போதாத நிலையும் இங்கு இல்லாமல் ஆயிற்று.

இக்காலத்திலிருந்து அக்காலத்தை நோக்கும்போது மோசமானதாகவே தெரியும். நாளை நம்மையெல்லாம் எவ்வளவு கேவலமாக பலதலைமுறை தாண்டி வருபவன் யோசிக்கக்கூடும் என்பதை இப்போதேகூட இதை வைத்தே உணரமுடிகிறது.இது காலமாற்றத்தின் சிக்கல் விளையாடும் இடம்.

சாதியை உருவாக்கியது மனுநீதியா என்னும் வினா இங்கு எழுப்பப்படவேண்டும். மனுநீதிதான் சாதிகளை உருவாக்கியது என்பது பற்றிய சில ஐயங்கள் இருக்கின்றன.மனு தொழிலின் அடிப்படையில் தொழிற்குழுக்களை உருவாக்கி அதை பிறப்பின் அடிப்படையிலானதாக மாற்றினாரா அல்லது தான் பெற்ற அறிவை தன்னுடைய குழுவைத்தாண்டி பிறருக்கு கொடுக்கும் மனநிலை அன்றைய மக்களிடம் இல்லாமலிருந்த காரணத்தால் அன்றிருந்த தொழிற்குழுக்களின் அடிப்படையில் அமைத்தாரா என்பது இரண்டுக்குமான தரவுகளைக் கொண்ட முடிவேயில்லாத விவாதத்துக்கான கேள்வி.

அன்று இருந்த நிலையில் சிறப்பாகச் செயல்படும் வகையில் இருந்த இனக்குழுக்களின் சிறப்பை தொழிற்குழுக்களாக மாற்றியது மட்டுமே மனுவின் செயல், பின்வந்ததற்கு அவன் காரணம் என்று எப்படிச் சொல்ல முடியும் என்பது ஒரு வாதமாக இருக்க முடியும். தொழிற் குழுக்களின் நீதியாக மனுநீதி இருப்பதால் காலந்தோறும் தொழில்களில் ஏற்பட்ட பல மாற்றங்கள் பல தொழிற்குழுக்களை வேறு தொழில் நோக்கிச் செலுத்தியிருக்கும்.

எடுத்துக்காட்டாக சமணம் மற்றும்  பௌத்தத்தின் எழுச்சி வேதவேள்விகளை ஒழித்து கட்டியது, அதனால் வேள்விகள் பாதிக்கப்பட்டன என்பது போலத்தான் இங்கு சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் என்ன நடந்திருக்கும் என்பதை நடுநிலையோடு யோசித்தால் அசைவ உணவோடு தொடர்புடைய தொடர்புடைய தொழிற்குழுக்கள் பாதிக்கப்பட்டு வேறுதொழிலில்லாமல் அந்தச் சமூகத்தில் இருந்த கீழான தொழிலுக்கு மாறியிருக்கும் என்று தெரியும் . அசைவ வழிபாடுடைய கோவிலின் பூசகர் அவருடைய இனக்குழு பௌத்தத்துக்கு மாறும்போது பௌத்தக்கோவிலின் வேலையாளாகப் போவதைத் தவிர வேறு என்ன வழியிருக்கிறது.

எப்போதும் வேள்விகள் நீத்தார் சடங்குகளுக்கும் மன்னர்களின் தேவைகளுக்கும் நடத்தப்படுவதால் அத்தகைய சடங்குகளுக்கு அவ்விரு மதங்களில் வழியில்லாததால் பிராமணர் பாதிப்படைந்ததை விட எளிய அசைவ உணவோடு தொடர்புடைய தொழிற்குழுக்களே  பாதிப்படைந்து இருப்பார்கள். இதைப் போன்று காலத்தால் மாற்றம் பெற்ற தொழில்கள் எவை அதில் யாரெல்லாம் பாதிக்கப்பட்டனர் என்பதெல்லாம் இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதேயில்லை.

இன்று அனைவரும் இதுபோன்ற தங்களுடைய தரப்பை மறுக்கும் தரவுகளைச் சொல்லக்கூட மறுக்கின்றனர். காலம் முழுவதும் அனைத்து மக்களையும் அடக்கியாண்டதாகச் சொல்லப்படுபவர்கள்  சமண பௌத்த இஸ்லாமிய கிறித்தவ ஆட்சிக்காலங்களில் எப்படி அவர்களை அடக்கியாண்டிருக்க முடியும் என்பதை பேசமறுக்கிறார்கள்.

அதற்காக மனுநீதியில் குறைகளே இல்லையா என்றால் இருக்கிறது. அந்த நூலின் தரவுகளையும் இன்றைய நடைமுறையில் இருப்பதையும்  அடிப்படையாகவும் வைத்து உருவான சிந்தனைகளோடு அதன் குறையை அணுகினால் வரக்கூடிய அதன் குறைகள்

1, விரிவான எதிர்காலத் தரிசனம் ஏதுமில்லாமை .அனைத்து தொழிற்குழுக்களையும் கொண்ட சமூகத்திற்கான கட்டமைப்பை உருவாக்கினாலும் எதிர்காலத்தில் எவ்வாறு சமூகம் மாறும் என்பதை யோசிக்காமல் தன் கருத்துக்களை மூர்க்கமாக  வைத்திருக்கிறார் மனு. திருக்குறளுக்கும் மனுவுக்கும் இருக்கும் வித்தியாசமே இதுதான்.சொல்வதை செய் செய்யாதே எனக் கட்டளையிடுவதற்கும் இதையெல்லாம் செய்வது அறமாகாது என மென்மையாகச் சொல்லுவதற்குமான வித்தியாசம்  இரண்டு நூல்களுக்குமான வேறுபாடுகளில் ஒன்று . தன் கருத்தைத் தெளிவாக வைக்கும் நபர்கள் காலமாற்றத்தால் சிக்கிக் கொள்ளும் இடம் இது.

  1. தனிமனிதனின் உரிமையை மறுத்தல் தனிமனிதர்களான துறவிகளுக்கு பெரும் மரியாதை கொடுத்தாலும் தன் கட்டுப்பாடுகளுக்கு உட்படாத மக்களையும் தன் சமூகத்தை அழிக்கும் நிலைக்கு நாளை காரணமாக அமையக்கூடும் எனக் கருதியவர்களையும் புறனடையாளர் எனக்கூறி மக்களின் வாழ்விடங்களுக்கு வெளியே வாழவைத்த கொடூரத்தைச் செய்தது. இந்தப் புறனடையாளர்களாகவே பஞ்சமர்கள் இருந்தனர் என்பதே மனுநீதியை எதிர்ப்பவர்களின் வாதம்.
  1. கொள்கைவெறியுடன் கூடிய மேட்டிமைத்தனம். மனுநீதியைப் படிக்கும்போது தன் கொள்கையே உயர்ந்தது எனும் கொள்கைவெறி, அதைச் சரியாக தான் இருக்கும் இடத்தில்தான் பின்பற்றுகிறார்கள் பிறபகுதியில் இருப்பவர்கள் இதே வழிமுறையை பின்பற்றினாலும் ஒழுங்காகப் பின்பற்றவில்லை எனும் பிராந்திய மனநிலையும் உச்சமாக இருக்கின்றன. இன்றும் இருக்கும் அனைத்துக் கொள்கைவாதிகளும் இப்படியேதானே இருக்கின்றனர்.

4.அனைத்து உயிரையும் சமமாகப் பார்க்கும் இன்மை இதைத்தான் இங்கு இருக்கும் அனைவரும் அரசியல்சரிநிலைகளோடு விவாதிக்கின்றனர்.எந்தச் சமூகமாக இருந்தாலும் மேல் கீழ் என்று அடுக்குகளை அமைக்காமல் கட்டமைக்கவே முடியாது.அப்படி கட்டமைப்பது அகத்தில் சாத்தியமாக இருக்கலாம்.புறத்தில் எங்கும் எப்போதும் சாத்தியம் இல்லை. மனு இன்று சிக்கிச் சீரழிவது இதனால்தான்.

இங்கு மனுவைக் குறைகூறும் யாரும் மனுநீதியை முழுமையாகப் படித்தவர்கள் அல்ல.புகழும் நபர்களும் அப்படியே. மனுநீதி புத்தகத்தை எந்த வகைப்படுத்த முடியும் என்பதே சிக்கலாக இருக்கும்போது புத்தகத்தையே புரிந்து கொள்ளத்தெரியாத நபர்களிடம் சிக்கிச் சீரழிகிறது மனுநீதி.

மனுநீதி அடிப்படையில் உபநிஷதம் போல புராணக் கதைகள் போல குரு தன் சீடனுக்குச் சொல்லும் நூல். குருசீட வழிமுறையில் அரசியல் சரிநிலைகளுக்கு இடமேயில்லை. யார் வேதத்தைக் கற்றவனோ அவனைத் தவிர மற்றவர்கள் இதைப் படிக்கத் தடை இருந்திருக்கிறது. நம் தளத்திலேயே நடந்த நவீன மனு விலகாரத்தின் போது ஆய்வுக்கட்டுரை  ஒன்றைப் பார்த்தோம்.இன்றும் அறிவுஜீவிகள்கூட பார்க்க முடியாத கல்வியாளர்கள் மட்டுமே பார்க்க முடிந்த சமூகவியல்  கட்டுரைகள் இருக்கின்றன என்று அன்றுதான் நான் அறிந்தேன்.திராவிட மனு- கடைசியாக

ஏன் அந்தக் கட்டுரைகள் பொதுவெளிக்கு மறைக்கப்பட்டிருக்கின்றன என்ற கேள்வியை இங்கு எவராவது எழுப்புகிறோமா? அக்கட்டுரை பொதுவெளிக்கு வந்ததுமே அது ஆய்வாளர்களுக்கு மட்டுமாக எழுதப்பட்டது என்றுதானே பதில் சொல்லப்பட்டது. நாம் எதிர்த்தோமா?. இல்லை. ஏன்?.

இங்கு உண்மைநேரடியாகச் சொன்னால் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எவ்வளவு பேருக்கு இருக்கும் என்பதை வைத்து அவற்றைப் பொதுவெளியில் வைப்பது சிக்கலுக்குள்ளாக்கும் என்பதை உணர்ந்து கேள்வி எழுப்புவது இல்லை.  அரசியல் சரிநிலை பேசும் காலம்தானே இது. அனைத்துத் தரவுகளையும் பொதுவெளியில் வெளியிட எது தடையாக இருக்கிறது? அனைத்து உரிமைகளையும் பெற்ற தனிமனிதனுக்கு தன் சமூகத்தின் மீது நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளை அறிய உரிமையில்லையா?  சமூகவியல் ஆய்வு என்ன இரகசியம் காக்கப்பட்டே ஆகவேண்டும் என்ற அறிவியல் வகையைச் சேர்ந்ததாவையா என்ன?.

அனைத்து சமூகவியல் ஆய்வுகளின் தரவுகளையும் பொதுவெளியில் விட்டால் இன்று அந்த ஆய்வைத்துறையையே அழிக்குமளவு மக்கள் செல்வார்கள் என்பதே உண்மை.எனவே அதைப் பேசுவதைத் தவிர்க்கிறோம். நாகரீகம் வளர்ந்து தனிமனிதனுக்கான உரிமைகள் வழங்கப்பட்ட காலத்திலேகூட மக்கள் எவ்வளவு தெரிந்து கொண்டால் போதும் என்ற நிலையிருக்கும்போது நம் பேசுவது பழைய நூலை என்பதை கருத்தில்கொள்ளவேண்டும்.

அது மனிதனின் நிறைகுறைகளைப் புரிந்து கொண்டு நடந்த நூலா என்று பார்க்கும்போது அப்படித்தான் அது செயல்பட்டிருக்கிறது. இங்கு குலத்துக்கு ஒருநீதியாக மனுநீதி இருந்தது கொடூரமென்றொரு வாதம். நாகரீகமடைந்து சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் சிந்தனையைப் பெற்றும்  நம் முன்னோர்கள் எழுதிய இந்திய அரசியலமைப்பு சட்டம் அனைவருக்கும் ஒரேமாதிரியான நீதியையா கொண்டிருந்தது ?  இன்று அப்படிக் கொண்டிருக்கிறதா என்ன?

குற்றவியல் நடைமுறைச் சட்டம் போலச் சிலசட்டஙகள் மட்டுமே பொதுவானவை. ஏன் அனைவருக்குமான பொதுச் உரிமைச் சட்டங்கள் இல்லை? பல்வேறு கலாச்சாரங்கள் இருக்கும் நாடென்பதால்தானே? இதே சிக்கல் மனுவுக்கும் இருந்திருக்கலாம் என்று யாராவது யோசித்தார்களா ?

மனுநீதி தாக்கப்படுவதற்கான காரணம் ஆயிரம்  ஆண்டுகளாகத் தோற்றுப்போய் பிறரால் அடக்கியாளப்பட்டு சுதந்திரத்திற்காகப் போராடும்போது ஏன் இதுவரை தோல்விடைந்தோம் என்பதைக் கண்டறிய முயன்றபோது கிடைத்த காரணங்களில் ஒன்று அது என்பதே. இங்கு மக்கள் வர்ணங்களாகவும் சாதிகளாவும் பிரிந்து கிடந்தனர். அதற்கான காரணமாக இருந்ததைத் தேடினால் அது  மனுநீதி என்னும் நூலாக அப்போது கிடைத்து விட்டது. ஆகவே அதை ஒதுக்கி அனைவரும் ஒன்று சேருவோம் என்பதான வாதம் எழுந்தது.

அதுவே காரணமாக ஏற்கனவே பலரால்  ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டதால், அந்நூலைக் குறித்துப் பேசுவதால் தன் தரப்புக்கான லாபங்கள் பெறப்படுவது உறுதியானதால்,  தொடர்ந்து இன்றுவரை அந்தக் காரணம் பயன்பாட்டில் இருக்கிறது. யாருக்கு தங்கள் நலனைக் காக்க வேண்டும் என்றாலும் வெற்றிகரமான விளைவைத் தரும் காரணியாக மனுநீதி இன்று மாறிவிட்டது.

திருமாவளவன் விவகாரத்தில் அவர் சார்ந்த சமூகம் மனுவின் காலத்திலிருந்து பஞ்சமராக இருந்தது என்பதை முன்வைக்கிறார். தமிழகத்தின் வரலாற்றில் அவரின் சமூகம் சோழர் காலத்தில் ஆதிக்க சாதியான வலங்கைப் பிரிவிலிருந்ததை அறிவோம்.அதன் பின்வந்த காலங்களில் கூட சில இடங்களில் குறிப்பிடத்தக்க அதிகாரத்தைச் செலுத்தியதற்கான ஆதாரங்கள் உண்டு.அவர்களுக்கென்றே தனித்த மடங்கள் இருந்திருக்கின்றன. வெள்ளையரின் காலத்தில் தங்களிடம் தவறாக நடக்க நினைத்த வெள்ளையரை வெளுத்து அனுப்பிய தரவுகளும் உண்டு. இவைகளையெல்லாம் முற்றிலுமாக  மறுத்துவிட்டு காலம் முழுவதும் நாங்கள் ஒடுக்கப்பட்டோமென்று பேசுவது முழுமையான அரசியல். அது அறிவுசார் விவாதமல்ல ஆகவே நான் அதற்குள் போக விரும்பவில்லை.

மனுநீதி இங்கு ஏதேனும் வகையில் ஏற்கப்பட்ட நூலாக இருந்ததாலும், இங்கு தீண்டாமைக் கொடுமை இருந்ததாலும்தான் உலகில் அன்றிருந்த அனைத்து மக்கள் நலச் சட்டங்களின் சாயலுடன் நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் அமைக்கப்பட்ட போது  பாதித்கப்பட்டவர்களுக்கென்று நீதி வழங்கும் பொருட்டு அவர்களுக்கென்று சில சலுகைகளும் சில சிறப்புசட்டங்களும் அமைப்புகளும் உருவாக்கப்பட்டன. கிடைத்ததைப் பெற்றுப் பலனடைந்து , போதுமான வளர்ச்சியைத் தாங்கள் அடையவில்லை அல்லது வேறு நலன்கள் தங்களுக்குத் தேவை எனும்போது கையில் எடுப்பது தொடர்ந்த இந்த வாதத்தையே.

ஒரே மாதிரியான செயல்பாடு ஓரிருமுறை பலனைக் கொடுக்கக்கூடும்.ஆனால் இங்கு மனுநீதி பற்றிய விவாதம் பலனைக் கொடுப்பதற்கான காலம் தாண்டிவிட்டது என்றே எனக்குத் தோன்றுகிறது. எனவே என்னைப் பொறுத்தவரை இன்று  இருக்கும் சட்டங்களை இன்னும் கூர்மைப்படுத்தியும் ஒடுக்கப்பட்டோருக்கு அவர்களின் உரிமைகள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தியும்  அவர்களுக்கான அமைப்புகளின் செயல்பாடுகளை இன்னும் மேம்படுத்துவதுமே மேன்மையடையச் செல்லும் சரியான வழியாக இருக்கும்.

அதைவிடுத்து ஏற்கெனவே செய்த தவறை ஒப்புக்கொண்டவனை மீண்டும் மீண்டும் அதைச் சொல்லியே குற்றவுணர்வுக்கு ஆளாக்க வேண்டும் என்பது எவ்வளவு காலம் பயனளிக்கும் என்று தெரியாது. எதிர்பார்ப்புக்கு முற்றிலும் எதிரான மனநிலைக்குக் கூட செல்லும் வாய்ப்பிருக்கிறது. தொடர்ந்து பயன்படுத்தப்படும்  ஆயுதங்கள் சிறப்பானவையாக இருந்தாலும் அதன் குறைகள் தொடர்ந்து பயன்படுவதாலேயே கண்டறியப்பட்டால் தேவையான போரின்போது செயலற்றதாக மாறும் என்பதை இங்கு சிலர் புரிந்து கொண்டால் பரவாயில்லை என்றே தோன்றுகிறது.

இந்த விவகாரத்தில் நானறிந்து கொண்டது ஒன்றையே.வரலாற்றின் போக்கில் வளர்க்கிறோம் என்பதற்கான தரவுகளும் மனதளவில் இன்னும் ஒரடிகூட முன்செல்லாத சமூகமாக இருக்கிறோம் என்பதற்கான தரவுகளுமே எனக்குத் தோன்றின. வளர்ச்சியின் பாதையில் தொடர்வதும் மனதளவில் விரிந்து பல அடிகள் முன்செல்வதும் நலமென்றே எனக்குத் தோன்றுகிறது.ஆனால் அத்தகைய சூழலுக்கு இங்கு சாத்தியமே இல்லை என்பதுமே எனக்குத் தோன்றுகிறது.அதனால் இருக்கும்வரை நிகழ்வதை வேடிக்கை பார்ப்பதென்றே முடிவெடுத்து விட்டேன்.

இப்படிக்கு

அந்தியூர் மணி.

திசை தேர் வெள்ளம்-ஊழின் பெரு நடனம்- அந்தியூர் மணி

சாக்ரட்டீஸ்,ராஜாஜி,ஈவெரா- பாடபேதங்கள்

மரபும் மாற்றமும்- இரு கவிதைகள், அந்தியூர் மணி

பழந்தமிழர்களின் அறிவியல்!

முந்தைய கட்டுரைபுதிய கவிஞர்கள்-கடிதம்
அடுத்த கட்டுரைதட்டுபொளி